Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 03. உயிர் உண்ணும் கூற்று


Guru

Status: Offline
Posts: 7329
Date:
03. உயிர் உண்ணும் கூற்று
Permalink  
 


 3. உயிர் உண்ணும் கூற்று


கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிர்உண்ணும் கூற்று. (திருக்குறள்326)

எல்லா உயிர்களையும் போற்றுவது ஒழுக்க இயலில் மிகவும் உயர்ந்த பண்பு. உலகம் ஒன்று; மக்கள் ஓரினம் என்பது எங்கும் எப்பொழுதும் நிலவி வரும் அன்புக் குறிக்கோள். மக்கள் அனைவரையும் ஒரே குலத்தவர் என்று எண்ணுவதோடு உயிர்கள் அனைத்தையும் மக்களோடு சேர்த்து ஒரே குலத்தவை என்று கருதும் பண்பு குறளுக்கு உண்டு. "காக்கை குருவி எங்கள் சாதி, நீள் மலையும் கடலும் எங்கள் கூட்டம்" என்று பாரதி பாடியதற்குத் திருக்குறள்தான் ஆதாரம் என்று அடித்துச் சொல்லலாம்.
பிற உயிர் அதன் உடம்பை விட்டு நீங்குமாறு செய்வது கொலை. கொல்லாமை என்ற சொல் பொதுவாக, எந்த உயிரையும் கொல்லாத அறம் மேற்கொண்டொழுகுதலைக் குறிக்கும். மற்ற உயிர்கள் உணவுக்காகவும் அவற்றின் உறுப்புக்களின் பயன்பாட்டிற்காகவும் கொல்லப்படுகின்றன. உணவுக்காக உயிர்களைக் கொல்வதுபற்றிப் புலால்மறுத்தல் அதிகாரம் ஆராய்கிறது. எந்த ஓர் உயிரையும் பொருளுக்காகவோ, பகை காரணமாகவோ, உயிர்ப்பலி வழிபாட்டிற்காகவோ, வேள்வியின் பொருட்டோ கொல்லுதல் கூடாது என்று கொல்லாமை அதிகாரம் கூறுகிறது. கொலைவினையர்களை மாக்கள் என்றும் இழிந்த தொழில் செய்பவர்கள் (புலைவினையர்) என்றும் இவ்வதிகாரம் இழித்துரைக்கின்றது.

கொல்லாமை அதிகாரம் கூறும் செய்திகளாவன: எல்லா அறவினைகளும் கொல்லாமை என்பதில் அடங்கும். உயிர்க்கொலை எல்லா தீச்செயல்களையும் தரும்; பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் கொள்கை அதாவது பிறருடன் பகிர்ந்து உண்ணுவதே கொல்லாமையின் தலைசிறந்த வடிவம்;
மருந்துக்காகவோ, தெய்வத்திற்கு உயிர்ப்பலி வேண்டிக்கொண்டதற்காகவோ, வேற்றுலகத் தேவர்களுக்கு வழங்குவதற்கான வேள்விப்படையல் என்ற பெயரிலோ உயிர்க்கொலை கூடவே கூடாது. நன்மை உண்டாகும், செல்வம் பெருகும் என்று ஆசைகாட்டப்பட்டதால் உயிர்ப்பலி செய்யவேண்டாம்; அப்படி ஒன்றும் கிடைக்காது. ஒருவேளை பெற்றாலும் சான்றோர் அவ்விதம் தீநெறியால் கிடைத்த ஆக்கத்தைப் பொருட்படுத்த மாட்டார்கள்;

கொல்லாமை நல்ல அறம் என்று சொல்லும்போது பொய்யாமையும் நல்லது என்று சேர்த்துச் சொல்லப்படுகிறது. வள்ளுவர் பார்வையில் மனிதர் யாவரும் இவ்விரண்டு தலையாய அறங்களையும் கடைப்பிடித்தே ஆக வேண்டும்;

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிர் உண்ணும் கூற்று. (திருக்குறள் 326)

மணக்குடவர் உரை:
கொல்லாமையை விரதமாகக் கொண்டு ஒழுகுபவன் வாழ்நாளின் மேல், உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது. பிறவாமை யுண்டாமாதலால் கூற்றுச் செல்லாது என்றார். இது கொல்லாமையின் பயன் கூறிற்று.

பரிமேலழகர் உரை:
கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல், உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது. (மிகப்பெரிய அறம் செய்தாரும் மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையான் அன்றி இம்மைதன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பர் என்னும் அறநூல் துணிபு பற்றி, இப் பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான்: படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார், ‘வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது’ என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து. இதனான் அவர்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).

கொல்லாமையாகிய அறத்தை தம்முடைய மேலான அறமாகக் கொண்டு வாழ்பவர்களின் உயிரை உண்ண கூற்றுவனும் செல்லமாட்டான் என்பது இக்குறளின் கருத்து.
இக்குறளுக்குப் பொருள் சொல்வதற்குப் பரிமேலழகர் உள்ளிட்ட அத்துணை உரையாசிரியர்களும் சிறிது தடுமாறியிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். பிறப்பு, இறப்பு என்ற இருமை இல்லாத நிலையென்பது, இப்பிறப்புக்கு பிறகு எய்தக்கூடிய ஒன்றே. சிரஞ்சீவி என்கிற நிலை இருப்பதாக நாம் படித்தாலும், உலகியல் வாழ்வில் நாம் அதைப் பார்ப்பதில்லை. கூற்று அவ்வுயிர்களை உலகில் நீண்டகாலம் வாழ அனுமதிக்கும் என்பது வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.

யாரும் உண்ண முடியாக உயிரைக்k கூற்று உண்ணும் என்றது உபசார வழக்காய் அவனது உயர்வை விளக்குகின்றது.

உண்டற் குரிய அல்லாப் பொருளை உண்டன போலக் கூறலும் மரபே. (1159)

என்று தொல்காப்பியம் சொல்கிறது. இந்த இயல் விதி ஈண்டு எண்ணி யுணரவுரியது.
கொல்லாமையாகிய அறம் வலியுறுத்தப்படவேண்டிய ஒன்றுதான். அதை மேலான அறமாகக் கொண்டொழுகுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் மீண்டும் பிறப்பும் அதனால் இறப்பும் கிடையாது என்கிற கூற்றும், அதனால் கூற்றுவன் அவர்கள் வாழ்வை முடிக்கச் செல்ல வேண்டியதில்லை என்பது வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகும்.
கம்பராமாயண நாட்டுப்படலத்தில், “கூற்றம் இல்லையோர் குற்றம் இலாமையால்” (70) என்று கோசல நாட்டு மக்களின் நிலையைச் சொல்லியிருப்பார் கம்பர்.. குற்றங்கள் இல்லாமையால், அந்நாட்டினருக்கு மரண பயம் இல்லையாம்.

வீழ்நாள் படா.அமை நன்று ஆற்றின் அஃது ஒருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். (திருக்குறள், 38),

அறத்தைச் செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

செல்லாது உயிர் உண்ணும் கூற்று என்னும் தொடருக்கு, கொல்லாமை என்ற அறத்தை மேற்கொண்டு ஒழுகும் மனிதனுக்கு அவன் இப்பிறவியில் செய்யும் வினைகளுக்கு உரிய தீங்கும் நன்றும்) இல்லாமல் போவதால், அவனுக்கு மேற்கொண்டு பிறவிகள் இல்லை.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (திருக்குறள்322)

கொலை என்பது -உயிரைப் பிரித்தல் மட்டுமன்று. தான் மட்டும் பொருளீட்டி உண்டு, பிறரை உணவு முதலியன இல்லாமல் சாக விடுதலையும் கொலைக் குற்றமாகவே கருதவேண்டும் என்று இக்குறளில் சொல்லியுள்ளது வேறு எந்த அறநூலிலும் இல்லாத சிறப்பு என்பர். இக்குறளின் அடியில் காணப்படும் கருத்து என்னவென்றால் உலகில் நிகழும் பெரும்பான்மைக் குற்றங்களுக்கும் வறுமைதான் காரணம். உலகப் படைப்பில் அனைவர்க்கும் அனைத்தும் கிடைப்பதாகவே உள்ளது மாந்தர் தமக்குக் கிடைத்தைத் தமக்குள் பகிர்ந்து உண்பது போன்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டால் வறுமை நீங்கும். அவ்வாறன்றி, தான் மட்டும் உண்டு, பசித்திருப்போரைப் பொருட்படுத்தாமல் அவர் இறந்துபோவதைப் பார்த்து வாளாயிருப்பது கொலைபோன்றதுதான். இதனாலேதான் 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' என்கிறார் வள்ளுவர்.

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று (திருக்குறள் 323)

என்ற குறள் வள்ளுவர் உள்ளத்தில் ஒரு போராட்டத்தை உண்டுபணியதுபோல் தோன்றுகிறது. கொல்லாமை, பொய்யாமை என்ற இவ்விரண்டு பேரறங்களுள் எதை முதன்மையாகச் சொல்வது என்பது அது. இரண்டுமே தலையாயின என்கிறார். அவர்க்கு ஒன்றை முதலில் வைத்து மற்றதைப் பின்னுக்குத்தள்ள விருப்பமும் இல்லை. பொய்யாமையால் கொலை நிகழலாம்; பொய்சொல்வதால் கொலை தடுக்கப்படலாம்; கொலை நடந்துவிட்டால் உயிரை மீட்பது எப்படி? எனவே கொல்லாமையை முதலில் சொல்லி அதற்குத் துணையாக உடன்போகும் பொய்யாமை என்றார்.
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை (328)

என்னும் பாடல். சான்றோர் முன்னின்று நடத்தினாலும் அவ்வகையான உயிர் நீக்கலும் இழிவானதுதான் என்று சொல்கிறார் வள்ளுவர். சான்றோர், நன்றுஆகும், ஆக்கம் பெரிது என்னும் சொல்லாட்சிகள், இக்குறள் கொலைசூழ் வேள்வி பற்றியது என்பதை எளிதில் உணரவைக்கின்றன.
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து (329)

என்று கொலைத்தொழில் செய்வோரைப் பகுத்தறியும் திறனில்லாதவர், இழிதொழில் புரிபவர் என்று வசைபாடுகிறார் வள்ளுவர்.
‘கொல்லாமை ‘ என்பதைத் தலையாய அறமாக அனைத்து சமய இலக்கியங்களும்
எடுத்து இயம்புகின்றன.. தத்துவரீதியாகப் பார்க்கும்போது பெளத்தர்கள் கொல்லாமையை
வலிறுத்தினாலும், புலால் உண்ணாமையை வலியுறுத்தவில்லை. ‘கல்பய மாமிசம்’, ‘அகழுதூபூ மாமிசம்’ என்று ‘புலாலை ஏற்றுக்கொள்ளகூடிய ‘, ‘ஏற்றுக்கொள்ளாத இயலாத’ என்று இரண்டு நிலைப்பாடுகளைச் சொன்னார்கள்.. ‘பிறர் கொன்று தரும் புலாலை, அல்லது இறந்த விலங்குகளின் புலாலை ஏற்பது தவறன்று’ என்பது அவர்கள் கொள்கை. ஆனால், கொல்லாமைக் கோட்பட்டை முழுமையாக வலியுறுத்திய நூல்கள் பெரும்பாலும் சமண இலக்கியங்களில் காணப்படுகின்றன.

இந்தக் கோட்பாட்டை வாழ்க்கையில் தவறாது பின்பற்ற வேண்டும் என்று பேசிய சமய இலக்கியங்களும் தமிழில் உள்ளன. வள்ளலாரும், வள்ளுவரும் இதனை மிகையாகவே வலியுறுத்தியுள்ளனர். ஆகவே, கொல்லாமைக் கோட்பாட்டை நாம் தமிழ் இலக்கியங்களில்
சமய எல்லைகளைக் கடந்தும் காணமுடிகிறது.

கொல்லாமை என்பது உயிரை எடுத்தல் என்று மட்டும் கூறுவது பொருந்தாது. விலங்குகளைப் பேணாமை, ஊனப்படுத்துதல் ஆகியவற்றைச் செய்யாமல் இருத்தலும் கொல்லாமைக் கோட்பாட்டில் அடங்கும்.
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும் ” (321)

என்ற குறள், கொல்லாமைக் கோட்பாடே பிறவினைகள் அணுகுவதைத் தவிர்க்கும் என்பதைத் தெளிவாக்குகிறது.
கொல்லாமை, பொய்யாமை, களவாடாமை, பிறன் மனை விழையாமை, மிகுபொருள் விரும்பாமை ஆகியவை இயமம் என்று அட்டாங்க யோகத்தில் முதல் படியாக வைக்கப்படுகின்றன.

தமிழ் இலக்கியங்களில் கொல்லாமைக் கோட்பாட்டை எடுத்துக்கூறும் பல பகுதிகளைக்
காணலாம். அறம் எனப்படுவது ஆரூயிர் ஓம்பல், வாதம், எனப்படுவது கொல்லா விரதம்’
என்ற பொருள் பொதிந்த பாடல்களை நாம் காணலாம்.
கொல்லாமை நன்று கொலைதீது எழுத்தினைக்
கல்லாமை தீது கதம்தீது – நல்லார்
மொழியாமை முன்னே முழுதும் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி ”
(சிறுபஞ்சமூலம் ,51)
பல்லாரும் பதி என்று போற்றவுரியவருள் கொல்லா விரதமுடையவரே
தலைமையாயுள்ளனர். அவ்வுண்மையைக் காரியாசான் இவ்வாறு கூறி யிருக்கிருக்கிறார்.
.
கொல்லான் உடன்படான் கொல்வார் இனஞ்சேரான்
புல்லான் பிறர்பால் புலால்மயங்கல் – செல்லான்
குடிப்படுத்துக் கூழ் ஈந்தான் கொல்யானை ஏறி
அடிப்படுப்பான் மண்ணாண்டு அரசு. (ஏலாதி. 42)

1. உணவுக்காக உயிரைக் கொல்லமாட்டான்
2. உணவுக்காக உயிரினத்தைப் பிறர் கொல்லவும் உடன்பட மாட்டான்
3. அப்படிக் கொல்பவர் இனத்தோடு சேரமாட்டான்
4. அப்படிப்பட்டவர் பிறர் யாராயினும் அவர்களைத் தழுவமாட்டான்
5. புலால் உணவைக் கண்டு மயங்கமாட்டான்
6. குடிமக்களையும் இவ்வாறு வாழச்செய்து உணவு வழங்குவான்.
இப்படி நாடாண்டால் போரில் பகைவரைக் கொல்லும் யானைமீது ஏறி, மண்ணுலக அரசர்களையெல்லாம் தன் அடிக்கீழ்க் கொண்டுவருவான் என்று கூறுகிறார் கணிமேதாவியார்

கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்க
எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே
(தாயுமானவர்).
ஊன் ஊண் துறமின் ! உயிர்க்கொலை நீங்குமின்
– என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் கூறுகிறார்.
தன்னுயிர் தான் பரிந்து ஓம்புமாறு போல்
மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்
இன்னுயிர்க்கு இறைவனாய் இன்ப மூர்த்தியாய்ப்
பொன்னுயி ராய்ப்பிறந்து உயர்ந்து போகுமே..
(சீவக சிந்தாமணி)
தன்னுடைய வழிப் பயணத்தில் புலால் உண்ணாமையையும் கொல்லாமையும் போதித்த
சீவகனைச் சிந்தாமணியில் திருத்தக்க தேவர் காட்டுகிறார்.

திருக்குறள் குமரேச வெண்பா
கொல்லாத சாதுவனைக் கூர்சாரன் நாகனை ஏன்
கொல்லவில்லை கூற்றம் குமரேசா - நல்லதென்று
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்
செல்லா துயிருண்ணும் கூற்று.

குமரேசா சாது சக்கர முனிவர் கூற்றுவன் துயர் இன்றி உய்ந்தார்? எனின், கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் உயிர் உண்ணும் கூற்று செல்லாது என்க . கொல்லாமையை நல்ல விரதமாகக் கைக்கொண்டு ஒழுகி வருபவனது வாழ்நாள் மேல் உயிரை உண்னும் கூற்றுவன் உருத்துச் செல்லான்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பிற உயிர்களுக்கு இடர் புரியாமல் எவ்வழியும் இதம் புரிந்து வருபவன் இனிய தருமவானாய் உயர்ந்து வருகிறான். அவ்வரவு இருமையும் அவனுக்கு இன்பம் தருகிறது. இறுதி யில் அவன் பிறவி நீங்கிப் பேரின்பம் பெறுகிறான்.
சாது சக்கர முனிவர் என்பவர் வேதம் முதலிய கலைகளை நன்கு ஒதி யுணர்ந்தவர். உயிரினங்கள் பால் பேரருளுடையவர். உலக ஆசைகளை அறவே துறந்து அரிய தவநெறியில் மருவி யிருந்தார். அணிமா முதலிய யோகசித்திகளை அடைந்து அதிசய ஆற்றல்களைப் பெற்று நின்றார்.. இவருடைய சீவ காருணியத்தையும் ஞான நீர்மைகளையும் அறிந்து வியந்து யாவரும் இவரைப் புகழ்ந்து போற்றி வந்தார்கள். இராகுலன் என்னும் மன்னனுடைய மனைவி இலக்குமி இம் மாதவருக்கு ஆகாவோடு ஒருமுறை உச்சிப் போதில் பிச்சை யிட்டாள், அந்தப் புண்ணியத்தால் அவள் பேரறிவும், பெரு மகிமையும் பெற்றாள். அவளே பின்பு மணிமேகலையாய்த் தோன்றிப் பிறவி நீங்கிப் பேரின்ப நிலையை அடைந்தாள். கொல்லா விரதமுடையவரை வணங்கியதால் உயர்ந்தாள்.

வெயில் விளங்கு அமையத்து விளங்கித் தோன்றிய
சாது சக்கரன் தனையான் ஊட்டிய
ஆங்கதன் பயனே ஆருயிர் மருந்தாய்
ஈங்கிப் பாத்திரம் என்கைப் புகுந்தது
அறம்கரி யாக அருள் சுரந்து ஊட்டும். (மணிமேகலை ):

அமுத சுரபி என்னும் அற்புதப் பாத்திரம் தனக்குக் கிடைத்திருப்பதைக் குறிக்க மணிமேகலை இவ்வாறு மகிழ்ந்து கூறினாள். அவள் காயசித்தியும் பெற்று நீண்ட காலம் வாழ்ந்திருந்து நித்திய முக்தியைப் பெற்றாள்.

கொல்லாமை தவிர்த்தல் என்பது தமிழர்களிடையே தொன்று தொட்டு வந்த மரபாகும்.
திருவள்ளுவர் உள்ளிட்ட அனைவரும் போரும்கொலையும் , கொல்லாமையும் தவிர்க்கக்
கோரினார்கள். அதற்கு மகுடம் வைத்தாற்போல் வள்ளலார் கொலையினைப் புலால் ஒழித்தல் கொள்கையைத் தலையாகக் கொண்டவர்.
சிறு தெய்வங்களுக்கும், கிராம தேவதைகளுக்கும் உயிர்ப்பலி கொடுத்து வழிபாடு செய்யும் வழக்கம் பாமர மக்களுக்கு இருப்பது கண்டு மிகவும் வருந்தினார் வள்ளலார். உயிர்ப்பலியை நிறுத்துவதற்காகச் சிறுதெய்வ வழிபாடு கூடாது என்ற கொள்கையைப் பரப்பினார் இராமலிங்க அடிகள். புலால் மறுத்தலை வலியுறுத்தினார். எவ்வுயிரையும் தம் உயிர்போல் “அன்பு செய்யவேண்டும். இப்படிச் செய்வோர் உள்ளத்திலேதான் இறைவன் தங்கி உறைவன் என்று தம் கருத்துக்களை வள்ளலார் வலியுறுத்தி வந்தார்.
கொல்லா நெறியே குருவருள் நெறியென
பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே

என்று திருவருட்பாவில் அகமகிழச் சொல்லுவார் வள்ளலார்

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே. (திருமந்திரம் 198)

தமிழ் கற்ற ஆன்மிக பெரியோர்கள்,நாயன்மார்கள் ஆழ்வார்கள், சித்தர்கள், யோகிகள் ஞானிகள் என்று பல்லாயிரம் தமிழ் அருளாளர்கள் தோன்றிய நாடு தமிழ் நாடாகும்.

தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், தமிழ்ப் புலவர்கள்.தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மேல் பற்று உள்ளவர்கள் ,தமிழுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஆகிய தமிழ் அறிந்த பெருமக்கள் அனைவரும் வாழ்ந்து வரும் நாடு தான் இது.

இவர்களில் எத்தனை பேர் உயிர்க் கொலை செய்யாதவர்கள்,புலால் உண்ணாதவர்கள்.என்பதை அவரவர்களே சிந்திக்க வேண்டும். ஓர் உயிரைக் கொலை செய்வதும், கொலை செய்து புலாலை உண்பதும், கொடிய பாவச்செயல் என்பதை மக்களுக்குப் போதிக்காது இருப்பதின் நோக்கம் ஏன் ? மேலும் கடவுளின் பெயரால் உயிர்பலி செய்வது குற்றம் என்பதை ஆன்மிக பெரியவர்கள், ஆன்மிகச் சிந்தனையாளர்கள், ஆன்மிக ஆதீனங்கள ஏன் மக்களுக்கு புரிய வைக்கவில்லை ? பகுத்தறிவைப் போதித்த பெரியார்,போன்ற சமுதாயச் சீர்திருத்தவாதிகளும், கொலையும், புலாலும் உடம்புக்கு கெடுதலை விளைவிக்கும் என்பதை ஏன் போதிக்கவில்லை.

ஏன் என்றால் அனைவரும் புலால் உண்பவர்கள், புலால் உண்பவர்கள் எல்லாம் திருக்குறளைப் பற்றிப் பேசத் தகுதி உடைவர்களா ? சிந்திக்க வேண்டும்.

சைவ உணவு மட்டும் உண்பவர்கள் தங்களை அசைவ உணவை உண்பவர்களைவிட மேலானவர்களாக எண்ணிக்கொள்கிறார்கள். தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் உணருவதில்லை. அவர்கள் மாமிசச் சாறான பாலை அருந்துகிறார்கள். பூக்களைத் தேடி எத்தனையோ மைல்கள் தூரம் பறந்து சென்று தேனீக்கள் துளித்துளியாகச் சேமித்து வைக்கும் தேனை எடுப்பதற்காக, ஒரே நாளில் எந்த பாவமும் அறியாத் தேனீக்களை நூற்றுக்கணக்கில் கொன்று, கொள்ளையிட்டுக் கிடைக்கும் அந்தத் தேனை எடுத்து அருந்துகிறார்கள். ஆயிரக்கணக்கான பட்டுப் பூச்சிகளைக் கொன்று உருவான பட்டுத் துணிகளைப் பகட்டாக உடுத்துகிறார்கள். நாங்கள் மீன் உண்ணமாட்டோம் என்று கூறுகின்ற இவர்கள் கடலின் ஆழத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிப்பிகளைப் பிடித்து, அவற்றின் வயிற்றைக் கீறி எடுத்த முத்துக்களை அணிகலன்களாக மாற்றி அணிந்து கொள்கிறார்கள்.

"ஆவுரித்து உண்ணும் புலையர்" என்று இவர்களால் இழிவாகப் பேசப்படுபவர்களிடமிருந்து மாட்டுத் தோலைப் பெற்று மிருதங்கம், மத்தளம், முரசம் ஆகியவற்றை செய்து ஆலயங்களில் வழிபாட்டு இசைக்குப் பயன்படுத்துகிறார்கள். தோல் செருப்புகளையும், பாதக்கூடுகளையும், தோல் வார்கச்சைகளயும், தோலினால் செய்யப்பட்ட பணப்பைகளையும் பயன்படுத்துகிறார்கள். தோல் உறையிட்ட இருக்கைகளையும், திருப்பு சக்கரத்தையும் கொண்ட விலை உயர்ந்த சொகுசுக் கார்களைப் பயன்படுத்துகிறார்கள். கரப்பான் பூச்சிகளையும், எறும்புகளையும், ஈக்களையும், கொசுக்களையும் கொல்வதற்கு நச்சு மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நோய்வாய்ப்படும்போது மருந்துகள் உட்கொண்டு அதற்குக் காரணமான கோடிக்கணக்கான நுண்ணுயிர்களைக் கொல்கிறார்கள். இவ்வளவும் செய்துவிட்டு தாங்கள் எந்த உயிரையும் துன்புறுத்திக் கொல்வதில்லை, தாவர உணவு மட்டுமே உண்கிறோம் என்று பீற்றிக் கொள்வார்கள். தங்களைச் சீவகாருண்ய வள்ளலாக நினைத்துக் கொள்கிறார்கள்.

தங்களை மாமிசம் உண்ணாதவர்கள், சீவகாருண்யர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள்தாம், கையிலிருந்த பூமாலையை அறியாமையால் தட்டிவிட்ட யானையின் துதிக்கையை வெறிகொண்டு அறுத்தெறிந்த மனிதரையும், சிறுபிள்ளையின் தசையறுத்து சமைத்துக்கொடு என்று மனித மாமிசம் வேண்டி நின்ற சிவனடியார் சொல்கேட்டு, தன் ஒரே பிள்ளையையே கொலை செய்த மனிதரையும் நாயன்மார்கள் என்று கொண்டாடிப் போற்றுபவர்கள்.

நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும் சமணர்கள் கழுவேற்றம். சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்றதனால் கழுவேற்றப் பட்டார்கள்
என்று பெரியபுராணத்தில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது. ஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய பாண்டிய மன்னன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள சாமணத்தம் என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று சொல்லப்படுகிறது.

மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்
துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" வென்று கூற ”
எனும் பெரியபுராணப் பாடல் சமணர் கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது. இதே நிகழ்வை பிற்காலப் புலவரான ஒட்டக்கூத்தர் தனது தக்கயாகப்பரணி எனும் நூலில் குறிப்பிடுகிறார். திருவிளையாடல் புராணமும் இதனைக் குறிப்பிடுகிறது.
கழுகுமலைக் கோயில் சுவரோவியங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் சித்திரிக்கப்பட்டுள்ளது.
சமண சமயத்தில் இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் என்ற நான்கு கொள்கைகளையும் சேர்த்து அகிம்சை என்கின்றனர். ”அகிம்சோ பரம தர்ம” என்பது மகாவீரரின் பொன்மொழியாகும். கொல்லாமையே மேலான அறம் என்பது இதன் பொருள். எந்த உயிருக்கும் எந்த வகையிலும் இம்சை செய்யாமையே அகிம்சை எனப்படும். ஆனால் அப்பேர்ப்பட்ட சமணர்களே திருஞான சம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்குத் தீயிட்டு அவரைக் கொல்ல முயன்றனர்.

விவிலியத்தில் கொல்லாமை பத்துக் கட்டளைகளில் ஒன்று. ஆனால் யூதர்களிடத்தில் அதன் பொருள் என்னவென்றால் ஒரு யூதன் மற்றொரு யூதனைக் கொல்லக்கூடாது, அவ்வளவுதான். வேற்று இனத்து மனிதனைக் கொல்லலாம். கிறித்தவர்களிடத்தில் பார்த்தோமானால், சீர்திருத்தப் பிரிவு (Protestant) தோன்றியபோது கத்தோலிக்கர்களும் சீர்திருத்தப் பிரிவினரும் ஒருவருக்கொருவர் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தனர். பின்னர் இஸ்லாம் உருவாகி இஸ்லாமியர் எருசலம் நகரத்தைக் கைப்பற்றிய உடன் புனித சிலுவைப் போர் என்ற பெயரில் கிறித்தவர் இஸ்லாமியர்களை ஓட ஓட விரட்டிக் கொன்றனர். இஸ்லாமியரும் திருப்பித் தாக்கி ஏராளமான கிறித்தவர்களைக் கொன்றனர். ஒன்பது முறை இந்த போர் நடந்தது.

ஆக எந்தச் சமயமும் நிபந்தனையற்ற கொல்லாமையைப் பின்பற்றுவதில்லை என்பது வெளிப்படை.

திருக்குறளில் இல்லறத்தானுக்குக் கூறப்படுகின்ற கருத்துக்கள், துறவிக்குப் பொருந்தாது; துறவிக்குக் கூறப்படுகின்ற கருத்துக்கள் இல்லறத்தானுக்குப் பொருந்தாது;இவ்விருவருக்கும் பொருந்துகின்ற சில கருத்துக்கள் நாடாளும் மன்னனுக்குப் பொருந்தாது.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. (327)

இந்தக் குறட்பா அறத்துப்பாலில், துறவற இயலில் , கொல்லாமை என்ற அதிகாரத்தின் கீழ் வருகிறது. எனவே இது துறவிக்குச் சொல்லப்பட்ட நீதி; இல்லறத்தானுக்குப் பொருந்தாது. புலால் மறுத்தலும் துறவிக்குச் சொல்லப்பட்ட நீதிதான்; இல்லறத்தானுக்கு அல்ல. தன்னைக்
கொல்ல வரும் ஒரு பாம்பை இல்லறத்தான் கொல்லலாம், ஆனால் ஒரு துறவி கொல்லக் கூடாது. கொசுக்களைக் கொல்லுகின்ற திரவங்களை ஓர் இல்லறத்தான் பயன்படுத்தலாம்; ஆனால் ஒரு துறவி பயன்படுத்தக் கூடாது.'

எனவே கொல்லாமையும், புலால் உண்ணாமையும் துறவிகள் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டிய அறநெறிகள். இல்லறத்தான் இவற்றைப் பின்பற்றக்கூடாது என்பதல்ல. அது அவரவர்களுடைய விருப்பம்.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர். (550)

இந்தக் குறள் நாடாளும் வேந்தனுக்காகச் சொல்லப்பட்டது. அரசியலில் செங்கோன்மை என்ற அதிகாரத்தின் கீழ் இக்குறள் வருகிறது.
வயலில் களைகள் இருக்குமானால் அது நெல் பயிரின் வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே அக்களைகளை அகற்றவேண்டியது உழவனுடைய கடமை. சமுதாயம் என்னும் வயலில் சில கொடியவர்கள் களைகளைப் போல இருந்து சமுதாயத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பார்கள்; அவர்களை அகற்றவேண்டியது அரசனுடைய கடமையாகும். எனவே அவர்களைக் கொலை செய்து ஒறுத்தல் வள்ளுவருக்கு உடன்பாடானதே.

கொடியவர்கள் எனப்படுபவர் யார்?
கொலைக்குற்றம் புரிவோர், பெண்களைக் கற்பழிப்போர், வெடிகுண்டுகள் வெடிக்கச்செய்து அப்பாவி மக்களின் உயிருக்கு உலைவைக்கும் தீவிரவாதிகள், மக்களின் வரிப்பணத்தைக் கோடிக் கணக்கில் சுருட்டுகின்ற அரசியல்வாதிகள் போன்றோரைக் கொடியவர்கள் என்று குறிப்பிடலாம்.

கொல்லாமை தனிமனித அறமாகச் சொல்லப்படுகிறது. சமுதாயஅறம் காக்க கொலைத்தண்டனை அளித்துக் கொடியவர்கள் கொல்லப்படலாம் எனக் குறள் கூறும். படைமாட்சி, படைச்செருக்கு ஆகிய அதிகாரங்களைப் படைத்து படையையும், படைவீரர்களையும் புகழ்ந்தமையால் நாடு காக்கவும் உயிர்கள் கொல்லப்படலாம் என்பதும் வள்ளுவர்க்கு உடன்பாடுதான் எனத் தெரிகிறது.

பயிர்களின் ஊடே வளரும் களைகளை வேரோடு பிடுங்கி எறிகிறோம். பயிர்களை அளிக்கும் பூச்சிகளைக் கொல்ல நச்சு மருந்துகளைப் பயன்படுத்துகிறோம். மேற்கத்திய நாடுகளிலே பயிரைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க, அப்பூச்சிகளை உணவாகக் கொள்ளும் வேறு பூச்சிகளை அப்பயிர் செய்யும் நிலத்தில் வளர்க்கிறார்கள். களையகற்றுவதும்
கொலையே. இந்தக்கொலை வள்ளுவருக்கு உடன்பாடானதே.

உழவு என்னும் அதிகாரத்தில்:

ஏரினும் நன்றாம் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு (1038)

என்று கூறுகிறார் வள்ளுவர். களையெடுப்பது மட்டுமல்ல, அந்தப் பயிரைக் கால்நடைகளிடமிருந்தும் பூச்சிகளிடமிருந்தும் பாதுகாக்கவேண்டும் என்பது வள்ளுவர் கூற்று.

நம் உடலுக்கு நோய்களை விளவிக்கும் நுண்ணுயிர்களை மருந்து உட்கொண்டு கொல்லலாமா என்று கேட்டால், 'மருந்து" என்ற அதிகாரத்தையே படைத்திருக்கிறார் வள்ளுவர். அதில்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (948)

என்று கூறி மருந்தை உண்டு நோயைத் தணிக்கலாம் என்று கூறுகிறார்.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. (327)

என்று சொன்ன அதே வள்ளுவர்தான் இதையும் சொல்கிறார்!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard