இருபதாம் நூற்றாண்டில் திருக்குறள் பற்றிய ஆய்வில் பெரும் புரட்சி ஏற்பட்டது. குறள் பற்றி நூற்றுக்கும் மேலான நூல்கள் வெளிவந்தன. அய்ம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் குறள் மொழிபெயர்க்கப் பட்டது. நூற்றுக்கணக்கான உரையாசிரியர்கள் குறளுக்குப் புத்துரையும் தெளிவுரையும் கண்டனர். திருக்குறளுக்குப் பல சிறப்புக்கள் இருக்கின்றன. இந்த சிறப்புக்கள் காரணமாகவே திருக்குறள் காலம் தோறும் கற்றோரால் போற்றி வரப்பட்டுள்ளது. திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட முதல் நூல். அதில் அய்ம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன. திருக்குறளின் முதல் பெயர் முப்பால். பின்னால் வந்தவர்களே அதன் ஆசிரியரின் பெயரை நூலுக்கு வைத்துவிட்டார்கள். ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகள், ஏழு சீர் களைக் கொண்டது. திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் - தமிழ், கடவுள். திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர். முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு. போப். திருக்குறளுக்கு எழுதப்பட்ட பழைய உரைகள் பத்து என்பது மரபு. திருக்குறளின் பாடம் முதன்முதலில் நமக்குத் தெரிய வருவது மணக்குடவர் (10 ஆம் நூற்றாண்டு) உரை வழியாகவே. பரிமேலழகரின் உரை பத்தாவது. மணக்குடவரின் உரைக்குப் பின் மூன்று நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டது. மணக்குடவரின் உரையைப் பரிமேலழகர் பல இடங்களில் திருத்தி அமைக்கின்றார். திருக்குறளின் அமைப்பு முறையிலும் மாற்றம் செய்துள்ளார்.
பரிமேலழகர் உரை சிறப்படைந்ததற்கு காரணமாகக் கூறப்படுவன இவை:
பரிமேலழகர் உரையில் மிக நுட்பமான ஆழ்ந்த புலமை விளங்குகிறது. சிறப்பான உரை நுட்பம் கொண்டுள்ளது. அரிய இலக்கண நுட்பம் பளிச்சிடுகிறது.
ஆனால் திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும் கால்கோள் இட்டதைத் தொடர்ந்து பரிமேலழகர் திருக்குறளைத் தமிழ்ப் பண்பாட்டு நூலாகக் கருதாமல், அதன்மீது ஆரியப் பண்பாட்டையும் மதச் சாயலையும் கருத்தியலையும் திணித்தார் என்னும் குற்றச்சாட்டு எழுந்தது. பரிமேலழகர் வைணவ சமய பிராமணர் என்பது இந்தக் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்த்தது.
முப்பால் என்னும் பெயர் கொண்ட திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பால்களை மட்டுமே உள்ளடக்கமாகக் கொண்டிருந்தாலும் அது "வீடு" பற்றியும் பேசுகிறது என பரிமேலழகர் வலிந்து உரை கண்டார்.
பரிமேலழகர் ஆரியப் பண்பாட்டுக்கு உரிய தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்னும் நான்கு புருடார்த்தங்களின் தமிழாக்கமே திருக்குறள் என்றும் வள்ளுவர் மனுநீதி சாத்திரத்தைத் தான் தமிழில் தருகிறார் என்ற விமரிசனம் முன்வைக்கப்பட்டது.
காட்டாக பரிமேலழகர் திருக்குறளுக்கு எழுதிய உரைப் பாயிரத்தில் 'அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலும் ஆகும்’ என்று சொல்கிறார். அது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்ற மூன்று என்று சொல்லும் பரிமேலழகர் "அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரம்மசரியம் முதலிய நிலைகளில் நின்று அவ்வவற்றுக்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்’ என்று சொல்கிறார். அத்துடன் தண்டம் என்பது ‘நால்வகை நிலத்ததாய் வருணந்தோறும் வேறுபாடு உடையது’ என்கிறார். அதாவது குறளின் நீதிக்குப் பதில் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனு நீதியைக் கைக்கொள்கிறார்.
திருக்குறள் மனு தர்மத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல் அல்ல. வள்ளுவர் நால்வகை வர்ணங்களையோ, அந்தந்த வர்ணத்தாருக்கு உரிய சிறப்பு ஒழுக்கத்தையோ பற்றிப் பேசாமல் நாடு, இனம், சமயம் கடந்து அனைத்து மாந்தருக்கும் பொதுவான அறநெறியை உரைக்கிறார். பிறப்பு ஒக்கும் என்கிறார். ஆனால் பரிமேலழகர் தமது உரையில் வள்ளுவர் வர்ணாசிரம முறையை ஆதரிப்பதாகக் காட்டுகிறார்.
பரிமேலழகர் பெண்கள் இயல்பு பற்றி குறளில் இல்லாத, தவறான, விளக்கம் தந்துள்ளார். குறள் 61 உரையில் 'அறிவறிந்த மக்கட்பேறு' என்ற தொடருக்கு ''அறிவறிந்த' என்றதனான் 'மக்கள்' என்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது' என்று கூறி, 'இதனால் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது' என மேலும் ஒரு மனுநீதிக் கருத்தைத் திணிக்கிறார்.
குறள் 68 இல் 'கேட்ட தாய்' என்பதற்கு 'பெண்ணியல்பால் தானாக அறியாமல் கேட்ட தாய்' என சிறப்பு உரையில் கூறியுள்ளார். அதாவது பெண்ணிற்கு கல்வி, கேள்விகளால் வரும் அறிவில்லை எனவும் அதனால் தாய் தன் மகன் சான்றோனாய்த் திகழும் சிறப்பத் தானே அறிய மாட்டாள் எனவும் ஊர்ப்பெரியோர் வாயிலாகக் கேட்டே அறிவாள் எனவும் அவ்வுரை கேட்டமையால் பெரிதும் மகிழ்வாள் எனப் பரிமேலழகர் உரைக்கிறார். இது முற்றிலும் வள்ளுவத்திற்கு எதிரான கருத்து ஆகும்.
"திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் என எடுத்துக்கொள்ளப்பட்டது. அது தான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடு உடைமையின்" எனவும் "அஃதாவது - தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையரால்" எனவும் ஆங்காங்கே குறட்பாக்களின் உரை விளக்கங்களில் வருணாசிரம கருத்துக்களை - வள்ளுவர் கருதாததை - வலிந்து நுழைத்து பரிமேலழகர் வலிந்து உரை எழுதியிருக்கிறார்.
காமத்துப் பாலில் 'பரத்தையிற் பிரிவு ஊடலுக்கு ஒரு காரணம்' என்று வள்ளுவர் சொல்லாததைச் சொல்லி புலவி, புலவிநுணுக்கம், ஊடலுவகை அதிகாரங்களுக்கு துறை வகுக்கும்போது உரை காண்கிறார்.
பரிமேலழகர் கொண்ட சில பாடங்கள் மணக்குடவருடைய பாடங்களினும் வேறுபட்டுள்ளன. அவற்றுள் சில மணக்குடவரினும் சிறந்தவை. பிற பாடங்களில் பரிமேலழகர் உரை ஏற்கமுடியாதனவாக உள்ளன.
'பலவிடங்களில் பரிமேலழகர் இலக்கண அமைதிக்காக இலக்கியத்தை முறித்து இயற்கைக்கு மாறான பொருள் கொண்டுள்ளார்' என்று தமிழறிஞர் ரா. பி. சேதுப்பிள்ளை கருதுகிறார்.
எனவே, பரிமேலழகர் உரையில் அடங்கியிருக்கின்ற ஆரியக் கருத்தியலை மறுத்து, தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ப திருக்குறளுக்கு விளக்கம் தர வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது.
ஒரு நூலுக்கு நூற்றுக்கணக்கான உரைகள் எழுதப்பட்டது ஏன்? அதற்கான தேவை என்ன? திருக்குறளுக்கு பல உரைகள் எழுதப்பட்டதற்கு முக்கிய காரணம் சில குறள்களின் பொருளை திருவள்ளுவர் ஊகத்துக்கு விட்டுவிட்டார். காட்டாக,
"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (குறள் 41)
கலைஞர் உரை: பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.
மு.வ உரை: இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
சாலமன் பாப்பையா உரை: மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.
பரிமேலழகர் உரை: இல்லறத்தில் வாழ்பவன், பிரமச்சாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி ஆகிய மூவர்க்கும் துணையாவான்.
மணக்குடவர் உரை: இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்.
இன்னொரு குறள்,
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. (குறள் 377)
வகுத்தான் என்பதற்கு 'தெய்வம்' என பரிமேலழகரும் 'விதானம் பண்ணினவர்' என மணக்குடவரும் 'முன்னஞ் செய்தார்' எனக் காலிங்கரும் 'ஊழ்' என மு.வ. அவர்களும் 'வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறி' எனக் கலைஞரும் 'இறைவன் விதித்த விதி' என்று சாலமன் பாப்பையா அவர்களும் பொருள் தருகின்றனர்.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. (குறள் 340)
துச்சில் இருந்த - குடியிருந்த (காலிங்கர்) முத்தி ஸ்தானம் (மணக்குடவர்) இருப்பிடம் (மு.வ), புகலிடம் (கலைஞர்) உடம்பினுள் குடியிருந்த உயிருக்கு வேறு நிலைத்திருக்கும் வீடு இல்லை போலும்! (பரிமேலழகர்). இப்படிக் புக்கில் என்பதற்கு வீடுபேறு என்று வலிந்து பொருள் கொண்டுள்ளார் பரிமேலழகர்.
தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், "பிறவாழி" எண்குணத்தான், பார்ப்பான், புத்தேளிர், ஊழ், தெய்வம், மறுமை, புத்தேளுலகு, எழுபிறப்பு, அறத்தாறு, வகுத்தான் போன்ற குழப்பம் தரும் சொற்கள் குறளில் காணப்படுன்றன.
வள்ளுவர் எழுதியுள்ள குறட்பாக்கள் சில வற்றில் எண்கள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்று தெளிவாகக் காட்டுவார். சில குறட்பாக்களில் அவ்வாறு குறிப்பிடாமல், நம்முடைய ஊகத்திற்கே விட்டுவிடுவார். காட்டாக,
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். ( அறன் வலியுறுத்தல் - 35 )
தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின். ( வான்சிறப்பு - 19 )
குறளின் முதல் அதிகாரம் முதல் குறளில் வரும் 'ஆதிபகவன்' என்ற சொல் பற்றி ஒத்த கருத்து இல்லை. ஆதிபகவன் என்ற தொடர் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. சங்க காலத்துக்குப் பின்னரும் ஆதிபகவன் என்ற சொற்றொடர் சமயங்களின் முழுமுதற் கடவுளை குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படவில்லை. திருக்குறளைத் தவிர வேறு எந்த பழந்தமிழ் இலக்கியங்களிலும் ஆதிபகவன் என்ற சொற்றொடர் கையாளப்படவில்லை. இரட்டைக் காப்பியங்களில் பகவன் என்ற சொல் அருகனையும் (சமணம்) புத்தரையும் குறிப்பிடுகின்றது.
திருவாய்மொழியில் அறுவகைச் சமயத்தின் நெறியை ஏற்று உரைத்தவனாக "ஆதியம் பகவன்" குறிப்பிடப்படுகிறான். (திருவாய்மொழி 1_3_5)
வைதீகக் கடவுள்களில் ஒருவரேனும் ஆதிபகவன் என்று அழைக்கப்படுவதில்லை. மேலும் எஞ்சிய 9 குறள்களில் காணப்படும் (1), வாலறிவன் (2), மலர்மிசை ஏகினான் (3), வேண்டுதல் வேண்டாமை இலான் (4), இறைவன் (5, 10), பொறிவாயில் அய்ந்தவித்தான் (6), தனக்குவமை இல்லாதான் (7), அறவாழி அந்தணன் (8), எண்குணத்தான் (9) என்ற சொற்கள் யாரைக் குறிப்பிடுகின்றன என்பதில் முரண்பாடு காணப்படுகிறது. இந்தச் சொற்கள் ஒரு முழுமுதற் கடவுளைக் குறிப்பிடவில்லை என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் இந்தச் சொற்றொடர்கள் சமண, பவுத்த, வைதீக, கிறித்துவ மதத்தினர் தாங்கள் வழிபடும் கடவுளரைக் குறிப்பதாகப் பொருள் கொள்கின்றனர்.
இதனால் போலும் செக்கிழுத்த சிதம்பரனார் குறளின் முதல் மூன்று அதிகாரங்களும் இடைச் செருக்கல் என்கிறார்.
திருக்குறளின் மூலப் படி கிடைக்கவில்லை. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்துக்குப் பின்னர் ஆயிரம் ஆண்டு கழித்து திருக்குறளுக்கு உரை செய்த ஆசிரியர்களது படிகளே எமக்குக் கிடைத்துள்ளன.
மேலும் திருக்குறளை பலகாலங்களில் ஏடு பெயர்த்தெழுதியதால் பாடவேறுபாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. சிலர் தம் சமயம், கொள்கை ஆகியவற்றிற்கு மாறானவற்றை நீக்கிவிட்டு, தம் கருத்திற்கு ஏற்ப மாற்றினர். பழைய நூல்களைப் பதிப்பித்தவர்கள், கிடைக்காத பகுதிகளுக்கு, தாமே எழுதி அவ்விடத்தை நிரப்பியதாலும் மூலபாடம் திருத்தம் கண்டது. இவ்வாறான இடைச்செருகல் குறைகள் ஏற்பட ஏதுவாயிற்று.
பொருட்சிறப்பு இல்லை என்று கருதி பாடதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. யாப்பு அமைதிக்காவும் எதுகை மோனை நயம் என்ற காரணம் கொண்டும், பல்வேறு பாடத் தவறுகள் நடந்தன.
இதனால் தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் (குறள் 55) போன்ற கருத்துக்கள் இன்று மறு ஆய்வுக்கு உரியனவாக கொள்ளப்பட்டுள்ளது.
பரிமேலழகரை உயர்த்தித் திருக்குறளைத் தாழ்த்தும் எண்ணம் சிலர் கொண்டிருந்ததால் அதற்கு எதிர்வினையாக பரிமேலழகரின் உரைக்கு எதிர்ப்பு எழுந்தது.
அதனால் அவரது உரையின் நிறைகுறைகளை ஆராயும் போக்குத் தோன்றியதோடு, தனித்தமிழ் உணர்வும் கால்கொள்ளத் தொடங்கியது. திராவிட - பகுத்தறிவு கோட்பாட்டாளர்கள் புதிய கண்ணோட்டத்தில் திருக்குறளுக்கு உரை எழுதினார்கள்.
இருந்தும் ஒரு குறளுக்கு ஒரு உரைதான் இருக்க வேண்டும். திருக்குறளுக்கு திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கை, அவர் வாழ்ந்த கால நம்பிக்கைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு உரை எழுத தமிழ் அறிஞர்கள் அடங்கிய குழு நியமிக்கப் படவேண்டும். அந்தக் குழு காய்தல் உவத்தல் இன்றி உரை எழுத வேண்டும். தற்காலத்துக்கு சில குறள்கள் பொருந்தி வராவிட்டால் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். மேலும் உரைகள் பெருகாதிருக்க இதுதான் ஒரே வழி.