Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 2. உடம்பொடு உயிரிடை நட்பு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
2. உடம்பொடு உயிரிடை நட்பு
Permalink  
 


2. உடம்பொடு உயிரிடை நட்பு

குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்து அற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. (திருக்குறள்338)
பொருள்
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்று= முன் தனியாத முட்டை தனித்துக்கிடப்ப அதன்உள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்துபோன தன்மைத்து; உடம்பொடு உயிர்இடை நட்பு= உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு.
பரிமேலழகர் உரை விளக்கம்
'தனித்தொழிய' என்றதனான் முன் தனியாமை பெற்றாம். அஃதாவது, கருவும் தானும் ஒன்றாய்ப்பிறந்து, வேறாந்துணையும் அதற்கு ஆதாரமாய் நிற்றல்; அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று. அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமற் போகலின், 'புள்' உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுட் பிறப்பன பிற சீ£வராசிகள் உளவேனும் புள்ளையே கூறினார். பறந்துபோதல் என்ற தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவேயாகலின். 'நட்பு' என்பது ஈண்டுக் குறிப்புமொழியாய் நட்பின்றிப்போதல் உணர்த்தி நின்றது.

சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும் அசேதனமாய் உருவாய் அநித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின் வினைவயத்தாற் கூடியதல்லது நட்புஇல என்பது அறிக. இனிக் 'குடம்பை' என்பதற்குக் கூடு என்பாரும் உளர்.. அது புள்ளுடன் தோன்றாமையானும் அதன்கண் அது மீண்டு புகுதல் உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக.

இங்கே பரிமேலழகர் குடம்பை என்ற சொல்லுக்கு முட்டை என்ற பொருளைக் கொண்டுள்ளார்.
மக்களுடம்பு போலத் தாய்வயிற்றிலிருந்தே வந்தது முட்டையேயாதலால் முட்டை உடம்புக்கு உவமையாயிற்று. முட்டைக் குள்ளிருந்து போனபின் திரும்பி வந்து புகாமையால் புள் உயிர்க்கு உவமையாயிற்று. உடம்பும் உயிரும் தோன்றுகின்ற பொழுதே இணைந்து விடுகிறது அல்லது இணைந்தே தோன்றுகிறது. எது முன்னது என்பது மருத்துவ ஆராய்ச்சியின் பாற்பட்டது. கிடக்கிறான் என மெய்யைச்சுட்டியும் போய்விட்டான் என உயிரைச் சுட்டியும் உரைப்பது வழக்கு. இவ்வாறு ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரித்தாலும் உயிர்தான் உடம்பை விட்டுப் பிரிகிறது என்பது உலகியல் அநுமானம். உடம்போடு இடையறா நட்பு கொள்ளும் இவ்வுயிர் அதுவரை தன்னை விட்டுப் பிரியாத உடம்பைத் தனியே விட்டு விட்டுப் பிரிந்து விடுகிறது”.
“முட்டையை விட்டு வெளிப்படும் உயிரை அப்பருவத்தில் பார்ப்பு என்று சொல்லுதல் வழக்கேயன்றிப் புள் என்று சொல்லுதல் வழக்கன்று. மேலும் முட்டையை விட்டு வெளிப்பட்டவுடன் பறக்கும் பார்ப்பை நாம் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை” என்று தன் மறுப்பைப் பதிவு செய்கிறார் வ.உ.சி.
மணக்குடவர் உரைப்படி, உடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவானது பறவையின் கூட்டுக்கும் பறவைக்கும் இடையிலான உறவு போன்றதாம். இங்கே மணக்குடவர் குடம்பை என்ற சொல்லுக்கு கூடு என்ற பொருளைக் கொண்டுள்ளார். இவற்றில் எது சரியான விளக்கம் என்று னாம் பார்க்கவேண்டியுள்ளது.
ஆராய்ந்து பார்க்குமிடத்து மேற்கண்ட இரண்டு விளக்கங்களுமே தவறாகப் படுகிறது. முதலில் மணக்குடவரின் விளக்கத்தைப் பார்ப்போம். அவரது உரைப்படி உடல்-உயிர் உறவினை கூடு-பறவை உறவுடன் ஒப்பிட முடியுமா என்றால் முடியாது. ஏனென்றால் பறவை தனது கூட்டிலேயே எப்போதும் இருப்பதில்லை. மாலையில் வந்து தங்கி இருந்து இரவு கழித்து அதிகாலையில் எழுந்ததும் இரைதேடச் சென்று விடுகிறது. மறுபடியும் மாலை ஆனதும் தனது கூட்டுக்கே திரும்பி விடுகிறது. இது நாள்தோறும் நடக்கும் செயலாகும். ஆனால் ஒருமுறை உடலை விட்டு பிரிந்து செல்லும் உயிரோ மீண்டும் அதே உடலுக்குத் திரும்ப வருவதில்லை. இதைத் தான் நாம் மரணம் என்று அழைக்கிறோம். இப்படியாக பறவையின் செயலும் (கூட்டுக்குத் திரும்பி வருவது) உயிரின் செயலும் ( உடலுக்குத் திரும்பாமை) முற்றிலும் இங்கே மாறுபடுகின்றதால் மணக்குடவரின் உரை தவறு என்று தெளியலாம். இல்லை மணக்குடவர் கூற விழைவது யாதெனின் ஒரு பறவை தனது கூட்டை விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விடுகின்றதல்லவா அதைத்தான் உடல்-உயிர் உறவுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் என்று சிலர் கூறலாம். இவ் விளக்கமும் பொருந்தா விளக்கமே. ஏனென்றால் அனைத்து பறவைகளுமே கூடுகட்டி வாழ்வதில்லை என்பதுடன் தனது வாழ்நாளில் பலமுறை கூட்டை விட்டுப் பறவை பிரிந்து செல்லும் நிகழ்ச்சியை எப்போதோ ஒருமுறை நிகழும் மரணத்துடன் ஒப்பிடுவது இயல்பாகப் படவில்லை. ஆகவே மணக்குடவரின் விளக்கம் இங்கே பொருத்தமாக இல்லை.

அடுத்து பரிமேலழகரின் விளக்கத்தைப் பார்ப்போம். அவரது உரைப்படி உடல்-உயிர் உறவினை முட்டை-பறவை உறவுடன் ஒப்பிட முடியுமா என்றால் முடியாது. ஏனென்றால் முட்டை பொறித்தவுடன் ஓட்டுக்குள் இருந்து பறவைக் குஞ்சு வெளிவரும் போது ஓடு முற்றிலும் சிதிலமடைந்திருக்கும். இன்னும் தெளிவாகச் சொன்னால் ஓட்டை முற்றிலும் சேதப்படுத்திய பின்னரே பறவைக் குஞ்சு வெளிவருகிறது.
அதுமட்டுமின்றி வெளிவந்த குஞ்சுகளுக்கு சிறகுகள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால் அனைத்துப் பறவைக் குஞ்சுகளுமே உடனடியாகப் பறந்துவிடுவதில்லை. ஆனால் உடலிலில் இருந்து உயிர் பிரியும் போது உடலுக்கு எவ்விதச் சேதாரமும் ஏற்படுவதில்லை. பறவையின் முட்டையைப் போல உடையாமல் மனித உடலானது அப்படியே முழுமையாகத் தான் இருக்கிறது. உயிர் பிரிந்த பல மணி நேரத்திற்குப் பின்னர் தான் உடல் கெட்டுப்போகத் தொடங்குகிறது. அப்படியே அழுகினாலும் பறவை முட்டையைப் போல உடைந்து விடுவதில்லை. எனவே பறவை முட்டையை மனித உடலுடன் ஒப்பிட்டு பரிமேலழகர் இக் குறளுக்கு விளக்கம் கூறியிருப்பது பொருத்தமாகத் தோன்றவில்லை.

இப்பொருள் குழப்பங்களுக்குக் காரணம் 'குடம்பை' என்ற சொல்லே ஆகும்.
முட்டை உருச்சிதையாமல் பார்ப்பு அதனின் நீங்குமாறில்லை. யாக்கை உருச்சிதையாமல் உயிர் நீங்குமாறுண்டு. அது நீங்கியபின்னர் யாக்கை சிதைவதே ஒருதலை”- என்று கூறுகிறார் ச. தண்ட பாணி தேசிகர்
“கருவும் ஓடும் ஒன்றாய்த் தோன்றாது. கரு முதிர்ந்த பின்னரே மேலே உள்ள பசை இறுகி ஓடாகின்றது. ஆதலானும் அவ்வுரை பொருந்தாது.
“குடம்பை என்ற சொல் சங்க நூல்களில் கூடு என்ற பொருளில் வருகிறதேயன்றி முட்டை என்ற பொருளில் வரவில்லை. பரிமேலழகருக்குப் பின் தோன்றிய பிங்கலந்தை என்ற நிகண்டு மட்டுமே குடம்பை என்பதற்கு முட்டை என்று பொருள் கூறுகிறது.
உடம்பைக் கூடென்னும் மரபிற்குச் செய்யுள் வழக்கும் பேச்சு வழக்கும் எடுத்துக்காட்டுவதுடன் பழந்தமிழ் நூல்களில் உடம்பைக் கூடாகவும் உயிரைப் பறவையாகவும் உவமித்திருப்பதற்கு அகப் பாடலையும் (113) அதன் உரையில் எடுத்துக் காட்டப்படும் நாலடியார் பாடலையும் (30) எடுத்துக்காட்டாக்கி இக்குறளுக்குப் பரிமேலழகர் உரை பொருந்தாதென்பார்.
அலங்கல் அஞ்சினைக் குடம்பைப் புல்லென
புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந் தாங்கு
மெய்யிவ ணொழியப் போகி அவர்
செய்வினை மருங்கில் செலீஇயரென் உயிரே” - கல்லாடனார்
திருக்குறள் மனித உயிரையே சிறப்பாகக்கருதினாலும் தாய்ப்பாலுண்ணிகட் கெல்லாம் பொதுவான உயிரையும் அதன் உடம்பையுமே பற்றிக் கூறியிருக்க. நாலடியார்ச்செய்யுள் மனித உயிரையும் அவனுடம்பையுமே பற்றிக் கூறியதுடன் அவன் பிறந்த குடும்பத்தையுஞ் சேர்த்துக் கூறியுள்ளது.
"கேளாதே வந்து கிளைஞரா யிற் றோன்றி
வாளாதே போவரான் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரனொழியச் சேணீங்கு புட்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து."
இதன் பொருள்: மாந்தர் ஒரு குடும்பத்தில் ஒருவரை யொருவர் கேளாமலே உறவினராக வந்து பிறந்து, பின்பு தாம் இறக்கும் போதும் பறவை மரத்தில் தான் கட்டிய கூட்டை விட்டுவிட்டு அம்மரத்திற்குச் சொல்லாமலே நெடுந்தொலைவு நீங்கிச்சென்று விடுவது போல தம் உறவினருக்குச் சொல்லாமலே தம் உடலை அவரிடம் விட்டுச் சென்றுவிடுவர் என்பதாம்.
பறவை மரத்தைக் கேளாமலே வந்து அதில் தான் முட்டையிட்டுக் குஞ்சுபொரித்தற்குக் கட்டிய கூட்டை; அவ்வினை முடிந்தபின் விட்டுவிட்டு அம்மரத்திற்குச் சொல்லாமலே நீங்கிப்போய் விடுவது போல மாந்தரும் தம்பழவினையின் ஒரு பகுதியான இருவினைப் பயனை நுகர்தற்குத்தாம் எடுத்தவுடம்பை அந்நுகர்ச்சி முடிந்தவுடன்தம் உறவினரிடம் விட்டுவிட்டு அவருக்குச் சொல்லாமலே நீங்கிவிடுவர் என்பது விளக்கமாம். இதில் குடும்பத்திற்கு மரமும், மாந்தன் உயிர்க்குப் பறவையும் அவனுடம்பிற்குக் கூடும் உவம மாம்.
வரியுடல் சூழக் குடம்பை நூல் தெற்றி’ எனக் கல்லாடம் (கணபதிதுதி, 26- ஆம் வரி) புழுக்கூட்டைக் குறித்தது.
‘குடம்பை முட்டையுங் கூடுமாகும்’ என்பது பிங்கலம் (10- 352)
அடங்கிய விருத்தியானென்று அறிந்தபின் செறிந்த மண்ணின்
குடம்பையுள் புழுமுன் ஊதும் குளவியின் கொள்கைபோலத்
தொடங்கிய குருவும் ஆன்ம சொரூபமே மருவ வேண்டி
உடம்பினுள் சீவனை பார்த்து உபதேசம் ஓதுவாரே.
(கைவல்ய நவநீதம் 11)
இங்கே குளவிக்கூடு குடம்பை என்று கூறப்படுகிறது.
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்
என்ற நற்றிணைப் பாடலில் மொய்க்கின்ற எறும்புகளின் புற்று குடம்பை என்று சொல்லப்படுகிறது.

குடம்பை என்ற சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருட்களை இன்றைய அகராதிகள் கூறுகின்றன.

குடம்பை =, கூடு, முட்டை; உடம்பு; தொட்டி

மேற்காணும் கூடு, முட்டை, உடம்பு, தொட்டி ஆகிய பொருட்களில் ஏதேனும் ஒரு பொருளாவது கீழ்க்காணும் பாடல்களுக்குப் பொருந்தி வருகின்றதா என்று பார்ப்போம்.

கற்றுரிக் குடம்பை கதநாய் வடுகர் (அகநா: 382)
கன்று என்பது இங்கு கற்று என்று வலித்தல் விகாரம் பெற்று வந்துள்ளது. ஆக கற்றுரிக் குடம்பை என்பது விலங்குக் கன்றின் தோலினால் செய்த கூண்டை / குடுவையைக் குறிப்பதாகும்.

தன் பெரும் கணத்து உளான் ஓர் தலைவனும் சலதி வாணன்
என்பது தோன்ற வேடம் எடுத்து எறி வலை தோள் இட்டு
என் புற மலைப்பக் காவி மீன் இடு குடம்பை தாங்கிப்
பின்புற நடந்து செல்லப் பெருந்துறைப் பாக்கம் புக்கான (திருவிளையாடல்(: 2695

மேற்காணும் பாடல்களில் வரும் குடம்பை என்ற சொல்லுக்கு கூடு, முட்டை, உடம்பு என்று எந்தப் பொருளைப் போட்டாலும் பொருந்தவில்லை. இச் சொல்லுக்குப் புதிய பொருள் இருப்பதையே காட்டுகிறது. இப் பாடல்களில் வரும் குடம்பை என்ற சொல்லுக்கு 'கூண்டு' என்ற புதிய பொருளே பொருத்தமாயுள்ளது.

'மீன் இடு குடம்பை' என்று இருக்கிறது. இதன் பொருள் 'மீன்களை இடுகின்ற கூண்டு' என்பதாகும். கூடுக்கும் கூண்டுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். கூடு திறந்த நிலையில் இருக்கும். அதை மூடி விட்டால் அதுவே கூண்டு ஆகும்.

ஆக தமிழ் அகராதிகள் கூறியுள்ள பொருட்களே அன்றி குடம்பை என்னும் சொல்லிற்கு கூண்டு/ குடுவை என்ற பொருளும் உண்டு என்பது தெளிவாகிறது. இதே பொருளில் தான் வள்ளுவர் குடம்பை என்ற சொல்லை இக்குறளில் கையாண்டுள்ளார். இது எவ்வாறு என்று பார்ப்போம்.

ஒரு மனிதன் ஒரு பறவையைப் பிடித்துக் கூண்டுக்குள் அடைக்கிறான். அக் கூண்டுக்குள்ளேயே அப்பறவையை அடைத்து வைத்து அதற்குத் தேவையான உணவையும் நீரையும் அளித்து வருகிறான். வேளா வேளைக்கு உண்ண உணவு கிடைத்தாலும் பருக நீர் கிடைத்தாலும் அந்தப் பறவையின் நோக்கம் எதுவாக இருக்கும் என்றால் அது சுதந்திரமாக அக் கூட்டை விட்டு வெளியே வந்து வானில் பறந்து திரிய வேண்டும் என்பது தானே. இந்த சுதந்திரத்திற்காகத் தான் அப் பறவை ஒவ்வொரு நொடியும் பல வகைகளில் முயன்று கொண்டே இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் பொழுது சடீரென்று கூண்டை விட்டு வெளியேறி, சிறகடித்து வானில் பறந்து சென்று விடுகிறது. அப் பறவை இனி திரும்ப வருமா அதே கூட்டுக்கு ஒருபோதும் வராது.

மறுபடியும் ஒரு மனிதன் அப் பறவையைப் பிடித்து வேறொரு கூட்டில் அடைத்து வைக்காதவரை அப் பறவை உல்லாசமாய் வானில் பறந்து கொண்டே இருக்கும்.

இக் கூண்டுப் பறவையின் வாழ்க்கையைப் போலத்தான் மனித உயிரின் வாழ்க்கையும் இருக்கிறது. விதிவசத்தால் உயிரானது ஓர் உடலுக்குள் அடைபடுகிறது. அதுவே பிறப்பு எனப்படுகிறது. உடலுக்குள் அடைபட்டுக் கிடந்தாலும் உயிரானது ஒவ்வொரு நொடியும் தனது சுதந்திரமான இயல்பை எண்ணிக் கொண்டே இருக்கிறது. அண்டவெளியில் கலப்பதையே நாடுகிறது. சரியான வாய்ப்பு கிடைக்கும் பொழுது உடலை விட்டு உயிர் வெளியேறி அண்டவெளியில் கலந்து விடுகின்றது.

மறுபடியும் விதிவசத்தால் வேறொரு உடலுக்குள் அடைபடாதவரை அந்த உயிர் அண்டவெளியில் தான் இருக்கும். இந்த விதியின் அளப்பரும் வலிமையை அறிந்த வள்ளுவர்,` இக்குறள் மூலம் அவ் விதியின் வசத்தால் உடலுக்குள் அகப்பட்ட உயிரின் கதியை ஒரு கூண்டுப் பறவையின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார்.

இக் குறளில் வரும் குடம்பை என்ற சொல்லுக்கு செய்கூடு அதாவது கூண்டு என்பதும் பொருளாகும். இப் பொருளின்படி இக்குறளுக்கான விளக்கமானது:

உடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவானது (அத்தனை நாளும் அடைபட்டு வாழ்ந்து கொண்டிருந்த) கூண்டைத் தனியே விட்டு பறவை ஒன்று (திரும்பி வராதபடிக்கு) பறந்து செல்வதைப் போன்றதாகும்.

அதேசமயம் கூண்டின் வலிமையைப் பொறுத்தும் பறவையின் தப்பித்துச் செல்லும் வாய்ப்பு அமைவதைப் போல உடலின் வலிமையைப் பொறுத்தும் உயிர் பிரியும் வாய்ப்பு அமைகிறது. அதனால் தான் திருமூலர் இவ்வாறு கூறுகிறார்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே - திருமந்திரம்.

கூண்டு என்னதான் வலிமையானதாக இருந்தாலும் ஒருநாள் சமயம் பார்த்து பறவை வெளியேறி விடுவதைப் போல உடலைவிட்டு உயிரும் வெளியேறி விடும் என்று இக் குறள் மூலம் எச்சரிக்கிறார் வள்ளுவர்.

இவ்வுடம்பாகிய கூடு அல்லது குடம்பையைப் பற்றி திருமூலர் மேலும் பேசுகிறார்.

காக்கை கவா¢லென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே. (திருமந்திரம்- 167)

உயிர் இல்லாத நிலையில் நம்முடைய இந்த உடல் வெறும் தோல்பை ஆகும். இந்த உடலினுள் நின்று உயிர் கொடுத்து உடல் இயக்கத்திற்குக் காரணமாய் இருப்பவன் கூத்தன் என்று அழைக்கப்படும் ஈசன். அவன் இந்த உடலை விட்டு நீங்கியபின், அதாவது நாம் இறந்துபோனபிறகு, இந்த உடலை காக்கை வந்து கொத்தித் தின்றால் என்ன? பார்ப்பவர் இகழ்ந்தால் என்ன? தகனம் செய்து பால் ஊற்றினால் என்ன.பலரும் பழித்துப் பேசினால் என்ன? உயிர் இல்லாத இக்கூட்டைப் பற்றி நாம் கவலைப்ட வேண்டியதில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 



காமத்துப் பாலில் மற்றுமொரு குறளில், உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பு என்னும் உறவைப் பற்றி திருவள்ளுவர் பேசுகிறார்.

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு (குறள்:1122)

உடம்பொடு உயிரிடை உள்ள நட்பு எத்தன்மையது மற்று அத்தன்மையது இம்மங்கையோடு எம்மிடை நட்பு என்பது பாடலின் பொருள்.
என்ன மற்றன்ன’ என்பதில் உள்ள 'என்ன' என்ற சொல்லைப் பன்மையாகக் கொண்டு பரிமேலழகர் 'என்ன'? எனப் பன்மையாற் கூறியது இரண்டும் தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலந்து வருதல், இன்பதுன்பங்கள் ஒக்க அனுபவித்தல், இன்றியமையாமை என்றிவற்றை நோக்கி' எனப் பன்மைக் கூறுகளை விளக்குவார்.
காதலரிடையே உள்ள உறவு ஏன் நட்பு எனப்படுகின்றது?
உயிர் உடம்பொடு கூடியல்லது வாழாதது போல அவளில்லாமல் உயிர்வாழ முடியாது எனக் காதல்மிகுதியால் அவன் கூறுகிறான்.

தலைவனும் தலைவியும் பிரிக்கமுடியாத நெருக்கத்தை அடைந்துவிட்டனர் என்பதைச் சொல்லும் குறட்பா.
அவனுக்கும் அவளுக்கும் காதல் மலர்ந்து நாளும் வளர்கிறது. அவளுடன் கூடி இன்பம் திளைத்தபின் அவளுடனான உறவை எண்ணிப் பார்க்கிறான் அவன். அவனுக்கும் அவளுக்கும் இடையேயான உறவின் நெருக்கம் உயிரும் உடலும் போல பிரித்தறிய முடியாத அளவிற்கு வளர்ந்துவிட்டதாக உணர்கிறான். அவனுக்கு அவள் உயிராகின்றாள். அவளுக்கு அவன் உயிராகின்றான். ஒருவர் இறந்தால் மற்றவரும் உயிர் விடுவர் என்றபடி ஒத்த உணர்ச்சியுடையவராய் அவர்களது காதல் நெருக்கம் மிகையானது. அவருள் ஒருவர் பிரிவை மற்றொருவர் பொறுக்கமாட்டார். உயிர்க்கும் உடம்புக்கும் உள்ளது போன்ற தீராத பற்று அவனுக்கு அவளிடம் ஏற்பட்டு விட்டது என்பதை அறிகிறான்.
உள்ளங்கள் கலந்துவிட்டதை விளக்குவதற்கு 'மலரும் மணமும் போல' என்பது போன்று பொருள்களை வைத்து உவமிக்காமல் உணர்வையும் உறவையும் கொண்டு இக்குறளைப் படைத்துள்ளார் வள்ளுவர். மனம் ஒன்றிய காதலனும் காதலியும் கொண்ட இணக்கத்தை வெளிப்படுத்த உடல்-உயிர் பிணைந்த உவமை இப்பாடலில் ஆளப்பட்டுள்ளது. உடலும் உயிரும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. உடலில்லாது உயிர் இருக்க முடியாது. உயிர் இல்லாது உடல் இயங்க முடியாது. உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை. உடல் துடித்தால் உயிரும் துடிக்கிறது. உடல் துண்டானால் உயிர் போய்விடுகிறது. அது போன்றதுதான் எமது காதல் உறவு என்கிறான் காதலன். ஒருவரின்றி மற்றவர் வாழ இயலாதது என்ற நிலையில் காதலர் வாழ்கிறார்கள். ஒருவனும் ஒருத்தியுமாகக் கூடிக் கலந்து வாழும் விழுமிய அன்பு வாழ்க்கையை- 'இவ்வொன்று அல்லாது அவ்வொன்று இல்லை' என்பதை- இதனினும் சிறப்பாகக் கூறி விளக்க இயலுமா?

உடம்பொடு உயிரிடை மடந்தையொடு எம்மிடை என வருவதில் யார் உடல்? யார் உயிர் என்று கூறப்படவில்லை.உடலும் உயிரும் போல் வாழவேண்டிய காதலரிடையே வேற்றுமை ஏது? உயர்வு தாழ்வு ஏது? இக்குறளின் தொடர்களை நிரல் நிறையாக(வரிசைப்படி)ப் பொருத்திப் பாராமல் தலைவன் தலைவியர் இருவர்க்கும் பொதுவாகக் கொண்டு பொருள் கொள்ளவேண்டும்.

உடலும் உயிரும் போன்றவர்கள் என்று கூறும்போது காதலன் உடலானான் காதலி உயிராவாள். காதலி உடலானால் காதலன் உயிராகிறான். உடல்-உயிர் நெருக்கத்தை மட்டுமின்றி ஓருயிருக்கு ஓருடல் என்பதுபோல ஒரு தலைவனுக்கு ஒரு தலைவியே எனும் செய்தியும் இப்பாடலில் பொதிந்துள்ளமை அறியத்தக்கது. உடம்பும் உயிருமாய்க் காதலர் இரண்டறக்கலந்து நிற்கும் ஒருமை நிலையை இவ்வுவமை விளக்கமுற வெளிக்கொணர்ந்தது.

இப்பாடற்கருத்தோடு பொருந்த உள்ள இன்னொரு குறட்பா
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து (1124)

தேர்ந்தெடுத்த அணிகளையுடையவள் என்னோடு இருக்கும்போது என் உயிர் இருத்தல் போன்றவள்; பிரியுமிடத்து என் உடம்பிலிருந்து உயிர் நீங்கிப் போவதை ஒத்தவள் என்பது, அவளைப் பிரிந்திருப்பதும் சாதலை ஒக்கும் என்கிறது. ‘.
காதலரிடையே உள்ள உறவு ஏன் நட்பு எனப்படுகின்றது? நட்பு என்ற சொல்லுக்குத் தோழமை என்றதோடு காதல் உறவு சுற்றம் என்ற பொருள்களும் உண்டு. காதலரிடையே உள்ள தொடர்பை நட்பு என்று இக்குறளில் வள்ளுவர் குறிக்கிறார். மனம் ஒருமித்து நட்புப் பூண்டவர்கள்தாம் காதலர் என்பவர்களாவர். நட்பு என்பது உயிர்த்துணையாக இருக்கவேண்டிய ஒன்றாகும். அக்காதல் நட்பின் நெருக்கத்தினைக் காதலன் வாயிலாக வெளிப்படுத்துகிறது.
இக்குறள். காதலை "நட்பு' என்னும் சொல்லால் குறிப்பிடுவதன் மூலம் காதலின் முதிர்ச்சி கூறப்பட்டது என்பர். காதல் கொண்டோர் நண்பர்களாக வாழ்வர் என்பது அவர்களிடை உயர்வு தாழ்வு இல்லாமல் சமஉரிமை கொண்டு பழகுவர் என்பதாகும்.
அகநானூற்றில், நிறைமுடி நெட்டையார் யாத்த பாடலும் காதலர் உறவை நட்பு என்றே கூறுகிறது இக்குறட்பாவுடன் கருத்து ஒற்றுமை உடையதாகவும் அப்பாடல் உள்ளது.:

நோங்கொல் அளியள் தானே யாக்கைக்கு
உயிரியைந் தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவ ரி யோளே .(அகநானூறு 339: 11-12)
உடலொடு உயிர் ஒன்றினால் ஒத்த நட்பினையும் அவ்வுயிர் இன்புற்று வாழ்தல் போலும் காதலையும் உடைய அதற்குச் சாதல்போலும் துன்பினைத் தரும் பிரிதல் அருமையை உடைய நம் தலைவி வருந்தி யிருப்பாளோ மிகவும் இரங்கத்தக்காள்..
யாக்கைக்கும் உயிர்க்கும் இயைந்த நட்பைப் போன்றது தனக்கும் தலைவிக்கும் உள்ள நட்பு என்கிறான் இந்தச் சங்கப்பாடல் தலைவன்.
காதலரிடை உள்ள உறவை நட்பு என்று குறுந்தொகையில் உள்ள பாடல் ஒன்றும் கூறுகிறது:
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர்அளவின்றே- சாரல்
கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே (குறுந்தொகை குறிஞ்சி 3)
மலைப் பக்கத்தில் உள்ள கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு தேனை வண்டுகள் செய்தற்கு இடமாகிய நாட்டைஉடைய தலைவனோடு யான் செய்த நட்பானது பூமியைக் காட்டிலும் அகலம் உடையது ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது) என்று காதலனுடனான நட்பின் உயர்வைச் சொல்கிறாள் தலைவி.
உடம்பொடு உயிரிடை உள்ள நட்பு எத்தன்மையது மற்று அத்தன்மையது இம்மங்கையோடு எமக்குள்ள நட்பு.என்பது இக்குறட்கருத்து.
நவீன அறிவியல் கூறும் உயிர் பற்றிய தகவல் என்னவென்றால்:
எல்லா சீ£வராசிகளும் சருக்கரைச் சத்து போன்ற மூலக்கூறுகளிலிருந்து எலெக் ட்ரான்களை எடுத்து அடினோசின் ட்ரை பாஸ்பேட் (ATP) என்ற என்சைமைத் தயா¡¢க்கின்றன. இந்த என்சைம் தான் செல்களின் உயிர் இயக்கத்திற்க்கு ஆதாரம். DNA (Desoxyribo Nucleic Acid) மூலக்கூறுகளீல் ATP, Desoxy Ribose Sugar என்ற அமைப்பில் உள்ளது..DNA வில்தான் உயிர் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த DNA உடம்பிலுள்ள எல்லா செல்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது. எனவே உயிர் என்பது உடம்பில் உள்ள எல்லா செல்களிலும் உள்ளது. உடலில் ஏதோ ஒரு இடத்தில் உயிர் தங்கியிருந்து கூட்டிலிருந்து பறவை வெளியேறுவதைப் போல் பறந்துவிடும் என்பது ஒரு பழைய நம்பிக்கையே.

உயிர் என்ற சொல்லுக்கு வடமொழி சீவன். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இந்த உயிர் அல்லது சீவன் என்ற சொல்லும் ஆத்மா என்ற சொல்லும் ஒரே பொருள் கொண்ட மாற்றுச் சொற்களாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

"தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்" என்று திருமூலர் கூறுகின்றார். மேலும்

“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத் தொன்றாமே” ( திருமந்திரம்`1974)

ஆகவே உயிர் என்ற சொல்லை திருவள்ளுவரும் ஆன்மாவைக் குறித்தே பயன்படுத்தினார் என்பது தெளிவு. உபநிடதங்களில் சில இடங்களில் ஆத்மாவைப் பறவையாக வருணித்திருக்கிறார்கள்.

முண்டக உபநிடதத்தில்

த்வா சுபர்ணா சயுஜா சகாயா
சமானம் வ்ருக்க்ஷம் பா¢ஷஸ் வஜாதே
தயோரந்யம்: பிப்பலம் ஸ்வாத்வத் ய
நக்ஷனன்யோ அபிச்சா கஷீதி முண்டக உபநிடதம் 3: 1

சீவாத்மாவையும் பரமாத்மாவையும், ஒரே மரத்தில் அமர்ந்திருக்கும் இரு தோழப் பறவைகளுக்கு ஒப்பிடப்படுகிறது.
.அப்பறவைகளில் ஒன்று மரத்தின் கனிகளை உண்கின்றது. மற்றதோ தனது தோழனை வெறுமனை நோக்கிக் கொண்டிருக்கிறது. குணத்தால் ஒரே மாதிரியான இவ்விரண்டு பறவைகளில், ஒரு பறவை சடவுடல் எனும் மரத்தின் பழங்களால் கவரப்பட்டுள்ளது; மற்ற பறவையோ தனது நண்பனின் செயல்களை வெறுமே நோக்கிக் கொண்டுள்ளது. பரமாத்மா சாட்சிப் பறவை, சீவாத்மா உண்ணும் பறவை. அவர்கள் நண்பர்களே என்ற போதிலும், அவர்களில் ஒருவர் எஜமானரும் மற்றவர் சேவகனுமாவர். இந்த உறவினை சீவாத்மா மறந்துவிடுவதே மரம் விட்டு மரம் அல்லது உடல் விட்டு உடல் என்று அது தனது நிலையை மாற்றிக்கொள்வதற்குக் காரணமாகிறது.

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு யானை வந்து அதன் இலைகளைத் தின்றுகொண்டு அதன் நிழலில் வசித்தது. அதற்குப் பின் அங்கே ஒரு குரங்கு வந்து தங்கியது. உடனே யானை எதிர்ப்பு தெரிவித்தது. நான் தான் முதலில் வந்தேன் என்று அதற்குக் காரணமும் சொன்னது. குரங்கு கேட்டது ’இந்த மரத்தின் பழங்களை நீ பார்த்து இருக்கிறாயா?’. யானை நான் பார்த்ததில்லை என்று சொன்னது. அப்படியானால் நான் உனக்கு முன்னால் வந்தேன். அந்தப் பழங்களை எல்லாம் சாப்பிட்டேன். இப்போது இலை மட்டுமே எஞ்சியிருக்கிறது. உடனே யானை. ‘’குரங்காரே நீரே மூத்தவர். நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம்’’ என்று சொன்னது.
கொஞ்ச நாள் கழித்து ஒரு முயல் வந்து அங்கே உட்கார்ந்தது. யானையும் குரங்கும் ஆட்சேபம் தெரிவித்தன. முயல் கேட்டது ‘’நீங்கள் இந்த மரத்தின் கன்றைப் பார்த்தது உண்டா?’’ என்று. அவை இரண்டும் இல்லை என்று சொன்னவுடன் ‘’நான் வந்த போது மரக் கன்றுதான் இருந்தது. என் உயரம்தான் மரமே வளர்ந்து இருந்தது. ஆகையால் இந்த மரம் எனக்கே உரியது’’ என்றது. யானையும் குரங்கும் அதனை நண்பனாக ஏற்று நீயே ‘மூத்தவர்’. நாங்கள் உன்னுடன் வாழ்கிறோம் என்றன.
இவர்கள் இப்படிப் பேசி முடிப்பதற்குள் மரத்தின் உச்சியில் இருந்து கபிஞ்சலா பறவை கூச்சல் போட்டது. ‘’நிறுத்துங்கள் உங்கள் பேச்சை. நான் பழம் தின்று ஒரு கொட்டையைத் துப்பினேன் அதுதான் இந்த மரமாக வளர்ந்தது’’ என்றவுடன் யானை குரங்கு முயல் ஆகிய மூன்றும் அந்தப் பறவையின் தலைமையை ஏற்றுக் கொண்டு சுகமாக நண்பர்களாக வாழ்ந்தன. ‘’இந்த நாலு பேரில் கபிஞ்சல பறவை என்பது புத்தரின் முந்தைய பிறப்பில் போதிசத்துவர்’’ — என்று ஜாதகக் கதை முடிகிறது. ஆக கபிஞ்சல என்பது புத்தா¢ன் ஆத்மா. இப்படிப் பறவையை ஆன்மாவுக்கு ஒப்பிடுவது புத்தருக்கும் முந்தைய உபநிடதங்களிலேயே இருக்கிறது.

திருவள்ளுவரும் இப்பூதவுடலில் தங்கியிருக்கும் ஆத்மாவையே கூண்டில் அடைபட்டிருக்கும் பறவைக்கு ஒப்பிடுகிறார்.

அறிவியலின் துணை இல்லாத சமயங்கள் குருடாகும், சமயங்களின் துணை இல்லாத அறிவியல் ஊனமாகும் என்று சென்ற நூற்றாண்டின் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறுகிறார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard