Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 14. திருவள்ளுவரின் இறைக் கொள்கை


Guru

Status: Offline
Posts: 7329
Date:
14. திருவள்ளுவரின் இறைக் கொள்கை
Permalink  
 


 

 14. திருவள்ளுவரின் இறைக் கொள்கை


திருக்குறள் பிற்பட்ட காலத்தில் முழு நூலாக உருவாக்கம் செய்யப்பட்டு முதல் நான்கு அதிகாரங்களும் பாயிரம் என்றும், அதில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து என்றும் பகுக்கப் பட்டுள்ளது என்ற கருத்து பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது... கடவுள் வாழ்த்துப் பாக்கள் வள்ளுவராலேயே தொகுக்கப்பட்டிருந்தாலும், அது கடவுள் வாழ்த்தாக இல்லாமல், இறைவனின் பெருமையை நமக்குச் சொல்லவந்த வந்த பாடல்களாகவே இருக்கின்றன.

பாயிர அமைப்பு முறைபற்றி தொல்காப்பியம் கூறுகிறது

கொடிநிலை. கந்தழி. வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே (தொல். 1034)

(வழிபடும் கடவுளரின் ஏற்றம் கூறுவது கொடிநிலை, பகைவரை அழித்த பாங்கைக் கூறுவது கந்தழி., வள்ளன்மையைக் கூறுவது வள்ளி.)

நன்னூல் கூறும் பாயிர இலக்கணத்திற்கு ஒப்பவும் திருக்குறள் பாயிரம் அமைக்கப்படவில்லை.

"பாயிரமல்லது பனுவலன்று்" - பாயிரம் இல்லாதவை நூல்களே அல்ல என்பதால் திருக்குறளுக்குப் பிற்சேர்க்கையாக இப்பாயிரம் சேர்க்கப்பட்டது என்றும் பொருள் கண்டுள்ளனர் சிலர்,

திருக்குறளில் பாயிரம் என்று சொல்லப்படும் முதல் நான்கு அதிகாரங்களில்,

கடவுள் வாழ்த்து என்பது அருக சரணம்
வான் சிறப்பு என்பது சித்த சரணம்
நீத்தார் பெருமை என்பது சாது சரணம்
அறன் வலியுறுத்தல் என்பது தர்ம சரணம்
என்றும் பாயிரத்தைச் சமணசமய வழிபாட்டுடன் ஒப்பிட்டும் சிலர் கூறுவர்.

இந்த கருத்துகள் அனைத்தும் அப்படியே ஏற்பதற்கல்ல என்று தக்க சான்றுகளுடன் அறிஞர் பெருமக்கள் நிறுவியுள்ளனர், மெய்ப்பொருள் காண்பதே அறிவு.

கடவுள் வாழ்த்து இரண்டு வகைப்படும். ஒன்று வழிபடும் கடவுள் வாழ்த்து. அதாவது, நூலாசிரியர் தான் வழிபடுகின்ற கடவுளைப் போற்றிப் பாடுவது. மற்றொன்று பொதுக் கடவுள் வாழ்த்து அல்லது ஏற்புடைக் கடவுள் வாழ்த்து.. அதாவது எல்லா சமயத்தினருக்கும் பொதுவாய் ஏற்கும்படியான இறைவணக்கம்.
“உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் ……… மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்” என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமானும், “உலகம் யாவையும் தாமுளவாக்கலும் ….. அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே” என்று ராமாயணத்தில் கம்பரும் கடவுளைத் தன்மையில் வாழ்த்தித் பாடுவதைக் காணலாம். முதலில் சொன்னது வழிபடும் கடவுள் வாழ்த்து, பின்னர் சொன்னது பொதுக் கடவுள் வாழ்த்து.

இவ்வாறு ஒன்றிரண்டு செய்யுள்களில் எழுதப்பட வேண்டிய ஒன்றை திருக்குறளில் பத்து பாக்களாக இயற்றப்பட்டுள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும்.. மேலும், இப்பாக்கள், மற்ற குறட்பாக்களைப் போலவே படர்க்கையில் எழுதப்பட்டுள்ளன.

கடவுளைத் தொழுது தொடங்குவதன் நோக்கம் தான் மேற்கொள்ளும் நூல் எழுதும் செயல் நல்லபடியாக முடியவேண்டும் என்பதே. ஆனால் திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் உள்ள பாக்களைப் பாருங்கள். மற்ற அதிகாரங்களைப் போலவே ஒரு வரையறை, அல்லது நன்மை தீமைகள் என்ற முறையிலேயே அமைந்துள்ளன. “அகர முதல” என்ற முதல் குறள் ஒரு வரையறை (definition). “கற்றதனால் ஆயபயன்” என்ற இரண்டாவது குறளும், “கோளில் பொறியில்” என்ற ஒன்பதாவது குறளும் கடவுளை வணங்குதலே தலையாய கடமை என்ற அறிவிக்கைகள் (statements). மற்ற ஏழு குறட்பாக்களில், மனித குலத்தின் மூன்று முக்கிய வரையறவுகளான மனக்கவலை (4,7), காலம் (3,6,8,10), அறியாமை (5) ஆகியவற்றை நீக்கும் வழி இறைவணக்கமே என்று கூறப்பட்டுள்ளது.
சொன்னதையே திரும்பச்சொல்லுதல் இலக்கியத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என்பர். நான்காவது, ஏழாவது பாக்கள் கவலையறுத்தல் என்ற ஒரே கருத்தையும், எட்டாவது, பத்தாவது பாக்கள் பிறவியறுத்தல் என்ற ஒரே கருத்தையும், மூன்றாவது, ஆறாவது பாக்கள் நெடிய வாழ்வு என்ற ஒரே கருத்தையும் சொல்வதைக் கவனிக்கவும்.

ஐந்தாவது அதிகாரமான இல்வாழ்க்கையில்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (43) என்றும்,
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” (50) என்றும்
குறிப்பிட்டிருப்பதையும், ஆறாவது அதிகாரமான வாழ்க்கைத்துணை நலனில்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய் யெனப் பெய்யும் மழை” (55) என்ற குறளையும்,
ஆள்வினை உடைமை அதிகாரத்தில்
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்” (619) என்ற குறளையும் கவனித்தால் வள்ளுவரின் தெய்வம் பற்றிய சிந்தனை ஓரளவுக்குப் புலப்படும்.
தவம் என்ற அதிகாரத்தில்
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றம் தலைப்பட்ட வர்க்கு (269) என்ற குறட்பாவில் தவம் செய்து வாழ்தலே நீண்ட வாழ்வின் காரணம் என்று மாற்றுக் கருத்தொன்றை வைக்கிறார்.
இது போன்றே மெய்யுணர்தல் அதிகாரத்தில்
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு” (358) என்ற குறட்பாவிலும் மற்றும் இரண்டு பாக்களிலும் அறியாமையினால் உண்டாகும் பிறவித் துன்பத்திலிருந்து விடுபட மெய்யறிவு பெறுதலே வழி என நிறுவுகிறார். மெய்யுணர்வு பெற மெய்ஞானியர்களை நாடுவதே ஆன்மிக மரபு. மெய்யுணர்வு பெற்ற மனிதனே வீடுபேறு எய்துகிறான் என்று வலியுறுத்துகிறார்.

திருவள்ளுவர் சைவ சமயத்தவர் என்று ஒரு கூட்டமும், இல்லை இல்லை திருவள்ளுவர் 'இலக்குமி' குறித்தெல்லாம் பாடலில் சொல்லி இருக்கிறார் அவர் திருமாலை வழிபடும் வைணவப் பிரிவைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும் என்று ஒரு கூட்டமும் சொல்லிக் கொண்டு, விவாதங்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.

திருவள்ளுவர் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட கி. மு. முதல் நூற்றாண்டில் சைவ, வைணவ சமயங்கள் தோன்றியிருந்தாலும் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவான உண்மை. சங்க இலக்கியங்கள், நாலடியார் ஆகியவற்றில் குலதெய்வ வழிபாடுகளும் (மாயோன், சேயோன்) பற்றிய குறிப்புகளும், சமண, பவுத்த சமயக் குறிப்புகள் மட்டுமே காணக்கிடக்கின்றன. தொன்று தொட்டுவந்த மாயோன் சேயோன் வழிபாடு பின்னர் புராணப் புகுத்தலின் வழியாக சைவ வைணவ சமயத்தினுள் இழுத்து கொள்ளப்பட்டுள்ளது என்பதே உண்மை. மதம் மாறியவர் அந்த புதிய சமயத்தைச் சேர்ந்தவராகிவிடுவார் என்பது போல் குலசாமிகள் மதமாற்றம் செய்யப்பட்டது போன்றவை தான் பிற்காலத்தில் , முன்பு தமிழர் வழிபட்ட தெய்வங்கள் வைதீக சமய தெய்வங்கள் ஆன கதைகளும்.

இவற்றையெல்லாம் மறுத்து 'எண்குணத்தான், தாமரைக் கண்ணான்' என்ற சொற்கள் சங்க காலம் தொட்டே புத்தரைக் குறிக்கிறது, ஐம்பெருங்காப்பியங்களிலும் அந்தச் சொற்கள் புத்தரைத்தான் குறிக்கிறது எனவே திருவள்ளுவர் பௌத்தம் சமயத்தினர் என்கின்றனர் ஒரு கூட்டத்தார்.

மயிலை சீனி வெங்கடசாமி என்னும் தமிழறிஞரும் வேறு சிலரும் ஆதிபகவன்' என்ற சொல் சமணர்களின் அருகப் பெருமானைக் குறிப்பதாலும், தவம் செய்தல், வீடுபேறு போன்றவை சமண பௌத்த சமயங்களுக்கே உரிய கொள்கை என்பதால் திருவள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்றும் சொல்லி இருக்கின்றனர்.

கடவுளை ஒப்புக்கொண்ட வள்ளுவர் எவ்வாறு சாக்கிய,சமண சமயங்களை சேர்ந்தவராக இருக்கமுடியும்? கடவுள் வாழ்த்தில் அவர் கூறும் ‘தனக்குவமை இல்லாதான், வேண்டுதல் வேண்டாமை இலான் ‘ போன்றவை எல்லாம் சமண,சாக்கிய மத கருத்துக்களா? ‘இருள் சேர் இருவினையும் சேராது இறைவன் அடியை சேருபவருக்கு’ என்று சொன்னவர் சாக்கியரா?

இதையெல்லாம் விட நகைச்சுவையானது என்னவென்றால் கிறித்துவர்கள் சிலர் திருவள்ளுவரும், புனித தோமையாரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள், தோமையாரின் போதனைகளைத்தான் திருக்குறளில் திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் எனவே திருவள்ளுவர் ஒரு கிறித்துவர் என்றும் சொல்கின்றனர்

பொதுவாக ஏன் திருவள்ளுவருக்கு இவ்வளவு பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்றால், திருவள்ளுவர் திருக்குறளில் சொல்லி உள்ள கருத்துக்கள் எங்கள் மதத்தை சார்ந்தவையே என்று பெருமை பாராட்டி கொள்ளவே அல்லாமல் வேறொன்றுமில்லை...

18 ஆம் நூற்றாண்டு தொடங்கி தமிழ் கற்றுணர்ந்த சில கிறித்தவ அறிஞர்கள் திருக்குறள் விவிலியக் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் கிறித்தவ நூல் என்று எழுதத் தொடங்கினர். அதற்கு வித்திட்டவர் ஜி. யு. போப் என்ற கானடா நாட்டின் பிரின்சு எட்வர்டு தீவில் பிறந்தவரான கிறித்தவப் பாதிரியார். ஜி. யு. போப் அவர்கள் திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மிகப்பெரிய சேவை செய்தவர்..

அவர் கி.பி. 52 இல் இந்தியாவுக்கு சமயப் பிரச்சாரம் செய்யவந்ததாகக் கருதப்பட்ட இயேசுவின் நேரடிச் சீடரான தோமாவினால் திருவள்ளுவருக்குக் கிறித்தவ மதத்தின் தாக்கம் ஏற்பட்டு திருக்குறளை எழுதினார் என்றார். மயிலாப்பூரில் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தோமையாரிடம் நட்பு கொண்டு, அவரிடமிருந்து கிறித்தவக் கோட்பாடுகளை உள்வாங்கி, இயேசுவின் ‘மலைப்பிரசங்க’க் கருத்துக்களை எதிரொலிக்கும் வண்ணமாகத் திருக்குறளை இயற்றினார் என்று எழுதியிருக்கிறார்.

மு. தெய்வநாயகம் என்னும் தமிழறிஞர் “விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் ஒரு ஒப்பாய்வு” என்ற தன் நூலில் , ஜி.யு.போப்பைப் பின்பற்றி, தோமையாரிடமிருந்து கிறித்தவ சமயக் கருத்துக்களை திருவள்ளுவர் உள்வாங்கித் தான் எழுதும் திருக்குறளில் கிறித்தவக் கருத்துக்களையே எழுதினார் என்று குறிப்பிடுகிறார்.

திருவள்ளுவர் வான்சிறப்பு குறித்துக் கூறியுள்ள குறள்கள் பரிசுத்த ஆவியைக் குறித்தும், நீத்தார் பெருமை இயேசு உயிர் நீத்து உயிர்த்தெழுந்ததைக் குறித்தும் எழுதியிருக்கிறார் என்று தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். முதல் மூன்று அதிகாரங்களும் கிறித்தவத்தின் திரித்துவக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை என்றும் தன் நூலில் எழுதியுள்ளார். ‘திருவள்ளுவர் கிறித்தவரா” என்ற நூலையும் இவர் எழுதியிருக்கிறார்.

மு.தெய்வநாயகம் அவர்கள் “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ்வார்” (6) என்ற குறளுக்குத் தன்னுடைய பாங்கில் உரை கூறுகிறார்.

உருவமில்லா இறைவன் மனிதனாக உருவெடுத்து வந்து அதாவது இயேசு கிறித்துவாக அவதரித்து, சிலுவை என்னும் பொறி வாயிலில் தன் ஐம்புலன்களையும் மக்களுக்காக பலிஉணவாக்கினான். அவன் காட்டிய பொய்தீர் ஒழுக்க நெறியில் நின்றவர்களுக்கு நீடிய வாழ்வு உண்டு என்று விளக்குகிறார்.

இக்குறளுக்குத் தேவநேயப்பாவாணர் உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் வாயிலாகக்கொண்ட ஐவகை ஆசைகளையும் விட்ட இறைவனது மெய்யான ஒழுக்கநெறியில் நின்று ஒழுகினவர் வீட்டுலகில் என்றும் நிலைபெற்று வாழ்வார்கள். ஐந்தவித்தான் என்ற பெயர் சமண நெறியினின்று எடுத்தாண்டதே என்கிறார்..

ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி என்ற குறளுக்கு தெய்வநாயகம் தரும் உரையாவது: ஐந்தவித்தானாகிய இயேசுவின் உயிர்த்தெழுந்த ஆற்றலுக்கு அகன்ற வானத்திலுள்ளவர்களின் தலைவனாகிய இறைவனே சான்று அளிக்கிறான் என்று கூறுகிறார்.

இக்குறளுக்குப் பரிமேலழகர் உரை:

புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிமைக்கு; அகன்ற வானத்துள்ளார் தலைவனாகிய இந்திரனே சான்றாகஅமைவான்.. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, ஐந்து அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.
தீயசெயல் ஒன்றைச் செய்யாதே என்று சொல்வதற்குப் பதில், தீயசெயல் ஒன்றைச் செய்து சீரழிந்தவன் கதையைச் சொல்லி, நல்லாரின் பெருமையை எடுத்துரைத்தல் என்ற யுக்தியை இப்பாடலில் திருவள்ளுவர் கையாண்டிருக்கிறார் என்றே கருத வேண்டும்.
கிறித்துவ சமய கோட்பாடுகள்தான் திருக்குறளுக்கு அடிப்படை என்ற தெய்வநாயகம் அவர்களின் கருத்து மற்ற கிறித்துவ இறையியல் வல்லுநர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வேங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்த எஸ். இராசமாணிக்கம் என்ற ஏசு சபைப் பாதிரியார் தெய்வநாயகத்தின் இந்த நிலைப்பாட்டையும், ஆராய்ச்சி முறைகளையும் கடுமையாக விமரிசித்துள்ளார். தமிழ்நாடு அரசால் திருக்குறள் ஆய்வுக்காக நியமிக்கப்பட்ட தமிழறிஞரான கே. சீனிவாசன் என்ற கிறித்தவர் 1975 ல் தெய்வநாயகம் திருக்குறளை மட்டுமல்ல கிறித்தவத்தின் தோற்றத்தையும், வரலாற்றையும் கூட சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று எழுதினார்.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்கள் இந்து சமய வாழ்வியல் பார்வையில் கூறப்படுகிறது. ஆனால் திருக்குறள் முதல் மூன்று புருஷார்த்தங்களை மட்டுமே பேசுகிறது. தமிழ் மக்கள் கிறித்தவ ஆன்மிக வீடுபேறு குறித்துத் தெரிந்துகொள்ளும் ஆன்மிகப் பண்பாட்டு வலிமையற்றவர்களாக இருந்ததனால், திருவள்ளூவர் வீடுபேறு பற்றி எழுதாமல் விட்டுவிட்டதாக ஜி. யு. போப் கருதினார். ஆனால் பகுத்தறிவு வாதம் பேசும் திராவிட ஆராய்ச்சியாளர்கள் வேத ஆரியர்களின் மறுமையுலகச் சிந்தனையைத் திருவள்ளுவரின் உலகவாழ்வியல் சிந்தனை கொண்ட திராவிட மனம் மறுதலித்துவிட்டதால் வீடுபேற்றை விட்டுவிட்டார் என்று கூறினார்கள்.

ஆனால் இதற்கு எளிமையான நேரடி விளக்கம் இருக்கிறது பல இந்திய வாழ்வியல் மற்றும் நீதி நூல்களில், எடுத்துக்காட்டாக சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் போன்றவற்றில் மூன்று விழைவுகளில் அதாவது அறம், பொருள் இன்பம் மூன்றிலும் மட்டும் ஒத்திசைவு இருத்தலை பொருளாதார நிபுணர் இரத்தன் லால் போஸ் சுட்டிக்காட்டுகிறார். முதல் மூன்று புருஷார்த்தங்களும் திரிவர்க்கம் என்று சொல்லப்படுகிறது. மனுதர்ம சாஸ்திரத்தில் இதே திரிவர்க்கப் பார்வை இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் பஞ்சாப் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் ராமா ஜோய்ஸ். “வஜ்ஜாலக்கம் என்ற பிராகிருத மொழியில் எழுதப்பட்ட நீதி நூல் குறள்போல அறம், பொருள், இன்பம் எனும் முப்பால் பற்றிய கவிதைகள் அடங்கிய நூலாகும். சமஸ்கிருத மொழியில் மகாகவி பர்த்ருஹரி எழுதிய சுபாஷிதம் என்ற நூலிலும், நீதி சதகம், வைராக்ய சதகம், சிருங்கார சதகம் என்று அறம், வீடு, இன்பம் ஆகிய முப்பால் பகுப்புதான் உண்டு. ஆக திருவள்ளுவர் மூன்று புருஷார்த்தங்ளை மட்டுமே குறிப்பிடுவதில் தனித்தன்மை ஏதுமில்லை.

மேலும் திரிவர்க்கம் என்ற அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று வாழ்க்கைப் பயன்களையும் ஒருங்கே பேசும் குறள் எப்படி வாழ்க்கையை நிராகரிக்கும் சமண அறவியலின், பொருளை மையமாகக் கொண்ட வணிக நீதியின் குரலாக மட்டும் இருக்க முடியும்? இந்தியப் பண்பாட்டின் முக்கிய அம்சமான இந்த பரந்து பட்ட அறக்கோட்பாட்டையும், அதனை எடுத்தோதும் திருக்குறளையும் இப்படிக் குறுக்குவதே செயற்கையானதும், ஒற்றைப் படை சிந்தனைப் போக்கும் ஆகும்.

திருவள்ளுவர் கண்டிப்பாக சமணராகவும் பௌத்தராகவும் இருந்திருக்கவே முடியாது, அவர் இந்து சமயத்தினராக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் கருத்தியலில் மட்டுல்ல, குறள் நேரிடையாகக் குறிப்பிடும் பருப்பொருள் உண்மைகள், உவமானங்கள், கூறுபொருள்கள் இவை அனைத்தின் மூலமும் உறுதி செய்யப் படுகின்றன என்று இந்து சமயத்து ஆய்வாளர்கள் கூறுவார்கள்.. இருந்தாலும் திருவள்ளுவர் இந்து சமயத்தை உயர்த்திப் பிடிக்கவில்லை, தன்னை எந்த ஒரு சமயத்தைச் சார்ந்தவனாகவும் அடையாளப் படுத்திக் கொள்ளவில்லை.

பேராசிரியர் வையாபுரி பிள்ளை, திரு.வி.க., மயிலை சீனி. வேங்கடசாமி போன்றோர் திருக்குறளை வைத்து வள்ளுவரைச் சமணரென்று வாதிடுவதற்கு யாதொரு அடிப்படையும் இல்லை.
எல்லா சமண நூல்களும் காமத்தை துறந்து துறவை நாடுவதில் முடிகின்றன.திருக்குறள் காமத்துப்பாலுடன் அல்லவா முடிகின்றது

அத்திநாத்தி வாதம் என்ற சமணர்தம் ஆதாரக் கோட்பாட்டினைச் சுட்டும் ஒரு பாவினைக் கூட திருக்குறள் நெடுகத் தேடினாலும் கிட்டாது.

பொதுவாய் சமணத்திற்குச் சான்றாய்ச் சுட்டப்படும் 'அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என்ற (259) குறளில் வேட்டலை உயர்வுநவிர்ச்சியிலே குறிப்பிட்டிருக்கிறாரே அன்றி சமணர் ஏற்காத வேள்விகளைச் சாடவில்லை என்பது பிறிதோரிடம் (குறள் 413) 'செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றோரொடு ஒப்பர் நிலத்து' என்று சொல்வதன் மூலம் அறியலாம். 'அவியுணவின் ஆன்றோர்' (Havis consuming celestials) என்ற சொல்லாட்சியும் இங்கே உயர்வுநவிர்ச்சியிலே சொல்லப்பட்டிருப்பதன் மூலம் வள்ளுவர் வேதவேள்விகளுக்கு எதிரானவர் அல்ல என்றும் தெளியலாம்.




__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

மேலும் தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (குறள் 43) என்ற குறளில் சொல்லப்பட்ட படி சிறுதெய்வங்களுக்குப் படையல் வைப்பதும், மூதாதையருக்குப் படையல் வைப்பதும் சமணத்திற்கு ஏற்புடையது அல்ல.

'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர்' (குறள் 550 ) என்று கொலைத்தண்டனையை நியாயப்படுத்துவது எவ்வகையிலும் அஹிம்சையைப் போற்றும் சமணத்திற்குப் பொருந்தாது.

மன்னன் முறைதவறினால் அந்தணர் கடமைகளான வேட்டல் ,வேட்பித்தல், கற்றல், கற்பித்தல், இரத்தல், புரத்தல் ஆகிய அறுதொழில் நலியும் என்றும் அவர் தாம் கற்ற வேதத்தையே மறப்பர் என்றும், வேள்விக்கும் ஆலயவழிபாட்டிற்கும் அவசியமான ஆபயன் (அதாவது பசுவிலிருந்து கிட்டும் பால் முதலான பஞ்சகவ்யம்) குன்றும் என்றும் ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். ( 560) என்ற குறளில் வள்ளுவர் வலியுறுத்துவதையும் நோக்கினால் வள்ளுவத்தின் அடிநாதம் சமணம் அல்ல என்று தெளியலாம்.

கடவுள் வாழ்த்திலே 'மலர்மிசை ஏகினான்' என்பதை சமணர் தம் ஆதிநாதர் விருஷப தேவர் மலரிலே நடந்தவர் என்பதால் சொல்கிறார் என்று சிலர் சொல்வதுபோல் பொருள் கொண்டால் அதன் தொடர்ச்சியாய் அவன் ‘மாணடிசேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்' எவ்வகையிலும் பொருந்தாது. (மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் –என்று சம்பந்தர் தேவாரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்) ஆனால் 'நிலமிசை நீடுவாழ்தல்' என்பதே சமணத்திற்குப் புறம்பானது.

வள்ளுவர் மிகச்சிறந்த அறிஞர். வேதங்கள் முதலாக எல்லா நூல்களையும் கற்றறிந்த ஞானி. அவருடைய சொல்லாட்சியை ஆராய்ந்தோமானால் பல்வேறு மறை நூல்களிலும், நீதி நூல்களிலும் அவருக்குள்ள பரிச்சயம் புலப்படும்.

இந்த ‘மலர்மிசை ஏகினான்” என்ற சொற்றொடருக்கும் கீதையிலே வரும்

ஈஸ்வர சர்வ பூதானாம் ஹ்ருதயசேஅர்ஜுன திஸ்ட்டதி (கீதை 18: 61} என்ற வரிக்கும் ஒற்றுமை இருக்கிறது.

எல்ல சீவராசிகளின் இதயமாகிய மலரிலே நான் இருக்கிறேன், அர்ஜுனா, என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வதாக வருகிறது.

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (1031)

ஏர் கொண்டு உழுதால் மண்ணில் வாழும் புழு பூச்சிகள் கொல்லப்படும் என்பதால் சமண முனிவர்கள் உழவுத் தொழிலை விரும்புவதில்லை. ஆனால் வள்ளுவர் உழவே தலைசிறந்த தொழில் என்கிறார்.

பல குறட்பாக்கள் பதஞ்சலி யோகசூத்திரம் மற்றும் திருமந்திரப் பாக்களை ஒத்திருப்பதைக் காணலாம். 'பகவன், அறவாழி அந்தணன், எண்குணத்தான்' போன்ற விளிகள் சமணருக்குச் சொந்தமானதல்ல. திருமந்திரப்பாக்களிலே இச்சொற்கள் வருகின்றன. எடுத்துக்காட்டாய்:

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தின் உள் ளேநின்றவூழிகள்
செல்லூழி யண்டத்துச் சென்றவ் வூழியுள்
அவ்வூழி யுச்சியுள் ஒன்றிற் *பகவனே*. (திருமந்திரம் – 2533)

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
*அறவாழி அந்தணன்* ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம் புகுந் தானே!
(திருமந்திரம் – 1803)

கொல்லான் பொய்கூறான் களவிலன் *எண்குணம்
நல்லான் அடக்கமுடையான் நடுச்செய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத்து இடையில் நின்றானே. (திருமந்திரம் – 554)

'எட்டுகொலாம் அவர் ஈறில் பெருங்குணம்' என்று அப்பர் பெருமானும், 'எண்குணம் செய்த ஈசனே' என்று மாணிக்கவாசகரும் பாடுவர்.
அதனாற்றான் சிவாகமங்களில் சுட்டியபடி என்று பரிமேலகரும் உரையெழுதுகிறார்.

மேலும் எளிதில் பொருள்விளங்கா பல அதிநுட்பமான குறட்பாக்களுக்கு வேதாந்த சைவசித்தாந்த அடிப்படையில் மட்டுமே மெய்ப்பொருள் கொள்ளமுடியும். எடுத்துக்காட்டாய்:

'அல்லல் அருள் ஆள்வார்க்கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி' (குறள் 245) என்ற குறளில், அருள் ஆள்பவர்க்கும் வளிக்கும் உள்ள தொடர்பை சித்தாந்தரீதியில் அணுகினால் ஒழிய பொருள் விளங்காது. இதன் சூக்குமத்தை

'வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே' என்ற திருமந்திரத்தின் துணை கொண்டும் தெளியலாம்.

அது போலவே
'குடம்பை தனித்தொழிய புள் பறந்தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு' (338)

என்ற குறளில் ஆன்மாவின் இயல்பைச் சுட்டுவதும் அத்திநாத்தியத்திற்கு ஒவ்வாதது. இது வேதாந்தக் கோட்பாடு..

 சைவசித்தாந்த சாத்திர நூல்களில் திருக்களிற்றுப்படியார் என்ற நூல் உள்ளது. இதில் இரண்டு குறட்பாக்கள் நேராகச் சுட்டப்பட்டுகின்றன:


சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் என்றமையால்
சார்புணர்தல் தானே தியானமுமாம் - சார்பு
கெடவொழுகின் அல்ல சமாதியுமாம் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று. (திருக்குறள் 359)

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால்
வேண்டின தொன்றுமே வேண்டுவது - வேண்டினது
வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால். (திருக்குறள்: 362)

சமண மதக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு சைவசித்தாந்த சாத்திரநூல் பாடப்பட்டது என்பது நகைமுரணாகும்.

அவ்வண்ணமே சைவத்திருமுறையிலே சேரமான்பெருமாள் நாயனார் கயிலையில் சிவனார்தம் ஆசிகொண்டு பாடிய 'திருக்கயிலாய உலா' என்ற நூலில் திருக்குறள் ஒன்று தெளிவாய்க் குறிப்பிடப்படுகிறது:

'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உளவென்று - பண்டையோர் கட்டுரையை..' என்று (173/174) (குறள் 1101) திருக்கயிலாய உலாவில் கூறப்படுகிறது.

அஹிம்சை என்பது சமணர்க்கு மட்டுமே உரிய குறிக்கோள், ஆதாரக்கோட்பாடு என்பதும் பிழை. யோகமார்க்கத்தில் அஹிம்சையை இந்துசமய நூல்கள் அனைத்துமே வலியுறுத்துகின்றன. ஆயின் சமணத்தைப் போலன்றி அதை முக்திக்கு ஒரே வழியாக வைக்கவில்லை. 'யோகியர் பெறும் பேற்றினையே சாங்கியரும் பெறுவர்' என்ற கண்ணபிரானின் கீதைப்பேருரைக்குச் சான்றாய் வேடர் கண்ணப்பரையும், மீனவர் அதிபத்தரையும் அவர் போன்ற எண்ணற்ற மகான்களையும் காண்கிறோம். வள்ளுவரும் புலால் மறுத்தலை அனைவருக்கும் வலியுறுத்திச் சொல்லவில்லை.

வள்ளுவர் புலால் மறுத்தலை வலியுறுத்துவது யாரிடம்?

'துறவறவியலில்', யோகத்திலாழ்ந்து தவம் மேற்கொள்வோர்க்கு, அதாவது நோற்பார்க்கு மட்டுமே
புலால் மறுத்தலை சொல்கிறார், வேறெங்காவது சொல்கிறாரா? குடியியலில் ஓரிடத்தில் சுட்டிக் காட்டுகிறார்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. (984)

ஆக, கொல்லாமை என்பது நோற்பார் மட்டுமே கொள்ளத்தகும். ஆயின் நோற்பவர்கள் பெரும்பான்மையினரா? என்றுமில்லை. அவரே மேலும் சொல்கிறார்:

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். (270)

வள்ளுவம் சமணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் 'கொல்லாவிரதம்' அனைத்துத் தரப்பினர்க்கும் என்று, 'துறவறவியல்' மட்டுமின்றி பிற அதிகாரங்களிலும் எங்காவது ஓரிடத்திலாவது வலியுறுத்தப் பட்டிருக்கும். ஆனால் அப்படி அமையவில்லை.

பொதுவில் பெரும்பான்மைக்கு, குறிப்பாய் நட்பியலில், 'மருந்து' (அதிகாரம் 95) எது என்று குறிப்பிடுகையில், பசித்து உண்க, அளவறிந்து உண்க' என்று பல பாக்களில் சொல்லிப் போகிறாரே அன்றி ஓரிடத்திலும் 'புலால் மறுத்தலே சிறந்த மருந்து, உடல்நலத்திற்கு ஏற்றது' என்று சொல்வதில்லை. தமிழர் உணவுப்பழக்கத்தில் புலால் தவிர்க்க முடியாத அம்சமாய் இருப்பதை தொன்றுதொட்டுக் காண்கிறோம்.

ஓரிடத்தில் நிணத்தைத் தீயிலிட்டு வாட்டுவதைக் காண்கிறார் வள்ளுவர். கண்டிக்கவில்லை; கலங்கவுமில்லை. மாறாய் நின்று ரசிக்கிறார். புசித்துமிருக்கலாம். எப்படியோ, சமணராய் வெறுத்து ஒதுக்கி ஓடியிருந்தால் அதனை ஓர் உவமையாய்க் குறளில் அமைத்திருக்க மாட்டார் என்பது திண்ணம்.

காமத்தீயில் நிறையழிந்து நிற்கும் பெண்மைக்கு அதைச் சுட்டுகிறார் இங்கு:

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்? (1260)

சைவர்கள் மட்டுமல்ல , வைணவர்களும் திருவள்ளுவரைத் தங்களுக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்
ஐயந்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து
என்ற குறளுக்கு உரை எழுதும் பரிமேலழகர், " ஐயமாவது பலதலையாய உணர்வு. அதாவது, மறுபிறப்பும், இருவினையும், கடவுளும் உளவோ? இலவோ?" என ஒன்றில் துணிவு பிறவாது நிற்றல். பேய்த்தேரோ? புனலோ? கயிறோ? பாம்போ? எனத் துணிவு பிறவாது நிற்பதும் அது" என்கிறார் இதில் எது மெய் என்று கண்டு தெளிந்தாரே, "ஐயந்தினீங்கித் தெளிந்தார்" என்பவர். அவர்களுக்கு அவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல் உணர்வு தூர்ந்து வரும் என்கிறார் வள்ளுவர். அதாவது "தான் தெய்வத்தினிடமிருந்து வந்தேன்" என்ற உணர்வுதான். நம் உண்மையான பண்டைய உணர்வு இதை பல பாடல்களில் திரும்பத் திரும்ப திருமூலர் கூறுகிறார்.

"இறைமாட்சி" அதிகாரத்தில் பரிமேலழகர் அதிகாரப் பொருளை விளக்கும் போது "திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும்" என்று "பெரியாரும் பணித்தார்” என்று சொல்கிறார். மேற்கோள் காட்டும் பிறவிடங்களிலெல்லாம் "பிறர் கூறுவர்" "பிறர் கூறுவர்" என்று சொல்லிப் போந்து நம்மாழ்வாரை மேற்கோள் காட்டும் போது "பெரியாரும் பணித்தார்" என்று பரிமேலழகர் சிறப்பித்துக் கூறுகிறார்.

அச்சிறப்புப் பெற்ற நம்மாழ்வார், அறவாழி அந்தணன் யார் என்று சொல்கிறார்.

அறவனை ஆழிப் படை அந்தணனை
மறவியை இன்றி மனத்துவைப் பாரே (1.7.1)

ஞான மார்க்கத்தில் இருந்து பிறவித் துயரை போக்க வேண்டும் என்பவர்கள், அறத்திற்கு நாயகனாக இருக்கும் நாரணனை, சக்கரப் படையினைத் தரித்த அழகிய தண்ணளியை உடையவனுமாகிய இறைவனை எப்படி மறந்து வாழ்தல் முடியும்? என்று கேட்கிறார் நம்மாழ்வார்.

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிற ஆழி நீத்தல் அரிது (8)

என்ற குறளுக்கு உரை சொல்வது போல் நம்மாழ்வார் இப்பாசுரத்தை யாத்து அருளுகிறார். இதே போல் குறளின் முதல் பாடலாகிய

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. (1)

என்ற பாடலுக்கு எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்னும்படி நம்மாழ்வார் திருவாய்மொழியில்
கணக்கறு நலந்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு (1.3.5)

என்று அருளிச் செய்கிறார். வெறுமே ஆதி என்று சொன்னால் ஆதிக்கு அந்தம் உண்டாகும் என்பதனாலும், அந்தக் கோதிலான் இறைவன் என்று வேதம் சொல்வதாலும் நம்மாழ்வார் அந்தமில் ஆதி என்று மொழிந்தார் என்பது வைணவ வியாக்கியானம்.

பகவர் என்ற சொல் எல்லாக் கடவுளருக்கும் பொதுவாகக் கூறப்படினும் கிருஷ்ண பக்தியில் சிறந்து விளங்கிய துறவிகளையே பகவர் என்று கூறப்படுவதன்றி வேறு சமயத்து அடியவரைப் பகவர் என்று அழைப்பதாய் தமிழ் நூல்களில் அறிய முடியவில்லை. இதே பொருளில் பெரியாழ்வார் பாடியுள்ளார்,

பக்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்
முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுதிறைஞ்சத்
திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே (417)
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல். (84)

திருமகள் எந்த இல்லத்தில் உறைவாள் என்று கூறுகிறார் வள்ளுவர்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். (167)

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்ட தீயவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள். என்று வள்ளுவர் சொல்கின்றார்.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள். (617)

ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.




__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். (1040)

வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமாதேவி
தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள் என்று வள்ளுவர் கூறுகின்றார்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. (126)

ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதே கருத்துடைய சுலோகம் ஒன்று கீதையிலே உள்ளது.

யதா சம்ஹரதே சாயம் கூர்மோ அங்கானீவ சர்வஷ
இந்த்¡¢யாணி இந்த்¡¢யார்த்தே அப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா. (கீதை 2:105 )

ஆமை தன் அங்கங்களை உள்ளே இழுத்துக்கொள்வதுபோல் எவனொருவன் தன் புலன்களைப் அவைகளுக்கான விஷயங்களை விட்டு உள்ளே இழுத்துக்கொள்கிறானோ அவனுடைய ஞானம் நிலைபெற்றதாகும்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. (610)

தனது அடியால் உலகத்தை அளந்த திருமால் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (894)

அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.

காமத்துப்பாலில்
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு. (1083)

கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தன்மையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து. (1085)

உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. (1103)

தாம் விரும்பும் காதலியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகமாகிய வைகுந்தம் எனும் சொர்க்கம் இனிமை ஆனதோ?.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று. (1146)

காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய ஊரார் பேச்சோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது. இந்து சமயத்தினர் நம்பிக்கையை இங்கு உவமையாக வைத்துள்ளார் வள்ளுவர்.

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான். (1197)

இன்பம் நுகர்வதற்குள்ள ஆண் பெண் இரு பாலரிடத்தும், சமமாக நிற்காமல், ஒருவரிடத்தில் மட்டும் நின்று துன்பம் செய்கின்ற காமன் என்ற மன்மதன் என்னுடைய நோயினையும் மிகுந்த துன்பத்தினையும் அறியமாட்டானோ? என்று இந்து சமயத்தினரின் காதல் தெய்வத்தைப் பற்றிக் கூறுகிறார் வள்ளுவர்..

இதுவரை ஆத்திகர்கள் தங்கள் தங்கள் சமயத்தோடு திருவள்ளுவரை ஒப்புமை செய்து கொண்டதைப் பார்த்தோம்..
திருக்குறள் மீது நாத்திகர்கள் எப்படி நாட்டம் கொண்டார்கள் என்று இனி பார்ப்போம். திருக்குறள் மீது பெரியாரின் பார்வை என்பது எப்போதும் முன்னுக்குப் பின் முரணாகவே இருந்தது.
20.01.1929 குடியரசு இதழில் ஈ. வே. இராமசாமி நாயக்கர், ‘‘திருவள்ளுவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்’’ என்று எழுதுகிறார்.
14.3.1948 ல் மயிலாப்பூர் திருவள்ளுவர் கழகம் சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் மாநாட்டில், “திருக்குறளில் பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துகளுக்கு அதில் இடமில்லை என்று கூறியதோடு, திருக்குறள் ஆரிய தர்மத்தை மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே எழுதப்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்று முன் கூறிய கருத்துக்கு முரணாகப் பெரியார் கூறினார்.
ஈரோட்டில் 23,24.10.1948இல் நடைபெற்ற திராவிடர் கழக 19 வது மாநாட்டில், “குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்” என்றும் கூறினார்.
15.1.1949 சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் திருக்குறள் மாநாடு நடத்தப்பட்டது. அதில், “குறள் ஆரியத்தை ஒழிக்க ஒப்பற்ற நல்லாயுதம்” என்றும் பேசினார்.

1950 ல் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. பெரியார் கூறுகிறார்: “வள்ளுவருடைய குறளையும் அவ்வப்போது அது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். நான் எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம் வந்து எல்லாம் போய் விட்டால் நமக்கு என்று எது தான் நூல் என்று கேட்டார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்துப் போடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது என்று பதில் கூறினேன். (விடுதலை 1.6.1950)
1968 ல் உலகத்தமிழ் மாநாடு நடக்கவிருந்த நேரத்தில் “தமிழும் தமிழரும்” என்ற நூல் பெரியாரால் வெளியிடப்பட்டது. அதில் திருவள்ளுவர், தொல்காப்பியர், கம்பர் ஆகிய மூவரும் கடுஞ்சொற்ளால் பெரியாரால் ஏசப்பட்டனர். இம் மூவரும் ஆரியமதத்தையும், சாதியையும், சாதித் தொழிலையும் ஏற்றுக் கொண்டவர்களே ஆவார்கள் என்றார்.
திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில், பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது இந்து மத உணர்ச்சியோடு பலவற்றையும் சொல்லிச் சென்றான்.” என்று அவர் கூறியிருக்கிறார்.
பெரியாருக்கு அவர் காலமாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வரையிலும் திருக்குறளின் மேல் நல்லெண்ணம் பிறக்கவில்லை.
27.12.1972இல் ‘கலைமகள்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார்: “ நான் மட்டும் தான் குறளை கண்டிக்கிறேன்…. நான் குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டித்தார்கள். கலைஞர் கூட குறள் ஒன்றையாவது விட்டுவிடக் கூடாதா என்று கேட்டார். குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக்கொண்டார். இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தியது குறள். அதில் சொல்லியிருப்பதை அப்படியே இப்பவும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் எப்படி?” என்று பெரியார் பதிலளிக்கிறார்.
பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்கள் ஏராளமாக திருக்குறளில் உள்ளன.
பெரியார் சுட்டிக்காட்டிய சில குறள்களை மட்டும் காணலாம்:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

பெண்ணியத்திற்குத் துணை போகும் ஒருவரா வள்ளுவர்?. அது எப்படி பெய் என்று ஒரு பெண்மணி சொன்னால் மழை பெய்யும்? உலகத்தில் வாழ்கின்ற தாய்க்குலத்தில் பத்தினிகளே இல்லையா? எந்தப் பெண்ணும் பெய் என்று சொல்லி மழை பெய்ததை நாம் பார்க்க முடியவில்லையே! என்று பெரியார் ஒரு கூட்டத்தில் கேட்டார்.

வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று (குறள் 1317)

தும்மல் என்பது இயற்கையில் மனிதருக்கு ஏற்படும் ஒன்று. இதற்கும் காதலி நினைப்பதற்கு என்ன, ஐயா சம்பந்தம்? காதலனை நோக்கிக் காதலி யாரை நினைத்து தும்மினாய் என்று முட்டாள்தனமாகக் கேட்பது பகுத்தறிவுக்கு ஒத்ததா? இதைப் போய் திருவள்ளுவர் எழுதி வத்திருக்கிறார் என்றும் கேட்டார்

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

சிவிகையை ஒருவன் சுமக்கிறான். அதனுள் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். சாலையில் நூற்றுக்கணக்கில் கார்கள் போகின்றன. டிரைவர் ஓட்டுகிறான். முதலாளி அமர்ந்து போகிறான். இது உலகியல்பு. இதையும் வினையையும் எப்படி முடிச்சு போடலாம். கொஞ்சம் கூட பகுத்தறிவுக்கு இது ஒத்து வரவில்லை என்று சொன்னார் பெரியார்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் (குறள் 260)

கொலை செய்யப்பட உள்ள உயிர் வேண்டுமானால் ஒரு வேளை மனதிற்குள் தப்பித்தேன் பிழைத்தேன் என்று நினைக்கலாம். ஆனால் எல்லா உயிரும் எப்படித் தொழும்? முட்டாள்தனமாக இருக்கிறது! இதுவும் பெரியாரின் கேள்வியே.
பெரியார் குறளைப் பற்றி மாற்றுக் கருத்து கொண்டிருந்தார் எனினும் அவரது பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்ற தமிழறிஞர்கள் குறளைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். ஏன் என்றால்,
அவர்களில் பலர் தமிழைப் பேசியே வாழ்க்கையில் முன்னேறியவர்கள். அவர்கள் திருக்குறளின் பெருமையை உணர்ந்திருந்தார்கள். திருவள்ளுவர் கடவுள் என்னும் சொல்லை எங்கும் எழுதவில்லை. பகவன் என அவர் குறிப்பது உலகில் உயிர்கள் வாழ்விற்குக் காரணமாக இருக்கிற, பகலவனைக் குறிக்கும். வாலறிவன், அந்தணன், இறைவன், தெய்வம் போன்ற எல்லாச் சொற்களும் கடவுளைக் குறிப்பிடுவன அல்ல. அறிவாற்றலில் முதன்மை பெற்றிருக்கின்ற சான்றோர்களையே குறிப்பன. அவர்களைப் பின்பற்றி வாழ்வதே தொழுதல் என வள்ளுவர் குறிப்பதாக அவர்கள் விளக்குகின்றார்கள். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதே சிறப்பானது. மறுமை, மேலுலகம் என்று அக்கால மக்கள் தவறாகக் கொண்டிருந்த கருத்துகளை வள்ளுவர் மென்மையான முறையில் மறுத்திருக்கிறார். தெய்வத்தால் ஆகாதது முயற்சியால் ஆகும் என அவர் சொன்னது இவ்வகையிலான கடவுள் மறுப்பே எனக் கூறி, வள்ளுவர் ஒரு நாத்திகர் என உறுதிப்படுத்துகிறார் கள்..
தாங்கள் தமிழில் நிலைபெற்றிருக்க வேண்டுமாயின் திருக்குறளைப் போற்றவேண்டும் என்று அவர்கள் தெரிந்து கொண்டார்கள். எனவேதான் கலைஞர் போன்ற நாத்திகர்கள் கூட தங்கள் பாணியில் திருக்குறளுக்கு உரை எழுதினார்கள்.
தனிப்பட்ட முறையில் சமய சார்பற்று திருக்குறளின் மீது பற்று கொண்ட வெளிநாட்டவர்களும் இருந்திருக்கிறார்கள்.

'எல்லீசன்' என்று தம் பெயரைத் தமிழில் எழுதியவரும். அன்றைய சென்னை மாகாணத் தலைமை பொக்கிஷ அதிகாரியுமான எஃப். டபிள்யு. எல்லிஸ் என்ற ஆங்கிலேயர் வள்ளுவ தாசனாகவே வாழ்ந்திருக்கிறார்., இவர் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் மிக்க புலமை வாய்ந்தவர். 1812 ல் திருக்குறளின் அறத்துப் பாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். கி.பி. 1818-இல் சென்னையில்; உருவான குடிநீர்த் தட்டுப்பாட்டினைப் போக்க, எல்லீஸ் வெட்டிய கிணறுகளில் ஒன்று சென்னை ராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயில் அருகில் இன்றும் உள்ளது. இக்கிணற்றின் கைப்பிடிச் சுவரில் பதிக்கப்பட்டுள்ள ஒரு கல்லில் எல்லீஸ் துரை வெட்டி வைத்த கல்வெட்டு இன்றளவும் நம் பார்வைக்கு உள்ளது. அதில்,

சாயங்கொண்ட தொண்டிய சாணுறு நாடெனும்
ஆழியிலிழைத்த அழகுறு மாமணி
குணகடன் முதலாக குடகடல்அளவு
நெடுநிலம்தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
பண்டார காரியப் பாரஞ்சுமக்கையில்
புலவர்கள் பெருமான் மயிலையம்பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றிய
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு
என்பதின் பொருளை என்னுள்ளாய்ந்து...
என்ற அடிகளில் ஓர் அழகிய குறளை மேற்கோளாகக் கையாண்டிருக்கிறார்.

மற்றொரு கல்வெட்டு திண்டுக்கல் நகரிலுள்ள எல்லீசர் அவர்களின் கல்லறையின் மீது அவருடைய வேண்டுகோளுக்கிணங்க அவர் எழுதிய கவிதை பொறிக்கப்பட்டுள்ளது. அதில்
எல்லீசன் என்னும் இயற்பெயருடையோன்
திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ் செப்பி
அருள் குறள் நூலுள் அறப் பாலினுக்குத்
தங்கு பல நூல்உ தாரணக் கடலைப் பெய்(து)
இங்கி லீசுதனில் இணங்க மொழி பெயர்த்தோன்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளிலிருந்து எல்லிஸ் துரையின் ஆழ்ந்த தமிழ்ப்புலமையும் அவருக்குத் திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் இருந்த ஈடுபாடும் , பற்றும் தெளிவாகத் தெரிகின்றன.

எல்லிஸ் மாநில நிதி அதிகாரியாகவும், அக்கசாலை (Mint)யின் தலைவராகவும் இருந்த காரணத்தால், திருவள்ளுவர் உருவம் பொறித்த (புழக்கத்தில் வராத) தங்க நாணயங்களை வெளியிட்டார் என்று தெரிகிறது. இந்நாணயங்களை அண்மைக் காலத்தில் தொல்லியல் அறிஞர்கள் ஐராவதம் மகாதேவன், அளக்குடி ஆறுமுக சீதாராமன் ஆகிய இருவரும் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வளவு சிறப்பான திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர் எப்பேர்பட்ட ஞானியாக இருந்திருக்க வேண்டும் என்று சிந்தித்து பாருங்கள். சமயங்களின் வேத நூல்களில் இல்லாத பக்குவமும் தெளிவும் திருக்குறளில் இருக்கிறது.
காதலன், தன் காதலை நிரூபிக்க, திருமால் மேல் சூள் செய்தான் என்னும் தகவல் கலித்தொகையில் உள்ளது எனவே கலித்தொகை வைணவ நூல் என்றும் மருதன் இள நாகனாரை வைணவர் என்றும் சொல்வது எங்ஙனம் சரியாகும்?
சமயத்தை நோக்கமாகக் கொண்டு எழுதாத நூலை வைத்துக் கொண்டு, படைப்பாளியை சமய முத்திரை குத்தல் அறம் அன்று!
வள்ளுவர் காலத்தில் சமணமும், பௌத்தமும், சைவமும், வைணவமும், வேதாந்தமும் பாரத நாட்டில் நிலவிய சமயங்களாம். வள்ளுவர் தம் குறட்பாக்களில் மேற்கண்ட சமயக்கருத்துக்களில் தேவையானதை எடுத்தாண்டது மட்டுமன்றித் தேவையில்லாதவற்றைத் தள்ளி தன்னுடைய சிந்தனைகளில் தோன்றிய உயர்ந்த கருத்துக்களையும் சேர்த்துக்கொண்டுள்ளார்.
அதனால் தான் எல்லா சமயத்தாரும் வள்ளுவரைத் தத்தம் சமயத்தவர் என வாதிடுகின்றனர். வள்ளுவரின் காலத்துக்குப் பின் வாழ்ந்த சான்றோரின் கருத்துக்களைக் கொண்டு ஆய்ந்து பார்க்க வேண்டும். மணிமேகலையின் ஆசிரியர், பௌத்தரான சீத்தலைச் சாத்தனார் புறச் சமயவாதிகளின் உரைகளையெல்லாம் பழித்தும், வள்ளுவரின் குறளை மட்டுமே பொருளுரை என்று புகழ்ந்தும் ‘பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்’ என்கிறார். சமணக் காப்பியம் நீலகேசியோ “தேவன் உரைப்பத் தெளிந்தேன்’ என்று திருவள்ளுவரைப் பாராட்டிக் கூறுவதும் வள்ளுவரின் மதச் சார்பின்மையைக் காட்டும்.
நல்வழி நூலின் கடைசிப் பாடலில் ஔவையார் திருக்குறளை வேதங்களின் முடிபான உபநிடதங்களுடனும், சைவத் திருமறைகளுடனும், சாக்கிய முனி என்றழைக்கப்படும் புத்தருடைய பொதனைகளுடனும், ஸ்வேதாம்பர முனி, திகம்பரமுனி என்று அழைக்கப்படும் சமண முனிவர்களின் நீதி நூல்களுடனும், மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார், திருவாசகம் ஆகியவற்றுடனும், திருமூலர் வாக்கான திருமந்திரத்துடனும் இணைத்துக் கூறுகிறார்.,

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம் என்று உணர்"
திருக்குறளை பொதுமறை என்கின்றார்கள். அதுவும் தவறே. ஏனென்றால் ‘மறை’யாக இருக்கும் எதுவும் பொதுவாக இருப்பதில்லை. பொதுவாக இருக்கும் எதுவும் ‘மறை’யாகவும் இருப்பதில்லை. நீதிமுறை, நெறிமுறை, வாழ்க்கை முறை என்ற சொல்லாட்சிகள் ஏற்கனவே தமிழில் இருக்கின்றன. எனவே திருக்குறளைப் பொதுமறை என்பதற்குப் பதில், பொதுமுறை என்று சொல்வதே பொருத்தம். முறை என்றால் நூல் என்றும் ஒழுக்கம் என்றும் பொருள் உள்லது.
கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்துடன் வள்ளுவர் தொடங்கினாலும் தொல்காப்பியரைப் போல் நான்கு நிலக் கடவுளரைப் பாடவில்லை. எந்த சமயக் கடவுளையும் அவர் வாழ்த்திப் பாடவில்லை. முதல் அதிகாரத்துக்குக் கடவுள் வாழ்த்து என்ற பெயரையும் அவர் கொடுக்கவில்லை. சரியாகச் சொன்னால் அவ்வதிகாரத்துக்குக் கடவுள் பெருமை என்றுதான் பெயரிட்டிருக்க வேண்டும். கடவுள் வாழ்த்து அதிகாரப் பாடல்களிலே பொருட் குறிப்பால், குணக் குறிப்பால், பாலில் படு நெய்போல இந்த உலகில் வாழும் உயிர்களோடு இறைவன் கலந்திருப்பதாகக் காண்கிறார். வேறுபாடற்ற ஒருமித்த இறைக்கொள்கை இந்த உலகில் நிலவ வேண்டுமென்று திருக்குறளைக் கொண்டு திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். எனவே திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட சமய வட்டத்துக்குள் கொண்டு வந்து நிறுத்துவது அவரது மாட்சிக்கு நாம் செய்யும் இழுக்கே ஆகும்..



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 கடவுளைத் தொழுது தொடங்குவதன் நோக்கம் தான் மேற்கொள்ளும் நூல் எழுதும் செயல் நல்லபடியாக முடியவேண்டும் என்பதே. ஆனால் திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் உள்ள பாக்களைப் பாருங்கள். மற்ற அதிகாரங்களைப் போலவே ஒரு வரையறை, அல்லது நன்மை தீமைகள் என்ற முறையிலேயே அமைந்துள்ளன. “அகர முதல” என்ற முதல் குறள் ஒரு வரையறை (definition). “கற்றதனால் ஆயபயன்” என்ற இரண்டாவது குறளும், “கோளில் பொறியில்” என்ற ஒன்பதாவது குறளும் கடவுளை வணங்குதலே தலையாய கடமை என்ற அறிவிக்கைகள் (statements). மற்ற ஏழு குறட்பாக்களில், மனித குலத்தின் மூன்று முக்கிய வரையறவுகளான மனக்கவலை (4,7), காலம் (3,6,8,10), அறியாமை (5) ஆகியவற்றை நீக்கும் வழி இறைவணக்கமே என்று கூறப்பட்டுள்ளது.

சொன்னதையே திரும்பச்சொல்லுதல் இலக்கியத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என்பர். நான்காவது, ஏழாவது பாக்கள் கவலையறுத்தல் என்ற ஒரே கருத்தையும், எட்டாவது, பத்தாவது பாக்கள் பிறவியறுத்தல் என்ற ஒரே கருத்தையும், மூன்றாவது, ஆறாவது பாக்கள் நெடிய வாழ்வு என்ற ஒரே கருத்தையும் சொல்வதைக் கவனிக்கவும்.

ஐந்தாவது அதிகாரமான இல்வாழ்க்கையில்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (43) என்றும்,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” (50) என்றும்

குறிப்பிட்டிருப்பதையும், ஆறாவது அதிகாரமான வாழ்க்கைத்துணை நலனில்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய் யெனப் பெய்யும் மழை” (55) என்ற குறளையும்,

ஆள்வினை உடைமை அதிகாரத்தில்

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்” (619) என்ற குறளையும் கவனித்தால் வள்ளுவரின் தெய்வம் பற்றிய சிந்தனை ஓரளவுக்குப் புலப்படும்.

தவம் என்ற அதிகாரத்தில்

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றம் தலைப்பட்ட வர்க்கு (269) என்ற குறட்பாவில் தவம் செய்து வாழ்தலே நீண்ட வாழ்வின் காரணம் என்று மாற்றுக் கருத்தொன்றை வைக்கிறார்.

இது போன்றே மெய்யுணர்தல் அதிகாரத்தில்

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு” (358) என்ற குறட்பாவிலும் மற்றும் இரண்டு பாக்களிலும் அறியாமையினால் உண்டாகும் பிறவித் துன்பத்திலிருந்து விடுபட மெய்யறிவு பெறுதலே வழி என நிறுவுகிறார். மெய்யுணர்வு பெற மெய்ஞானியர்களை நாடுவதே ஆன்மிக மரபு. மெய்யுணர்வு பெற்ற மனிதனே வீடுபேறு எய்துகிறான் என்று வலியுறுத்துகிறார்.

திருவள்ளுவர் சைவ சமயத்தவர் என்று ஒரு கூட்டமும், இல்லை இல்லை திருவள்ளுவர் 'இலக்குமி' குறித்தெல்லாம் பாடலில் சொல்லி இருக்கிறார் அவர் திருமாலை வழிபடும் வைணவப் பிரிவைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும் என்று ஒரு கூட்டமும் சொல்லிக் கொண்டு, விவாதங்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.

திருவள்ளுவர் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட கி. மு. முதல் நூற்றாண்டில் சைவ, வைணவ சமயங்கள் தோன்றியிருந்தாலும் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவான உண்மை. சங்க இலக்கியங்கள், நாலடியார் ஆகியவற்றில் குலதெய்வ வழிபாடுகளும் (மாயோன், சேயோன்) பற்றிய குறிப்புகளும், சமண, பவுத்த சமயக் குறிப்புகள் மட்டுமே காணக்கிடக்கின்றன. தொன்று தொட்டுவந்த மாயோன் சேயோன் வழிபாடு பின்னர் புராணப் புகுத்தலின் வழியாக சைவ வைணவ சமயத்தினுள் இழுத்து கொள்ளப்பட்டுள்ளது என்பதே உண்மை. மதம் மாறியவர் அந்த புதிய சமயத்தைச் சேர்ந்தவராகிவிடுவார் என்பது போல் குலசாமிகள் மதமாற்றம் செய்யப்பட்டது போன்றவை தான் பிற்காலத்தில் , முன்பு தமிழர் வழிபட்ட தெய்வங்கள் வைதீக சமய தெய்வங்கள் ஆன கதைகளும்.

இவற்றையெல்லாம் மறுத்து 'எண்குணத்தான், தாமரைக் கண்ணான்' என்ற சொற்கள் சங்க காலம் தொட்டே புத்தரைக் குறிக்கிறது, ஐம்பெருங்காப்பியங்களிலும் அந்தச் சொற்கள் புத்தரைத்தான் குறிக்கிறது எனவே திருவள்ளுவர் பௌத்தம் சமயத்தினர் என்கின்றனர் ஒரு கூட்டத்தார்.

மயிலை சீனி வெங்கடசாமி என்னும் தமிழறிஞரும் வேறு சிலரும் ஆதிபகவன்' என்ற சொல் சமணர்களின் அருகப் பெருமானைக் குறிப்பதாலும், தவம் செய்தல், வீடுபேறு போன்றவை சமண பௌத்த சமயங்களுக்கே உரிய கொள்கை என்பதால் திருவள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்றும் சொல்லி இருக்கின்றனர்.

கடவுளை ஒப்புக்கொண்ட வள்ளுவர் எவ்வாறு சாக்கிய,சமண சமயங்களை சேர்ந்தவராக இருக்கமுடியும்? கடவுள் வாழ்த்தில் அவர் கூறும் ‘தனக்குவமை இல்லாதான், வேண்டுதல் வேண்டாமை இலான் ‘ போன்றவை எல்லாம் சமண,சாக்கிய மத கருத்துக்களா? ‘இருள் சேர் இருவினையும் சேராது இறைவன் அடியை சேருபவருக்கு’ என்று சொன்னவர் சாக்கியரா?



-- Edited by admin on Tuesday 12th of May 2020 08:05:58 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard