Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 04. கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர்.


Guru

Status: Online
Posts: 7329
Date:
04. கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர்.
Permalink  
 


4. கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர்.

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்து கண் ணோடா தவர். (திருக்குறள் 576):

கண்ணோட்டம் என்பது பிறரது துயரம்கண்டு இரங்கும் பண்பையும் பிறர் குற்றத்தை மன்னிக்கும் பெருந்தன்மையையும் குறிப்பதாகும். காணப்பட்டார் மேல் கண் ஓடியவிடத்து இவை உண்டாவதால் கண்ணோட்டம் எனப் பெயர் ஆயிற்று. கொடுங்கோன்மையும், வெருவந்த செய்தலும் நாட்டைக் கெடுத்துக் காடாக்கும்; வெறும் 'சட்டத்தின் ஆட்சி'யாக மட்டும் இல்லாமல் மனிதாபிமான முறையிலும் நாடு ஆளப்படவேண்டும் என்பதை வலியுறுத்த அவ்வதிகாரங்களை அடுத்துக் கண்ணோட்டம் வைக்கப்பட்டது. எனினும் இவ்வதிகாரம் நாடாள்வோர்க்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் பொருந்துவதாகும்.
கண்ணோட்டம் என்பது அன்பும், இரக்கமும் கொண்ட கண்ணின், உயிரோடு பிணைந்த, பண்பைக் குறிக்கும். துன்புற்ற ஒருவரைக் காணும்போது மனம் இளகி அவர்கள் துன்பத்தைக் களைதலையும், குற்றஞ் செய்த ஒருவர்பால் இயல்பாக இரங்கிக் குற்றத்தைப் பொறுத்தலையும் கண்ணோட்டம் எனக் கொள்வர். நிலநடுக்கம், ஆழிப்பேரலை, மழைவெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் எந்த நாட்டிற்கு ஏற்படினும் அவை உண்டாக்கும் துயரங்களைப் பார்த்து உலக நாடுகள் உதவுவதற்கு ஓடோடி வருவது கண்ணோட்டத்தினால்தான். சாலையோர விபத்தில் துடிக்கும் உயிர்களைக் காணும்போது பொறுக்காத மனமும், உதவத் துடிக்கும் கைகளும் இயங்குவது இரக்கம் என்கிற கண்ணோட்டம் காரணமாகத்தான்.
இந்தப் பண்பு தனி மனிதருக்கும் தேவை. சமுதாய அளவிலும் தேவையான ஒன்றாகும். சமுதாய வாழ்வில் நாடாள்வோன் முதல் அனைவரும் கண்ணின் வழியாக அன்பைச் செலுத்தி வாழவேண்டும். மக்கள் குற்றத்தின் நீங்கியும் குற்றத்தை நீக்கியும் வாழவேண்டும் என்னும் முயற்சியுடையோராகவே இருப்பர். முயற்சி எவ்வளவினதாயினும் குற்றம் ஓரொரு வேளை நிகழ்தல் கூடும். அவ்வாறு நேர்ந்துவிட்டால் மன்னிக்கத்தக்கவற்றை மன்னிக்க வேண்டும் பண்பு அனைவர்க்கும் வேண்டும் என்பதை வற்புறுத்துவதே கண்ணோட்டமாகும்.
பரிப்பெருமாள் என்ற உரையாசிரியர் 'இது உலகத்தார் பலர் ஆதலால் குற்றம் செய்வார் மிகுந்திருப்பர். அதற்கெல்லாம் தண்டம் செய்யின் உலகம் என்பது ஒன்று இல்லையாம். அதற்காகப் பொறுக்க வேண்டுவன பொறுக்க வேண்டும்' (குறள் 571 உரை) என்று மன்னிக்கும் குணத்தைக் கண்ணோட்டம் குறிப்பதாகச் சொல்வார்.
கண்ணோட்டம் என்பதற்குப் 'பழகினவரைக் கண்டால் அவர் சொல்வதை மறுக்க முடியாமை' என்று பல உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர். பழகியவர் பற்றியும் அவர் சொல் மறுக்கமுடியாமை பற்றியும் இவ்வதிகாரப் பாடல்களில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. பெயக்கண்டு ... (குறள் 580) எனத் தொடங்கும் பாடற்பொருளின் அடிப்படையில் உரையாளர்கள் அவ்விதம் கூறினர் போலும். மற்ற எல்லாப் பாடல்களிலும் இரக்கப்படுதல் என்ற பொருளிலேயே கண்ணோட்டம் என்ற சொல் ஆளப்பட்டது. அதுவே சரியான பொருள்.
கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் காமுற்ற
பெண்ணுக்கு அணிகலம் நாணுடைமை - நண்ணும்
மறுமைக்கு அணிகலம் கல்வியிம் மூன்றும்
குறியுடையார் கண்ணே யுள.

என்ற திரிகடுகப் பாடல் இங்கே நினைவில் கொள்ளற்பாலது.
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்து கண் ணோடா தவர்.
மணக்குடவர் உரை:
சுதைமண்ணோடு கூடச்செய்த மரப்பாவையோடு ஒப்பார்: ஒருவன் கண்ணோடு தங்கண்கலந்தபின்பு கண்ணோட்டத்தைச் செய்யாதவர். இது கண்ணோடாமை மரப்பாவைக்கு ஒக்கும் என்றது.

பரிமேலழகர் உரை:
ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்திவைத்து அஃது ஓடாதவர்; இயங்காநின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர். ('ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது. மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதைமண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய் (1555 முத்தொள்ளாயிரம் ) என்பதனாலும் அறிக.).
வரக்கண்டு நாணாதே வல்லையான் நெஞ்சே!
மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று - இரக்கண்டாய்
வாளுழுவை வெல்கொடியான் வண்புனல்நீர் நாடற்கென்
தோளுழுவம் தோன்றத் தொழுது.

இப்பாடலில் தன் நெஞ்சை நோக்கி ஒரு தலைவி இவ்வாறு உரைக்கிறாள்: பிரிவாற்றாமல் மறுகி உழலுகிற எனது துயரத்தை ஒரு சிறிதும் கருதாமல் வன்கண்ணராய் என் தலைவராகிய மன்னர் வராமல் நிற்கின்றார். மண்ணை ஆள்கின்றவர் கண் மரக்கண்ணோ? நெஞ்சே! அவரை வேண்டி விரைந்து கொண்டு வா! என்று வேண்டுகிறாள்.

இரக்கம் இல்லாத அந்த மன்னனுடைய கண் மரக்கண்ணே என்று இப்பாடல் பழிக்கின்றது. மரத்திலுள்ள கணுக்களையே கண் என்பது மாந்தர் வழக்கு.

பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத்தாம் மற்றொவ்வார் -மின்னுமணி
பூணும் பிறவுறுப்புப் பொன்னே யதுபுனையாக்
காணுங்கண் ஒக்குமோ காண்.

என்ற நன்னெறிப் பாடலில், 'அணிகலன்கள் பூணும் பிறவுறுப்புகள் அது புனையாக் கண்களை ஒக்குமோ? எனக் கேட்கின்றார் சிவப்பிரகாசர். இதனால் செயற்கையணிகளால் அழகுற்று ஒளிரும் பிற உறுப்புகளை விட அவற்றை அணியாத கண்களே பேரழகு வாய்ந்தவை என்பது தெரிகிறது.

கண்கள் பிறவுறுப்புகளைக் காட்டிலும் அழகாகத் தென்பட்டாலும் இயற்கையணியான கண்ணோட்டம் அவற்றிற்கு இல்லையேல் அவை மரத்தின் கணுக்களைப் போன்றவையே என்கிறார் திருவள்ளுவர்.

மனிதன் கண்ணோட்டம் இல்லாதவனாக இருந்தால் அவன் மனிதன் ஆகான். அவனது கண்ணும் கண் ஆகாது, காட்சியும் காட்சி ஆகாது. உருவத்தால் மனிதனைப்போல் தோன்றினாலும் உண்மையில் அவன் ஒரு மரமே.

கண்ணோடு இயைந்து என்றது கண்ணின் இயல்பும், உயர்வும் ஓர்ந்துணர வந்தது. மனிதனுடைய வாழ்வெல்லாம் கண்ணால் நடந்து வருகிறது. அந்த வாழ்க்கை கண்ணியம் உடையதாய்ப் புண்ணியம் அடைவது எதனால்? நண்ணிய கண்ணோட்டத்தினால்தான்.

குருடராயுள்ளவர் கண்ணோட்டம் இலராயின் அது அவர் பார்வையின்மையால் கூடவில்லை என்று பொறுத்துக் கொள்ளலாம். கண்ணிருந்தும் அதனைக் கொள்ளாதிருப்பவர் எண்ணவும் கூடாத ஓர் இழிவினரே ஆவர். ஆறறிவுடையவனாய்ச் சிறந்த மனிதப் பிறப்பில் பிறந்திருந்தாலும் கண்ணோட்டம் இல்லாதவன் ஓரறிவும் இல்லாத இழிந்த மண்ணே ஆவான்.

மண்ணோடு இயைந்த மரத்தனையர்.
கண்ணோட்டம் இல்லாதவரது இழிந்த நிலையை இன்னவாறு உவமை காட்டி உணர்த்தியுள்ளார்.

மண்ணோடு இசையாவழி, கட்டை, குற்றித் தறி என்று கூறப்படுமே அன்றி மரம் எனப்படாது. மரம் எனத் தனியே கூறினும் மண்ணோடு இயைந்தது என்றே அது தெளியப்படும்.

மரம் தரையில் முளைத்துக் கிளர்ந்து வளர்ந்து கிளைகளோடு நின்றாலும், பிற உயிர்களின் துன்பத்தைக் கண்டு இரங்கும் இயல்பு அதற்கு இல்லை.

... சபை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம். (மூதுரை)

அறிவில்லாதவனை மரம் என்று ஔவையார் குறிப்பிட்டார். அருள் இல்லாதவனை மரம் என்று இங்கு அறிகின்றோம்.

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு (குறள் 571)
என்ற பாடலில் கண்ணோட்டம் என்ற பண்பையே பேரழகு எனப் புனைந்து உரைக்கப்படுகிறது. அதை அழகு என்று சொல்ல எண்ணி அழகிய பெண் என்கிறார் வள்ளுவர். பின் பெரும் அழகு எனக் கூட்டிச் சொல்கிறார். அப்படியும் அவர்க்கு நிறைவு உண்டாகவில்லை. கழி பேரழகு எனக் குறிக்கிறார். அழகு என்ற ஒரு சொல்லே இங்கு போதுமானது. ஆனாலும் “உண்டாலம்ம இவ்வுலகம்” என்ற புறநானூற்றுப் பாடலின் அழுத்தமான கருத்துக்கு ஏற்ப கழி, பெரும் என்ற இரண்டு அடைகள் அழகுக்குக் கொடுத்து பாடலைச் செழுமையாக்குகிறார்.

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

புறநானூற்றில், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் கூறுவது:

இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

செங்கோன்மை என்ற அதிகாரத்தில்

ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார் மாட்டும்
தெரிந்து செய்வதே முறை (541)
என்று கண்ணோட்டம் இன்றி நடுநிலையில் இயங்குக என்று அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கண்ணோட்டம் பற்றிய இவ்வதிகாரத்தில்

கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை யுடைத்திவ் வுலகு (578),

என்றும் கூறப்படுகிறது.
இந்தக் குறள்கள் முரண்படுவது போல் தோன்றினாலும் அவை முரண்கள் அல்ல. ஓர்ந்து கண்ணோடாது என்று தொடங்கும் முதற்குறள் செங்கோன்மையிற் நீதித்துறையில் நடுநிலை தவறாதிருக்கக் கூறியது . இங்குக் கூறியது அரசாட்சிக்குக் கேடு வராமல் இருப்பதற்காகவும், கொடுங்கோலனாகாமல் தடுப்பதற்காகவும் ஆகும்.

பார்க்கும் ஆற்றல் உள்ளவர்கள் அனைவருக்கும் உள்ளத்தில் ஈரம் உண்டு; அது கண் வழி கண்ணோட்டமாக வெளிப்படும் என்பதை முழுமையாக நம்புகிறார் வள்ளுவர்.
கண் என்ற ஒன்று ஒருவரிடம் இருந்தால் அவரிடம் கண்ணோட்டம் உறுதியாக உண்டு என்ற பொருளில்

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் (குறள் 577) எனச் சொல்கிறார்.

நாம் எடுத்துக் கொண்ட குறள்
தண்ணளியுள்ளதே கண் என்கின்றது. நல்ல கண்கள் அமைந்திருந்தும் கண் ஓடி உள்ளம் இரங்காதவர் மண்ணோடு மருவிய மரம் போல்வர்.

உயிர்க்கு உரிய இனிய நீர்மை தோய்ந்து வரும் அளவே அந்த மனிதப் பிறப்பு சீர்மை வாய்ந்து சிறந்ததாய் உயர்ந்து வருகிறது. அன்பு அருள் இரக்கம் என்பன எவ்வுயிர்க்கும் எவ்வழியும் இன்பம் சுரந்து வருவன.

உள்ளத்தில் தண்ணளியுடையவன் உலகத்தில் புண்ணியவானாய்ப் பொலிந்து திகழ்கிறான். அகத்திலுள்ள கருணை கண்ணீர் வழியே புறத்தில் வெளிப்பட்டுச் செயல்களை ஆற்றுகிறது.

துயரம் உற்றவர்களை நேரே கண்டும் உள்ளம் இரங்காமல் இருப்பின் நல்ல உயிர் நீர்மை இல்லாதவனாக அவன் எள்ளப் படுகிறான். கண்பார்வை ஓடிப்பாய்ந்த இடத்தில் உற்ற இடர்களை உணர்ந்து உள்ளம் இரங்கி விரைந்து உதவி புரிய விழைவதே கண்ணோட்டமாகக் கனிந்து கதிநலம் அருளுகிறது.

துன்பத்திலிருக்கும் பிராணிகளைக் கண்டபோது இரங்கி அருளுபவன் உயர்ந்த மனிதனாகிறான்.

மணிமேகலையில் கண்ணோட்டம் பற்றி ஒரு செய்தி சொல்லப்படுகிறது.வேள்வியில் பலியிடுவதற்காக வேதியர் கட்டி வைத்திருந்த பசுவை ஒருநாள் ஆபுத்திரன் கண்டான். அதன் நிலைமையை நினைத்து நெஞ்சம் இரங்கினான். யாருக்கும் தெரியாமல் அதனை அவிழ்த்து வெளியே விடுவித்தான். அது தப்பிப் பிழைத்தது. அவனது தண்ணளியை மண்ணவரும், விண்ணவரும் போற்றிப் புகழ்ந்தார்கள்.

பசுவின் அலமரலைப் பார்த்தான் பரிந்து
நிசியில் நெகிழ்த்து விடுத்தான் - கசிவுடைய
கண்ணோட்டம் கண்டார் களித்தார் புகழ்ந்தாரே
விண்ணாட் டவரும் வியந்து.

மலைச்சாரலில் ஒரு மயில் குளிரால் நடுங்கி நின்றது. அதனைப் பேகன் என்னும் வள்ளல் கண்டான். உள்ளம் இரங்கினான். தான் போர்த்திருந்த விலையுயர்ந்த பட்டுச் சால்வையை எடுத்து மயில் மீது போர்த்தினான்.

மயில்அயர்வைக் கண்டு மனமுருகிப் பேகன்
உயர்போர்வை போர்த்தி வந்தான் - இயல்பான
கண்ணோட்டம் உள்ளார் கருணைஉயர் தாயர்போல்
எண்ணோடிக் காப்பர் எதிர்.

எல்ல உயிர்களையும் தன்னுயிர்போல் மனிதன் எண்ணி ஒழுகும் புண்ணிய நீர்மையே கண்ணோட்டம் எனக் காண வந்துள்ளது.




__________________


Guru

Status: Online
Posts: 7329
Date:
Permalink  
 

இரக்கம் மனிதனைத் தெய்வம் ஆக்குகிறது. இரக்கமின்மை அரக்கன் ஆக்கி அதோகதியில் ஆழ்த்துகிறது.

சீவக சிந்தாமணியில் ஒரு காட்சி வருகிறது.

ஏமாங்கத நாட்டிலே இராசமாபுரியில் வசந்தவிழா நடைபெறுகிறது. நகரின் புறத்திருந்த ஒரு பூம்பொழிலில் மக்கள் உல்லாசமாக விருந்து அருந்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு ஒரு நாய் புகுந்தது. அதனால் குழப்பம் விளைந்தது. அங்கிருந்த பார்ப்பனர் அதைத் தடியால் அடித்து விரட்டினர். அந்த நாய் அடிபட்டுச் சாக நேர்ந்தது. அந்நாய்க்கு உரியவன் தன் நாயைக் கொன்ற வேதியரைத் துன்புறுத்தி வேதனை விளைவித்தான்.

சீவகன் அதைக் கண்டு இரங்கினான். விரைந்து புகுந்து சமாதானம் செய்து வைத்து , ஒரு மந்திரத்தை ஓதி அந்த நாய்க்கு உயிர் கொடுத்தான். சீவகனுடைய அருள் நீர்மையை நோக்கி யாவரும் புகழ்ந்தனர்.


நல்வினை ஒன்றும் இலாதவன் நான்மறை
வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே
செல்சுடர் வேல்வல் சீவக சாமிசென்று
அல்லல் அகற்றி அருந்துயர் தீர்த்தான்.

மீண்டவர் ஏகுத லும்விடை அன்னவன்
ஈண்டிய தோழரொடு எய்தினன் ஆகி
மாண்ட எயிற்று எகினம் மறம் இல்லது
காண்டலும் கட்கினி யாங்கலுழ்ந் திட்டான்.

நாயுடம்பு இட்டிவண் நந்திய பேரொளிக்
காய்கதிர் மண்டலம் போன்றொளி கால்வதோர்
சேயுடம்பு எய்துவை, செல்கதி மந்திரம்
நீயுடம் பட்டு நினைமதி என்றான்.

என்றலும் தன்செவி ஓர்த்திரு கண்களும்
சென்றுகு நீரொடு செம்மலை நோக்கி
ஒன்றுபு வால்கு ழைத்து உள்ளுவப்பு எய்தலும்
குன்றனை யான்பதம் கூற வலித்தான். (சீவக சிந்தாமணி)


விவிலியத்தில், கண்ணோட்டம் ஒருவர் வாழ்க்கையில் எப்படிப் பொருந்தியிருக்க வேண்டும் என்ற கருத்தினை ஓர் உவமைக்கதையின் வாயிலாக இயேசு விளக்குகிறார். (லூக்கா 10:25-37)
இயேசு போதித்துக்கொண்டிருக்கும் போது, வழக்கறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், போதகரே, நிலைபேறுடைய வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்.
அதற்கு இயேசு, சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கின்றீர்? என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், , உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்று எழுதியுள்ளது" என்றார்.
இயேசு, சரியாகச் சொன்னீர் அப்படியே செய்வீர் என்றார்.
அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, எனக்கு அடுத்திருப்பவர் யார்? என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு இயேசு மறுமொழியாகக் கூறிய உவமை நல்ல சமாரியன் கதையாகும்.
ஒருவன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டான். அவனுடைய ஆடைகளைக் கள்வர்கள் உரிந்து கொண்டு, அவனுடைய உடைமைகளையும் பறித்துக் கொண்டு அவனை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். தற்செயலாய் அவ்வழியே வந்த சமயக்குரு ஒருவர், குற்றுயிராகக் கிடந்தவனைக் கண்டும் மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே இலேவியன் ஒருவனும் அவ்விடத்துக்கு வந்து குற்றுயிராகக் கிடந்தவனைக் கண்டும் உதவி செய்யாமல் மறுபக்கமாய் விலகிச் சென்றான். இலேவியன் என்பவன் தேவாலயத்தில் ஆசாரியனுக்கு உதவி செய்பவன்.
ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியன்ஒருவன் அருகில் வந்து அவனைக் கண்டபோது அவன் மீது பரிவு கொண்டான். விழுந்துகிடந்தவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்துக் கட்டி, தான் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவனைக் கவனித்துக் கொண்டான். மறுநாள் இரு தெனாரை (நாணயம்) எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக் கொள்ளும் இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றான்.
பரிவு, அன்பு என்பனவேயன்றி ஒருவனது அறிவோ, பதவியோ நிலைபேறுடைய வாழ்வை அளிக்காது என்பது முக்கிய கருத்தாகும். அக்காலத்தில் யூதர் சமாரியரைத் தாழ்ந்த வகுப்பினராக நடத்தினர். இயேசு இங்கு சமாரியனை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியது எல்லோரும் சமன் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறது.

திருக்குறள் குமரேச வெண்பாவில் இக்குறள் சார்ந்து ஒரு பாடல் வருகிறது.

அன்றறைந்தார் மற்றோர் அரதத்தர் கண்ணோடிக்
குன்றாதுஏன் நின்றார் குமரேசா - என்றுமே
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்து கண்ணோடா தவர்.

சோழநாட்டிலே அரதத்தர் கஞ்சனூரில் பிறந்தவர். தந்தை பெயர் வாசுதேவர். சிறந்த அறிவும் நிறைந்த அருளும் இவரிடம் இயல்பாகவே அமைந்திருந்தன.. வட்மொழியிலே பெரும் புலமை உடையவர். பறவைகள், பிராணிகளுக்கு இரையூட்டி அவை உண்டு மகிழ்வதைக் கண்டு மகிழ்பவர்.

முன்னோர்களுக்கு பூசை செய்கின்ற சிரார்த்த தினத்தில் அவர் சில வேதியர்களை அழைத்து விருந்தளித்தார். அப்பொழுது அங்கே ஒரு பிச்சைக்காரன் வந்து, "ஐயா! பசிக்குது" என்றான். உடனே அரதத்தர் அவனை உட்காரவைத்து சிறந்த அன்னத்தைக் கொடுத்தார். அந்த வேதியர்கள் இதைக்கண்டு சினம் கொண்டு "ஆசார ஒழுங்குகளும் குலமுறை நியமங்களும் தெரியாத பேதை நீர்" என்று கூறிவிட்டுப் போவதற்காக எழுந்தார்கள்,
அரதத்தரோ அவர்களிடம் அருள்மொழிகளைக் கூறினார்.

மண்டி மேல்வந்த நஞ்சினை அஞ்சியே மருண்டு
வண்டி நொந்துவந் தடைந்தவர் பரிவம் நீங்க
உண்டு கொண்டதை அமுதவர்க்கு உதவிய நீல
கண்ட னார்அருள் கண்டும் ஏன் தண்ணளி இழந்தீர்? என்று கேட்டார்.

பாற்கடலைக் கடைந்தபோது மண்டி வந்த நஞ்சைக்கண்டு அஞ்சிய தேவர்களின் துன்பம் தீர்ப்பதற்காக தாமே முன்வந்து நஞ்சிய அருந்தினாரே நீலகண்டனார், அவருடைய அருளைக் கண்டும் ஏண் தண்ணளி இழந்தீர் என்று கேட்டார்.

கண்ணிரக்கம் கொள்ளாமல் மருளராய் இழிந்திருப்பது பெரிய மதிகேடே என்று வேதியரை நோக்கி இவர் வேதனையுடன் கேட்டார்.

அரதத்தரின் கண்ணோட்டம் எத்தனை பக்குவப்பட்டது என்பதை இக்கதையின் வாயிலாக அறிகிறோம்.

கண்ணோட்டம் என்பது கருணைப் பண்பு உடையது. பழகினவர்பால் கிழமை புரிவது. அருள் நீர்மை நிறைந்த பெருந்தகைமைக்குச் சிறந்த அடையாளம் எது என்றால் தம் நண்பர் நஞ்சை இட்டு உணவு கொடுப்பினும் அதை உண்பது.

முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்,
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்;
அஞ்சில் ஓதிஎன் தோழி தோள்துயில்
நெஞ்சில் இன்புறாய் ஆயினும், அதுநீ
என்கண் ஓடி அளிமதி
நின்கண் அல்லது பிறிதுயாதும் இலளே. (நற்றிணை 355)

தண்ணளி புரிந்து தலைவியைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்று தலைவனிடம் தோழி வேண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் என்ற தொடர் சிந்திக்க வைப்பது.

கண்ணோட்டம் என்ற அதிகாரத்தின் கடைசிக் குறளான

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். என்பதும் இந்த நற்றிணைப் பாடலை ஒத்தே அமைகிறது.

நண்பர் தமக்கு நஞ்சிட்டுப் பரிமாறக் கண்டும், அதனை உண்டு, பின்னும் அவரோடு மேவுவர், யாவராலும் விருப்பபத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர்.

தனக்காக நண்பன் விருப்பதோடு அளித்த இனிப்புப் பண்டங்களை உண்ணாவிட்டால் அவன் மனம் வாடுமே என்று நினைத்துத் தன் நீரிழிவு நோயையும் பொருட்படுத்தாது அவன் உண்கிறானே, அதுதான் கண்ணோட்டம்.

இந்த அதிகாரத்தில் முதல் ஒன்பது குறள்களிலும் கண்ணோட்டம் என்ற சொல்லைப் பயன்படுத்திய திருவள்ளுவர் கடைசிக் குறளில் மட்டும் நாகரிகம் என்ற சொல்லைக் கண்ணோட்டம் என்ற பொருளில் பயன்படுத்துகிறார்.
பண்டு உயர்ந்த அருள் நிலையில் வழங்கிவந்த நாகரிகம் என்ற சொல் இன்று மருள் நிலையில் இறங்கியுள்ளது. தருமதீபிகை என்ற நூலில் ஒரு பாடல் நாகரிகம் என்ற சொல்லின் அன்றைய நிலையையும் இன்றைய பயன்பாட்டையும் எடுத்துரைக்கின்றது.

நாகரிகம் என்னும் நயச்சொல் அருள் நலத்தின்
பாகமாய் நின்றது பண்டுஇன்று - மோகமிகு
காரியங்கட் கெல்லாம் கருத்தை எடுத்ததனை
வாரிஇறைக் கின்றார் வந்து.

நாகரிகம் என்னும் சொல்லுக்குப் பழங்காலத்தில் விளங்கியிருந்த மேன்மையையும் இதனால் அறிந்து கொள்கிறோம். நகரவாழ்விலிருந்து நாகரிகம் வந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாகர் வாழ்விலிருந்து நாகரிகம் பிறந்துள்ளது.
நாகர் = தேவர். பிங்கலந்தை என்ற நூலில் இவ்வாறு உள்ளது.
நாகரிகம் = கண்ணோட்டம், சாதுரியம், சீர்மை, நீர்மை, புதுமை, வினோதம், பிலுக்கு என்று பல பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கருணையுடைய கண்ணோட்டம் உடையவரே நாகரிகர் என்றதனால், அவ்வாறு இரங்கிக் கண்ணோடாத கொடியவர் அநாகரிகர் என்பது பெறபட்டது.

கம்பராமாயணம் - சூர்ப்பனகைப் படலத்தில்
மூக்கு அறுபட்ட சூர்ப்பனகை இராமனை நோக்கி இவ்வாறு கூறுகிறாள்

ஆக்கரிய மூக்கு உங்கை அரியுண்டாள் என்றாரை
நாக்கரியும் தயமுகனார் நாகரிகர் அல்லாரே,
மூக்கரிந்து நும்குலத்தை முதல்அரிந்தீர்! இனிஉமக்குப்
போக்கரிது இவ்வழகை எல்லாம் புல்லிடையே உகுத்தீரே!

"என் மூக்கை அறுத்து விட்டார் என்று யாரேனும் போய் என் அண்ணனிடம் சொன்னால் அவருடைய நாக்கை அறுத்துவிடுவார், ஏனென்றால் பத்துத் தலைகளையுடைய அவர் நாகரிகர் அல்லார். அவருடைய கோபத்துக்கு ஆளான நீங்கள் என் மூக்கை அரிந்ததனால் இனி குலத்தோடு அழிந்து போவீர்கள். இந்தப் பேரழகையெல்லாம் உங்கள் இழிந்த செயலால் இழந்தீர்கள்" என்று சபிக்கிறாள்.

தாயுமானவரும் கண்ணோட்டமே மிகச்சிறந்த பண்பு என்கிறார்.

கலை யெலாம் உணர்ந்தான் ஏனும், கரிசறத் தெளிந்தான் ஏனும்,
மலையென உயர்ந்தான் ஏனும், மனமயல் அகன்றான் ஏனும்,
உலகெலாம் புகழப் பல்லோர்க்கு உதவிய கையனேனும்,
இலகிய இரக்கம் இன்றேல் எழுநரகு அடைவன் அன்றே!
(பசு பதி பாச விளக்கம், தாயுமானவர்).
The quality of mercy is not strain’d’
It droppeth as the gentle rain from heaven
Upon the place beneath: it is twice bless’d;
It blesseth him that gives and him that takes!

(Shakespeare, Merchant of Venice 4- 1)

கருணையென்பது வானிலிருந்து இவ்வுலகில் சிந்திய ஓர் அமுதமழைபோல் இனிமை நிறைந்தது. அது இரண்டுமுறை ஆசீர்வதிக்கிறது, ஒருமுறை கொடுப்பவனையும், மறுமுறை பெறுபவனையும்!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard