Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 08. துப்பாய தூஉம் மழை


Guru

Status: Offline
Posts: 7329
Date:
08. துப்பாய தூஉம் மழை
Permalink  
 


08. துப்பாய தூஉம் மழை


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. (திருக்குறள்12)
.
கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவனின் பெருமைகளைப் பற்றிப் பேசிய திருவள்ளுவர் அடுத்து உலக இயக்கத்துக்கும், நுகர் பொருள் படைப்புக்கும் கருவியாக இலங்கும் வான் மழையைச் சிறப்பித்துக் கூறுகிறார். வானை இடமாகக் கொண்டு நீர்த்துளிகள் மழையாகப் பொழிவதால் வான் சிறப்பு எனப் பெயர் பெற்றது

நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்” (1589)

என்று தொல்காப்பியம் தண்ணீர் பிற நான்கு பூதங்களுடன் இணைந்து இந்த உலகத்தை உருவாக்கியுள்ளது என்று கூறுகிறது.

சிவனியத்தில் சிவபெருமான் தன் தலைமீது தண்ணீரை வைத்திருக்கிறார். வைணவத்தில் திருமால் பாற்கடல் என்று அழைக்கப்பட்ட வாரிதியின் மேல் பள்ளி கொண்டிருக்கிறார். விவிலியத்திலும் ஆதியில் தேவன் தண்ணீரின் மீது ஆவி ரூபத்தில் அசைவாடிக் கொண்டிருந்தார் என்றே எழுதப்பட்டுள்ளது. ஆக எல்லா சமயங்களிலும் தண்ணீரை இறைவனோடு சம்பந்தப்படுத்தியே பேசுகின்றனர். ஏனென்றால் தண்ணீர் உயிர்வாழ்க்கைக்கு அத்தனை முக்கியமானது.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை (12)

மணக்குடவர் உரை:
பிறிதொன்று உண்பார்க்கு அவர் உண்பதற்கான உணவுகளையும் உண்டாக்கித் தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே. இது பசியைக் கெடுக்கு மென்றது.

பரிமேலழகர் உரை:
உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி, அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை. (தானும் உணவாதல் என்பது, தண்ணீராய் உண்ணப்படுதல்.

இந்தக் குறட்பாவை பலரும் “தூவும் மழை” என்றே வாசித்து முடிக்கின்றனர். “தூஉம்” என்பதில் உள்ள அளபெடையைப் பலரும் மறந்துவிடுகின்றனர். உண்பவருக்குத் தேவையான உணவுப் பொருள்களை விளைய வைப்பதுடன், தானும் உணவாக ஆனது மழை நீர். துப்பு + ஆயதூஉம் = துப்பாய தூஉம் எனச் செய்யுளில் நிற்கிறது. எனவே, துப்பு ஆயதூஉம் எனச் சரியாக அசை பிரித்து வாசித்தால் பொருளில் பிழைபடாது. இல்லையேல் செய்யுளில், மழை மட்டுமே தூவுமே தவிர “மழை நீர் உணவு” என்ற பொருள் வராது.

இக்குறளில் மழை நீர் உயிர்களுக்கு ஐந்து விதமாகப் பயன்படுகிறது என்பதை வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

1. உணவைத் துய்ப்பார்க்கு, துய்ப்பதற்கு ஏதுவாக நீர, உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதற்குக் காரணமாக அமைந்து,

2. உற்பத்தியான பொருள்களுக்குள்ளும் நீராய் அமைந்து,

3. பின்னர் அது உண்பதற்கேற்ற உணவைச் சமைப்பதற்கு ஓர் ஊடகமாகவும் அமைந்து,

4. அவ்வுணவைத் துய்ப்போர்க்கு அதை வயிற்றுக்குள் உரசல் இன்றி உய்ப்பதற்கு உறுதுணையாகவும் நின்று,

5. இறுதியாகத் தானே பிற உணவு உண்ணாத நேரங்களில் தாகத்தைத் தணிக்கும் தனி உணவாக இருந்தும், இம்மழையால் உண்டாகிய நீர் பயனளிக்கிறதுனென்பது இக்குறளின் பொருள்.

சங்ககாலப் புலவரான குடபுலவியனார். புறநானூற்றில்
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (புறநானூறு – 18)

என்று நீரால் அமையும் உணவின் இன்றியமையாமையை எடுத்துரைக்கிறார்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்!
நாம நீர்வேலி உலகிற்கு, அவன் அளிபோல்
மேல்நின்று தான் சுரத்தலான்
என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மழையைப் போற்றுகிறார். சோழனின் கொடை தன்மை போல், மழை வானின்றும் சுரக்கிறது என்று மன்னனையும், மழையையும் போற்றுவார். இரண்டு பேருமே மக்களையும், மண்ணையும் காப்பவர்கள் என்று இதன் உள்ளீடாக உணர்த்தப்பட்டிருக்கிறது.

ஆகவே கடவுள் வாழ்த்துக்கு அடுத்து வான்சிறப்பு வைக்கப்பட்டது.

வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று (11)

மழையினின்றும் உலகம் இயங்கி வருதலால், அம்மழையே அமிழ்தம் என்று கொள்ளத்தக்கது. உலகம் நிலைபெறுவதற்கு வேறு அமிழ்தம் வேண்டப்படாமல் தானே அமிழ்தமாக நின்று பயன் விளைவிக்கிறது என்கிறார் வள்ளுவர்.

மழையின் சிறப்பினை, “வான் சிறப்பு” எனும் அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிடும்போது, மழை பெய்தலால் உலகம் வாழ்ந்து வருகிறது, எனவே மழை உலகத்தில் வாழும் உயிர்களுக்கு இறவா நிலை அளிக்கும் அமிழ்தம் என்கின்றார்.

மழையை வேண்டி பாடப்படும் இராகத்தின் பெயர் ‘அமிர்தவர்ஷிணி’ என்பது இங்கு சிந்திக்கத்தக்கது. அமிர்தம் என்றால் அமிழ்தம், வர்ஷிணி என்றால் பொழிதல், ஆக இந்த ராகத்திற்க்குப் பெயர் வைத்தவர்களும் இக்குறளின் கருத்தையே கொண்டிருந்தார்கள் என்பது தெரிகிறது.

மழை வானத்தில் இருந்து இறங்குவதால் அது வானம் எனப்பட்டது. இடவாகு பெயர். வானத்தின் கொடை மழை என்று கருதப்பட்டால் கருத்தாவாகு பெயர். தெலுங்கு மொழியில் இன்றும் கூட மழை ‘வான’ என்று சொல்லப்படுகிறது.

மனித குலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், வான் மழை சிறப்பாக இருக்க வேண்டும்.

மழை பெய்யாமல் போகுமானால் பரந்த உலகத்து உயிர்களை பசி வருத்தும் என்கின்றார். மழை இல்லையானால் உழவு தடைபடும். மாந்தர் வாழ்வு கெட்டுப்போவதோடு மட்டுமல்லாமல் புற்பூண்டுகள் கூட வாழ வழியில்லாமல் போகும் என்கின்றார்.
மழை அற்றுப் போகுமானால் பிறர் பொருட்டுச் செய்யும் தானமும் நம் பொருட்டு செய்யும் தவமும் இடம்பெறாது போவதோடு மட்டுமல்லாது மாந்தரின் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும் என்கின்றார். மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் இறைவழிபாடும் திருவிழாக்களும், நாள் வழிபாடும் கூட நின்றுவிடும் என்பதனையே,

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்,
வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு” (18) என்று குறிப்பிடுவார்.

மேலும் மழையின் துணை கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் அளவை நோக்கும்போது, அதிலிருந்து நாம் எடுத்துண்ணும் அளவை விட வானோர்க்கான பூசனையில் படைப்பது மிக மிகச் சிறியது. அந்த சிறிய அளவுப் பூசனைப் பொருள்கள் கூட வானம் பெய்யாவிடில் கிடைக்காது என்று கூறினார் வள்ளுவர்.

பகவத் கீதை கூறுகிறது:

உலகில் தோன்றும் உயிரினங்கள் அனைத்தும் உணவிலிருந்தே உண்டாகின்றன. அவ்வுணவோ மழையிலிருந்து உண்டாகிறது.

திருமந்திரத்தில் வான் சிறப்பு எனும் பகுதியில் மழையின் சிறப்பினைத் திருமூலர் குறிப்பிகின்றார். மாந்தர் வாழ்வில் ஒழுக்கம் நிலை பெறுவதற்கு உலகில் முதலில் வேண்டுவது மழை என்று குறிப்பிடுகின்றார்.

அமுதூறு மாமழை நீர் அதனாலே,
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோன்றும்,
கமுகு ஊறுதெங்கு கரும்பொடு வாழை,
அமுதூறும் காஞ்சினரை ஆங்கதுவாமே” என்று கூறுகிறார்.

வற்றாத அமுத ஊற்றுப் போலச் சுரந்து பொழிகின்ற மழை நீராலே உயிர்களுக்குப் பலன் தருகின்ற பல மரங்கள் இயற்கையாக நிலத்தில் தோன்றி வளர்கின்றன. அவை உலக உயிர்கள் வாழ்வதற்கு வேண்டும் நிலையான உணவு முதலான பல நன்மைகளை அளிக்கின்றன. மரங்கள் உலகில் உயிர்கள் வாழ உயிர்க்காற்றைக் கொடுத்துக் கரியமில காற்றினைப் போக்குகின்றன. உலகம் வெப்பம் அடைவதிலிருந்து நம்மைக் காக்கின்றன. உண்ணும் உணவாக நின்று உதவும் மழை, உண்ணும் உணவினைத் தரும் பல மரங்களும் பயிர்களும் வளர்வதற்குத் துணை நிற்கின்றது என்கின்றார். அவற்றுள் இவ்வுலகில் உயிர்கள் தொடர்ந்து வாழ துணை நிற்கும் பாக்கு மரம், தென்னை, கரும்பு, வாழை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றார். மழையின் துணையாலே மாந்தருக்கு நிரம்பிய உணவை இம்மரங்கள் கொடுக்கின்றன. இத்தகைய மழை இல்லையானால் உலகம் பெரும் துன்பம் அடையும் எனவும் அத்துன்பம் எல்லோராலும் வெறுக்கப்படும் பெரும் துன்பமாகவும் அமையும் என்கின்றார். மழை உயிர்களுக்கு வாழ்க்கையைத் தரக்கூடியது என்றாலும், மழையினால் எட்டி போன்ற நச்சு மரங்களும் தோன்றுவனவே என்று குறிப்பால் உணர்த்துகின்றார்என்பதையும் கவனிக்க வேண்டும்.
உலகத்து உயிர்கள் உண்ணவும் பயிர்கள் வளரவும் பெரும் துணையாக மழை இருப்பதனாலேயே மழையை இறைவனின் திருவருளுக்கு நேராக வைத்து, ‘மாரி’, ‘மாரியம்மன்’ என்று மழைக்கு அம்மை வடிவம் கொடுத்தனர் நம் பண்டைத்தமிழர். உழவுத் தொழிலைத் தங்கள் குடும்பத் தொழிலாகச் செய்து வந்த தமிழர்கள் முத்து முத்தாகப் பெய்த மழையை, ‘முத்து மாரியம்மன்’ என்றும் கருமேகம் திரண்டு மழை பெய்வதனால், ‘கருமாரியம்மன்’ என்றும் குறிப்பிட்டனர்.
மழையின் பெருமையை உணர்ந்த தமிழர்கள் முன்பெல்லாம் தங்கள் பெண் குழந்தைகளுக்கு மாரி என்றும், மாரியம்மா என்று பெயர் வைத்தார்கள். தற்போது அதே பொருளில் ஆனால் பொருள் தெரியாமலே வர்ஷா என்றும் வர்ஷிணி என்றும் சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கிறார்கள்.
மழை இறைவனது திருவருள் வடிவாக இருக்கின்றது என்ற கருத்தினைத் திருவாசகத்தில் மணிவாசகரும் குறிப்பிடுவார்.

என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்
.
என்று குறிப்பிடுவார்.

நம்மை அடிமையாக உடைய அவ்வம்மையை விட்டுப் பிரிதல் இல்லாத, எங்கள் தலைவனாகிய சிவபெருமானது அடியார்களுக்கும், பாவை நோன்பு நோக்கின்ற பெண்களாகிய நமக்கும் அவள் திருவுளம் கொண்டு தனது அருளைப் பொழிவதைப் போல், மழையே நீ பொழியாய் என்கிறார்.


நற்றிணையில் ஆலங்குடி வங்கனார் பாடுகிறார்:
முனிவில் பரத்தையை என் துறந்து அருளாய்
நனிபுலம்பு அலைத்த வேலை நீங்கப்
புதுவறங்கூர்ந்த செறுவில் தண்ணென
மலிபுனல் பரத்தந் தாஅங்கு
இனிதே தெய்ய நின் காணுங் காலே (230)

பரத்தையிடம் சென்ற தலைவா! அவளிடமே இரு; இங்கு வாராதே; உன்னைப் பார்த்த போதே வறண்ட நிலத்தில் பாய்ந்த புது மழை வெள்ளம் போல என் உள்ளம் குளிர்ந்து விட்டது .அது எனக்குப் போதும். என்று தலைமகள் தலைவனைக் கடிந்து கொள்ளும் போதும் மழையைப் போல் என் உள்ளத்தை நீ குளிர்விக்கிறாய் என்று பாராட்டுகிறாள்.
பண்டைத்தமிழர் தம் அன்பின் ஐந்திணைகளுள் ஒன்றான முல்லைத் திணையில் முதற்பொருள் காரும் மாலையும் முல்லை என்று தொல்காப்பியம் வகுத்துக்காட்டுகின்றது. ஆவணி, புரட்டாசி ஆகிய இரு மாதங்கள் மழை பெய்யும் கார்காலமாகும். தலைவன் வினைவயிற் பிரியும் முன் தலைவியிடம், ‘கார்காலம் தொடங்குவதற்கு முன்பு வந்துவிடுவேன்’ என்று உறுதிகூறி விட்டுச்செல்கிறான். கார்காலம் தொடங்குகிறது. முதல் மழை பெய்கின்றது. ஆனால் தலைவி அம்மழையைக் கார்காலமழையாக ஏற்கவில்லை. ‘தலைவனை பொய்யாதவன், சொன்ன சொல் தவறாதவன்’ என்று அவள் நம்புவதால், தலைவி அவன் வருவதற்குள் பெய்துவிட்ட மழையை ‘வம்ப மழை’ என்று சாடுகின்றாள். அவள், அம்மழையைப் பார்த்து.

வம்பு பெய்யுமால் மழையே வம்பன்று
காரிது பருவம் ஆயின், வாராரே நம் காதலர்” (குறுந்தொகை - 382)

என்று பேசுகின்றாள் ‘மழையே நீ கார்காலப் பருவமழை அன்று கார்காலம் தொடங்குவதற்கு முன்பே’ – என் தலைவன் வருவதற்கு முன்பே பெய்த மழை என்று பேசுகின்றாள்.
வள்ளுவர் இன்னொரு இடத்தில் மழையைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.
கெடுப்பதூ உம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூ உம் எல்லாம் மழை (15)
அதாவது வள்ளுவப் பெருந்தகை இரண்டு மழைகளைப் பற்றிப் பேசுகிறார். ஒன்று கொடுக்கும் மழை இன்னொன்று கெடுக்கும் மழை. நிலத்தைப் பண் படுத்தி, ஆழமாக ஏர் உழுது விதைகளை விதைத்திருப்பான் விவசாயி. அன்று இரவு மழை பெய்தால் பரவாயில்லையே என்று ஏங்கி வேண்டுவான். அப்படியே பெய்தால் அது கொடுக்கும் மழை. அதாவது பயிர்களை வாழ வைக்கும் மழை.
பயிர் நன்றாக விளைந்து முற்றித் தலை கவிழ்ந்து அறுவடைக்குத் தயாராக நிற்கும். அடுத்த நாள் விடியற்காலையில் அறுவடை. பக்கத்து ஊரிலிருந்து ஆட்களும் அறுப்புக்கு வந்தாயிற்று. அன்று இரவு மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விளைந்து நின்ற பயிர்களை நாசம் செய்தால் அது கெடுக்கும் மழை.

மழை இறைவன் ஆணையால் வருவது. மழை பெய்யாதொழிந்தால் அதனைப் பெய்விப்பார் வேறு யாருமில்லை; மிகப் பெய்தால் அதனைத் தடுத்து நிறுத்துவாரும் வேறு யாருமில்லை. எனவே வான்சிறப்பைக் கூறுதலால் பயன் என்ன? என்ற கேள்வி எழுகிறது.
ஒரு நாடு வேளாண்மை சார்ந்த சமூகமானாலும் சரி, வறண்ட பாலை நிலச் சமூகமானாலும் அதன் உயிர்களின் ஆதாரம் மழையே. மேலும் வாழ்க்கையின் சிறப்புக்கும் அமைதிக்கும் வலுவான பொருளியல் அடித்தளம் அமைதல் வேண்டும். மழை இன்றேல் பொருளியல் வாழ்வே பொன்றிவிடும். பசிக்கொடுமை மக்களை வாட்டும்போது, மக்கள் வாழ்க்கை சிறக்காது. அமைதியுறாது. வாழ்க்கையில் அமைதியும் சிறப்பும் நிலவும்போதுதான் இறையுணர்வும் எழும். வளமான பொருளியல் வாழ்க்கையில்தான் மனிதப்பண்பு மிளிரும். சமூகவொழுக்கம் உயர்வடையும். மழை வளத்தை நாம் திறம்படப் பயன்படுத்திக் கொள்ளுதல் என்பது அறியப்பட வேண்டும். எனவேதான் வானைச் சிறப்பித்து வள்ளுவர் விரிவாக விளக்கினார்.

மழை வள்ளுவரின் உள்ளத்தை மிகவும் கவர்ந்திருக்கின்றது என்பார் டாக்டர் மு வ.. 'வள்ளுவர் பலமுறை உவமையாக எடுத்தாண்டிருப்பது மழையே ஆகும். ஒப்புரவாளரின் கைம்மாறு வேண்டாத கடப்பாட்டை எண்ணும்போது 'மழைக்கு உலகம் என்ன கைம்மாறு செய்யமுடியும்?' என்று நினைந்து வியக்கின்றார்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு. (211)


அறநெறி தவறாமல் ஆளும் தலைவனுடைய செங்கோலை நோக்கிக் குடிமக்கள் வாழ்வார்கள் என்று செங்கோன்மை கூறும்போது உலகமெல்லாம் மழையை நோக்கி வாழும் சிறப்பை

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி. ( 542)

என்று உவமையாகக் கூறுகின்றார்.

ஆட்சித் தலைவன் அருள் அற்றவனாக உள்ள காரணத்தால் குடிமக்கள் துன்புறுவதை எடுத்துரைக்கும்போதும், மழைத்துளி காணாமல் உலகம் வருந்தும் நிலையைக் கூறி

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு. (557)

என்று கொடுங்கோன்மையை விளக்குகின்றார்.

பிறர்க்கு உதவியாக வாழும் நல்ல செல்வருக்கு நேரும் வறுமை மழைமேகத்தின் வறட்சி போன்றது என்ற பொருளில்,

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து. (1010)

என்று நன்றியில் செல்வம் அதிகாரத்தில் கூறுகின்றார்.

பிரிவுத் துயரில் வீழ்ந்து, கணவன் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, பிரிந்து சென்று மீண்ட கணவன் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி. (1192)

என்று தனிப்படர்மிகுதி என்ற அதிகாரத்தில் கூறுகிறார்.

நாட்டில் நல்ல ஆட்சி உள்ளபோது மழை பொழிந்து உதவும்

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்க என்றும் (செங்கோன்மை 545)


முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். (கொடுங்கோன்மை 559)

மன்னன் முறை தவறி ஆண்டால் நாட்டில் பருவம் தவறி மழை பெய்யாது என்றும் நம்பும் நம்பிக்கையும் திருவள்ளுவர்க்கு உண்டு' என்று மழை ஆளப்பட்ட இடங்களை மு வ அவர்கள் எடுத்துரைப்பார்.

புறநானூற்றில் 107 ம் பாடல் கபிலர் எழுதிய பாடல். அதில் மழையை முன்னிறுத்தி வஞ்சப் புகழ்ச்சி அணியாய் வள்ளல் பாரியை வானளாவப் புகழ்கிறார்.
‘பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே!’

உலகைக் காப்பது பாரி வள்ளல் மட்டும்தானா என்ன? மழையும் தான் உலகைக் காக்கிறது. அதை ஏன் யாரும் புகழ்வதில்லை எனக் கேட்கிறார் கபிலர்.

‘நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டிங்கு
எல்லார்க்கும் பெய்யும் மழை.’

என்கிறது அவ்வையாரின் மூதுரைப் பாடல். ஊரில் நல்லவர் ஒருவர் இருந்தால் போதும். அவர் பொருட்டு மழை எல்லோருக்கும் பெய்யும் என்பது அவ்வையின் தீர்மானம்.
இராமாயணத்தில் அப்படிப் பெய்தது மழை. தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் நிகழ்த்த விரும்பியபோது, கள்ளங் கபடமற்றவரும், வளர்ந்த குழந்தை போன்றவருமான ரிஷ்யசிருங்க முனிவரை அழைத்து வருகிறார்கள். அவர் எங்கு வந்தாலும் மழை கொட்டோ கொட்டெனக் கொட்டும் என்கிறது இராமாயணம். நெல்லுக்காகப் பெய்த மழை புல்லுக்கெல்லாம் பாய்கிற மாதிரி, ஒரு நல்லவருக்காகப் பெய்யும் மழை எல்லோருக்கும் பயன்தருகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

நல்லவர் எங்கிருக்கிறாரோ அங்கு நல்ல மழைபெய்யும் என்ற விதியை வைத்து மகாபாரதத்தில் அஞ்ஞாத வாசத்தின்போது பஞ்ச பாண்டவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறான் துரியோதனன். விராட தேசம் பெருமழை பெய்து எப்போதும் இல்லாத அளவு செழிப்பாய் இருப்பதை ஒற்றர்களைக் கொண்டு அறிகிறான். தர்மபுத்திரரான யுதிஷ்டிரர் அங்கே இருப்பதுதான் அத்தகைய மழைவளத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும் எனச் சரியாகவே ஊகிக்கிறான். பின்னர் அவன் படையெடுத்துச் சென்றதும் பிருஹன்னளையாக இருந்த அர்ச்சுனனால் அவன் தோல்வி கண்டதும் மகாபாரதத்தில் பின்தொடரும் கதைகள்.
திருப்பாவையில் ஆண்டாள் மழைக் கடவுளுக்கு எப்படி மழையைப் பெய்விக்கவேண்டும் என பாடம் நடத்துகிறாள்.
ஆழி மழை(க்) கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து(ப்)
பாழிய் அம் தோளுடை(ப் ) பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
கடலினுட்புகுந்து நீரை மொண்டு எடுத்துக் கொண்டு மேலேபோய் ஊழிச் சமயத்தில் எப்படி பரம்பொருள் கறுமையாகத் தோன்றுவானோ, அப்படிக் கறுத்து, பரந்த அழகிய தோள்களை உடைய பத்மநாபன் கையிலிருக்கும் சக்கரம் போல் மின்னி, அவன் சங்கை எடுத்து ஊதினால் எப்படி உலகமெல்லம் அதிருமோ அப்படி இடி முழங்கி, சாங்கம் என்ர அவனுடைய வில்லிலிருந்து புறப்பட்டுவரும் சரமழை போல் நாங்கள் வாழ்வதற்காக உலகில் பெய்வாயாக என்று சொல்கிறாள். இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இப்படி மழை பொழியும் செயலைச் செய்வதற்காக நீ கொஞ்சம் தண்ணீரை உனக்குக் ‘கமிஷனாக’ எடுத்து வைத்துக் கொள்ளாதே என்ற பொருளில், ‘கை கரவேல்’ என்றும் கூறுகிறாள்.
திருக்குறள் வெண்பாவில் செகவீரபாண்டியனார் இக்குறளையொட்டி ஒரு வெண்பாவும் இயற்றி ஒரு கதைக்குறிப்பையும் கொடுத்துள்ளார்.
உண்டிதரும் நீரும் உணவாகச் சீதைபண்டு
கொண்டிருந்தாள் குமரேசா – உண்டிதனைத்
துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

குமரேசா! சீதை அசோகவனத்தில் சிறைப்பட்டிருந்த காலத்தில் தண்ணீரை மட்டும் பருகி உயிர் வாழ்ந்திருந்தாள். இந்த உண்மை தூது வந்த அனுமனிடம் அவள் கூறிய மொழியால அறியலாம். “அனுமனே, இந்த இடத்தை விட்டு நான் வேறெங்கும் செல்வதில்லை. தளர்கின்ற என் உயிரைக் இராமன் வரும்வரைக் காக்கும் பொருட்டு சிறிது நீர் அருந்துவதற்காக சிலவேளைகளில் என்னுடைய இராமனின் திருமேனி வண்ணத்தை ஒத்திருக்கின்ற இங்கேயிருக்கின்ற நீல நிற பொய்கைக்கு மட்டும் செல்வேன்” என்று அவள் சொன்னாள்.


தீர்விலேன் இது ஒரு பகலுஞ்சிலை
வீரன் மேனியை மானுமிவ் வீங்குநீர்
நார நாண்மலர்ப் பொய்கையை நண்ணுவேன்
சோரும் ஆருயிர் காக்கும் துணிவினால் என்றாள்.

மழை பலவகையானும் உயிர்களது பசியையும் தாகத்தையும் தீர்த்து வருகிறதென்பதும், சீதை ஒரு காலத்தில் நீரை மட்டுமே தனது உணவாகக் கொண்டிருந்தாள் என்பதும் இதனால் உணரப்படுகிறது.

கடலிலிருக்கும் நீர், நிலத்தினடியில் இருக்கும் குகைவழிகள் மூலமாக நிலத்திலிருந்து மலைப்பகுதிகளை அடைந்து அங்கு மலைகளின் அழுத்தம் காரணமாக ஊற்றாக வெளிவருகின்றது என்று வெகுகாலமாக மக்கள் நம்பினர். கி பி 17-ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டின் நான்காம் ஹென்றி என்ற மன்னன் டோமஸ்ஸொ ஃப்ராங்கினி என்ற இத்தாலிய பொறியாளரை அழைத்து பாரீசு நகரத்தில் அழகிய நீரூற்றுக்களை அமைத்துத் தரச் சொன்னான். அவர் தம் சோதனைகள் மூலம், மழைநீரே ஊற்றுநீருக்கும், ஆற்றுநீருக்கும் ஆதாரம் எனப் பிரான்சு நாட்டினர் காண நிரூபித்தார். "அப்பொழுதுதான் நீரின்றி அமையாது உலகு எனின், அந்த நீரும் மழையின்றி அமையாது என்பது உறுதியாக்கப்பட்டது. இதே கருத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு தெளிவாக வள்ளுவர்.
வான்சிறப்பு அதிகாரத்தின் முத்தாய்ப்பாக, பத்தாவது பாடலில்
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு 20
என்று வள்ளுவர் கூறியிருப்பது அந்தக் காலத் தமிழ் மக்களுடைய அறிவு நிலையைக் காட்டுகிறது என்பதோடு வள்ளுவர் அன்றைய சூழ்நிலையில் வளர்ந்திருந்த கலைகள் அனைத்தையும் ஈடுபாட்டுடனும் தெளிவுடனும் அறிந்திருந்தார் என்பதையும் காட்டுகிறது" என்று வா செ குழந்தைசாமி அவர்கள் குறிப்பிடுகிறார்.
சங்ககால மக்கள் மழைப ; பொழிவிற்குக் காரணமான நிரியற் சுழற்சி பற்றி நன்கறிந்தவர்களாயுள்ளனா.; சங்கப் பாடல்களில் பல நிரியற் சுழற்சி குறித்த செய்திகளைச் சுட்டுகின்றன. நிர்மக்கோளம், வளிக்கோளம், புறணி (டுiவாழளிநசந) ஆகிய மூன்று ஊடகங்களில் நிர் சுழன்று வருகிறது. பரந்து விரிந்த கடல் பரப்பிலிருந்து நிர் வளிக் கோளத்திற்கும், புறணிக்கும் சென்று அங்கிருந்து கடல்களை அடைவதும், ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய செயல்களான மாரி பொழிதல் (Pசநஉipவையவழைn) ஓடு நிர் (சரn ழகக) நில நிர் பாய்வு, நிர் ஆவியாதல், இலை நிராவியாதல், போன்றசிக்கலான நிகழ்ச்சிகள் நிர்மச் சுழற்சி (ர்லனசழடiஉ உலஉடந) எனப்படும்” என்று கே.ஆர்.வேங்கடசாமி அவர்கள் நிரியற் சுழற்சி பற்றி விளக்குகிறாh.;

முழங்கு கடல் முகந்த காமஞ் சூல் மாமழை
என்ற அகநானூற்று பாடல்வரி கடலிலிருந்து நிரை முகந்ததால் மழைபொழியக்; கூடிய மேகங்கள் தோன்றின என்று குறிப்பிடுகின்றது.
வானத்தில் மேகங்களின ; அடர்த்தி அதிகமாகி ஒன்றுடன் ஒன்று மோதும் போது இடியும் மின்னலும் தோன்றுவதை,

நெடு வான் மின்னி குறுந் துளி தலைஇ
படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து என்ற நற்றிணைப்பாடல் எடுத்துரைக்கிறது.

மேகங்கள் திரண்டு ஒன்றுடன் ஒன்று மோதும் போது முதலில் மின்னலும்
பின்பு இடியும் தோன்றும், அதன் பின்பு தான் சிறு சிறு துளியாக மழைப்
பொழிவைத் தொடங்கும் என்று விளக்குகிறது. ஓளியின் திசைவேகம் காற்றின்
திசைவேகத்தை விட அதிகம் எனவே மின்னல்தான் முதலில் தோன்றும், பின்பு
தான் இடியோசை கேட்கும் என்ற இன்றைய அறிவியலாளர்கள் கணடறிந்த இந்த
உண்மையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்த சங்கத் தமிழர்களின்
அறிவுக் கூர்மைக்கு மேற்கண்ட பாடல் தக்க சான்றாதாரமாகத் திகழ்கிறது.

சூரிய வெப்பத்தால் கடல் நர் ஆவியாகி மேகங்களாகத் திரண்டு மின்னல்
இடியுடன் கூடிய மழையைத் தருகின்றது. இப்படிப் பெய்யும் ‘மழை’
ஆறுகளில் ஓடியும் மற்றும் ஒரு பகுதி நிலத்திற்குள் ஊடுருவி எனப் பல வழிகளில்
கடலைச் சேரும் நரியற் சுழற்சி பற்றிய செய்திகள் உள்ளன. பட்டினப்பாலை
இச்செய்தியை தெளிவாக வரையறுக்கிறது.

வான் முகந்த நிர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நிர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல”

'இயற்கையே இறைவன்' என்பதை வள்ளுவர் நம்புவதாகத் தெரிகிறது. மழை இயற்கையின் குறியீடாக அமைந்து இறையின் பருப் பொருளாகத் தோற்றம் அளிக்கிறது. இயற்கையில் அமைந்துள்ள பலவற்றிலும் சிறந்த மழையைப் போற்றுவது வான் சிறப்பு.
வான் சிறப்பு என்று கூறினாலும் வானின் பயனாக இருக்கின்ற தண்ணீர் என்றே கொள்ள வேண்டும். நீரின்றி உலக இயக்கமில்லை; உயிர் வாழ்வன இல்லை. அதனால், திருவள்ளுவர் "நீரின்றியமையாது உலகு" என்றார்.

உலகின் அனைத்துப் பொருள்களிலும் நீர் கலந்திருக்கிறது. நீர் கலவாத – நீர் இல்லாத இடமில்லை. தண்ணீர் ஊடுருவி நிற்காத பொருளுமில்லை. நம்முடைய மானிட உடம்பில் 70 விழுக்காடு தண்ணீர் இருக்கிறது. இந்தத் தண்ணீர் உயிர்நிலை வாழ்வுக்கு இன்றியமையாதது. அதுமட்டுமல்ல, பூமண்டலத்தில் தட்பவெப்ப நிலைகளைப் பாதுகாக்கவும் தண்ணீர் பயன்படுகிறது. தண்ணீர் உணவாகவும், பிற உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் சாதனமாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் அழுக்குகளை நீக்கித் தூய்மை செய்வதற்குத் தண்ணீரே பயன்படுகிறது. இந்த உலகம் தண்ணீர் மயமானது.

"நீரின்றமையாது உலகு" – என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் கூறியதை உற்று நோக்குக.
உலகம் நிலை பெறுவதற்கு மட்டுமல்ல. ஒழுக்கம் நிலைபெறுவதற்கும் மழை மிக இன்றியமையாதது.
மழைக்கும் ஒழுக்கத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
இக்குறளில் கூறப்பட்டுள்ள ஒழுக்கு என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்பதே சிறந்த பொருள். அப்படியானால் வானிலிருந்து மழை பொழிதற்கும் உலகத்து ஒழுங்குக்கும் எப்படி இயைபு உண்டாகிறது?

உலகம் சீராக இயங்க ஒழுக்கம் இன்றியமையாதது. வானின்று வழங்கி வரும் மழை இல்லையேல் துய்ப்பு இல்லை; மழைநீரின்றி பசும்புல் தலைகாட்டாது; உழவர் ஏர் உழார்; கடல் வளமும் குன்றும். விண் பொய்ப்பின் உலகில் வறுமையும் பசியும் மிகும். வளமான பொருளியல் வாழ்க்கையில்தான் மனிதப்பண்பு மிளிரும் என்பதும் சமூகவொழுக்கம் உயர்வடையும் என்பதும் உலகப் பொதுவான உண்மை. மழையில்லையானால் நிலவளம் மறையும், கடல் வளம் தேயும் என்று ஒவ்வொன்றாகக் கூறி வந்த வள்ளுவர் மழை இல்லாமல் மக்களது பொருளாதாரநிலை கெடுவதால் விழாக்கள் இல்லை, பூசனை இல்லை என்று மாந்தரின் ஆன்மீக உணர்வு குன்றும் எனவும் கூறினார்.

இவ்வாறு மனவளம் குறைவது மட்டுமல்ல தானம் தவம் என்ற பொது அறங்களும் தங்காமல் விலகிப்போகும் என்று சொல்வதால் மனிதப்பண்புகளும் மறக்கப்படும் என்றார். உயிர்கள் மடியவும் நேரிடும். இவற்றின் மொத்த விளைவாக கட்டுப்பாடு மறைந்து ஒழுக்கச்சீர் கேடு உண்டாகும். எனவேதான் ஒழுங்கமைப்பு கெடும் என்ற பொருளில் வானின்றி அமையாது ஒழுக்கம் எனச் சொல்கிறார்.
தனிமனிதனுக்கும் ஒழுக்க நெறி நிற்பதற்கு ஏற்ற உடல் நலம் தேவை. உடல் நலம் பாதுகாப்பதற்கு தட்ப வெப்பச் சூழ்நிலை தேவை. உடலின் கருவிகளைச் சீராக இயக்க நல்ல சமவிகித உணவு தேவை. இவ்வளவும் அமைந்தால்தான் ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயம் அமையும். இந்த ஒப்பற்ற சமுதாய அமைப்புக்கு அடிப்படையாக அமைவது மழையேயாம். அதனால் "வானின்று அமையாது ஒழுக்கு" என்றார் திருவள்ளுவர்.

நிலம் பசுமை போர்த்ததாக இருக்க வேண்டும். அங்ஙனம் நிலம் பசுமை தாங்கி விளங்குவது நிலத்திற்கும் நல்லது; உயிர்க் குலத்திற்கும் நல்லது. நிலமகள் பசுமைக்கோலம் பூண்டு விளங்க வேண்டுமானால் வான் நின்று மழை பொழிய வேண்டும். வான் நின்று மழை பொழியத் தவறி விடுமாயின் நிலத்தில் பசிய புல்லின் தலையைக் கூடக் காணல் அரிது என்கிறது வள்ளுவம்.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது" (16)
வளர்ந்த புல் அல்ல, முளைத்தெழும் புல் என்பதை "பசும்புல் தலை" என்றார் திருவள்ளுவர். வான் நின்று மழை பொழியத் தவறினால் நிலத்தில் பசும்புல் தலை இல்லை! ஏன்?

நிலத்தின் மேற்பரப்பிலுள்ள மண் நிலத்திற்கு இன்றியமையாதது. இந்த மேற்பரப்பு மண் தோன்ற பல்லாயிரம் ஆண்டுகளாகின்றன. இந்த மண் காற்றினால் தூசியாகப் பறந்து போய்விடாமல் நிலத்தின் மேலேயே மழைத்துளிகளால் நனைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. நிலத்தின் மேலுள்ள மணற்பரப்பு மண்ணின் வளத்திற்கு உயிர் நிலையாகும். இந்த மணல் பரப்பைக் காப்பது நமது கடமை.
நீர்இன்று அமையாது உலகெனின்' என்ற பகுதிக்கு நீர் இல்லாமல் உலகம் இயங்காது என்ற பொருளிலே பெரும்பான்மை உரையாசிரியர்கள் உரை கூறினர்.

நாம் வாழுகின்ற இந்த பூமியில் 71 விழுக்காடு தண்ணீர்தான் உள்ளது. அந்த தண்ணீரிலும் 97.5 விழுக்காடு கடல் நீர். மீதமுள்ள 2.5 விழுக்காடு நீர் நன்னீராக இருக்க்றது. கடல் நீரில் மூன்றில் ஒரு பங்கு பனிப்பாறைகளாக இருக்கின்றன. எனவே சொற்ப அளவிலான நீரே நமக்குப் பயன்பாட்டிற்குக் கிடைக்கிறது. அதுவும் மழை பெய்யவில்லையென்றால் கிடையாது.

அமைதல்' என்ற சொல்லிற்கு, "அமைத்தல். உருவாக்குதல்' என்றும் பொருள் கொள்ளலாம். வள்ளுவர், "அமையாது' என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினார் என்றால், நீரால்தான் இந்தப் புவியின் அமைப்பு, சுற்றுச்சூழல், நிலங்களின் பயன்பாடு, இவற்றின் அடிப்படையில் அமையும் உயிரினங்களின் வாழ்க்கை அனைத்துமே உருவாக்கப்படுகிறது. ஆகவே, நீரின்றி இந்தப் புவியின் மலைகளும், மலைச் சரிவுகளும், பள்ளத்தாக்குகளும், அப்பள்ளத்தாக்குகளில் வீழ்ந்து விளையாடும் நீர்வீழ்ச்சிகளும், பாய்ந்தோடும் ஆறுகளும், ஆற்றுப் படுகைகளும் இவற்றைச் சுற்றிப் பச்சைப் பசேலென பரந்து விரிந்து கிடக்கும் அணிநிழற் காடுகளும், வயல்வெளிகளும் உருவாக முடியாது
நீருக்கு மூன்று தன்மைகள் உண்டு. நீரின் தன்மை வேதியியல் முறைப்படி pHஎன்ற அளவீட்டால் அளக்கப்படுகிறது. அதனை நீர் எண் என்று வைத்துக் கொள்வோம். நன்னீரின், அதாவது குடிப்பதற்கு ஏற்ற தண்ணீரின் நீர் எண் 7. இந்த நீர் எண் 7க்குக் குறைந்தால் அது அமில நீர் (Acidic) எனப்படும். நீர் எண் 7ஐ விட அதிகமானால் அது கார நீர் (Alkaline). இந்த நீரின் தன்மைகள்தான் உலகை இந்தப் புவியை அமைத்திருக்கின்றன, உருவாக்கியிருக்கின்றன. நீர் எண்களின் அளவு 1 முதல் 14 வரை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. நீர் எண் 1 முதல் 6 வரை அமில நீர். நீர் எண் 7 நன்னீர். நீர் எண் 8 முதல் 14 வரை கார நீர். இந்த மூன்று நிலைகளுக்கும் இடையில் பல இடைநிலைகள் உள்ளன. நன்னீரில் உள்ள ஹைட்ரஜன் அளவு குறைந்தால் நன்னீர் அமில நீராகவும், கூடினால் கார நீராகவும் மாறும்
பூமியின் ஆழத்திலிருந்து மிதமிஞ்சிய வெப்பத்தால் உருகி மேல்நோக்கிவரும் பாறைக் குழம்பில் (Magma) இருந்துதான் பாறைகள் உருவாயின. பாறைக் குழம்பு குளிரும் பொழுது, முதலில் வெப்ப நிலை குறைவான கனிமம் உருக்கொண்டு படியும். இக்கனிமம், எஞ்சியுள்ள பாறைக் குழம்போடு வினை புரிந்து மற்றொரு கனிமத்தை உருவாக்கும். இவ்விரு கனிமங்களும் சேர்ந்து எஞ்சியுள்ள பாறைக் குழம்புடன் வினை புரிந்து பிறிதொரு கனிமத்தை உருவாக்கும். இப்படியே, ஒவ்வொரு கனிமமாக உருவாகி, பாறைக் குழம்பு இறுகிப் பாறையாகும். மீதமுள்ள பாறைக் குழம்பு, உருவான பாறையில் எங்கெங்கு இடைவெளிகள் உண்டோ அங்கெல்லாம் போய்ப் படிந்து கொள்ளும். இப்படி உருவான பாறைகளுக்குள்ளும் நுண்ணிய இடைவெளிகள் இருக்கும். அந்த இடைவெளிகளில் தண்ணீர் நுழைந்து, தேங்கி, கனிமங்களைக் கரைத்து பாறைகளை உருக்குலைத்து விடும். தண்ணீரில் கனிமங்கள் கரைகிற பொழுது தண்ணீர் ஒரு கரைசலாக (Solution) மாறி விடுகிறது. அப்பொழுது இந்தக் கரைசலுக்கு திறன் (Strength) வந்து விடுகிறது. நீர் எண் pH அளவைப் பொறுத்து அது காரக் கரைசலாகவோ அல்லது அமிலக் கரைசலாகவோ மாறி விடுகிறது. இந்தக் கரைசல்கள் தங்களுடைய திறனுக்குத் தக்கவாறு, தான் தேங்கியிருக்கிற பாறைகளில் அல்லது படிவங்களில் உள்ள மற்ற கனிமங்களுடன் வினை புரிந்து மேலும் அவற்றைக் கரைக்கின்றன. கடும் பாறைகள் உருக்குலைந்து மணலாகவும், மண்ணாகவும், களிமண்ணாகவும் மாறி விடுகின்றன. இப்படி உருவான மணலும், பல்வகைக் கனிமங்களின் மண்ணும் தண்ணீரால் அடித்துக் கொண்டு செல்லப்பட்டு, அவை படிந்து, இறுகி படிவப் பாறைகள் உருவாகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தைத்தான் "கல் தோன்றி மண் தோன்றாக் காலம்' என்றார்கள்.

பொருண்ம நிலையில் எந்த விதமான தேக்கம் உருவானாலும் அது ஒரு மாற்றத்தை உருவாக்கும். தண்ணீர் தேங்கும்பொழுது, அது எந்த இடத்தில் தேங்குகிறதோ அந்த இடத்தில் உள்ள பாறையின் கனிமங்களுடன் வினை புரியத் தொடங்கும். நாம் பொதுவாக அந்தக் கிணற்றுத் தண்ணீர் இனிக்கும், இந்தக் கிணற்றுத் தண்ணீர் உப்புக் கரிக்கும் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். அதன் பொருள் என்னவென்றால், இனிக்கும் கிணற்றில் உள்ள பாறை அல்லது படிமத்தின் கனிமங்கள் நிலைத்த தன்மை உடையவை. அக்கனிமங்களை நீரால் கரைக்க முடியவில்லை அல்லது ஒருவேளை தன்னிடம் தேங்கும் தண்ணீரில் ஏதேனும் அமிலத் தன்மையோ அல்லது காரத் தன்மையோ இருந்தால், அப்பாறையில் அல்லது அப்படிவத்தில் உள்ள கனிமங்கள் அந்நீரோடு வினை புரிந்து அதனை நன்னீராக மாற்றி விடுகின்றன. இதுதான் இயற்கையில் நடைபெறுகிறது.

கடலால் - கடல் நீரால் சூழப்பட்டுள்ளது இந்த நில உலகம். நீர் சூழ்ந்த இந்த உலகத்திலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு மற்றுமொரு நீர் தேவை. அதுதான் மழை நீர். மழை நீர் இல்லாவிட்டால், இந்த உலகில்,ஒரு புல் கூட முளைக்காது. உயிர்கள் வாழா. மழையின் இந்த இன்றியமையாமையை ‘வான்சிறப்பு’ என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகிறார் வள்ளுவர். உலகம் நீர் இன்றி வாழ இயலாது என்பது உணமை; அதுபோலவே மக்கள் ஒழுக்கமும் மழைநீர் இல்லையென்றால் சீர்கெடும் என்பதுவும் உண்மை இதுவே வள்ளுவர் நமக்குக் கூறும் அறிவுரை.
உலகின் பிற பகுதிகளில் பல உயிர் ஊற்றுகளும் வற்றாத உயிர் நதிகளும் ஓடுகின்றன. இவற்றில் ஆண்டு முழுவதும் நீருக்குப் பஞ்சமில்லை. தமிழகத்தில் நாளும் நீர் நிரம்பி ஓடும் உயிர்நதி என்று ஒன்றைக்கூட சொல்லவியலாது. இங்குள்ள ஆறுகள் பெரும்பாலும் பருவ மழையை நம்பி ஒடிக்கொண்டிருப்பவை ஆகும். இதனாலேயெ நாம் வான் நோக்கி வாழும் குடிமக்களாக உள்ளோம். நீர் வற்றிய ஆறுகளையும், ஆற்று மணல் மேடுகளையும், மழையின்றி உயிரினங்களும், செடி, கொடிகளும் வாடி, வதங்கிய காட்சிகளைப் பண்டைத் தமிழ் நூல்களில் வரும் செய்யுட்களும் காட்டுகின்றன.

மழை சார்ந்த சமுதாயத்தில் பொருள் வாழ்க்கை ஒரு சூதாட்டம் ஆகிவிடுகிறது - மழை பெய்தால் வளம்; மழை பொய்த்தால் வறட்சி, வறுமை, துன்பக்காட்சிகள். இவை தமிழகத்தில் தொடர்ந்து வந்துகொண்டு இருப்பதை வரலாறு சொல்லும். மழையின் பெருமையை நாம் நன்கு உணர்ந்தவர்களே. வான் சிறப்பு அதிகாரம் எல்லா நாடுகளுக்கும் பொருந்துவது என்றாலும், இது குறிப்பாகத் தமிழகத்தை மனதில் கொண்டே வள்ளுவரால் இயற்றப்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard