Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 13. உயிர்க்கு உறுகண் செய்யாமை


Guru

Status: Offline
Posts: 7329
Date:
13. உயிர்க்கு உறுகண் செய்யாமை
Permalink  
 


 13. உயிர்க்கு உறுகண் செய்யாமை


உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. (திருக்குறள் 261)

மணக்குடவர் உரை: தமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே தவத்திற்கு வடிவமாம்.
பரிமேலழகர் உரை: தவத்தின் வடிவு; உற்ற உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவினது
ஆன்மீக முன்னேற்றத்திற்காக உடலாலும், வாக்காலும், மனதாலும் செய்யப்படும் அனைத்து சாத்விகமான சாதனைகளும் தவம் எனப்படும்.

உடல் கொழுத்தால் மனம் ஐம்புலன் தொடர்பான இன்பங்களையே நாடும், மதயானை போல் அடங்காமல் திமிறும். அதனை அடக்கி இறைவன்பால் செலுத்துவதற்குத் தோதாக உண்ணா நோன்பு, தட்ப வெப்பம் பொறுத்தல் முதலிய கடும் பயிற்சிகளால் உடம்பை வாட்டி . உடம்பை ஒடுக்கி அடக்கி இறைவனை வேண்டுவதே 'தவம்' என்றானது.

உடலையும், மனதையும் உருக்கி செய்யப்படும் நோன்பு, தியானம், விரதங்கள், பாதயாத்திரை, காவடி எடுத்தல், தீர்த்த யாத்திரை, பூஜை, ஜெபம், ஓதுதல் முதலியன தவத்திற்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.

சொல்லாய்வு விளக்கத்தின் படி.
தப - என்கிற மூலத்திலிருந்து உருவான சொல்லே தவம் ஆகும். தப என்ற இவ்வினைச்சொல் எரித்தல், வெப்பமாக்குதல், ஒளிரச் செய்தல் என்று பொருள் படும். ‘தபதி’ என்ற வினையடியிலிருந்து தோன்றிப் பெருகிப் பல சொல்லாக்கங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
கதிரவனை ஆதபன் என்று அழைப்பது இப்பொருள் கொண்டே. சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழிகளில் உள்ள ப தமிழில் வ என்று மாறுவது இயல்பு.
தப - தவ - ஆனது. தபஸ், தபஸ்வி என்ற சொற்கள் தமிழில் தவம், தவசி என்று ஆனது.

‘தக’ என்ற சொல்லும் இவ்வேரடியிலிருந்து உண்டானதே. தக - என்பது எரித்தல் குறித்தது.  தகவென எரிவதாகச் சொல்வதையும், தகனம் என்ற சொல்லையும் நினைவில் கொள்ள வேண்டும்

தவ என்ற சொல்லிலிருந்து தவி என்ற சொல் வந்தது. தவித்தல் = வெப்பமாகுதல், நீர்வேட்கை உண்டாகுதல்.

உடற்சூட்டால் உண்டாகும் நீர் வேட்கையைக் குறித்த ‘தாகம்’ என்ற சொல்லும் அதே வேரிலிருந்து பிறந்தது.
தவம் என்றாலும் எரித்தல் என்றுதான் பொருள். உடலை எரித்தல் போல் வருத்தும் துறவறப் பயிற்சி.
சீனாவில் பௌத்த மடாலயங்களில் சீடர்கள் ‘குங்க்ஃபு’ பயிற்சி பெறும்போது தீயெரிகின்ற அடுப்பின் மீது அகன்ற சட்டியில் சூடாகிக் கொண்டிருக்கும் மணலில் கைகளை நுழைத்து எடுக்கவேண்டும்.
தவம் என்ற சொல் தனித்தமிழ்ச் சொல்லும் ஆகும். தவ என்னும் தமிழ்ச் சொல்லிற்கு மிகுதல் குறைதல் என்னும்பொருள்கள் உண்டு.
தவமென்னும் பெயரே மிகுதியும் குறைவுமாம் என்று சொல்கிறது வடமலை நிகண்டு.
எனவே தவப்பிஞ்சு என்பது மிகப்பிஞ்சு என்றும் தவப்பேறு என்பது மிகப்பேறு என்றும் பொருள் தருவதாயிற்று'
ஆகவே இயல்பான நிலையிலிருக்கும் நம் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த நுகர்வுகளைக் ம்குறிப்பிட்ட பயன் கருதி மிகுத்தோ குறைத்தோ கொள்வது தவம் ஆகும். மிகுத்தாலும் துன்பம், குறைத்தாலும் துன்பம்.


மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளி முதலாய் எண்ணிய மூன்று. (941)             என்னும் குறளின் முதலடியில் வள்ளுவர் இக்கருத்தின் மற்றோர் பரிமாணத்தைக் கூறுகிறார்.


உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு (261)

இக்குறளில் வரும் ‘தவத்திற்கு உரு’ என்னும் தொடருக்கு தவத்தது உரு அல்லது தவத்தினுடைய உரு என்று ஆறாம் வேற்றுமை உருபு கொண்டு எழுதுவதற்கு மாற்றாக, தவத்திற்கு உரு என்று நான்காம் வேற்றுமை உருபு கொண்டு எழுதினார் என்று கூறி வழுவமைதியாக நான்காம் வேற்றுமைக் கண் ஆறாம் வேற்றுமை வந்த உருபு மயக்கம் என்றார் பரிமேலழகர்.

தொன்மங்களில் ஈடுபாடுடையோர்க்குத் தவம் என்றவுடன் காட்டிடை தனித்துறைதல், ஊண் உறக்கம் குறைத்தல் , வெயில், மழை, பனி தாங்கல், நீர்நிலை நிற்றல், கனி நுகர்ந்து, ஐந்து நெருப்பின் நடுவில் இருந்து உடல் வாட்டும் கடும் பயிற்சிகளை மேற்கொள்ளல், ஞானம் தேடி கோயில் குளம் சுற்றல், யாகம் இயற்றி இறைவனிடம் வேண்டுவன பெறுதல் என்பதும் தவம் செய்பவர் தனியே காட்டிலோ அல்லது மலையிலோ அல்லது யாருமில்லாத தனித்துள்ள குகைகளிலோ அமர்ந்து தியானித்து இருந்து, வரம் கொடுக்கும் ஆற்றல் பெற்றவராக அல்லது சாபங்கள் இடும் சினம் கொண்டவராக இருப்பார் என்பனவே மனக்காட்சியில் தோன்றும்.
ஆனால் குறளில் அப்பொருளில் 'தவம்' கையாளப்பெறவில்லை. தம் கடமை பற்றி ஒருமுகமாக எண்ணிச் செயல்படுவதையே தவம் என்கிறது குறள்.

கீதையின் 17-ஆவது அத்தியாயமான, சிரத்தாத்திரய விபாக யோகத்தில், ஸ்ரீகிருஷ்ணர், ஆத்ம ஞானத்தை அடையத் தேவையான தகுதிகளில் ஒன்றான தவத்தை, சாத்விக தவம், இராட்சத தவம் மற்றும் தாமச தவம் என மூன்றாக பிரித்து அருச்சுனனுக்கு கூறுகிறார்.

• சாத்வீக தவம் - ஆன்மீக முன்னேற்றத்திற்கு மட்டுமே செய்வது சாத்வீக தவமாகும்.
• இராஜச தவம் - தனது நன்மைக்கு மட்டுமே செய்வது இராசத தவமாகும். (குழந்தை அல்லது செல்வம், பதவி வேண்டி செய்யப்படும் தவம்)
• தாமச தவம் - பிறரைத் துன்புறுத்தும் நோக்கத்திற்காகச் செய்யும் தவமே தாமச தவமாகும்.

தவம்’ என்ற சொல் நோன்பு, பொறுத்தல், பேறு என இடத்திற்குத் தக்கவாறு பல பொருள்களை வழங்குவது.

தவம் என்பதற்கு இன்றைய நாளில் கடின உழைப்பு, முயற்சி, ஒரு நோக்கத்திற்காகத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளுதல் என்று விளக்கம் கூறி அதை 'முயற்சித் தவம்' என்று அழைக்கின்றனர். ஒரு கடமையில் ஈடுபடுபவன் அதைத் தவம் போலக் கருதி அதே நினைவாய்- ஓர்மையுடன் வரும் இடையூறுகளை யெல்லாம் பொறுத்து முன்னேறிச் செல்வது தவத்தின் இயல்பு என்பர் இவர்கள்.
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை 'தவம் என்பது ஒருவனுடைய மனம் முழுவதும் ஒரே நோக்கத்தில் ஈடுபட்டு, வேறு எண்ணங்களுக்கு இடங்கொடுக்காமல் இருப்பதற்காகச் செய்யப்படும் முயற்சிகளின் தொகை' என விளக்கினார்.

ஆனால் முயற்சியையே வள்ளுவர் தவம் என்ற சொல்லால் குறிக்கின்றார் என்பதை மறுப்போரும் உண்டு. பொருட்பாலில் ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை ஆகிய அதிகாரங்கள் முயற்சியின் பெருமையையே வலியுறுத்துவன. ஆதலால் தவம் என்ற அதிகாரம் தவத்தைப் பற்றித்தான் கூறுகிறது என்பர் இவர்கள்.
முயற்சியும் ஒருவகைத் தவம்தான் என்பது வள்ளுவர் கருதுவதுதான்.
துறவுத் தவம் பற்றியும் இவ்வதிகாரக் குறள் ஒன்று ,
தவம் செய்யும் துறவிகளுக்கு உணவும் பொருளும் கொடுப்பதன் வாயிலாக இல்லறத்தாரும் ஒருவகை தவத்தைத்தான் செய்கிறார்கள் என்ற கருத்தில்

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றையவர்கள் தவம் எனப் பேசுகிறது. குறள். (263)

துறவிகளுக்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பி இல்லறத்தார் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும்.

யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும். எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம். துறந்தாரல்லாதாரும் தவத்தினை மறத்தல் ஆகாது. அவ்வாறிருந்தும் அவர்கள் மறந்தது எதனால்? என்று கேட்பதுபோல் குறள் அமைப்பு உள்ளது.

ஆயினும் நாலடியாரில் ஒரு பாடல் அறத்தை ஆற்றும் முறைகள் வெவ்வேறாயினும் அவற்றால் உண்டாகும் பயன் ஒன்றே என்று கூறுகிறது.

ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம்; - பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு. (நாலடியார்118)

பசுக்கள் பல்வேறு நிறத்தனவாயினும் அவை தரும் பால் வெவ்வேறு நிறமுடையதன்று; ஒரே நிறம் உடையதுதான். அவ்வறத்தை அல்லது தவத்தை ஆற்றும் முறைகள், பசுக்களின் நிறங்களைப் போலப் பலவாகும். ஆயினும் பாலைப் போல், அறத்தின் பயன் ஒரே தன்மை உடையதாகும்.

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு (261)

என்னும் இக்குறட்பா வில் தவம் என்பதனைக் குறிக்கும் நோன்பு என்னும் சொல்லும் இவ்வதிகாரத்தில் நான்கு இடங்களில் வழங்கப்பட்டுள்ளது. நோன்றல் என்றும் நோற்றல் என்றும் சொல்லப்படும் உறுதிப்பாடே நோன்பு ஆகும். இவ்வுறுதிப்பாடே தன் துயர் பொறுத்தலும் பிறவுயிர்க்குத் துன்பம் செய்யாமையுமாம் இயல்பை ஆக்கும் என்று பெரும்பாலான ஆசிரியர்கள் உரை கூறினர்.. ஆனால் நன்கு ஆராய்ந்து பார்த்தால் இக்குறள் வேறு பொருள் காட்டி நிற்பதையும் உணரமுடியும்.
துன்பம் என்பது நோவு அல்லது நோய் என்று கொள்ளப்படும்.இந்த நோவே நோற்றல் என்னும் தொழில் ‘பு’ விகுதி பெற்று நோன்பு என்னும் பெயர்ச் சொல்லால் வடிவம் பெறுகிறது. ஆயினும் ஒரு பெரு நோக்கோடு இதனை வலிய் விரும்பி ஏற்று முனைந்து செயல்படுத்துவதால் இந்த துன்பமே அதாவது நோன்பே தவம் என்னும் பெருமைக்குரிய சொல்லாகிறது.
வறுமையாலோ, இல்லாமையாலோ, பிணிவாய்ப்ப்ட்டோ துன்பத்தை அனுபவித்தல் தவம் ஆகாது. ‘தவித்தல்’ என்னும் சொல் சுட்டும் பொருள் இதனை விளங்கக் காட்டும். உடலில் நீர் குறைந்து வெப்பம் கூடி நீர் வேட்கை மிகும்பொழுது ‘தாகத்தில் தவித்தல்’ என்று கூறுகிறோம். ஆகவே விரும்பி ஒரு கட்டுப்பாடுடைய வாழ்க்கை முறையை அல்லது நோன்பை வலிய ஏற்பது மட்டுமே தவமாகும்.

ஆகவே உடலை வருத்தி உண்ணா நோன்பு இருத்தல், உடல் உணர்வு அற்று உள்ளம் ஒன்றிப்போய் தியானம் செய்துப் பேருண்மையைக் காண முயல்தல், ஐம்புலன்களையும் அவை தத்தம் நுகர்ச்சிக்குரிய பொருள்களை நாடும்பொழுது அவற்றைத் தடுத்து நிறுத்துதல் போன்றன தவத்தின் பாங்குகளாகும் . இவ்வாறு தவம் ஆற்றும்போது வந்தடையும் துன்பங்களை உற்றநோய் அதாவது வந்துற்றநோய் என்கிறார் வள்ளுவர். இது தவத்தின் ஒரு பகுதி. உடலால் துன்பம் நோற்கும் பகுதி.
அடுத்த பகுதி உயிர் வழியே துன்பம் நோற்றல். உடலுக்கு வந்துறும் துன்பம் ஒரு எல்லைக்குள் நிற்கும் பொழுது உயிர் துவண்டு போனாலும் அது அந்த உடல விட்டுப் பிரியாது. ஆனால் உடல் அடையும் துன்பத்தை அளவிறந்து போகும்படி விட்டுவிட்டால் அதைத் தாங்கமுடியாமல் அந்த உயிர் அந்த உடலைவிட்டுப் பிரிந்துபோகும் நிலைகூட ஏற்படும்.
தவம் செய்தலின் நோக்கம் உயிர் துறத்தல் அன்று. தவத்தின் நோக்கம் உலகியல் சார்ந்து எண்ணியது முடித்து, வேண்டியது வேண்டியாங்கு எய்தி இன்பமடைதலும், மெய்யியல் சார்ந்து இறைநிலையாகிய பேரின்பநிலையை உணர்தலுமாகும். இவற்றை உடலோடு உயிர் பொருந்தியிருந்தால் மட்டுமே அடையமுடியும்.
ஆகவே தவம் செய்பவன் அதனால் உடல் அடையும் துன்பத்தை நோக்காதிருந்து, அது எல்லை கடந்து செல்வதின் விளைவாகத் தன் உயிருக்கு உறுகண் செய்யாமல் இருப்பது தவத்தின் மறுபகுதி என்கிறார் வள்ளுவர்.
‘உயிர்க்கு உறுகண்’ என்பது தன் உயிர் உடலை விட்டு நீங்கும் நிலையைத் தோற்றுவித்தல் என்று கொள்ளலாம். ஆகவே அளவறிந்து துன்பம் நோற்றும், தன்னுயிர் கெடாமல் காத்தும் தவம் செய்வதே தவத்தின் இலக்கணம் என்பதே இக்குறளின் சரியான பொருளாக இருக்க முடியும்.
வினோபாவே தீவிரமான உண்ணாநோன்பு இருந்து இறுதியில் மாண்டு போனார்.
புத்தரிடம் சீடனாகச் சேர்ந்த ஒருவன் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்காமல், அவசரத்தையும், தீவிரத்தையும் கடைப்பிடித்தான். தவம் செய்கிறேன், நோன்பு நோற்கிறேன் என்று தீவிரமான உண்ணாநோன்பு இருந்து தன் உடலை வருத்தி மிகவும் தளர்ந்து போனான். அவனுக்கு அறிவு புகட்ட நினைத்த புத்தர் ஒருநாள் அவனைக் கூப்பிட்டு, அவனுடைய அறையிலிருந்த வீணையை எடுத்து வரச் சொல்லி, அதை மீட்டச் சொன்னார். அவனும் வீணையை மீட்டத் தயாரானான்.

அப்போது, புத்தர் வீணையின் நரம்புகளை முறுக்கேற்றினார். அவனோ, "ஐயனே, இப்படி முறுக்கேற்றினால் நரம்புகள் அறுந்துவிடுமே?'' என்றான்.

உடனே புத்தர், நரம்புகளைத் தளர்த்தத் தொடங்கினார்... அவனோ, "ஐயனே, இப்படிச் செய்தால் வீணையை இசைக்க முடியாதே?'' என்று வினாவினான்.

இப்போது புத்தர் சொன்னார், "நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களிலுமே வாழ்வின் தத்துவம் உள்ளது. வீணையின் நரம்புகளை அதிகம் இறுக்கினால் அறுந்து போகும். அதிகம் தளர்த்தினாலோ ஒலி எழாது. இதோ போலத்தான் முறையற்ற தீவிர நோன்பினால் உடல் தளர்ந்து விடும். குறைவான உழைப்போ சோம்பலைத் தரும். எனவே எதையும் நிதானமாகச் செய்யப் பழகு. வாழ்வில் சாதிப்பாய்!'' என்றார்.
நற்றிணை பாடல் ஒன்று இக்கருத்துக்கு வலிவு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. கணி புன் குன்றனார் பாலைத் திணையில் இயற்றிய பாடல்.
மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார், மன்னர் நன்னுதல்!
நாம் தம் உண்மையின் உளமே; (நற்றிணை 226)

தலைவி தன் தோழியை நன்னுதல் என விளித்து தன் கருத்தைத் தெரிவிக்கிறாள்.

பொதுவாக மாந்தர் மருந்தாக விளங்கும் மரம் சாகும்படி அதன் பட்டையை உரிக்கமாட்டார்கள். தம் வலிமை குன்றும்படி பட்டினி கிடந்து தவம் செய்யமாட்டார்கள். மன்னர் குடிமக்களின் வளம் கெடும்படி அவர்களது பொன்னை வரியாக வாங்கமாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் வாழ்வதால்தான் நாமும் உயிரோடு இருக்கிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருமந்திரத்திலும் திருமூலர் இக்கருத்தினை வலியுறுத்தி ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. ( திருமந்திரம்)

உடம்பு அழிந்தால் உயிரும் அழியும். உறுதியான மெய்ஞ்ஞானத்தை அடைய முடியாது. ஆகவே, உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்துகொண் டேன். எனவே, உடம்பை வளர்த்தேன்; அதனல் உயிரையும் நிலைபெற வைத்துக் கொண்டேன்..

சிலர் தவம் என்னும் பெயரால் பசியை அடக்கல், பல நாள் பட்டினி கிடத்தல், வெயிலிலும் மழையிலும் காட் டிலும் மேட்டிலும் கிடத்தல் முதலிய துன்பங்களை உட லுக்குத் தாமே வருவித்துக் கொள்ளல் என்ற முறைகளே தவம் என்று கருதுவர். இது தவறு; இப்போக்கு நம் நாட்டிற்கு உரியதும் அன்று. இம் முறை திருவள்ளுவர்க்கு, இணக்கமில்லாதது.
காயிலை தின்றும் கானில் உறைந்தும் கதிதேடி
தீயிடை நின்றும் பூவலம் வந்தும் திரிவீர்காள்!
தாயினும் அன்பன் பூமகள் நண்பன் தடநாகப்
பாயல் முகுந்தன் கோயில் அரங்கம் பணிவீரே.

என்று தவத்தை வரையறை செய்து காட்டுவார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.
திருமங்கையாழ்வாரும்,
ஊன்வாட உண்ணாது உயிர்காவல் இட்டு
உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து
தாம்வாட வாடத் தவம்செய்ய வேண்டா : என்றும்,

காயோடு நீடு கனியுண்டு வீசு
கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம்செய்ய வேண்டா' என்றும் கூறுவர்.
‘உயிர்க்கு உறுகண் செய்யாமை’ என்ற தொடருக்கு உரையாசிரியர்கள் “ பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமை’ என்று உரை கூறுவது இக்குறள் சொல்லும் ‘தவம்’ என்ற சொல்லிற்கு நேர்ப்பொருளாக அமையாது. ‘பிறர் தமக்குத் துன்பம் செய்தகாலை அவற்றைப் பொறுத்துக் கொண்டு தாம் அவர்க்கு பதிலுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் தவம்’ என்று பொருள் கொண்டாலும் அது ஒரளவிற்கு ஏற்புடையது என்று கொள்ளலாம்.
பொறையுடைமை அதிகாரத்தில் பிறர் சொல்லும் இன்னாச்சொல் பொறுத்தல், இறந்தார் வாய் இன்னாச்சொல் நோற்றல், திறன் அல்லவற்றைத் தனக்குப் பிறர் செய்யினும் நோநொந்து அறன் அல்ல செய்யாமை, மிகுதியான் இக்கவை செய்தாரைப் பொறுத்தல் போன்றவற்றை வள்ளுவர்ரே வலியுறுத்துகிறார். ஆயினும் அவற்றை அவர் தவம் என்னும் சொல்லால் குறிப்பிடவில்லை என்பது இங்கு நோக்கத்தக்கது.
பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையைத் தவம் என்று பொதுவாக உரையாசிரியர்கள் கூறியிருப்பது போல வள்ளுவர் கருதியிருப்பின்


ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் (264)

அதாவது தமது அறத்திற்கு இடையூறாக இருப்பவரை அழித்தலும், தமது அறத்தை விருப்பியவரை உயர்த்தலும் செய்ய , தவம் செய்பவர்கள் நினைப்பார்களானால் அவர்களுடைய தவ வலிமையால் அது அவர்களுக்கு இயலும்’ என்று அதே அதிகாரத்தில் மற்றொரு குறளில் கூறியிருக்க மாட்டார்.

அதனாலன்றோ விசுவாமித்திரர் தன் தவத்திற்கு இடையூறாக இருந்த தாடகையை அழிக்க இராமனை அழைத்துப் போகிறார்.

‘உற்ற நோய்’ என்றால் தான் செய்த பழவினையால் வந்துற்ற வினைப்பயனாகிய் துன்பங்கள என்றும் கொள்ளலாம். முன் செய்த தீவினைப் பயனான துன்பத்தை மருந்து கொண்டோ அல்லது வேறு எவ்வகையினாலோ மாற்ற முயலாமல் பொறுமையுடன் புசித்து நுகர்வதே ஒருவகை நோன்பு ஆகும் இவ்வாறு துன்பம் வந்தபோது துவளாமல் அத்துன்பத்தை நோற்றலும், அதற்குக் காரணமானவர் எவரேனும் இருப்பின் அவர்மேல் பகையுணர்சசி கொள்ளாமல் புலன்களை அடக்கிக் கொள்வதும் தவத்தின்பாற்படும். இந்த சகித்தலை வடமொழியில் திதிக்க்ஷை என்பார்கள். அது தவத்தின் ஒரு உறுப்பு ஆகும். இத்தவமானது மனத்தில் படிந்துள்ள மாசுகளைப் பொசுக்கிவிடும். இக்கருத்தை உள்ளத்தில் கொண்டே வள்ளுவரும் மற்றொரு குறளில்,

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச் சுட நோற்கிற் பவருக்கு (267)

தவப் பயிற்சியில் துன்பம் மேன்மேலும் வரும்; அதைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். பொன் ஒளிவிட வேண்டுமானால் அதனைத் தீயிலிட்டுக் காய்ச்சுகின்றோம். இதனால் பொன்னின் மாசு நீங்கி ஒளிவிடும் பொன்னா கின்றது. என்று கூறுகிறார்.

விவிலியத்தில் பழைய ஏற்பாட்டில் மலாக்கி என்று ஒரு புத்தகம் இருக்கிறது அதில் 3 ஆம் அதிகாரம் 3 ஆம் வசனத்தில் “தேவன் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுக் கொண்டிருப்பார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இங்கே வெள்ளியை ஏன் எடுத்துக்காட்டாகச் சொல்கின்றார்கள் என்றால் பொன்னைப் புடமிடுவதை விட வெள்ளியைப் புடமிடுவது கடினம். ஏனென்றால் வெள்ளியில் ஏராளம் கசடு இருக்கும், எனவே திரும்பத் திரும்ப புடமிட்டுக் கொண்டே இருக்கவேண்டும். இறுதியில் புடமிடுபவரின் முகம் அந்த வெள்ளியில் கண்ணாடியில் பார்ப்பது போல் தெரியும். அதுவரைப் புடமிடவேண்டும். மேற்கூறிய விவிலிய வசனத்தில் வெள்ளி என்று சொல்லப்பட்டிருப்பது இறைவனை நோக்கித் தவம் செய்பவர்களை. இறைவனின் பிரதிபலிப்பாக அவர்கள் மாறும்வரை புடமிடப்படுவார்கள் என்பது பொருள்.

நாலடியாரில் ஒரு பாடல் தவத்தின் பெருமையை பின்வருமாறு தெரிவிக்கிறது.
அகத்தாரே வாழ்வார் என்று அண்ணாந்து
புகத் தாம் பெறாஅர் புறங்கடை - பற்றி
மிகத் தாம் வருந்தி யிருப்பரே மேலைத்
தவத்தால் தவம் செய்யாதார்.

முற்பிறப்பில் தவம் செய்யாதவர், 'இவ்வீட்டில் உள்ளவர்களே சிறப்புடன் வாழ்பவராவர்! என்று கருதி உயர்ந்தோங்கி நிற்கும் ஒரு வீட்டை அண்ணாந்து நோக்கி, உள்ளே போக முடியாதவராகி, தலை வாயிலைப் பிடித்துக்கொண்டு மிக வருந்தி நிற்பர். (மேலைத் தவத்தால் தவம் செய்யாதவர் என்றதனால், முன் பிறப்பிலும் அவர் தவம் செய்யாதவர் என்பது கருத்து.
துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் ஆற்றல் இல்லதவர்கள் செய்யும் தவத்தில் தவமே அவர்களுக்கு ஒரு துன்பமாக மாறும் என்று இன்னா நாற்பது என்ற பதினெண் கீழ்க் கணக்கு நூலில் கபிலர் கூறுகின்றார்.
அறிவிற் சிறந்தவர்கள் வீற்றிருக்கின்ற சபையிலே அறிவில்லாத ஒருவன் புகுவது துன்பத்தைத் தரும். இருட்டிய பின்னர் வழியிற் செல்வது பெரிதும் துன்பம் விளைவிக்கும். நோன்பினால் விளையக் கூடிய துன்பங்களைத் தாங்கக் கூடிய ஆற்றல் இல்லாதவர்க்குத் தவம் துன்பம் தரும். தன்னைப் பெற்ற அன்னையைப் பேணிக் காப்பாற்றாமல் விடுவதும் துன்பம் தரும் என்று மனித வாழ்வில் துன்பத்துக்குரிய நான்கு விடயங்களைக் கூறி நீதி புகட்டுகிறது இந்த பாடல்.

ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விடல். (இன்னா நாற்பது)

போலியான தவ வேடதாரிகளைப் பற்றி வள்ளுவர் மற்றொரு குறளில் கூறுகிறார்.

வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று” (273)

கூடாஒழுக்கம் என்னும் அதிகாரத்தில் வரும் இக்குறளின் பொருள்: மனத்தை அடக்கும் வலிமையில்லாக் குணமுடையவனின் தவக்கோலம், பசு புலியின் தோலைப் போர்த்துக்கொண்டு வயலை மேய்ந்தது போலாகும்.

இரண்டாயிர வருடங்களுக்கு முன்னரே திருவள்ளுவர் இக்குகுறளில் தவவேடதாரிகளை, நமக்குக் காட்டித் தருவதற்காக பசு, புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு பயிர் மேய்ந்த கதையைக் கூறியுள்ளார். அப்படி வெளிச்சம் போட்டுக் காட்டியும் இன்னும் நாம் திருந்தவில்லையே. அது ஏன்?

தவம் செய்வோர் எவராக இருந்தாலும் அவர்களுக்குத் தமது மனதை அடக்கி ஆளும் வலிமை இருக்கவேண்டும். அப்படி தனது மனதை அடக்கி ஆளும் தன்மை அற்றவனையே ‘வலிஇல் நிலைமையான்’ என்று வள்ளுவர் அழைக்கிறார். நோயுற்ற ஒருவரைப்பற்றி விசாரிக்கும் பொழுது அவரின் நோயின் தன்மை, உடல்நிலை எப்படி இருக்கிறது, என்பதை அறிய ‘நிலைமை எப்படி இருக்கிறது?’ என்று கேட்பது எமது வழக்கமல்லவா! இக்குறளிலும் ‘நிலைமை’ தவம் செய்வோரின் தன்மையை, குணத்தைச்சுட்டி நிற்கிறது.

உண்மையாகத் தவத்தை மேற்கொள்வோர் விருப்பு வெறுப்பு அற்றவராய் உலகப் பற்றுக்களை நீக்கி கருணை நிறைந்த நெஞ்சத்துடன் இருப்பர். தமக்குவரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டும், தன்னுயிரைப் பாதுகாத்துக் கொண்டும் இருப்பதே தவத்தின் வடிவம் என்று திருவள்ளுவரே ‘தவம்’ என்றால் என்ன என்று இவ்வதிகாரத்தில் சொல்கிறார். இத்தகைய குணங்கொண்ட தவவடிவை ‘வல்லுருவம்’ என இக்குறளில் குறிப்பிடுகிறார். தவத்தோருக்கு இருக்க வேண்டிய இந்த வலிய குணங்கள் இல்லாது தவவேடமிட்டுப் போலியாக வாழும் தவவேட தாரிகளை திருவள்ளுவர் ‘வலிஇல் நிலைமையான்’ எனச் சாடுகிறார்.

பசுவைப் ‘பெற்றம்’ என்றும் சொல்வர். பிறரது வயலிலுள்ள பயிரை மேய்வதற்கு தம் பசுவை விடுவோர் புலித்தோலைப் போர்த்தி அனுப்புவர். பசு புலித்தோல் போர்த்தி நிற்பதை அறியாத வயலின் சொந்தக்காரர் புலி பயிரை மேயாது என நினைப்பர். அத்துடன் புலி தம்மைக் கொன்றுவிடும் என்ற பயத்திலும் அதன் அருகில் செல்லார். தவவடிவத்தில் இருப்போரை நம்பி பெண்களை அனுப்புவோரும், முற்றும் துறந்த துறவிதானே, அவர் பெண்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டார் என நினைத்தும், அவர் சபித்து விடுவார் என்ற பயத்திலும் இருக்கின்றனர்.

தவ ஒழுக்கம் உடையவர்கட்கு முற்றிலும் பொருந்துவது தவக்கோலம். தீய ஒழுக்கம் உடையவர்கள் தவக் கோலத்தைக் கொண்டு வாழ்வது குற்றம்: பெருங்குற்றம். மிகுதியாகத் தீங்கு இழைப்பதற்கு அந்தக் கோலத்தைப் பயன்படுத்துவது வஞ்சம் ஆகும். வஞ்ச மனத்தானின் பொய்யொழுக்கம் புறத்தார்க்கு உடனே புலனாகா விடினும், அவன் உடம்பில் கலந்துள்ள ஐந்து பூதங்களுக்கு, மறைத்தல் இயலாது. இவனுடைய கரவொழுக்கத்தைக் கண்டு அவை தமக்குள்ளே சிரிக்கும், .அகத்தே நகும்- என்கின் றார்.வள்ளுவர்.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் (271)

இந்த ஐந்து பூதங்களும் இவன் தீய வொழுக்கத்திற்குச் சான்றாக நின்று குற்றவாளியாக்கி அவனை மிக வருத்தி விடும்.

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தானறி குற்றப் படின். (272)

தன் நெஞ்சம் அறிந்து செய்கிற குற்றத் திற்கு ஆளாகும்போது புறத்தில் வானம்போல் உயர்ந்த தவக்கோலம் கொள்வதால் யாது பயன் என்று மற்றொரு குறளில் வள்ளுவர் கூறுகிறார்.

தமிழ் எழுத்துகளுள் னகரம் இறுதி எழுத்தாகும். னகரத்தை இறுதியிலே வைத்ததற்குக் காரணம் காட்டுகிறார் இளம்பூரணர் என்ற உரையாசிரியர்.
னகரம் வீடுபேற்றிற் குரிய ஆண்பாலை
உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது
(தொல், எழுத்து 1. இளம்பூரணர் உரை)
ஆண்பிறவி எடுத்து, துறவு பூண்டு தவத்தினைச் செய்து வினைகளை வென்றால்தான் வீடுபேறு அடைய முடியும் என்பது சமணர்தம் கோட்பாடு. அதனைக் குறிக்கவே ஆண்பால் ஈற்று எழுத்தாகிய னகர மெய்யை மொழி இறுதியில் தொல்காப்பியர் வைத்தார் என்பது இளம்பூரணர் கருத்து. இளம்பூரணரும் சமணர் என்பதால் இயல்பாக இக்கருத்தை ஏற்றுக் கொண்டு விளக்கம் தருகிறார்.
ஆகையால் சங்க காலத்தில் ஆண்கள் மட்டுமே கடுமையான தவம் மேற்கொண்டு வீடுபேற்றை அடையமுடியும் என்ற கருத்து நிலவி வந்திருக்கிறது.
புத்தமித்திரனார் இயற்றிய வீர சோழியத்திற்கு உரை செய்த பெருந்தேவனார் பொருள் இலக்கண மரபினை அறத்தோடு ஒப்பிடுகிறார். அறம் மனையறம், துறவறம் என இரண்டு என்று கூறியவர்,
துறவும் அடக்கமும் தூய்மையும் தவமும்
அறவினை ஓம்பலும் மறத்தினை மறுத்தலும்
மனையின் நீங்கிய முனைவர்தம் அறமே'
என்று துறவறத்தை விளக்குகிறார். இதில் அவர் கையாண்டுள்ள "முனைவர்' எனும் சொல்லே சிந்திக்கத்தக்கது. துறவு, அடக்கம், தூய்மை, தவம், அறவினை ஓம்பல், மறத்தை மறுத்தல் என்பதை கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும். இதற்கு முதலில் மனையை விட்டு நீங்க வேண்டும். "மனையின் நீங்கிய முனைவர்தம் அறம்' என்கிறார். அப்படியெனில், மனையின் நீங்கா முனைவர்தம் அறம் எது?அதுதான் மனையறம். பெருந்தேவனாரே மனையறம் பற்றியும் கூறுகிறார்.

அதாவது "கொடுத்தலும் அளித்தலும் கோடலும் இன்மையும், ஒழுக்கத்தொடு புணர்தலும் புணர்ந்தோர்ப் பேணலும், வழுக்கில் பிறவும் மனையறவகையே' என்கிறார். தொல்காப்பியத்தில், "வினையின் நீங்கிய விளங்கிய அறிவின், முனைவன் கண்டது முதல் நூலாகும்' என்பார் தொல்காப்பியர். (தொல், 1594)

முனைவன் அல்லது முனைவர் என்பதன் பொருள் என்ன? "துறவி, முனிவர், பெரியோர், முன்னவர், கடவுள், தலைவன், முதல்வன், அருகன், புத்தன் என்கிற பொருளைச் சொல்லலாம். தமிழில் ஆழமான பொருளைக் குறிக்கும் சொற்கள் சமயப் பொதுதன்மை உடையதாகக் கட்டமைக்கப்பட்டுவிடும். அதனை மேற்குறித்த சான்று வலுப்படுத்துவதை அறியலாம். இயல்பான மனித வாழ்க்கையில் இருந்து முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டு ஒன்றைப் பற்றியே தியானித்து, தன் தியானத்திற்கு வடிவம் கொடுப்பவர் யாரோ அவரே முனைவர்..
மனையின் நீங்கிய முனைவரின் தன்மையை அறியலாம். "சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயன்' என்னும் தொல்காப்பியரின் வாக்கை அற இலக்கியங்கள் விளக்கிச் சென்றாலும், மேற்குறித்த சொல்லாடல் முக்கியமானது. இல்லற வாழ்வில் ஆண், பெண் இருவரும் இணைந்தே இருக்கின்றனர். ஆனால், அறம் என்று வருகிறபொழுது இல்லத்தை ஆளும் பெண் இல்லறத்தை மேற்கொள்கிறாள். இல்லறத்தை விட்டுத் துறவறம் செல்லும் ஆண் துறவு, அடக்கம், தூய்மை, தவம், அறவினை ஓம்பல், மறத்தை மறுத்தல் என்பதானகட்டுப்பாடுகளை மேற்கொண்டு வாழ வேண்டும். இந்த ஆறிலும் வெற்றி பெறுகிறவரே முனைவர்.
உடல், உயிரைத்தவிர அனைத்தையும் துறத்தல், ஐம்புலன் அடக்கம், உடல், மனத்தூய்மை, உலகத்து நலனை உறுதியோடு தியானித்து அதை அடைதல், கொலை முதலான அறத்திற்கு ஒவ்வாத செயலைச் செய்யாதிருத்தல், போர் முதலிய வன்மையை செயல்படுத்தாதிருத்தல் என்பனவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுவாரேல், அவர் முனைவர்.

அப்படியெனில், இல்லறத்தைப் பேணும் பெண்ணின் செயல் என்ன? கொடுக்க வேண்டியவற்றைக் கொடுத்தல், அளிக்க வேண்டுவனவற்றை அளித்தல், கொள்ள வேண்டியவற்றை வாங்கிக் கொள்ளல், இன்னாதனவற்றை வாங்காதிருத்தல், ஒழுக்கத்தொடு புணர்தல், புணர்ந்தோர்ப் பேணல் முதலியவற்றைக் கடைப்பிடித்து ஒழுகும் பெண் மனையின் நீங்கா முனைவர் ஆகிறாள்..
நோன்பு என்ற சொல் தவம் என்றே பொருள்படும் என்று முன்பே கண்டோம்.

அகப்பொருள் இலக்கணத்தில் பொருள்வயிற் பிரிதல் என்று ஒரு துறையே இருக்கிறது. அகநானூற்றில் ஒரு காட்சி! பொருளீட்டுவதற்காகப் பிரிந்து சென்ற தலைமகன் வாராமை நினைந்து தலைவி இரங்குகின்றாள். தோழி ,""தலைவன் வந்துவிடுவான், வருந்தற்க'' என்று ஆறுதல் கூறுகிறாள். ஆயினும் தலைவிக்குத் தலைவன் வருவான் என்ற நம்பிக்கை இல்லை. ஏன் என்றால், தலைவன் பொருளீட்டச் சென்றது தனக்காகவும் , பிள்ளைகளுக்காகவும் இல்லை. தம்மை நாடி வறுமையால் இரந்து வருவோருக்கு இல்லையென்று கூறிப் பழகாத தலைவன் வறியோர்க்கு ஈதலுக்காகவே பொருளீட்டச் சென்றுள்ளான். அனைவரும் வறுமையிலிருந்து விடுபடும்வரையில் தலைவரின் பொருள் தேடும் முயற்சியும் தொடரும் அல்லவா?
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்பொருளே
காதலர் காதல் அருளே காதலர் என்றி நீயே!'' (அகம் 53 : 13-16)

என்னும் அகநானூற்றுப் பாடல் அடிகளை ஓர்க. இங்ஙனம் பிறர்நலம் கருதிப் பொருள் தேடும் முயற்சியில் ஈடுபடுவதை நோன்பு என்று புறநானூறு கூறும்.
தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர்'' ( புறநானூறு 18 : 8-9)
என்பதறிக.
பிறர்க்கென முயலும் நோன்புடையார் சிலரானதால் தமக்கென முயலும் சிலர் பலராயினர். பிறர்க்கெனப் பொருளீட்டும் வாழ்க்கை நெறியினை மேற்கொள்வோர் பலராகும் பொழுது தமக்கென முயலுவோர், சிலராகிவிடுவர். பொருளின்மைக்குக் காரணம் ஒப்புரவு மேற்கொண்டொழுகுவோர் சிலரானதன் விளைவாலேயே இல்லாதவர் பலராயினர்.
தவம் செய்வார் தம்கருமம் செய்வார் மற்றல்லார்
அவம் செய்வார் ஆசையுட் பட்டு. (226)

இக்குறளுக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள் தவறான உரையையே கொடுத்துள்ளார்கள்.

இக்குறளில் ‘தவம் செய்வார்’ என்று சொல்லப்படுவோர் இல்லறத்தாரே. ஏனெனில் துறவறத்தாருக்கு எத்தகைய கருமமும் கிடையாது. இல்லறத்தையும் ஒரு தவம் போல் செய்பவரே இல்லறத்தார் எனப்படுவர். ஆகவேதான் இல்லறத்தில் அறம் என்ற சொல் சேர்க்கப்பட்டது.

இல்லறத்தை அறமாகச் செய்யாதவர்கள் ஆசை வலையின் உட்பட்டு வினைகளைச் செய்துத் தமக்குத் தாமே தீமை செய்துகொள்வர்.

இங்கு இல்லறத்தார் தம் கருமம் எனப்பட்டது, தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், என இவர்களைப் பயன் கருதாது ஓம்பலும் தாம் அறநூல்கள் ஓதும் கடமையைச் செய்வதும் ஆகும்.

பிறிதொரு வழியிலும் இக்குறளுக்குப் பொருள் காணலாம் என்று கூறுகிறார் பெருவெளி இராமன் அவர்கள்.. தன் கடமைகளைக் கருத்துடன் செய்கின்றவர் தவம் செய்வார் ஆவார்; தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார் என்பதைவிட 'தம் கருமம் செய்வார் தவம் செய்வார்' என்று வாசிப்பது சிறந்த பொருள் தருகிறது என்கிறார் அவர். அதாவது அவரவர் தம் கடமையைச் செய்வதே சிறந்த தவம் என்று வள்ளுவர் கூறுகிறார்.

கடமை என்பது கடன் அல்லது கடப்பாடு என்று பொருள்படும். நாம் யாரிடம் எப்போது கடன் பெற்றோம் என்ற கேள்வி எழலாம். தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் யாவரும் நம்முடைய பிறப்பிற்கும், வளர்ச்சிக்கும், குடும்ப வாழ்விற்கும், சமூக வாழ்விற்கும் ஆதாரமாக இருப்பவர்கள். இவர்கள் மட்டுமல்ல, உலகத்து உயிரினங்கள் அனைத்துமே நம் வாழ்க்கைக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி செய்கின்றன. யாரோ எங்கோ பயிரிட்டு அறுவடைசெய்த நெல்லை, யாரோ குத்தி அரிசியாக்கி, யாரோ கொண்டுவந்து , யாரோ விற்பதால் அல்லவோ நாம் வங்கி உண்டு வாழ்கிறோம். யாரோ எங்கோ விளைவித்த பருத்தியை யாரோ துணியாக்கி அதை யாரோ ஆடையாகத் தைத்துத் தந்தமையால் அல்லவா நாம் நன்றாக உடுத்தியிருக்கிறோம். யாரோ எந்த நாட்டிலோ கண்டுபிடித்த மின்விளக்கும், தொலக்காட்சிப் பெட்டியும், கைப்பேசியும் அல்லவா நம் வாழ்வை மிக எளிதாக்கி விட்டிருக்கின்றன.

இவர்களிடமிருந்து நாம் பெற்ற பயன்கள் அனைத்தும் கடன்களே. அவற்றைத் திருப்பிச் செலுத்துவது நம் கடமையே. இவை அனைத்தையும் நாம் விலை கொடுத்துத்தானே வாங்குகிறோம், பின் ஏன் கடன் என்று சொல்லுகிறோம் என்றால் பொருந்தாது. நாம் கொடுக்கும் விலை அவர்களின் மொத்த உழைப்புக்கும் அறிவாண்மைக்கும் ஆன கூலி ஆகாது. நாம் அவர்களுக்கு நன்றியுணர்வோடு நம்மோடு இருப்பவர்களுக்கு கடமையாற்றினாலே அது அனைவரையும் சென்றடையும். வேறு வகையில் ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் நன்றி செலுத்துவது என்பது இயலாது. இதுவே வள்ளுவர் கூறும் ‘கடன் ஆற்றல்’ என்னும் வகையில் கருமத்தைத் தவமாகச் செய்தல் என்னும் நிலை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard