Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 9. நல்லவை எல்லாம் தீயவாம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
9. நல்லவை எல்லாம் தீயவாம்
Permalink  
 


9. நல்லவை எல்லாம் தீயவாம்

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
(திருக்குறள் 375)

செல்வத்தை ஆக்கும் முயற்சியில் நல்லவை எல்லாம் செய்தாலும் சில நேரங்களில் அவை தீயவையாகி செல்வம் செய்யாதழிக்கும். நேரமும் காலமும் நன்றாக இருந்தால், தீயவையாக செய்தாலும், அவை நல்லவையாக மாறி செல்வத்தைக் கொணரும்!

செல்வம் செய்வதற்கு நல்வினையோ தீவினையோ காரணமில்லை என்பது போல தோன்றினாலும், இக்குறள் அடிக்கோடிடுவது, ஊழ் என்பதன் வலியை. அது நமது முற்பிறப்பின் செய்கைகளால் நிறுவப்பட்டவொன்று. இப்பிறப்பின் நற்செய்கைகளும் தீயசெய்கைகளும் பின்வரும் பிறப்புகளின் ஊழாகத் தொடரும் என்பதே இக்குறளின் கருத்து.


மணக்குடவர் உரை:

செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்கு முன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்.

பரிமேலழகர் உரை:

செல்வத்தை ஆக்குதற்கு, - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; அதுவே யன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும்,
(ஊழ் வயத்தான். 'நல்லவை' 'தீயவை' யென்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலியவற்றை. 'ஊழா' னென்பது அதிகாரத்தாற் பெற்றாம். அழிக்குமூழுற்றவழிக் காலம் முதலிய நல்லவாயினும் அழியும்; அழிக்குமூ ழுற்றவழி அவை தீயவாயினும் ஆகுமென்ப தாயிற்று. ஆகவே, காலம் முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றாம்.

ஆக செல்வத்தை ஆக்கும் முயற்சியில், இடம், காலம், தொழில் எல்லாம் முறையாக இருந்தாலும், ஒருவருடைய ஊழ்வினை தீயதாக இருந்தால், அவர்களால் செல்வத்தை பெருக்கமுடியாது. ஒருவருக்கு மேலே கூறப்பட்ட மூன்றும் சரிவர இல்லையென்றாலும், அவர்களுடைய ஊழ்வினை நல்லதாக இருந்தால், அவர்களது செல்வம் பெருகும் .

ஊழ் அல்லது ஊழ்வினை என்று தமிழ் இலக்கியம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. திருவள்ளுவர் 'ஊழ்' என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். ஊழிற் பெரு வலி யாவுள? ±ýÚ §¸ð¸¢È¡÷.
இளங்கோவோ ஊழ்வினை என்ற சொல்லை கையாள்கிறார். “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்று சொல்லுகிறார்.

சுவாமி சுத்தானந்த பாரதியார், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் வள்ளுவா¢ன் 'ஊழ்' என்ற சொல்லுக்கு முன்வினைப்பயன் என்று பொருள் கூறுகின்றனர். முற்பிறப்பில் செய்த் நல்வினை தீவினை சூக்கும வடிவில் வந்து அமையும் நியதியே ஊழ்வினை என்று பொருள்படுகிறது.

மேலும் மணக்குடவர், பா¢தியார், பா¢மேலழகர், கவிராசர், மல்லர், கா.சு. பிள்ளை, தண்டபாணி தேசிகர், தேவநேயப்பாவாணர், மு.ரா. அருணாசலக் கவிராயர், வ.உ.சி. போன்ற உரையாசி¡¢யர்கள் 'ஊழ்' என்ற சொல் 'வினைப்ப்யன்' என்ற பொருளிலேயே வள்ளுவரால் ஆளப்பட்டு வந்துள்ளது என்று கூறுகின்றனர்.

வள்ளுவர் காலத்தில் மறுபிறப்புக் கொள்கைகள் சமுதாயத்தில் வேறூன்றியிருந்தன. மெய்யுணர்தல், அவாவறுத்தல், அறன் வலியுறுத்தல் போன்ற அதிகாரங்கள் மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்துகின்றன. இதன்வழி வள்ளுவா¢டம் ஊழ்வினை பற்றிய சிந்தனை இருந்துள்ளது என்பது பெறப்படுகிறது.

இறைவனுடைய அருள் இல்லாவிடில் கோடிகோடியாய்ப் பொருள் வந்தாலும் அதைக் காப்பாற்ற முடியாது. எவ்வளவுதான் காப்பாற்ற முயன்றாலும் தனக்கு வினைப்படி உரியன அல்லாதவை நிற்காது. உரிய பொருளை வேண்டாமென்று தூக்கி எறிந்தாலும், அதே வினைப்படி, அது அவரிடமே திரும்பி வந்துவிடும். இக்கருத்தையே பின்வரும் குறள் சொல்கிறது.
பா¢யினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொ¡¢யினும் போகா தாம். (376)

என்ற குறளில் 'பால்' என்ற சொல் ஊழ் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.

ஒருவனுக்கு நல்லூழ் அமைந்துவிட்டால் அவன் வேண்டாம் என்று எண்ணி செல்வத்தை ஒதுக்கினாலும், அவனை விட்டுச் செல்வம் அகன்று செல்லாது என்றும் தீயூழ் வந்த காலது எப்படிப் போற்றிக் காத்தாலும்செல்வம் அவனை விட்டு அகன்றுவிடும் என்றும் இக்குறளுக்கு விளக்கம் தரலாம். இக்குறளுக்கு ஏற்றாற்போல் திருவள்ளுவர் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி கதையாகக் கூறப்படுகிறது.

திருவள்ளுவரின் நண்பர் ஏலேலசிங்கன் என்றொருவர் இருந்தார். அவர் பெரும் கடல் வணிகர். ஏராளமான செல்வத்தைக் குவித்தவர். ஆயினும் அந்தச் செல்வத்தை அறவழிகளில் செலவிட்டார். திருவள்ளுவரையும் ஆதரித்தார். இவரைப் பற்றி செவிவழியாக வந்த பல செய்திகளைச் சுருக்கமாக ‘அபிதான சிந்தாமணி’ தருகிறது. அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரால் சென்ற நூற்றாண்டில்
தொகுக்கப்பட்ட இலக்கியக் கலைக்களஞ்சியமாகும்.

அதில் குறிப்பிட்டுள்ள செய்தியில்:

திருவள்ளுவர் நெசவுத் தொழில் செய்து வந்தார். ஏலேலசிங்கனிடம் நூல் வாங்கப்போவது வழக்கம். ஒருநாள் ஏலேலசிங்கன் வீட்டுக்குப் போனார். அவர் சிவபூஜையில் இருப்பதாச் சொல்லி வள்ளுவரை வீட்டு வாசலிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர். வள்ளுவர் உடனே புன்சிரிப்புடன், அவர் குப்பத்தில் பூஜை செய்கிறாரா அல்லது வீட்டு அறையில் பூஜை செய்கிறாரா? என்று கேட்டார். இதைக் கேட்ட ஏலேலசிங்கன் அவரிடம் ஓடி வந்து வெட்கத்துடன் நின்றார். அதாவது வள்ளுவருக்கு ஏலேலசிங்கன் மனம் அலைபாய்வதும், அலைகடலில் வரும் கப்பல் பற்றி எண்ணிக் கொண்டிருப்பதும் தெரிந்துவிட்டது. உடல் பூஜை அறையில் இருந்தாலும் உள்ளம் கப்பல் வணிகத்தில் உலா வந்தது. அன்று முதல் வள்ளுவரை அவர் ஆன்மீக குருவாக ஏற்றார்.

ஒரு முறை ஏலேலசிங்கனின் பொருட்களை ஏற்றி வந்த கப்பல் தரை தட்டியது. வள்ளுவரிடம் ஓடோடி வந்து வழி ஏதும் உண்டா என்று கேட்டு விழி பிதுங்க நின்றார். அறவழியில் சேர்த்த பொருள் ‘போ’ என்றாலும் போகாது என்பது வள்ளுவருக்குத் தெரியும். ஆகவே ஏலேலசிங்கன் பெயரைச் சொல்லி கப்பலை கயிறு கட்டி இழுக்கச் சொன்னார். கப்பல் கரை சேர்ந்தது. அதிலிருந்துதான் கடலில் செல்லுவோர் பாதுகாப்பாகச் சென்று திரும்ப ‘’ஏலே§Ä¡ ஐலசா’’ என்று கோஷம் இடும் வழக்கம் வந்ததோ என்று எண்ண வேண்டி இருக்கிறது!!

ஏலேலசிங்கனிடம் ஏராளமான பொருட் செல்வம் குவியவே அதைத் தங்கச் º¢øָǡ¸ மாற்றி வைத்திருந்தார். அற வழிகளில் செலவிட்டது போக எஞ்சியதைக் கடலில் கொண்டு போட்டு விட்டார். சில காலம் கழித்து மீனவர்கள் பலர் அவர் வீட்டை நோக்கி ஓடி வந்தனர். அவர்கள் பிடித்த சுறாமீனின் வயிற்றில் தங்கச் º¢øÖ¸ள் இருந்ததாகவும் அதில் ஏலேலசிங்கனின் பெயர் பொறிக்கப் பட்டிருப்பதால் திருப்பிக் கொடுக்க ஓடிவந்த தாகவும் சொன்னார்கள். ‘ஏலேலசிங்கனின் பொருள் ஏழுகடல் போனாலும் திரும்பும்” – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

ஊழ்வினை என்னும் ஒன்று இருப்பதாக எப்போது யாரால் ஏன் எவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டிருக்கக் கூடும் என ஆய்வு செய்ய வேண்டும். மிக மிகப் பழங்காலத்தி லேயே மக்களுள் சிலர் உலகியல் நிகழ்ச்சிகளை உற்று நோக்கியிருப்பர். வாழ்க்கை முழுதும் நல்லனவே செய்யும் சிலர் துன்பம் உறுவதையும் வாழ்க்கை முழுவதும் தீயனவே செய்யும் சிலர் இன்பமாக வாழ்வதையும் கண்ட அறிஞர் சிலர், இந்த எதிர்மாறான அமைப்புகளுக்குக் காரணம் என்ன என்று துணுகிச் சிந்தித்திருக்கக் கூடும். அவர்கட்குத் தக்க நேரடியான பதில் கிடைத்திருக்காது.

நெல் விதைத்தவன் நெல்லைத்தான் அறுவடை செய்யமுடியும்-மாறாகத் தினையை அறுவடை செய்ய முடியாது; அதுபோலவே, தினை விதைத்தவன் தினையைத் தான் அறுவடை செய்ய முடியும்-மாறாக நெல்லை அறுவடை செய்ய முடியாது. இஃது இயற்கை விதி. இவ்வாறே, நல்லன செய்தவன் நன்மையே பெற வேண்டும்- மாறாகத் துன்பமுறக் கூடாது; தீயன செய்தவன் துன்பமே படவேண்டும்- மாறாக இன்பம் எய்தலாகாது. ஆனால், இந்த இயற்கைப் பொது விதிக்கு மாறாக உலகியல் நிகழ்ச்சிகள் சில அமைவதற்குத் தக்க காரணம் ஏதாவது ஒன்று மறைவாக இருக்கத்தான் வேண்டும் என அவர்கள் எண்ணினர். அதற்குரிய காரணமாக அவர்கள் உய்த்துணர்ந்து யூகித்துக் கண்டதாவது:-
இந்தப் பிறவியில் நன்மை செய்பவர்கள் துன்பமுறுவதற்குரிய காரணம், அவர்கள் முற்பிறவியில் செய்த தீவினையாகத்தான் இருக்கவேண்டும்; இந்தப் பிறவியில் தீமை செய்பவர்கள் இன்பம் எய்துவதற்குரிய காரணம், அவர்கள் முற்பிறவியில் ஆற்றிய நல்வினையாகத்தான் இருக்க வேண்டும்-என்பதுதான் அவர்களின் உய்த்துணர்வு. இவ்வாறு முற்பிறவியில் செய்த வினைக்கு ‘ஊழ்வினை’ என்னும் பெயர் வழங்கப்படுகிறது. சிக்கலுக்குத் தீர்வு காண இந்த உய்த்துணர்வைத் தவிர அவர்கட்கு வேறு வழி புலப்பட்டிலது.

உலகியலில் நேருக்கு நேர் தீமைசெய்தவன் அரசால் கண்டுபிடிக்கப்பட்டு ¾ñÊì¸ôபடுகிறான்- இது அரசநீதி! தீமையே செய்யாதவனும் சில நேரத்தில் துன்புறுகிறான்-இஃது ஊழ் வினைப் பயன்-என்பதாகத் கருதிய முன்னோர்கள்,"அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்”- என்னும் பழமொழியையும் உருவாக்கிவிட்டனர்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5)

இக்குறளில் 'இருவினை' என்ற தொடர் நல்வினை, தீவினை இவற்றைச் சுட்டுவது. நல்வினை என்பது நற்செயல் என்றும் தீவினை என்பது தீச்செயல் என்றும் பொருள்படும். நமது அனைத்துச் செயல்களுக்கும் பயன் உண்டு; நல்வினையானால் புண்ணியம் கிடைக்கும்; தீவினையானால் பாவம் உண்டாகும் என்னும் கோட்பாடு எல்லாராலும் விரும்பப்படுவது; அவ்விதமே உலக இயக்கம் உள்ளது என்ற நம்பிக்கையுடனேயே நாம் வாழ்கிறோம். இவ்விருவினைகளால் உண்டாகும் பயன்களையே 'இருவினை' என்ற தொடர் குறிக்கிறது.

“தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற கணியன் பூங்குன்றனா¡¢ன் வாசகம் இங்கே நினைவில் கொள்ளற்பாலது.

வேதங்களிலே மூன்று வகையான வினைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது.
சஞ்சித கர்மம் அல்லது சேமித்த வினை
இது நல்வினை மற்றும் தீவினை அனைத்தின் தொகுதியாகும். வரும் பிறவிகளில் பிராரப்த கர்மமாக செயல்படப் போவது இவ்வினைகளின் பயனே. இந்தப் பிறவியில் இவ்வினைப்பயன் செயல்படாத நிலையில் உள்ளது
பிராரப்த கர்மம் அல்லது செயல்படுகின்ற வினைப்பயன்
சென்ற பிறவிகளில் செய்த வினைகளின் (சஞ்சித கர்மம்) பயன்களில் ஒரு பகுதி
வரும் பிறவியில், அந்தப் பிறவிக்கு ஏற்றவாறு செயல்படுகின்றன். அவ்வாறு ஒரு பிறவியில் செயல்படத் தொடங்கியுள்ள வினைப்பயனே இது.

ஆகாமிய கர்மம் அல்லது கைமேல் பலன் தரும் வினை
வினைப்பயனின் விளைவாக இப்பிறவி அமைந்தாலும், வினைப்பயன் அனுபவிக்கின்ற வேளையிலே புதிய வினைப்பயன்கள் சேர்கின்றன. இவ்வாறு சம்பாதிக்கின்ற வினைப்பயன் ஆகாமிய கர்மம் எனப்படுகிறது. இது செயலின் தன்மைக்கு ஏற்ப இந்தப் பிறவியில் பலன் தந்தாலும் தரலாம்: அல்லது, சஞ்சித கர்மத்துடன் சேர்க்கப்படவும் செய்யலாம்
வேதாந்த தத்துவத்தின்படி தீவினைகள் செய்தவர்கள், மறுபிறவியில் கீழ் உலகங்களில் உழன்று மீண்டும் பூமியில் இழி பிறப்பாளர்களாகவும், நல்வினைகள் செய்தவர்கள் சொர்க்கலோகம், போன்ற மேலுலகங்களுக்குச் சென்று, நல்வினைப்பயன்கள் முடிந்தவுடன் மீண்டும் புவியில் உயர்பிறப்பாளர்களாகவும் பிறப்பர். தீவினைகள் மற்றும் நல்வினைகள் செய்தவர்களானாலும் பிறவிச்சுழற்சியில் இருந்து தப்பி, பிறப்பிலா பெருவாழ்வு அடைய இயலாது.

வாழ்வின் ஒரு குறிப்பிட்ட நிலையில் அனைத்து தீவினை மற்றும் நல்வினைப் பயன்களிலிருந்து விடுபட்டு, மனவடக்கம், புலனடக்கம், தியாகம், தவம் போன்ற நற்குணங்களுடன், குரு மற்றும் மெய்யியல் சாத்திரங்களின் துணையுடன் ஆன்மாவை அறிந்து ஞானம் பெறுதலே பிறவியில்லா பெருவாழ்வு நிலைக்கு கொண்டு சேர்க்கும்.
.
நீதிவெண்பாவில் ஒரு பாடல் உள்ளது:
தானே புரிவினையாற் சாரு மிருபயனுந்
தானே யனுபவித்தல் தப்பாது – தானூறு
கோடி கற்பஞ் சென்றாலுங் கோதையே செய்தவினை
நாடிநிற்கு மென்றார் நயந்து

பெண்ணே! அளவற்ற கோடி கோடி கற்பங்கள் கடந்துவிட்டாலும், ஒருவனை அவன் செய்த வினைகள் எப்படியும் வந்து சேரும் என்று பெரியோர் சொல்லுவர். ஒருவன் தானே செய்த வினையினால் வந்து சேரக் கூடிய இரண்டு பயன்களும் (நல்லதும், தீயதும்), செய்தவன் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அது தப்பவே தப்பாது
நாலடியாரும் இதே கருத்தை வலியுறுத்துகிறது.

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே தற்செய்த
கிழவனை நாடிக்கொளற்கு

நூற்றுக்கணக்கான பசுக்கள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தாலும், கன்றானது தன் தாய்ப்பசுவைத் தேடிக் கண்டுபிடித்து பால்குடிக்கும். அது போல முற்பிறவியில் செய்த வினைகள் நாம் எங்கிருந்தாலும் நம்மைத் தேடி வந்து ஊட்டும் என்பதே இதன் கருத்து.

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் (375) என்று சொல்லுங்கால்

இன்று நீ செய்யும் நன்மை தீயவை ஆவதும், தீயவை நன்மையாவதும் கூட என்றோ நீ செய்த உன் ஊழ்வினையால் தான். எனவே, ‘நாளைய வாழ்விற்கு இன்றே உன்னைச் சரிபடுத்தி வைத்திரு’ எனும் ஞான பாடத்தையும் இந்த இரண்டு வரிகளில் தருகிறார் திருவள்ளுவர்.
இன்று நாம் வெளி உலகில் நிறைய பேரை பார்க்கிறோம், உண்பதற்கு உணவிருக்காது உணவு வாங்க கையில் காசுமிருக்காது. அத்தனை வறுமை. சிலருக்கு வீட்டிலே உணவு கொட்டிக் கிடக்கும். ஆனால் உண்பதற்கு காலமோ, சூழலோ, உடல்நிலையோ இடம் தருவதில்லை, காரணம் அதை கூட நாம் வாழும் நெறியே தீர்மானிக்கிறது.. நாம் வாழும் பக்குவம் மட்டுமே நமக்கு எதையுமே ஈட்டித் தருகிறது அன்றி வேறில்லை என்கிறார் திருவள்ளுவர்.

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. (371) என்று மற்றொரு பாவில் சொல்லுகின்றார் வள்ளுவர்.
கைப்பொருள் ஆவதற்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும். என்பது இக்குறளின் பொருள்.
வள்ளுவர் இக்குறளில் ஊழை நன்மை செய்யும் ஆகூழ், தீமை செய்யும் போகூழ் என்று இருவகையாகப் பகுத்துள்ளார். ஆகூழ் = ஆகும் ஊழ், நல்வினைப் பயன்; போகூழ் = போகும் ஊழ், இழக்கச் செய்யும் ஊழ், தீவினைப் பயன் என்ற பொருளில் பயன்படுத்தியிருக்கிறார். ஆகூழ் என்ற சொல்லுக்கு ஆக்கும் ஊழ் என்றும் போகூழுக்கு, கெடுக்கும் ஊழ் என்றும் உரையாசி¡¢யர்கள் பொருள் கூறுகிறார்கள்.
‘செல்வம் செயற்கு’ என்ற தொடா¢ல் திருவள்ளுவர் செல்வம் என்று குறிப்பிடுவதை மண் அல்லது பொன் என்பதாக பொருள் கொள்ளாமல் செல்வம் என்பது, கல்வி மற்றும் கேள்வி செல்வங்களையும் குறிக்கும் என்பதை அவருடைய பிற குறட்பாக்களால்
அறிகிறோம்.

“செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.” (411)

என்னும் செவி வழியாக வரும் செல்வத்தை பற்றியே என்பதாக கொண்டால் பொருள் மெய்பொருளாகும் . அதாவது "எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளை" என்னும் திருமந்திரச் சொல்லுக்கொப்ப குரு பரம்பரையாக வரும் ஞான உபதேசத்தையே செல்வம் என்று வள்ளுவர் இங்கு குறிப்பிடுகிறார்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற யவை. (400)

ஒருவற்குச் சீ¡¢ய செல்வமாவது கல்வி, அ•து ஒழிந்த மணியும், பொன்னும் செல்வமல்ல என்று கூறுகிறார் வள்ளுவர். எனவே பொன்னும், பொருளும் , மண்ணும் மட்டும் செல்வமல்ல, ஒரு மனிதனுக்கு எது நிறைவைத் தருகிறதோ அதுவே சிறந்த செல்வம் என்று கருதலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கம்பராமாயணத்தில், தசரதன் தான் முடிதுறந்து தன் மூத்த மகனாகிய இராமனுக்கு மகுடம் சூடி மகிழ நினைத்தான். தசரதனுக்கு அதுதான் செல்வத்துக்கு நிகரான மனநிறைவைத் தரக்கூடியது.

இராமனிடம் சொல்கிறான்:

முன்னை ஊழ்வினைப் பயத்தினும் முற்றிய வேள்விப்
பின்னை எய்திய நலத்தினும் அ¡¢தினின் பெற்றேன்
இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால்
நின்னை என்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ.

முற்பிறவிகளில் நான் செய்த நல்வினையாலும், இப்பிறவியில் செய்து முடித்த வேள்விகளாலும், உன்னை என் மகனாகப் பெற்றேன். இப்பொழுதும் யான் இந்த அரசாட்சியைத் தாங்கிக்கொண்டு தொடர்ந்து இருந்தால், உன்னை மகனாகப் பெற்ற பயனால் எனக்குக் கிடைக்கும் நிறைவுதான் என்ன? என்று கேட்கிறான் தசரதன். இராமனுக்கு முடி சூட்டுவதற்கு¡¢ய எல்லா அதிகாரமும் தசரதனிடத்தில் இருக்கின்றது. அதேபோல் மகுடம் தா¢த்துக்கொள்ள வேண்டிய எல்லாத் தகுதிகளும் இராமனிடத்தில் உண்டு.

இப்படியிருக்க என்ன நடந்தது?

நவ்வி வீழ்ந்தென்ன நாடக மயில் துயின்றென்ன
கவ்வை கூர்தரச் சனகிஆம் கடிகமழ் கமலத்து
அவ்வை நீங்குமென்று அயோத்தி வந்தடைந்த அம்மடந்தை
தவ்வை ஆம்என கிடந்தனள் கேகயன் தனயை.

மணம் கமழும் செந்தாமரையின் மீது வீற்றிருக்கும் திருமகளைப் போன்ற ஜானகி என்னும் சீதை, அயோத்தி நகரத்தை விட்டு நீங்கப் போகிறாள், இனி நாம் அங்கே சென்று வாழலாம் எனக்கருதி , அயோத்திக்கு வந்து சேர்ந்த அத்திருமகளின் தமக்கையான மூதேவி படுத்துக் கிடந்தது போல, கைகேயி தசரதனின் பா¢வைப் பெறுவதற்காக விழுந்து கிடந்தாள் என்று கம்பர் வருணிக்கிறார்.

கைகேயின் சூழ்ச்சியால் இராமன் வனம்புக நேர்ந்தது, தசரதன் உயிரை விட்டான். கைகேயி விரும்பியபடி பரதனும் முடி சூடிக்கொள்ளவில்லை.

இறுதியில் தசரதனுக்கும், இராமனுக்கும், ஏன் கைகேயிக்கும் கூட சூழ்நிலை எல்லாம் நல்லவையாக இருந்தும் தீயவையாக் மாறிவிட்டது.

இராமன் முடிசூடும் வாய்ப்பு பறிபோனதற்காக இலக்குவன் கொந்தளிக்கிறான். யார் மீதும் தவறில்லை, இது ஊழ்வினையால் ஏற்பட்ட பிழை என்று இராமன் அவனை சாந்தப்படுத்துகிறான்.

நதியின் பிழை யன்று நறும்புனல் இன்மை அற்றே
பதியின் பிழை யன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை யன்று மகன்பிழை அன்று மைந்த
விதியின் பிழை நீயிதற்கு என் கொல் வெகுண்டது என்றான்.

இங்கே கம்பர் ஊழ்வினைக்கு 'விதி' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

“உயர் செல்வமெல்லாம் அன்றென்று இரு, அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை ”

என்னும் பட்டினத்து சுவாமிகள் வாக்கின் படி, அவரைப் போன்ற ஞானிகளுக்கு
உலகத்தார் நல்லவை, வேண்டுவன என்று கருதும், பொன்,பொருள் பதவி, மனைவி, மக்கள், உற்றார்,உறவினர்,புகழ் என்னும் இவை எல்லாம் இவர்கள் தேடும் மெய்ஞானத்திற்கு, அதாவது இவர்கள் காணும் கடை வழிக்கு காதற்ற ஊசியில் நூலினை கோர்த்து..துணியைத்
தைத்துஸ ஆடையாக உடுத்திக்கொள்ளலாம் . என்று எண்ணும் மடமைக்கு ஒப்பான, வேண்டாதவை எனப்படும் தீயவாம்! மாறாகஸ..

“பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென்று இரு, நடு நீங்காமலே நமக்கு இட்டபடி”

என்னும் வாக்கின் படி,

சாதாரண மனிதர்கள் தீயவை, வேண்டாதவை என்று கருதும்,பற்றின்மை, பொன்னையும் மண்ணையும் ஒன்றாக கருதும் சமநோக்குடைமை ,எவ்வுயிர்களிடத்தும் கருணை கொள்ளுதல், “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்னும் எண்ணம், இவையாவும் ஞானிகள் தேடும் மெய்ஞானத்திற்கு, அல்லது காணும் கடை வழிக்கு வேண்டுபவை எனப்படும் நல்லவையாம்!

எவ்வாறு பட்டினத்து சுவாமிகள், தாயுமானவர், மாணிக்கவாசகர் போன்றோர், இவ் அருட்செல்வத்தை அடையும் பொருட்டு, உலகம் நல்லவை என்று கருதும், உயர்செல்வங்களான அமைச்சர் பதவியையும்,அரசனுக்கு இணையாய் இருந்த அளப்பரிய செல்வங்களையும்,சுற்றம் சூழலையும், தீயனவாக எண்ணி துறந்தனரோ அவ்வாறே நாமும்
புலன்களால் ஈர்க்கப்பட்டு உலக இன்பங்களில் மூழ்கிக் கிடத்தலை விட்டு அறவழி நடந்து கடைதேற வேண்டும் என்பதே வள்ளுவரின் அவா.

திருக்குறள் குமரேச வெண்பாவில் ஜெகவீர பாண்டியனார் மணிமேகலையில் வரும் ஆதிரை சாதுவன் ஆகியவர் கதையை இக்குறளுக்கு எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்.

சாதுவன்முன் நன்றாய்ந்தும் தாழ்ந்தான்பின் தீதடைந்தும்
கோதகன்றான் என்னே குமரேசா --ஆதலினால்
நல்லவை எல்லா அந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.

ஆதிரையின் கணவன் சாதுவன். அவன் தீய ஒழுக்கம் கொண்டு கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய பொருட்கள் தீர்ந்தபின் கணிகை அவனை வீட்டை விட்டு வெளியேற்றினாள். சாதுவன் மீண்டும் பொருள் ஈட்டுவதற்காக வணிகர்களுடன் கப்பலில் சென்றான். கடும் காற்றால் கப்பல் கவிழ்ந்தது. சாதுவன் தப்பி நாகர்கள் வாழும் மலைப்பக்கம் சேர்ந்தான். கப்பலில் தப்பிய சிலர் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். சாதுவன் உயிரோடு இருப்பதை அறியாத அவர்கள் அவன் இறந்து விட்டதாகக் கூறினர். அதனைக் கேட்ட ஆதிரை தீயில் பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள். தீயில் குதித்தாள். ஆனால் தீ அவளை எ¡¢க்கவில்லை.
ஆதிரை ‘தீயும் சுடாத பாவியானேன்’ என்று வருந்தினாள். அப்போது ‘உன் கணவன் இறக்கவில்லை. விரைவில் திரும்புவான்’ என அசரீரி கேட்டது. ஆதிரை மகிழ்ச்சியோடு வீடு திரும்பி நல்ல அறங்களைச் செய்து வந்தாள்.

கடல் கொந்தளிப்பிலிருந்து உயிர்தப்பி நாகர்மலையைச் சென்றடைந்த சாதுவனை நாகர்கள் பிடித்து அவனை உண்ண முயன்றனர். சாதுவன் நாகர்மொழியை அறிந்திருந்ததால் நாகர்களின் தலைவனோடு பேசி அவனுடைய நட்பைப் பெற்று, அவர்களுக்குக் கொல்லாமை அறத்தை அறிவுறுத்தினான். நல்வினை, தீவினை ஆகியன பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான். நல்லறிவு பெற்ற நாகர் தலைவன், சாதுவனுக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தந்தான். அவற்றைப் பெற்று அங்கு வந்த சந்திரதத்தன் என்ற வணிகனின்
கப்பலில் சாதுவன் மீண்டான். ஆதிரை கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.

சாதுவன் முதலில் தன் பொருளையெல்லாம் கணிகையிடம் இழந்து, பின் வணிகம் செய்யப் புறப்பட்டுப் போய் அதிலும் கப்பல் கவிழ்ந்து நரமாமிசம் உண்ணுகிற நாகர் கூட்டத்தில் சிக்கி உயிர்போகும் நிலைக்குச் சென்றாலும், அதிலிருந்து மீண்டு, நாகர் தலைவனின் நட்பைப் பெற்று மிகுந்த பொருளை அடைந்து திரும்பவும் தன் ஊர் சேர்ந்து மனைவியுடன் சேர்ந்து இயல்பு வாழ்க்கைக்கு மீளும்படி அவனுடைய ஊழ் அமைந்தது.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அ¡¢து

எனும் குறளில் என்ன தான் கோடி செல்வம் சேர்த்திருந்தாலுமதிலும் நமக்கென எத்தனை நமக்கு விதிக்கப்பட்டுள்ளதோ அதனை மட்டுமே நம்மால் அனுபவிக்க முடியும் என்கிறார் வள்ளுவர்.

சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட “ஊழ்வினை உறுத்து வந்தூட்டலை” நினைவு கொள்ளவேண்டும்

சிலப்பதிகாரத்தில் கோவலன் பொ¢ய வணிகனின் மகனாக அறிமுகப் படுத்தப்படுகிறான். கட்டிய மனைவியைத் தவிக்க விட்டுவிட்டு காதலி ஒருத்தியோடு போனதைத் தவிர அவன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் , சமூக வழ்விலும் அறத்தின் வழி வாழ்ந்தவன். ஆயினும் செல்வத்தையெல்லாம் இழந்து இறுதியில் மனைவியின் காற்சிலம்பை விற்றுப் பிழைப்பதற்காக மதுரை வந்து அங்கே பொய்ப்பழியேற்று கொலைப்பட்டு மாண்டான். காரணம் ஊழ்வினை.
. தீவினையால் துயருற்ற கோவலனைக் கண்ட மாடலன், அவன் முன்னர்ச் செய்த நல்வினைகளை எல்லாம் எடுத்துரைக்கிறான்.
• ஒரு முதிய பார்ப்பனன் உயிரைக் காப்பாற்ற மதயானையை எதிர் கொண்டு அடக்கிய கருணை மறவன்.
• அறியாது கீரிப்பிள்ளையைக் கொன்றப் பார்ப்பனப்பெண்ணின் துயர் துடைத்தவன்.
• ஒரு பத்தினியின் மீது பழி சுமத்திய பொய்யன் உயிரை சதுக்கத்துப்
பூதத்திடமிருந்து காக்கத் தன் உயிரைக் கொடுக்க முன்வந்த தியாக சீலன்.
இப்படி இந்தப் பிறவியில் நல்வினையே செய்த கோவலன் துயர் அடையக் காரணம் முற்பிறப்பில் செய்த தீவினைப் பயன்போலும் - என மாடலன் உரைக்கிறான்.
முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன் வெந்திறல் வேந்தர்க்குக் கோத்தொழில் செய்வான் பரதன் என்னும் பெயரெனக் கோவலன்”
என்று இளங்கோவடிகள் கோவலனின் முற்பிறப்பை மதுராபதி என்னும் தெய்வம் சொல்வதுபோலக் கூறுகிறார்.
மதுராபதி தெய்வம் கோவலனின் முற்பிறப்பில் அடைந்த சாபம் பற்றிக் கூறுகின்றது. முன்பு கலிங்க நாட்டிலுள்ள சிங்கபுரத்திலும் வசு என்பவனும், கபிலபுரத்திலும் இருந்த குமரன் என்பவனும் தாயவேந்தர்கள். இவர்கள் தம்முள் பகை கொண்டு ஒருவரையொருவர் வெல்லுவதற்கு முயன்று கொண்டிருந்தனர்.
சங்கமன் என்னும் வணிகன் பொருளீட்டும் வேட்கையால் தன் மனைவியோடு சென்று சிங்கபுரத்தின் கடைவீதியில் அரிய கலன்களை விற்றுக் கொண்டிருந்தனன். அப்பொழுது சிங்கபுரத்தின் அரசனிடத்துப் பணி செய்து கொண்டிருந்த பரதன் என்பவன் அந்த வணிகனைப் பகைவனுடைய ஒற்றன் என்று பற்றிச் சென்று அரசனுக்குக் காட்டிக் க் கொடுத்து கொலைத்தண்டனைக்கு உட்படுத்தினான்.

கொல்லப்பட்ட சங்கமன் மனைவியாகிய நீலி என்பவள் மிக்க துயரத்துடன் முறையிட்டுக் கொண்டு எங்கணும் திரிந்து பதினான்கு நாள் சென்ற பின் ஒரு மலையின் உச்சியையடைந்து கணவனைச் சேர்தற் பொருட்டு தன் உயிரை விடத் துணிந்தவள் "எனக்குத் துன்பம் செய்தோர் மறுபிறப்பில் இத்துன்பத்தை அடைவாராக" என்று சாபம் இட்டுஇறந்தனள். அப்பரதனே கோவலனாகப் பிறந்தான். ஆதலால் கோவலனும் கண்ணகியும் இத்துன்பத்தை அடைந்தனர்
சிலப்பதிகாரத்தில் கதாநாயகன் மட்டும் இறக்கவில்லை தவறு செய்த அரசன் மரணம் எய்துகிறான். அவன் மனைவி அவனைத் தொடர்கின்றாள். இறுதியில் ஊர் எரிவாய்ப்பட்டு அழிகின்றது. அவரவர் கொண்டிருந்த லட்சியங்களும், கனவுகளும் சிதைந்து, அழிவு என்றோர் உண்மை அரியாசனம் ஏறுகின்றது. கணவனையே கடவுளாகக் கொண்ட கண்ணகியின் கற்பு தவறுடையதா? கோவலனை ஏற்றுகொண்டது மாதவியின் குற்றம் என்று சொல்ல முடியுமா? வணிக தர்மத்தில் சலிப்படைந்து, கலையார்வம் கொண்டது கோவலனின் குற்றமா? பொற்கொல்லனையும் இளங்கோ கொடியவனாகச் சித்தரிக்கவில்லை. `கூற்றத்தின் தூதுவனாகத்தான்' காட்டியிருக்கிறார். விதி விளையாடிய காரணத்தினால்தான் பாண்டிய மன்னனின் நாக்கும் தடுமாறியது.

உலகமானது ஒன்றிலிருந்து ஒன்று உருவானது. ஒன்றில் ஒன்று அணைத்துக்கொண்டும், ஒன்றின் ஒன்றாகத் தழைத்துக் கொண்டும், ஒன்றுக்கு ஒன்று உதவிக் கொண்டும்
முடிவில்லாமல் முதிர்ந்து, அழிவில்லாமல் கிளர்ந்தும் வருவதால், இந்த உலகத்தில் இரண்டு அரியவைகள் இணக்கமாக இருப்பதில்லை.

இரண்டும் இணங்கினால் முரண்டு பிடிக்கிற வேறுபாடுகளும் முனைந்து போகும். ஆனால் இரண்டும் இணைந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்த வள்ளுவர், கல்வி வேறாக இருக்கிறதே, செல்வம் வேறாக இருக்கிறதே; கல்வியும் செல்வமும் ஒன்றிணைந்தால் வாழ்க்கையின் நிலை எப்படியும் உயர்ந்துவிடுமே என்கிற கருத்தையும் இக்குறளில் சொல்லிவைக்கிறார்.

இந்தக் கோணத்திலிருந்து இக் குறளைப் பார்த்தோமென்றால்
செல்வம் செயற்கு= சொர்க்கம் போன்ற சொகுசு வாழ்க்கையே வேண்டுமென்று விரும்பி முனைவோர்க்கு

நல்லவை (நல்+அவை) எல்லாம்=- நல்லோர் சபை எல்லாம்; தீயவாம் = தீய கூட்டமாகத் தெரியும்

தீயவும் = தீமைசெய்கிற கூட்டமெல்லாம்; நல்லவாம்=- நல்ல உறவாகத் தெரியும்.
என்ற பொருளையும் கொள்ளலாம்.

உழைப்பின் பயனாகப் பெறும் செல்வம் அனைத்திற்கும் ஊழ் துணை நிற்கும். ஊழின் துணையால் உழைப்பும் முயற்சியும் பெற்ற மனிதனும் அதே துணையால்தான் நன்மையை அடைய முடியும். உழைப்பின் பலனைப் பெறுவதற்கும் ஊழின் துணை தேவை. செல்வம் தேடும் முயற்சி என்பது இங்கு உழைப்பையே குறிக்கிறது.

வள்ளுவர் காலத்தில் கடினமான உழைப்பு தேவைப்பட்ட தொழில் உழவுத் தொழிலே. ஆகவே, உழவுத் தொழிலில் எறபடும் இடையூறுகளுக்கும் ஊழே காரணம் என்று கருதப்பட்டிருக்கிறது. இதிலிருந்து மனித சமுதாயத்தின் இன்ப துன்பங்களுக்குக் காரணம் ஊழே என்று முடிவு செய்யப்பட்டு மனிதர்களுக்குள் ஏற்படும் காழ்ப்புணர்ச்சிக்கு அமைதியூட்ட வள்ளுவர் முயன்றுள்ள நிலையைக் காணமுடிகிறது.

இவ்வாறு நான்மறைக் கருத்துக்களுக்கு இணையான கருத்துக்களைத் திருக்குறள் நமக்குத் தருவதால் அல்லவோ

ஆ¡¢யமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனின் இது
சீ¡¢யது என்றொன்றைச் செப்பா¢தால் --ஆ¡¢யம்
வேத முடைத்து தமிழ்திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து.

என்று வண்ணக்கஞ் சாத்தனார் பாடியுள்ளார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard