Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிள்ளையார் “பிறப்பு”


Guru

Status: Offline
Posts: 7467
Date:
பிள்ளையார் “பிறப்பு”
Permalink  
 


🐘பிள்ளையார் “பிறப்பு” பற்றிய உண்மை வரலாறு.

பிள்ளையாருக்குத் தலை வெட்டப்பட்டு யானைத் தலை பொருத்தப்பட்டது என்பது சரியா?
#விநாயகரின்_தோற்றம்_பற்றிய_விளக்கம்
- சந்த்ரு ராஜமூர்த்தி

பிற மதத்தவர்களும், நாத்திகர்களும் குறிப்பாக தி.மு.க காரர்கள் நம் மதத்தைத் தாக்கிக் கேவலப்படுத்த நினைக்கும்போதெல்லாம் அவர்கள் முதலில் கையில் எடுப்பது பிள்ளையாரின் “பிறப்பு” பற்றிய கதை தான் ( “பிறப்பு” என்ற பிரயோகமே தவறு. திருவவதாரம் என்பதே சரி).

லிங்க புராணம், ஸ்கந்த புராணம், வராஹ புராணம், ப்ரஹ்மவைவர்த்த புராணம், வாமன புராணம், ப்ருஹத்தர்ம புராணம் முதலிய புராணங்களில் விநாயகரின் திருவவதாரத்தைப் பற்றி வெவ்வேறு
வரலாறுகள் கூறப்பட்டிருப்பினும், பிரபல்யமாக வழங்கி வரும் வரலாறு சிவ புராணத்தில் உள்ள “ தலை வெட்டிய கதை” தான். இக் கதைதான் பிற மதத்தவர்களின் பல விமர்சனங்களிற்கும் கேலிகளிற்கும் இலக்காகி வருகின்றது.
இவ் வரலாற்றைச் சற்று அலசி ஆராய்வோம்.

அனைவரும் அறிந்த வரலாறு என்பதால் இதன் சுருக்கத்தை மட்டும் சிவ புராணத்தில் உள்ள படி தருகின்றேன்.

ஒரு சமயம் உமாதேவியார் தமது அந்தப்புரத்தில் நந்திதேவரை வாயிலில் காவலுக்கு வைத்து விட்டு நீராடிக்கொண்டிருந்தாள். அப்போது சிவபெருமான் அங்கே வந்தார். வந்தது தனது எஜமான் என்பதால் நந்தியும் அவரை நிறுத்தவில்லை. குளிக்கும்போது ஈசன் வந்ததைக் கண்டு தேவி நாணமுற்றாள். இனி இவ்வாறு நடக்கக்கூடாது என்பதற்காக தனது உடலில் இருந்த அழுக்கையெல்லாம் சேர்த்து,
தனது கட்டளையை மீறாதிருக்கக்கூடிய ஒரு பாலகனைப் படைத்து அவனை அந்தப்புரத்தின் வாசலில் காவலுக்கு நிறுத்தினாள். சிவனார் அங்கே வந்த சமயத்தில், அவரை உள்ளே விட மறுத்தான் அந்த பாலன். "யாரடா நீ?" என்று வினவிய பரமசிவனை “ நான் பார்வதியின் மைந்தன்! நீ உள்ளே போக முடியாது!” என்று கூறி அவரைத் தண்டத்தால் அடித்து விரட்டுகின்றான். ஈசன் கணங்களை அனுப்புகின்றார். கணபாலனுக்கும் கணங்களுக்குமிடையே பெரிய வாக்குவாதம் நடந்தது.

வெளியே நடக்கும் கலவரத்தைப் பற்றி தோழிவாயிலாகத் தெரிந்து கொண்ட தேவி, ஈசனை உள்ளே விடாமல் நிறுத்தும்படி தோழியின் மூலம் பாலனுக்கு கட்டளை பிறப்பிக்கிறாள். தனது அன்னையின் கட்டளையை செவிமடுத்த பாலகன் கணங்களோடும் மற்ற தேவர்களோடும் கடுமையாகப் போர்புரிந்து வெற்றி பெறுகிறான்.
யாராலும் அவனுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில் சூழ்ச்சியால் தான் அவனைக் கொல்லமுடியும் என்று தீர்மானித்து, அவன் விஷ்ணுவோடு போர்செய்யும் தருணம் பார்த்து அந்த பாலனின் தலையை ஈசன் சூலத்தால் கொய்தார். தன் மகன் வஞ்சனையால் கொல்லப்பட்டதை கேள்வியுற்ற பார்வதி ஆயிரக்கணக்கான சக்திகளைப் படைத்து தேவர்களையும் உலகங்களையும் அழிக்கும்படி பணிக்கிறாள். இந்த சக்திகளின் தாக்குதல்களை தாங்க முடியாத சிவனும் பிற தேவர்களும் தேவியை சாந்தமாகும்படி பிரார்த்திக்கின்றனர். ஈசன் தனது கணங்களை அனுப்பி வடக்கே தங்களுக்கு அகப்படும் முதல் உயிரினத்தின் தலையை வெட்டி கணபாலனின் உடலோடு பொறுத்துமாறு கட்டளையிடுகிறார்.
வடக்கே சென்றபோது முதலில் ஒரு ஒற்றைக்கொம்புடைய யானையே அகப்பட்டது. அதன் தலையை பாலனுக்கு பொருத்தி அவனை உயிர்ப்பிக்கிறார் ஈசன்.

இக் கதையில் பல சிக்கல்கள் உள்ளன:

1. முதற்கண் ஈசனிடம் தனது மனக்குறையைக் கூறாது எதற்காக தேவி புதிதாய் ஒரு காவலனைப் படைக்க வேண்டும்? அவரிடம் கூறியிருந்தால் பிரச்சனை அக்கணமே முடிந்திருக்குமே?

2. நிர்மலையான அம்பிகையின் திருமேனியில் எவ்வாறு ஒரு பாலனைப் படைக்கும் அளவிற்கு மலம் (அழுக்கு) இருந்திருக்கும் 😂?

3. முற்றறிவுடைய ஸர்வஜ்ஞனான பரமேஸ்வரனுக்கு எவ்வாறு அந்த பாலன் யார் என்று தெரியாமல் இருந்திருக்கும்?

4. சர்வவல்லமை உடைய ஈசன் எவ்வாறு ஒரு கணபாலனிடம் தோற்று ஓடமுடியும்?
கேவலமான சூழ்ச்சி செய்து ஒரு பாலகனை எவ்வாறு கொல்லமுடியும்?

5. கணங்களுக்கும் கணபதிக்கும் நடந்த கலவரத்தை அறிந்த தேவி எதற்கு அதை நிறுத்தாமல் “ஈசனை உள்ளே விடாதே. கணங்களுடன் போர் செய்!” என்ற கட்டளையைப் பிறப்பிக்க வேண்டும்?

6. ஜகதம்பாவாகிய அம்பிகை தன் ஒரு பிள்ளை கொல்லப்பட்டதற்காக உலகத்தையே அழிக்க முற்படுவாளா? இது தேவியைக் கேவலப்படுத்துவதாக ஆகாதா?

7. சரி, தலைவெட்டப்பட்டாலும் ஈசனால் புதியதாக ஒரு தலையை சிருஷ்டிக்க முடியாதா?
எதற்காக யானைத் தலையைப் பொருத்தவேண்டும்? (இப் புராண வரலாற்றின்படி எந்த ஒரு அசுரனை அழிப்பதற்காகவும் கணபதி தோன்றவுமில்லை, இங்கு கணபதிக்கு யானைத் தலை பொருத்தியதற்கு எந்தவொரு விசேட காரணமுமில்லை.)

விநாயகரைப் பற்றிய மிகப் பழமையான குறிப்புகள் யஜுர் வேதத்தின் மைத்ராயணீய சம்ஹிதை(2.6-9 )
மற்றும் தைத்திரீய ஆரண்யகம் (10.1 ), சாமவேதத்தின் சாமவிதான ப்ராஹ்மணம், அதர்வண வேதம்(அதர்வசிரஸ்), போதாயன க்ருஹ்ய சேஷ சூத்ரம், போதாயன தர்ம சூத்ரம்,
கோபில ஸ்ம்ருதி, காத்யாயன ஸ்ம்ருதி, லௌகக்ஷி ஸ்ம்ருதி, யஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி முதலியவற்றில் உள்ளன. ஆனால், இந்த #தலைவெட்டிய_வரலாறு_ஒன்றில்_கூட_கிடையாது.

விநாயக பரத்வம் கூறும் விநாயக புராணம் எனப்படும் பார்கவ புராணம் மற்றும்
முட்கள புராணத்திலும் இந்த வரலாறு கிடையாது.

விநாயகரைப் பற்றிப் பாடிய ஔவையாரோ, மூத்தநாயனார் திரு இரட்டை மணிமாலை பாடிய கபிலதேவ நாயனாரோ, விநாயகரைத்
தங்கள் தேவாரத்தில் குறிப்பிட்ட மூவரோ, பிற திருமுறை ஆசிரியர்களோ, அருணகிரிநாதரோ, ஆதிசங்கரரோ
தங்களது பாடல்களில் இக் கதையைக் குறிப்பிடவேயில்லை.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய காணாபத்ய ஆச்சார்யரான மோரயா கோசாவியோ, பிற காணாபத்ய மத ஆச்சார்யர்களோ இக் கதையைக் குறிப்பிட்டதேயில்லை.

எந்தப் பழமையான விநாயகர் ஆலயத்திலும் இக் கதை சிற்பமாக வடிக்கப்பட்டதுமில்லை.

🐘சரி, இது பொய்யென்றால் உண்மை வரலாறுதான் எது?

சிவபெருமான் அருளிய சுப்ரபேதாகமத்தில் விநாயகரிடமே அவர் தோன்றிய வரலாற்றை விபரிக்கின்றார்:

ஏதோ தவாஹமுமாசார்தம் க்ரீடார்தம் ஹிமவத்வனே |
கரேணுஶ்ச கஜேந்த்ரேன சம்போகமகரோத்ததா:|
யத்த்ருச்யா து தான்த்ருஷ்ட்வா ததா காரமகாமஹம் ||
கரேன்வராக்ருதின்சோமாம் ததா க்ரீடாமஹம் ப்ருஶம் |
தஸ்யாந்து கர்ப்பமததாத் தஸ்மின் காலே
தபோபவேத் || 43.1 - 2

யாம் ஒரு களிறாகவும்(ஆண்யானை) உமையவள் ஒரு பிடியாகவும்(பெண்யானை)
உருமாறி உம்மைத் தோற்றுவித்தோம்.

ஆகமத்தில் உள்ள இவ் வரலாற்றைத் தான் ஞானபோனகராகிய சம்பந்தப் பெருமான் தமது தேவாரத்தில்,

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே

அதாவது, "மிகுதியாக வழங்கும் கொடையே தமக்கு அழகைத் தரும் என நினையும் வள்ளற் பெருமக்கள் வாழும் வலிவலத்தில் உறையும் இறைவன், உமையம்மை பெண்யானை வடிவுகொள்ள, தான் ஆண்யானையின் வடிவு கொண்டு தன் திருவடியை வணங்கும் அடியவர்களின் இடர்களைக் கடியக் கணபதியைத் தோற்றுவித்தருளினார்" என்று அருளிச்செய்தார்.

இவ் வரலாறு ஸ்கந்த புராணத்தின் சிவரஹஸ்யகண்டத்தின் தக்ஷ காண்டத்தின் 67வது அத்தியாயத்தில் விரிவாக உள்ளது :

கஜமுகன் என்ற அரக்கனால் துன்பமுற்ற தேவர்கள் பரமேஸ்வரனிடம் சரணடைந்தார்கள்.
பரமேஸ்வரன் கயிலை மலையின் சித்ர மண்டபத்தின் சுவற்றில் தீட்டப்பட்டுள்ள ஒரு ப்ரணவ (ஓம்) சித்திரத்தை நோக்கினார். அவர்பார்வையின் வீக்ஷண்யத்தினாலே அந்தப்
ப்ரணவச் சித்திரத்திலிருந்து சிவனின் அம்சமாக ஓர் ஆண் யானையும் சக்தியின் அம்சமாக ஒரு பெண் யானையும் தோன்றினர். அவர்களிடமிருந்து ப்ரணவஸ்வரூபமான விநாயகப்பெருமான் யானை முகத்தோடு தோன்றினார்:

விலோக்ய ப்ரணவம் சாத்ர க்ரமாத் தமவலோகயத் |
சம்புனா விக்ஷணாத் தஸ்மாத் ப்ரணவாத் கஜதம்பதி || 67.3
சாண்டார்க கோடி ஸம்காச: க்ரிடதோர் கஜயுக்மயோ |
சோயம் விநாயகோ தேவம் தேவிமபி முதா ததா|| 67.7

ஆக, தோன்றும்போதே பிள்ளையார் யானைமுகத்துடன் தான் தோன்றினார். லிங்க புராணத்திலும் யானை முகத்தோடு கணேசர் படைக்கப்பட்டதாக உள்ளது.
மனிதமுகத்தோடு தோன்றிப் பின்பு இறைவன் அவருக்கு alteration செய்யவில்லை. தவறாகப் படைத்து விட்டு பின்பு patching tinkering செய்வதற்கு இறைவன் ஒன்றும் மனிதனில்லை😂

🐘அது சரி, எதற்காக யானைமுகத்துடன் கணேசரைப் படைக்கவேண்டும்?

விநாயகரின் வடிவத்தின் ரகசியம் மற்றும் அவசியம்:

எந்தவொரு தேவராலும், மனிதராலும், அசுரராலும், ராக்ஷசர்களாலும், விளங்குங்களாலும், பக்ஷிகளாலும் தன்னை வெல்லமுடியாது என்ற வரத்தையும், அறுக்கும் ஆயுதம், வெட்டும் ஆயுதம், அடிக்கும் ஆயுதம் மற்றும் எறியப்படும் ஆயுதங்களால் தனக்கு மரணம் நேரக்கூடாது என்ற வரங்களையும் ஈசனிடமிருந்து கஜமுகாசுரன் பெற்றுக்கொண்டான்.

ஆயுதானபி பூரிணி மம நானாவிதான்யபி |
மாபுன்ம்ருதிர் மஹேசாந மம சந்தாடனாயுதை:||
ததாபரேஷாம் பஹு பிஸ்சேதன க்ருந்தனாயுதை:|
விக்ஷேபணயுதைரண்யைரேவம் நானாவிதைரபி ||
தேவாதானாம் மனுஷ்யானாம் அஸுராணாஞ்ச ராக்ஷஸாம் |
ம்ருகபக்ஷி புஜங்கானாம் அன்யேஷாம் பலிநாமபி||
ஸமரே மே பயமாபூத்யத்ர குத்ராபி துர்ஜயே |
66.1-2

விநாயகரின் வடிவத்தைப் பாருங்கள் :

யானைத் தலை - விலங்கு
வயிறு வரை தேவ உடல்- தேவன்
வயிற்றுக்கு கீழே - பூத கால்கள்

அசுரன் எந்தவொரு தேவராலும், மனிதராலும், அசுரராலும், ராக்ஷசர்களாலும், விலங்குங்களாலும், பக்ஷிகளாலும் தன்னை வெல்லமுடியாது என்று வரம் பெற்றான். ஆனால், பிள்ளையார் தேவரும் அல்லர்; விலங்கும் அல்லர்; பூதமும் அல்லர்; மூன்றும் கலந்த வடிவம்.

அசுரனின் வரத்தை முறியடிக்க
சிவபெருமான் செய்த ஏற்பாடே விநாயகரின் வினோதத் தோற்றம். பரமேஸ்வரன் கஜமுகாசுரனை வதம் செய்ய விநாயகரை அனுப்பினார்.

எந்தவொரு ஆயுதத்தாலும் தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது என்று வரம் பெற்றிருந்தான்.
விநாயகரோ தனது தந்தத்தை உடைத்து அதை அவன் மேலே பிரயோகித்தார். அவனை ஜெயித்து பெருச்சாளியாக்கித் தனது வாஹனமாக ஏற்றுக்கொள்கிறார்.

இவ் வரலாற்றையே அப்பர் பெருமான்,
"கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்
கயாசுரனை யவனாற்கொல் வித்தார் போலும்"
என்று பாடினார்.

இதிலிருந்து ஆகமமும் அடியவர்களும் கூறும், பிள்ளையாரின் திருவவதார வரலாறே உண்மை வரலாறு என்பதும் “தலை வெட்டியகதை” பிற்காலத்தில் புனையப்பட்டது என்றும் தெளிவாகப் புலப்படுகின்றது.

போலிக் கட்டுக்கதைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கும்வரை நாமும் நம் மதமும் கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்காகிக் கொண்டேதான் இருக்க நேரிடும்.

முதலில், குழந்தைகளிற்கு இத் தவறானகதையினைக் கூறுவதை நிறுத்துங்கள்.
இக் கதையுள்ள புத்தகங்களையும் தவிர்த்துவிடுங்கள்.

(கணபதியின் மூர்த்திபேதமான மயூரேசர் வடிவத்தில் அவருக்கு மனித முகம் உண்டு.
நரமுக விநாயகர் இந்த அவசரத்தை குறிக்கும்.)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard