Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 06. செவ்வியான் கேடு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
06. செவ்வியான் கேடு
Permalink  
 


6. செவ்வியான் கேடு

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான்
கேடும், நினைக்கப்படும் (திருக்குறள், 169)

அவ்விய நெஞ்சத்தான் என்ற தொடர்க்கு அழுக்காறான நெஞ்சம் உடையவன் அல்லது கோணலான அல்லது வஞ்சக மனம் கொண்டவன் என்பது பொருள்.

ஆக்கமும் என்ற சொல் வளர்ச்சியும் என்ற பொருள் தரும். இங்கு செல்வமும் எனக் கொள்வர்.
செவ்வியான் என்ற சொல்லுக்கு செம்மையானவன் (நேரான உள்ளம் கொண்டவன்)என்று பொருள்.
கேடும் என்ற சொல் அழிவும் என்ற பொருளது. இங்கு கேடுற்ற வாழ்வும் அல்லது வறுமையும் எனப் பொருள் கொள்வர்.

பொறாமைமிக்க வஞ்சக மனமுடையவனுக்கு ஆக்கமும், செவ்விய மனமுடையவனுக்குக் கேடும் ஏன் உண்டாகிறது என்பதற்கான காரணம் ஆராயப்படும் என்பது இக்குறளின் பொருள்.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் என்ற தொடருக்கு தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவரும் பரிப்பெருமாளும்: அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும்;

பரிதி: அழுக்கு மனத்தன் பெற்ற ஆக்கமும்;
காலிங்கர்: அழுக்காறாகிய உட்கோட்டம் கிடந்த நெஞ்சத்தானது ஆக்கமும்; [உட்கோட்டம்-மனக்கோணல்]
பரிமேலழகர்: கோட்டத்தினைப் பொருந்திய மனத்தை உடையவனது ஆக்கமும்;
பரிமேலழகர் குறிப்புரை: கோட்டம்: ஈண்டு அழுக்காறு.

இன்றைய ஆசிரியர்கள் 'பொறாமை நிறைந்த மனமுடையானது செல்வமும்', 'பொறாமை கொள்ளும் நெஞ்சுடையோன் செல்வமும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பொறாமை கொண்ட மனமுடையானது வளமையும் என்பது இப்பகுதியின் பொருள்.

செவ்வியான் கேடும் நினைக்கப் படும்: என்ற தொடருக்கு
தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவரும் பரிப்பெருமாளும்: செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்..
பரிதி: நினைக்கப்படும் என்பதற்கு இமைப்பிற்கெடும் எனப் பாடம் கொண்டதால் 'நல்ல மனத்தன் பெற்ற கேடும் இமைப்பிற் கெடும்' என்று உரை வரைந்தார்.
காலிங்கர்: மற்ற கோட்டமில்லாத செவ்வியானது கேடும் என்னும் இவை இரண்டும்
விசாரிக்க, அவனுக்கு ஆக்கம் இல்லை; இவனுக்கு ஒருகேடும் இல்லை என்பதூஉம் பொருளாயிற்று என்றவாறு.

பரிமேலழகர்: ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'உளவாயின்' என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின்' 'நினைக்கப்படும்' என்றார் என்று கூறுகிறார். “இம்மை செய்தன யான் அறி நல்வினை, உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்து இத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது” என்று நினைக்கப்பட்டவாறு அறிக எனச் சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்துக்காட்டையும் கூறுகின்றார். இதன் பொருள்: நான் அறிந்தவரை நீ செய்தவை எல்லாம் நற்செயல்களே. அப்படி இருக்கும்போது தனி ஒருவனாக, திருமகளின் கொழுந்து போன்ற உன் மனைவியுடன் இங்கு வந்தது, முற்பிறவியில் நீ செய்ததன் விளைவோ, வானளாவ வளர்ந்த திருமால் போன்றவனே, என்று சொல்லி மறையோன்வருந்தினான்.

இன்றைய ஆசிரியர்கள் 'செம்மையுடையானது வறுமையும் அறிஞர்தம் ஆராய்ச்சிக்குரியன', 'பொறாமை இல்லாத செம்மையான மனமுடையவன் ஏழையாக இருப்பதையும் பார்க்கிறோம். இது ஆராய்ந்து பார்க்க வேண்டிய விஷயம்தான்', 'செம்மை பொருந்தியவனது வறுமையும் உளவாயின், அவை பழவினைப் பயனென்று ஆராய்ந்து கருதப்படும்', 'பொறாமையற்றோன் வறுமையும் நல்லோரால் ஆராயப்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பொறாமை கொண்ட மனமுடையானது வளமையும் செம்மையான மனமுடையவனது வறுமையும் நினைக்கப்படும் என்பது பாடலின் பொருள்.
'நினைக்கப்படும்' என்ற சொல் குறிப்பது என்ன?

பொறாமைக் குணத்தையும் ஆக்கம் அல்லது செல்வத்தையும் இணைத்தே எண்ணுவது வள்ளுவர் வழக்கம். அழுக்காறு கொண்டவனுக்கு செல்வம் சேராது என்று அவர் நம்புகிறார்; அல்லது அவனுக்கு ஆக்கம் உண்டாகக்கூடாது என்று விரும்புகிறார். ஆனால் உலகியல் வேறாக இருக்கிறது என்பதையும் உணர்ந்தவர் அவர். எனவே அவர் உள்ளத்தில் ஒரு கேள்வி எழுகிறது. பொறாமை நெஞ்சம் கொண்டவன் ஆக்கம் பெறுதலும், அல்லது தூய்மையான மனம் கொண்டவன் கேடு உறலும் எந்தவகை இயற்கை நீதியைச் சார்ந்தது? இதற்கு விடை காண முயல்கிறார் வள்ளுவர்.

அறத்து ஆறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (37)

என்ற குறளில் பல்லக்கில் பயணம் செய்பவனிடமும் அதைச் சுமப்பவனிடமும் சென்று அவர்களது எற்றத் தாழ்வான நிலையை நியாயப்படுத்த எந்த அறமும் கோட்பாடும் பயன்படாது என்று சொன்னவர் இங்கு வேறு கோணத்தில் இன்னொரு முரணான படர்ந்த சமுதாயத் தோற்றத்தைச் சொல்லி அந்த முறையற்ற அவல நிலை ஆராயப்பட வேண்டும் எனச் சொல்கிறார் அவர்.
நாம் எடுத்துக் கொண்ட குறள் கூறும் செய்தி என்ன?
தீய நெஞ்சினரின் ஏற்ற வாழ்வும் நல்லோர்கள் அடையும் வீழ்ச்சியும் உலக வாழ்வில் அடிக்கடி தோன்றும் காட்சிகள்தாம்.
பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலன்தீமை யால்திரிந் தற்று (1000),
மற்றும்
நல்லார்கண் படட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு (408)

இப்படிப் பட்ட வெளிப்படையாகக் காணப்படும் மற்ற சில சமுதாய முரண்களையும் வேறு இடங்களிலும் வள்ளுவர் கூறியுள்ளார். இந்த முரண்களுக்கு விடை காண்பது கடினம்.
இன்ப துன்பம், ஆக்கம், இழப்பு, பிறப்பு இறப்பு ஆகிய அனைத்திற்கும் காரணமாக அமைந்த ஊழின் தலைமையை வள்ளுவர் ஏற்றாலும் ஊழ்வினையின் ஆற்றலை மறுக்கும் கருத்துக்களையும் பல அதிகாரங்களுள் கூறியுள்ளார்; இத்தகைய ஆக்கங்களுக்கும் கேடுகளுக்கும் ஊழ்தான் காரணம் என வள்ளுவர் சொல்லமாட்டார்.

'நன்மை செய்தவன் நற்பேறு பெற வேண்டும். தீமை செய்தவன் வீழ வேண்டும்' என்பது அற வழிப்பட்ட சிந்தனையாகும். இப்படிப்பட்ட நம்பிக்கைகள் மனித வளர்ச்சிக்குத் தேவை என்பது, காலங்காலமாக உணரப்பட்டும், உணர்த்தப்பட்டும் வந்துள்ளன.
அறக் குணங்களுக்கும் செல்வச் செழிப்புக்கும் தொடர்பு உண்டா, அது எப்படிப்பட்ட தொடர்பு, நிறுவப்படவேண்டிய அத்தொடர்பு ஏன் துண்டாகிக் கிடக்கின்றது என்று ஆராயப்படவேண்டும் என்பது இக்குறளுக்கான ஒரு விளக்கம்.

பரிதி 'இந்த முரண் நிலை கணப் பொழுதில் மறைந்துவிடும்' என்பார்.
தெ பொ மீனாட்சி சுந்தரனார் 'இக்காட்சி வெறும் காட்சிதான்; அதன் அடி வேரில் வேறுபட்ட ஒன்று உள்ளது. அந்தச் செல்வத்தின் உள்ளே அக நிம்மதி இருக்காது; வீழ்ந்தாலும் அதன் உள்ளே துன்பம் இருக்காது. காலிங்கரின் இந்த விளக்கம் வள்ளுவரின் மனத்துக்கு அருகில் வருகின்றது' என்று சொல்லி

அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (குறள் 170)

பொறாமையால் வளமை வருவதில்லை. பொறாமையில்லாதவர்கள் நன்மையை அடையாமல் போவதில்லை) என்ற பாடலை மேற்கோள் காட்டி அரண் செய்கிறார்.
பிறர் செல்வம் முதலிய சிறப்புக்களைக் கண்டு மனம் பொறாத தீக்குற்றத்தைக் கண்டிப்பதற்காக அமைந்தது அழுக்காறாமை அதிகாரம்.

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் (அறன்வலியுறுத்தல் குறள் எண்: 35)

என்று அறமல்லாதவற்றில் முதலாவதாக அழுக்காற்றை வள்ளுவர் குறித்தார்.

தீய குணங்கள் வேறுபல இருந்தாலும், பொறாமைக் குணத்தை, நல்லவன் உற்ற கேடு-தீயவன் பெற்ற செல்வம் என்ற முரண்பாட்டை விளக்க இங்கு பயன்படுத்திக் கொண்டார்.
ஆராயப்படும் என்று சொல்லப்பட்டதால் இப்பாடலுக்கு முடிவு கூறாமல் விட்டுவிட்டாரா வள்ளுவர்? இல்லை, அது மேலும் ஆராயப்படவேண்டும் என்கிறார் அவர். உலகியல் நமக்குச் சொல்லும் பாடம் அறத்திற்கு எதிரானதாகத் தோன்றும் நிலைமை ஒரு காலகட்டத்தில் முடிந்துபோகும் ஒன்றல்ல. அது தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். “நினைக்கப்படும்” என்று சொல்லப்பட்டதால் முரண் பற்றிய ஆய்வும் காலத்துக்குத் தகுந்தவாறும், மாறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலைகளுக்கேற்பவும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்கிறார் வள்ளுவர்.

'நினைக்கப்படும்' என்ற சொல் குறிப்பது என்ன?
நினைக்கப்படும் என்ற சொல்லுக்கு மணக்குடவரும் காலிங்கரும் 'விசாரிக்கப்படும்' என்று பொருள் தந்தனர். பரிதியார், 'நினைக்க', 'படும்' என இரு சொற்களாகப் பிரித்து இமைப்பொழுதிற் கெடுமென பொருள் கொண்டார். இது ஒரு தற்காலிக காட்சிதான் நிரந்தரமல்ல; கணப் பொழுதில் மறைந்துவிடும் என்கிறார். இது ஏற்கத்தக்க கருத்துத்தான். ஆனால் 'நினைக்கப்படும்' என்பது வைக்கப்படும் (குறள் 50 தெய்வத்துள் வைக்கப்படும்), அஞ்சப்படும் (குறள் 824 வஞ்சரை அஞ்சபடும்) உணரப்படும் (குறள் 1096 ஒல்லை உணரப்படும்) எனச் சொன்னபடி ஒரு சொல்லாகவே இருக்கவேண்டும் என்பதால் பரிதியார் உரை பொருத்தமற்றது என்பார் இரா. சாரங்கபாணி. பரிமேலழகர் 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின்' 'நினைக்கப்படும்' என்று விளக்குவார்.

சமயம் சார்ந்த இவ்வுரை ஏற்புடையதல்ல என்று நாத்திகச் சாயல் படிந்த தற்கால அறிஞர்கள் சொல்கின்றனர்.

நல்லவர் கேடுறுவதற்கும் அவ்வியர் ஆக்கம் பெறுவதற்கும் மாந்தர் வாழ்க்கை எல்லைக்கு அப்பாற்பட்ட வெளி ஆற்றல்கள் எவையும் காரணமல்ல. சமுதாயத்தில் இருக்கும் சில தன்னல மனிதர்களும், அவர்கள் உருவாக்கிய முறையற்ற சமுதாய அமைப்பும், நெறியற்ற பொருளியல் நிறுவனங்களும், அவற்றை நடைமுறைப்படுத்துகிற கோல் கோடிய அரசுகளும், அவற்றைப் பற்றிக் கொண்ட கோணல் விதிகளும், இவற்றின் கலப்புத் தொடர்பால் விளைந்த பல சீர்கேடுகளும் அச்சீர்கேடுகளை முறையோடு அணுகி அறிவுடன் தீர்க்கப்படாததும், சமயவாதிகள் விதி, பழவினை என்று தந்த பொய் விளக்கங்களும் அடிப்படைக் காரணங்களாயின என்பது திருவள்ளுவத்தால் பெறப்படுகிறது' என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

தண்டபாணி தேசிகர்: 'செவ்வியான் முயற்சியின்றிச் சோம்பி இருத்தலாலும் வறுமை எய்தலாமே' என்றும், அழுக்காறுடையான் முயற்சியன் ஆதலால், செல்வம் எய்தியிருக்கலாம் என்றும் சிந்திக்கலாம் என்று கூறுகிறார்.

தமிழண்ணல்: "தீமை தீமைதான் பயக்குமென்பதில் ஐயமில்லை. இந்த முரணுக்கு வேறு காரணங்கள் உளவோ என ஆராய வேண்டும். நினைக்கப்படும் என்பதால், வேறு நல்வினைகள் உளவோ என்று நினைத்துப் பார்க்கப்படும் என்பதே கருத்து" என்று கூறுகிறார். குன்றக்குடி அடிகளார்: 'அரசின் முறை பிறழ்வாலும் இம்மாறுபாடுகள் நிகழலாம் என்பது கருத்து' என்று கூறுகின்றார்.

வ செ குழந்தைசாமியின் திறனாய்வில் சொல்லப்படும் வள்ளுவர் அணுகுமுறை பற்றிய கருத்தும் நோக்கத்தக்கது: 'வள்ளுவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்; பழைய வினைகளின் பலன்கள்,. முற்பிறவி, இப்பிறவி என உயிர் பல பிறவிகள் எடுக்குந்தன்மை உடையது என்பவற்றை நம்பியவர்; எனவே இப்பொழுது நல்லவனாயிருப்பவன் நலிவானாயின் அவன் சென்ற பிறவியில் தீவினைகள் செய்திருப்பான் என்றும் இன்று அவற்றின் பயனை அனுபவிக்கிறான் என்றும் முற்பிறவியில் நன்மை செய்தவன் இந்தப் பிறவியில் தீயனாக இருப்பினும் முற்பிறவியின் வினைப்பயனாக இன்பமாக வாழ்கிறான் என்றும் கூறியிருக்கலாம் என்று சொல்கிறார்..
ஆனால் வள்ளுவர் அதைச் செய்யவில்லை. 'நினைக்கப்படும்' அதாவது ஆராயப்பட வேண்டியது என்கிறார். கடவுள், விதி, பல பிறவிகள், முற்பிறவியில் செய்த வினையின் பயன்கள், சொர்க்கம், நரகம் ஆகிய அனைத்தின் அடிப்படையிலும் விளக்க முடியாத சில கேள்விகள் இருக்கின்றன. அவற்றிற்கு விடை காண நமது இன்றைய கல்வியறிவு, மெய்யறிவு போதாது. நாம் இன்னும் ஆராயவேண்டும் என்கிறார். வள்ளுவர் அணுகுமுறையைத் தெளிவு படுத்துவதற்கு இதைவிட ஏற்ற ஒரு குறளைக் காண்பதரிது.'
இவ்வாறாக, 'நினைக்கப்படும்' என்பதற்கு, 'அறக்கோட்பாட்டுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் சமுதாய முரண்களுக்கு பழவினை நினைவு' என்றும், 'நினைத்துப் பார்த்தால் முயற்சி முதலிய பிற பண்புகளால் கெட்டவனது ஆக்கமும் முயற்சியின்மையால் நல்லவனது கேடும் வந்திருக்கலாமே' என்றும், 'வேறு காரணங்கள் உண்டா என்று ஆராயப்பட வேண்டியது' என்றும், 'தீர எண்ணப்படும்' என்றும், 'இவை சிந்திக்க வேண்டிய நிகழ்வுகள்' என்றும் பலவாறு விளக்கங்கள் கிடைக்கின்றன.




__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard