Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 05. சார்தரா சார்தரு நோய்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
05. சார்தரா சார்தரு நோய்
Permalink  
 


 5. சார்தரா சார்தரு நோய்


சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய் (திருக்குறள், 359)

எல்லாப் பொருள்கட்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, பற்றுக் கெடுமாறு ஒழுகினால் சார்வதற்கு¡¢ய துன்பங்கள் திரும்பவும் வந்து சேரமாட்டா.

“சார்பு” என்றச் சொல்லைச் சார்ந்து இக்குறளைப் புனைந்திருக்கிறார் வள்ளுவர்.
'சார்பு' தொழிலாகு பெயர். சாரப்படும் பொருளைச் சார்பு என்றார்.சார்பு இரண்டனுள், முன்னது வீட்டிற்கேதுவாகிய நற்சார்பும், பின்னது பிறப்பிற்கேதுவாகிய தீச்சார்புமாம்.

முதற்சீரான “சார்புணர்ந்து” என்ற சொல்லை இருவிதமாகப் பொருள்கொள்ளமுடியும். “துறவறம் மேற்கொண்டவர்கள் (பொதுவாக எல்லோருமே) சார்ந்திருக்க வேண்டியதான மெய்ப்பொருளை அறிந்து” என்பது பொதுவாக அனைத்து உரையாசிரியர்கள் கொண்டிருக்கும் பொருள்.

மற்ற இடங்களில் சார்பு என்ற சொல், பற்றினைக் குறிப்பதால், பற்றினைப் பற்றியுணர்ந்து என்ற அளவிலும் பொருள் செய்யலாம். அதாவது “பற்றென்பது மெய்ப்பொருளுணதற்கு ஒவ்வாதென்றுணர்ந்து” என்றும் கொள்ளலாம். பற்றிக்கொள்ளவேண்டியதான மெய்ப்பொருளை உணர்ந்து, பற்றென்பது இல்லாமல் கெடுமாறு பழகி, அதன் வழி நடந்திட, பின்னும் கெடும்படியாக எவ்விதப்பற்றினையும் தந்திடா

முதலில் சார்பு என்றது இறைவனை என்க. எல்லாப் பொருளும் தன்னைச் சார்வதற்கு இடனாய் நிற்பது என்னும் ஏதுவான் வந்தது. சார்பு கெட ஒழுகின் - பற்று அற ஒழுகுவானாகில், மற்றுச் சார் தரா - பின் சாரமாட்டா, சார் தரு நோய் - தன்னைச் செய்தவனைச் சார்ந்து துன்புறுத்துவதற்கு காலம் ஓர்ந்து நிற்கும் வினைத் துன்பங்கள்.
மணக்குடவர் உரை:
தன்னைச் சார்வனவற்றையறிந்து அவற்றின் சார்வுகெட ஒழுகுவானாயின் அவ்வொழுக்கத்தினையழித்துச் சார்தலைச் செய்யா: சாரக்கடவனவாய துன்பங்கள். சார்பு கெட ஒழுகல் - காமம், வெகுளி, மயக்கமின்றி மெய்யுணர்ச்சியான் ஒழுகுதல். இஃது உண்மையைக் கண்டு அக்காட்சியைத் தப்பாமல் முடிய நிற்பனாயின் சாரக்கடவதாய் நிற்கின்ற வினை சாராதே விட்டுப் போமென்றது.

பரிமேலழகர் உரை:

சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் - ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற்றுப் போக ஒழுகவல்லனாயின்; சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா - அவனை முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா. (ஆகு பெயரால் சாரும் இடத்தையும் சார்வனவற்றையும் 'சார்பு' என்றார். 'ஈண்டு'ஒழுக்கம் என்றது யோகநெறி யொழுகுதலை. அஃது இயமம், நியமம், இருப்பு, உயிர் நிலை, மன ஒடுக்கம், தாரணை, தியானம், சமாதி என எண்வகைப்படும். பிறப்பு தொடக்கமிலியாய் வருதலின் உயிரால் ஈட்டப்பட்ட அளவில்லா வினைகளுள் இறந்தவுடம்புகளாலும், பிறந்தவுடம்பாலும் நுகர்ந்தன போக இனிமேல் நுகருமாறு எஞ்சிநின்றனவாம் . அவை ஒளியின் முன் இருள்போல போக ஒழுக்கத்தினாலும் இறைவன் திருவருளாலும் கெடுதலால் , 'மற்றழித்துச்சார்தரா' என்றார் தீவினையொடு கலந்ததினால் நல்வினைப்பயனும் நோயெனப்பட்டது. பிறப்பு அறும்போதே அதனொடு சேர்ந்த பழந்துன்பங்களுங் கெடுதல் இதனாற் கூறப்பட்டது.
எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமாக உள்ள மெய்ப்பொருளை உணர்ந்து உலக ஆசை முற்றி லும் நீங்கும்படி _ஒருவன் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்துகொண்டால் அவனை அடைய இருந்த துன்பங்கள் அவனுடைய உணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் அவனை அடையமாட்டா.

பா¢மேலழகர் பதஞ்சலி முனிவா¢ன் அட்டாங்க யோக சூத்திரத்தின் எட்டு கொள்கைகளையும் இங்கே குறிப்பிட்டு அவற்றைபின்பற்றி ஒழுகினால் சார்புகெட வாழ இயலும் என்கிறார். அவற்றில் முதல் இரண்டு படிகளிலும் சொல்லப்பட்டிருக்கும் கொள்கைகளைப் பின்பற்றினாலே ஒரு மனிதன் சார்பு கெட வாழ முடியும். யமம் ஐந்து கொள்கைகளையும் நியமம் ஐந்து கொள்கைகளையும் சொல்கின்றன.

அகிம்சா சத்யா அஸ்தேயா பிரம்மசா¢யா அபா¢கிரகா யமா
சந்தோசா ஸ்வாச்சா தபா ஸ்வாத்யாய ஈஷ்வர பிரணிதானானி நியமா (பதஞ்சலி யோகசூத்திரம்)

திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் இயற்றிய மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றாம் திருக்களிற்றுப்படியாரில், இக்குறளை மேற்கோளாகக்கொண்டே ஒரு பாடல் வருகிறது

சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் என்றமையால்
சார்புணர்தல் தானே தியானமுமாம் – சார்பு
கெடஒழுகின் நல்ல சமாதியுமாம் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று”

என்றென்றும் உயிர்களுக்கு உண்மையான பற்றுக்கோடாகிய புணை இறைவனின் திருவடிகளே என்பதையுண்ர்ந்து , அன்றாட வாழ்க்கையில் நாம் உறுதி என்று சார்ந்து இருக்கின்ற எவையும் நமக்கு ஆதரவு அல்ல என்பதையும் உணர்ந்து உலகியல் சார்புகளை விட்டு ஒழிக்கவேண்டும்.உண்மைச் சார்பை உணர்தல் தியானம் ஆகும். உலகியல் சார்பு விட்டு அகலத் தன் முனைப்பு அற்றுப் போனால் அதுவே உய்ரந்த சமாதி நிலையுமாகும். இந்நிலை எய்தியவர்களுக்கு இருவினைகளினால் வரும் துன்பங்கள் வருவதில்லை.

ஆ" என்றால் இறைவனை குறிக்கும். "சாரம்" என்பது "சார்ந்திருத்தலை" குறிக்கும். இறைவனை சார்ந்திருத்தல் என்பது, இறைவனின் மன எண்ணப்படி, இறைவனாகவே வாழுகிற ஒரு முறை. எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்கும் என்று தேடி கண்டுபிடித்து, அதன் படி வாழ்வதே "ஆசார முறை" ஆகும்.

சேக்கிழார் பெருமான் பொ¢ய புராணத்திலே மெய்ப்பொருள் நாயனாரைப் பற்றிச் சொல்கிறார்.

மங்கையைப் பாக மாக வுடையவர் மன்னுங் கோயில்
எங்கணும் பூசை நீடி யேழிசைப் பாட லாடல்
பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார்,
தங்கணா யகனுக் கன்பர் தாளலாற் சார்பொன்றில்லார்,

உமாதேவியாரை ஒருபாகத்தேயுடைய
சிவபெருமான் வீற்றிருக்கும் கோவில்கள் எங்கெங்கும்
பூசைகள் வழுவாது நீடி நடைபெற்று வரும்படியாகவும்,
ஏழிசைப்பாடலும் ஆடலும் பொங்கிய சிறப்புக்களிலே மிகவும்
பொருந்தி நிகழும்படியாகவும், வழுவாது செய்து வழிபட்டு
வாழ்வாராகியும், தங்கள் நாயகரன்பர்களது திருவடிகளையே யன்றி
வேறு சார்பில்லாதவராகியும், இறைவனது சார்பிலே வழிவழி வந்த இவர்,
இவ்வுலகிலே வெளிப்படக் குலவும் சார்பாக அன்பர் தாள்களையே
பற்றி ஒழுகினார் எனவும், அந்தச் சார்பினைத் தவிர வேறு சார்பு
ஒன்றினையுஞ் சார்பாகக் கருதுவாரல்லர் எனவும் கூறியபடியாம்.
அன்பர் தாள்களைத் தம்மினுந் தமக்கினிய சார்பாகக்கொண்டு
வாழ்பவர் என்க. “சார்புணர்ந்து சார்புகெட வொழுகின் மற்றழித்துச்,
சார்தரா சார்தரு நோய்“ எனத் திருவள்ளுவர்
மெய்யுணர்தலுட் கூறிய உண்மையினையே மெய்ப்பொருளாக
அவர் கடைப்பிடித்து ஒழுகினார் என்ற பொருத்தமுங் காண்க.

திருக்குறள் குமரேச வெண்பா

சண்டேசர் தாளெறிந்தும் சார் தருநோய் சாராமல்
கொண்டார்சீர் என்னே குமரேசா - உண்டான
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார் தரு நோய்.

குமரேசா, சண்டேசர் தன் தந்தையின் காலை வாளால் எறிந்து துண்டித்தும் அத்தீவினை நோய் அவரைச் சாரவில்லை எனின், அவர் சார்புணர்ந்து சர்ர்பு கெட ஒழுகினமையே காரணம் .

சண்டிகேசுவரர் கதை: சோழ்நாட்டில் திருச்சேய்ஞலூர் - எச்ச தத்தன், பவித்திரை - விசார சருமன்
(சண்டியர் என்ற சொல் உருவானது)

எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமாக உள்ள மெய்ப்பொருளை உணர்ந்து பற்றுக்கள் நீங்கும்படி ஒருவன் நடந்து கொண்டால் பின் அவனுக்குண்டான துன்பங்கள் அவனுடைய உணர்வினை அழித்துப் அவனை அடையமாட்டா.

எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமாக உள்ள மெய்ப்பொருள் இறைவனைத் தவிர வேறு எதுவாகவும் இருக்கமுடியாது. இறைவனே நாம் சார்ந்திருக்கக் கூடிய ஒரே ஒரு பற்றுக் கோடு என்ற உணர்வு வந்தவுடன் மற்றச் சார்வுகள் உள்ள பற்றுக்கோடுகள் நீங்கவேண்டும். அவை விலக விலக அவனைத் துன்பங்கள் வந்து சாரா.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு (350)
உலகப் பொருள்களுக்குச் சார்பாக உள்ள இறைஇயக்கம் உணரப்படவேண்டும். அந்த 'மெய்ப்பொருள்' கல்வி, கேள்வி, பட்டறிவு இவற்றின் துணையால் பகுத்தறிந்து அறியப்படும். உள்ளம் ஓர்த்து (பலவகையானும் ஆராய்ந்து) அந்த 'உள்ளதை'க் காண முயற்சிக்க வேண்டும். பிறவி வாழ்க்கை பற்றிய (ஐயங்களால் விளைந்த) அறியாமை நீங்கியபின், எங்கும் நிறைந்த இறைஒளி வீச்சில் 'சிறப்பென்னும் செம்பொருள்' உணரப்படும். அதன்பின் யான் எனது என்னும் சார்புகளை நீக்கி ஒழுகினால், வாழ்க்கையைக் கெடுக்குமாறான துன்பங்கள் சாராமல் நீங்கி விடும்.
நாலடியார்

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
நிலை கலக்கி கீழிடுவானும் - நிலையினும்
மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்"

என்று நாலடியார் கூறுகிறது. இதன் பொருள்:
ஒருவன் தன்னை சிறந்த நிலையில் வைப்பதற்கும், தன்னைச் சிறந்த நிலையினின்று கலங்கச் செய்து.தாழ்ந்த நிலையில் வைப்பதற்கும், மேன்மேலும் உயரச்செய்து நிலைபெறச் செய்வதற்கும் தானே காரணமாவான். நாம் யாவா¢னும் சிறந்து விளங்குவதற்குக் காரணமாக இருப்பது நம்முடைய முயற்சியே. ஆயினும் , அம்முயற்சி நம்முடைய மனம் நம் வசமாகாதிருக்கும்போது யாதொரு பயனையும் தருவதில்லை.நம்முடைய மனத்தை நாம் காமம், வெகுளி, அகந்தை முதலியவற்றிற்கு அடிமையாக்காது வைத்திருப்போமானால் எல்லா துன்பங்களும் விலகி இறையருளைப் பெறுவதற்கு தத்துவ ஞானம் தக்க சாதனமாகும்.
சார்புகள் ஒவ்வொன்றிலிருந்தும் விடுபட விடுபட அந்தந்தச் சார்புகளினால் ஏற்படும் துன்பங்கள் ஒவ்வொன்றாக விடுபடும்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (துறவு 341)
எந்தெந்தப் பொருளிலிருந்து பற்றினை விடுகிறானோ அந்தந்தப் பொருளால் வரும் துன்பம் இல்லாதவனாம் என்று முன்பு சொன்னது நினைக்கத்தக்கது. மெய்ச்சார்புகள் உணர்ந்து, பொய்ச்சார்புகள் விட்டாரைத் துன்பங்கள் சாரா என்பது செய்தி.

உடலோடு கட்டுண்டு நிற்கும் ஆன்மாக்கள் உடல் போலவே தன்னை உணர்கிறது. ஆனால் உடலை விட்டு இறைவனோடு கூடி இரண்டற நிற்கும் போது தன்னை இறையெனவே உணர்கிறது. இது ஏன்? இதற்கு என்னவோ ஒரு தன்மை என்று கூறுவார்களே, அது என்ன தன்மை?
உயிரின் இந்தத் தன்மைக்குச் சார்ந்ததன் வண்ணமாகும் தன்மை என்று பெயர். மேகத்தில் இருந்து மழைநீர் பொழிகிறது; அது எந்த நிறமும் இல்லாமல் தூய்மையாய் உள்ளது. ஆனால் அந்த நீர் விழும் இடம் செம்மண் ஆக இருந்தால் செம்மண்ணோடு கலந்து செந்நிறம் ஆகி விடுகிறது. கரிசல் மண்ணில் கலந்தால் கருநிறமாகி விடுகிறது. எந்தெந்த இடத்தில் மழைநீர் விழுகிறதோ அந்தந்த இடத்தில் உள்ள பொருளோடு கூடிக் கலந்து அதனதன் நிறத்தையும் தன்மைகளையும் கொண்டு விடுகிறது. அப்படித் தான் உயிரும் எந்தெந்த இடத்தைச் சாருகிறதோ அந்தந்த இடத்தின் வண்ணமாய் மாறிவிடுகிறது. இதைத் தான் சார்ந்ததன் வண்ணமாகும் தன்மை என்று கூறுவது.
ஆகவே உயிருக்குச் சார்பு முக்கியம். சார வேண்டியதில் உயிர் சார வேண்டும். சாரக் கூடாத இடத்தை உயிர் சாராமல் எச்சரிக்கையாக நீங்கி நிற்க வேண்டும்.
பழமொழியும், பன்னிருசார்பு நீக்கக் கோட்பாடு எனும் பௌத்த வழக்காற்றைப் பின்வரும் பாடலில் வெளியிட்டுள்ளது
:
திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வு ஆக
எரியும் சுடர்ஓர் அனைத்தாய்; தெரியுங்கால்
சார்வுஅற ஓடிப் பிறப்பு அறுக்கும்; அஃதேபோல்

நீர்அற நீர்ச்சார்பு அறும்” (பழமொழி நானூறு, 219)

விளக்கு திரியையும் அகலையும் நெய்யையும் பற்றுக் கோடாகக்கொண்டு அழகாக எரியும்; சார்வுகளின்றேல் எரியாது, அனைத்தாய் தெரியுங்கால் - அது போன்று ஆராயுமிடத்து, சார்வு அற - சார்வாக நின்ற மூவகை வினையும் அற்றுப்போக (அவ்வினையறுதலே), பிறப்பு அறுக்கும் - பிறவித் துன்பத்தை நீக்கும், அஃதே போல் நீர் அற நீர்சார்வு அறும் - அதைப் போலவே நீர் அற்றுப்போகவே அந்நீரிற் சார்ந்து வாழும்உயிர்களும் இறந்துபோகும்.
(வி-ம்.) மூவகை வினையாவன ஆகாமிய வினை, சஞ்சிதவினை, பிராரப்த்த வினை என்பன..




__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருக்குறளில் ஒப்புரவறிதல், கொல்லாமை, இன்னா செய்யாமை, கள்ளாமை, பொய்யாமை, கள்ளுண்ணாமை, மெய்யுணர்தல் போன்ற பல அதிகாரங்களில் பௌத்தச் சிந்தனைகளைப் பரக்கக் காணலாம்., பௌத்த வழக்காறுகளுக்கு அடிப்படை பன்னிரு சார்புகளும் அதன் நீக்கமும் ஆகும்.

"பேதைமை சார்வாச் செய்கை யாகும்
செய்கை சார்வா உணர்ச்சி யாகும்
உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்
அருவுரு சார்வா வாயி லாகும்
வாயில் சார்வா ஊறா கும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்
வேட்கை சார்ந்து பற்றா கும்மே
பற்றிற் றோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றஞ் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலை கையாறெனத்
தவலில் துன்பந் தலை வரும் என்ப. "
(மணிமேகலை 30-ஆம் காதை )
1. பேதமை, 2. செய்கை, 3. உணர்வு, 4. அருவுரு, 5. வாயில், 6. ஊறு, 7. நுகர்வு, 8. வேட்கை, 9. பற்று, 10. பவம், 11. தோற்றம், 12. வினைப்பயன்.

இவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வரும் ஒவ்வொன்றையும் தோற்றுவித்து வளர்த்தெடுத்துச் செல்கின்றன. பேதைமையில் தொடங்கி ஒவ்வொன்றாய் வளர்ந்து இறுதியில் அவை பிறப்பை உருவாக்குகின்றன. பேதைமை எனும் மூலச் சிந்தனை இயல்பு அழிந்தால் - ஒழிந்தால் வராமலிருந்தால் பிறப்பு என்பதே நேராது - தோன்றாது. இக் கருத்தை
“பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு”
என்னும் குறள் வலியுறுத்துகிறது.

பட்டினத்தார் பாடல் ஒன்று குறிப்பிடத் தக்கது.

உடை கோவணம் உண்டு, உறங்கப் புறந்திண்ணை உண்டு,
உணவு இங்கே அடைக்காய் இலை உண்டு,
அருந்தத் தண்ணீர் உண்டு,
அருந்துணைக்கே விடையேறும் ஈசன் திருநாமம் உண்டு,
இந்த மேதினியில் வடகோடு உயர்ந்தென்ன, தென் கோடு சாய்ந்தென்ன
வான்பிறைக்கே...வீடு நமக்கு திருவாலங்காடு, விமலர் தந்த ஓடு நமக்குண்டு, வற்றாத பாத்திரம்
ஒங்குசெல்வ நாடு நமக்குண்டு , கேட்டதெல்லாம் தர,
ஈடு நமக்குச் சொலவே இங்கொருவா¢லையே!

நமக்கு இணையாக இங்கு யாரும் இல்லை என்கிறார். அதுதான் சார்பு இல்லாத நிலை.

புதிய சிந்தனைகளை உலகம் எதிர் நோக்குகிறது. இராமாயணம், பாரதம் இவை சமய பிரச்சார நூல்கள் ஆகிவிட்டன. இன்று சமயம் மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது; இந்த உலக நடப்புகளை மறக்கச் செய்கிறது. மன ஆறுதல் தருகிறது; அதற்கு இவை உதவுகின்றன. காலம் காலமாக அவற்றை எழுதிவருவதால் புதிய பார்வை காண முடியவில்லை. இலக்கியம், சமயச்சார்பு பெற்ற பிறகுதான் அது பரவ ஆரம்பித்தது. இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் சமண காவியம் என்பர், மணிமேகலை புத்த காவியம்; சமயச் சார்பு இல்லாமல் எந்த நூலும் தமிழில் செல்வாக்குப் பெற்றதில்லை.

இயற்கை என்றால் இந்தப் பூமி மட்டும்அல்ல. இந்த அண்டசராசரமெல்லாம் இயற்கைதான். அதைக் கடந்து எங்கே செல்ல முடியும் ? இயற்கையை அவர்கள் புறப் பொருள்களின் மூலமாக ஆராய்ந்து சூக்கும நிலைகளைக் கண்டு பிடிக்க எத்தனிக்கிறார்கள். ஓரளவு தெளிவடைகிறார்கள். இன்னும் அதி சூக்குமம், அதி அதி சூக்கும நிலைகளெல்லாம் இருக்கின்றன. அதை நுண்ணோக்கிகளைக் கொண்டு காண்டு பிடிக்க இயலாது. நுண்ணோக்கு கொண்டுதான் காண முடியும். அதற்குப் புறப் பொருள்களை ஆராய்வதால் பயனில்லை. அது உள்முகமாக நடை பெற வேண்டிய முயற்சி. ஞானத்தால்தான் நுண்ணோக்கு அமையும்.
மேலும் இங்கே எதையும் சாராமல் யாரும் வாழ முடியாது. எதையாவது ஒன்றைச் சார்ந்துதான் உயிர் வாழ முடியும். நீங்கள் அனுபவிக்கும் எல்லா இன்ப துன்பங்களுக்கும் நீங்கள் மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது. உதாரணமாக பருவ மழை பெய்வதில்லை. இதனால் விவசாயம் பாதிப்பு அடைகிறது. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை வாசி உயர்கிறது. பூமி வெப்பமடைகிறது. இதனால் உலகமே அழியும் அபாயம் கூட இருக்கிறது என்கிறார்கள். இதற்கு யார் காரணம் ? இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. காடுகள் அழிந்து நகரங்களாக, மனிதன் வாழும் இடமாக மாறி விட்டதாலும், மரங்கள் கோடிக்கணக்கில் வெட்டப் பட்டதாலும் மழை பெய்வதில்லை என்கிறார்கள். மேலும் வாகனப் பெருக்கம், குளிர் சாதனப் பெட்டிகளில் இருந்து வெளியாகும் வாயு, நிலத்தடி நீர் வற்றிப் போதல் போன்ற பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதற்கெல்லாம் நீங்கள் மட்டுமா காரணம் ? நாம் சார்ந்துள்ள இந்த மொத்த சமுதாய அமைப்புமே காரணமாக இருக்கிறது.. வேறு யாரோ செய்யும் தவறுக்கு நீங்கள் துன்பமடையக் கூடும். ஏனெனில் நாம் சமுதாயம் சார்ந்த சார்பு வாழ்க்கை வாழ்கிறோம். அது மட்டுமல்ல, உலகில் காணும் அனைத்துமே ஒன்றை ஒன்று ஏதோ ஒரு விதத்தில் சார்ந்துதான் இருக்கின்றன. இந்தச் சார்பு நிலையின் விளைவைத்தான் மாயை என்கிறார்கள்.
சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய விஞ்ஞானி ஐன்ஸ்டின் Theory Of Relativity என்ற தனது ஆராய்ச்சி முடிவில் சார்பு நிலை பற்றி மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார். இந்த பிரபஞ்சமெங்கும் காணும் யாவும் ஒன்றை ஒன்று சார்ந்த, தொடர்புடையவைகளாகவே இருக்கின்றன என்கிறார். அவர் சொல்கிறார் '' ஒருவன் பூமியைச் சார்ந்து இருந்தபடி ஒளி வேகத்தில் பூமியை ஐந்து வருடங்கள் சுற்றி வருகிறான் என்றால், அவனுக்கும் பூமிக்கும் ஐந்து வயதுதான் அதிகரித்திருக்கும். அதே மனிதன் பூமியை விட்டு விலகி அதே ஒளி வேகத்தில் அதே கால அளவு விண்வெளியில் சுற்றி விட்டு வந்தால் என்ன ஆகும் தெரியுமா ? பூமிக்குப் பல இலட்சம் வயது அதிகரித்திருக்கும். அப்பொழுது மனித இனமே மாறி, புதிய பரிணாம நிலையைஅடைந்திருந்தாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை'' என்கிறார்.

மேலும் ஒரு மானிடன் பேருந்தின் உள் ஓடிக் கொண்டிருக்கும் போது அதை பேருந்திற்கு வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஓடுபவர் பேருந்தின் வேகத்திலேயே ஓடுவதாய் தோன்றும். (உதாரணம் ஒரு மணி நேரத்துக்கு 100 கீ.மீ.) ஆனால் பேருந்தின் உள் அமர்ந்திருந்து பார்ப்பவர்களுக்கு அந்த மானிடர் ஒரு மணி நேரத்துக்கு 20 கீ.மீ. வேகத்திலேயே ஓடுவதாய் தெரியும். அதன் காரணம் சிறப்புச் சார்புக் கோட்பாடு ஆகும். பேருந்தின் உள் இருந்து பார்ப்பவர் ஏறக்குறைய ஓடும் மானிடரின் வேகத்திலேயே பேருந்தில் செல்வதால் அவருக்கு மானிடரின் ஓட்ட வேகம் குறைவாகவே தெரியும்.

ஆனால் பேருந்திற்கு வெளியே இருப்பவர் நின்று கொண்டிருப்பதால் அவருக்கு அம்மானிடரின் ஓட்ட வேகம் அதிகமாகத் தெரியும். தற்போது பேருந்தில் வெளியே இருந்து பார்த்தவர் அடுத்த பேருந்தில் ஏறிச் செல்கிறார் எனில் அவரின் எடை கூடும். பேருந்து போகும் திசையில் அவர் சுருங்குவார்.
அவரின் கடிகாரம் சற்று மெதுவாக ஓடும். ஆனால் இவற்றின் மாறுபாடுகளைக் கணிப்பது மிகவும் கடினமாகும். அவரின் கைக்கடிகாரத்தின் நேர வித்யாசம் ஒரு நொடியில் பல கோடி கோடி மடங்குகள் குறைவாக இருப்பதால் அதை மானிடர் எளிதாக உணர முடியாது என்கிறார். இதைத்தான் நம் முன்னோர்கள் ஞானத்தால் உணர்ந்து அதை மாயை என்றார்கள்.
எளிதில் புரிந்து கொள்ள முடியாததாக இருப்பதாலும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு யூத மதத்தவர் என்பதாலும் அவர் தந்த விளக்கங்களுக்குக் கடும் எதிர்ப்புகளும் எழுந்தன. சார்பு நிலையானது நமது அறிவை மயக்கி பொருட்களின் இருப்புக்கு ஏற்ற விதத்தில் மாறுபடுகிறது. நாம் ஒரு பொருளாகவோ, பொருளோடோ அல்லது பொருளுக்கு அப்பாலோ இருந்து கொண்டு நிலைமைத் தன்மையற்ற இடம், காலம், காரணகாரியங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, ஏற்றதாழ்வு, போன்ற அனைத்தையும் விழுங்கியபடி சுழன்றடிக்கும் இந்தக் காலச் சக்கரம் என்பதே இந்த சார்பு நிலையால் நாம் உருவாக்கிக் கொள்ளும் மாயத் தோற்றமே.
பூமி சூரியனைச் சார்ந்து அதைச் சுற்றி வருகிறது. சந்திரன் பூமியையும், சூரியனையும் சார்ந்து சுற்றி வருகிறது. இதனடிப்படையில்தான் நாம் நேரம், நாட்கள் எல்லாம் கணக்கிடுகிறோம். நம் கண்ணுக்குச் சூரியன் புலப்படும் அதே வேளையில் வேறொரு இடத்தில் இருப்பவனுக்கு அது புலப்படுவதில்லை. இந்த பூமியைக் கடந்து நாம் விண்வெளிக்குச் சென்று விட்டால் சூரியன் உதிப்பதுமில்லை, மறைவதுமில்லை. எனவே அங்கு நேரத்தையோ, இடத்தையோ ஒன்றையும் கணிக்க முடியாது. இதுதான் சார்பு நிலையின் மாய விளையாட்டு. இந்தப் பூமியைப் பொருத்த வரை சார்பு நிலை இல்லாத ஒன்று இல்லவே இல்லை. எனவே இவையனைத்தும் மாயை என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். அப்படியானால் சார்பு நிலையே இல்லாத உண்மையான, பூரணமான ஒன்றுமில்லையா ? இதுதான் தேடல். இதைத்தான் கீதையில்
'' எல்லாம் எங்குச் சென்று ஒடுங்குகின்றவோ, பிறகு எங்கிருந்து விரிவடைகின்றனவோ அதுவே உண்மை நிலை. அதுவே பரமாத்மா'' என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்..
அங்கு எந்தச் சார்பு நிலையும் கிடையாது. விஞ்ஞான ரீதியாகச் சொன்னால் இந்த அணுக்களெல்லாம் எங்கிருந்து வந்து இந்தப் பிரபஞ்சமாக விரிந்து நிற்கிறதோ, இனி இந்த உலகம் அழியும் பொழுது இந்த அணுக்களும், பொருட்களும் எங்குச் சென்று ஒடுங்கி நிற்குமோ, அதுவே பரம்பொருள். அதுவே பரமாத்மா. அதுவே சார்பற்ற பூரணமான உண்மை நிலை. அங்கு மாயை இல்லை. அதை அடைவதுதான் முக்தி நிலை, வீடுபேறு எல்லாம்.எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கும் செம்பொருளாகிய இறைவனை உணர்ந்து, உள்ளத்தால் இரண்டறக் கலந்து, இவ்வுலகப் பற்றுகள் யாவற்றையும் துறந்து வாழ்வானாகில் அவனுடைய பிறவிக்குக் காரணமாகும் வினைப்பயன்கள் அனைத்தும் அழிந்துவிடும்.
இப்பிறவியிலேயே, எல்லாவகைப் பற்றுகளையும் அறவே துறப்பதினால், இப்பிறப்பில் ஏற்படும் வினைப்பயன்கள் அறவே ஒழிகின்றன. மேலும், முற்பிறப்பின் வினைப்பயனால், தான் அனுபவிக்கவேண்டியவற்றை இப்பிறப்பிலேயே ஏற்று அதன் பற்றையும் முற்றும் அறுத்துவிடவேண்டும். அதுவே, பற்றுகளை அறுக்கும் வழி. நோய் என்று இங்கே சொல்லப்பட்டது யாதெனில், பிறவி உண்டாகக் காரணமாகிய நல்வினை, தீவினை ஆகிய வினைப்பயன்களை. இவை இரண்டுமே பிறவி என்னும் நோயினைக் கொடுக்குமாதலின் அவ்வாறு கூறினார். இதனையே ‘இருள்சேர் இருவினை’ என்றார். துன்பம் தரும் பிறவி நிலையை அறுத்து விடுபட வேண்டுமெனில், எல்லாவகைப் பற்றுகளையும் அறவே விட்டு, செம்பொருளாகிய இறைவனின் பற்றினைப் பெறவேண்டும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard