மொழிபெயர்ப்பு – ரங்கராஜன் சுந்தரவடிவேல்
நான் இந்த ஆய்வினை மேற்கொள்ளும் முறையைப் பற்றிய திட்டத்தை உங்கள் முன் வைக்கிறேன். கி.பி.3000-த்தில் வாழ்கிற ஒரு மாணவன் ஆபிரகாம் லிங்கன் என்று ஒரு மனிதர் இருந்தாரா? என்றும், அவர் செய்ததாகக் கூறப்படுபவை உண்மையா? என்றும் பரீட்சிக்க விரும்பினால் என்ன செய்வான்?
எந்தவொரு மனிதனுக்கும் பிறப்பிடமும், பிறந்த நாளும் இருக்கும். லிங்கனைப் பற்றிய அனைத்து ஆவணங்களும் இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இது போதுமானதாய் இராவிடினும் முக்கியமான ஆதாரங்களுள் ஒன்று.
இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றியோ, பிறந்த தினத்தைப் பற்றியோ தெளிவான ஆதாரங்கள் இல்லை. இவற்றைப் பற்றிய ஒருமித்த கருத்து என்றைக்கும் ஏற்பட்டதில்லை. பல குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன. இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி என்று நிரூபிக்க முடியாது. பல காலங்களில் இயேசுவின் பிறந்த நாள் என்று பல நாட்கள் கிறிஸ்தவர்களால் கருதப்பட்டு, கொண்டாடப்பட்டு வந்துள்ளன. சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவை இயேசுவின் பிறந்த நாளைப் பற்றிய தகவலைப் புறக்கணித்தன. இயேசுவின் நெருங்கிய தோழர்களால், இயேசுவின் தாயாரும் சகோதரரும் உயிரோடிருக்கும் போது எழுதப்பட்டதாகக் கருதப்படும் சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றி தெரிவிக்காதது கவனிக்க வேண்டிய விஷயமாகும். டிசம்பர் இருபத்தைந்தாம் தேதியை இயேசுவின் பிறந்த நாளாகக் குறித்தது தன்னிஷ்டப்படி எடுக்கப்பட்ட முடிவல்ல. அந்த நாள் சூரியக்கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். தேவ மைந்தனும், சூரியனும் ஒரே நாளில் பண்டிகை கொண்டாடுவது எதைக் குறிக்கிறதென்றால், ஒரு காலம் வரையில் இருவரும் ஒன்றாகவே கருதப்பட்டு வந்தார்கள் என்பதை. இயேசு இறந்த போது சூரியன் மறைந்ததாகக் கூறப்படும் கதையும், இயேசு இறந்த அன்று இளவேனிற்கால நாட்சமநிலை என்ற பாரம்பரிய நம்பிக்கையும், இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழுதல் ஆகியவற்றைச் சூழ்ந்துள்ள கதைகளும் இயேசுவின் கதை சூரிய தேவனின் புராணத்தைச் சுற்றிப் பின்னப்பட்டது என்பதை நிரூபிக்கின்றன. இயேசு பூமிக்கடியில் மூன்று நாட்கள் இருந்தது, யோனா மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இருந்தது, ஹெர்குலிஸ் திமிங்கலத்தின் வயிற்றில் மூன்று நாள் இருந்தது, லிட்டில் ரெட் ரைடிங் ஹுட் ஓநாயின் வயிற்றில் இருந்தது போன்ற கதைகள் பழங்கால மனிதன் இரவையும் பகலையும் சுற்றிப் பின்னிய கற்பனைக் கதைகளை ஒத்திருக்கின்றன. சூரியன் ஒரு டிராகன் அல்லது திமிங்கலம் அல்லது ஓநாயால் விழுங்கப்படுவது இருட்டை ஏற்படுத்துகிறது. அந்த டிராகன் கொல்லப்படும் போது சூரியன் வெற்றிகரமாக அடுத்த நாளில் காட்சியளிக்கிறது. இப்படிப்பட்ட கதைகள் எகிப்திய நாகரிகத் துவக்கத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரையிலான அனைத்து மதங்களிலும் வழக்கில் இருக்கின்றன.
மத்தேயு அதிசய நட்சத்திரத்தைப் பற்றியும், அது பெயரில்லாப் பிச்சைகளான மந்திர வித்தைக்காரரை அதிசயக் குழந்தையின் தொட்டிலுக்கு வழிநடத்திச் சென்றதைப் பற்றியும் கூறியுள்ளார். ஆனால் இந்த விண்மீன் என்னவாயிற்று என்பதைப் பற்றியோ, அந்த மந்திர வித்தைக்காரர், அவர்கள் கொடுத்த பரிசுகள் என்ன ஆயிற்று என்பவற்றைப் பற்றியோ மத்தேயு மூச்சு விடவில்லை. இந்த சுவிசேஷ எழுத்தாளரின் சோதிட விருப்பங்களையே இந்த நட்சத்திரம் பற்றிய நிகழ்ச்சி தெரிவிக்கின்றது. நட்சத்திரங்கள் மனித வாழ்க்கையை நிர்ணயிப்பவை என்ற நம்பிக்கை மிகப் பழமையான ஒன்று. நமது மொழியில் உள்ள சொற்களான (ஆசிரியர் ஆங்கிலத்தைக் குறிப்பிடுகிறார்) ill starred”,”lucky star, “lunacy” போன்ற சொற்கள் மனித மனத்தின் மீதான சோதிடவியலின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன. இன்றும் நாம் மனிதரின் பல்வேறு உணர்வுகளைக் குறிப்பிட கிரகங்களின் அடிப்படையில் அமைந்த பெயர்களை உபயோகிக்கிறோம். சுவிசேஷங்களில் சூரியனுக்கும், விண்மீன்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இயேசுவை சரித்திரப்பூர்வமான மனிதர் என்பதிலிருந்து சோதிடவியலின் அடிப்படையில் அமைந்த கற்பனா கதாபாத்திரம் என்ற நிலைக்குக் கொண்டு செல்கிறது.
இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழுந்ததாகக் கருதப்படும் நாள் ஆகியவற்றை சரியாகக் கூற முடியாது என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிச்சயமற்ற நிலை ஒரு குறிப்பிட்ட அளவு வரையாவது இயேசுவின் உண்மைத் தன்மையை கேள்விக் குறியாக்குகிறது.
டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி இயேசுவின் பிறந்த நாளாகக் கொண்டாடப் படுகிறது. ஆனால் சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்தநாளைப் பற்றி எதுவும் கூறாமல் கள்ள மவுனம் சாதிக்கின்றன. ஆனாலும் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் இயேசு டிசம்பர் இருபத்தைந்தில் தான் பிறந்தார் என்பதை மறுக்க முடியும். பாலஸ்தீனம் வெப்ப நாடாயிருப்பினும் டிசம்பர் மாதத்தில் பனி பெய்வதால் மேய்ப்பர்கள் ஆடுகளுடன் டிசம்பர் மாதத்தில் இராத்தங்குவதில்லை. பெரும்பாலும் இந்த நேரங்களில் மலைச்சிகரங்களும் பனியால் மூடப்பட்டிருக்கும். மேய்ப்பர்கள் உண்மையிலேயே வானம் திறந்ததையும் தேவதூதர்கள் பாடுவதையும் கண்டிருப்பார்களானால் அது நிச்சயமாக டிசம்பர் மாதத்தில் நடந்திருக்காது. ஆரம்பகாலங்களில் கிறிஸ்தவர்கள் மே மாதத்திலும், ஜுன் மாதத்திலும் இயேசுவின் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள்.
இயேசு பிறந்த நாளைப் பற்றி அறிய வேண்டியது நமக்கு அவசியமில்லை. ஆனால், அது ஏன் அறியப்படவில்லை? இயேசுவின் பிறந்த நாள் மட்டுமல்ல, இயேசு பிறந்த ஆண்டு எது என்பதைப் பற்றியும் தெளிவான செய்திகள் நமக்கு இல்லை. சுவிசேஷகர்களில் ஒருவரான மத்தேயு இயேசு ஏரோதின் ஆட்சிக் காலத்தில் பிறந்ததாகச் சொல்கிறார். ஏரோதின் ஆட்சிக்காலத்தில் தான் மூன்று ஞானிகளின் வருகை நிகழ்ந்ததாகவும், இயேசுவைக் கொலை செய்யும் திட்டத்தை ஏரோது செயல்படுத்தியதாகவும் மத்தேயு கூறுகிறார். ஆனால் லூக்கா கூறுகிறார், சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்த போது. அப்படியானால், இயேசுவின் பிறப்பு மத்தேயு கூறுவதை விட பதினான்கு வருடங்கள் பிந்தி நடந்திருக்க வேண்டும். வரலாற்று ஆவணங்களில் இப்படிப்பட்ட தவறுகள் இருக்குமா? சில தெய்வீக இயலாளர் கூறுகின்றார்கள், “பிழைகள் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் இப்படிப்பட்ட உத்திகள் உபயோகப்பட்டிருக்கலாம்” என்று. ஆனால் ஏன் மத நூல்களில் மட்டும் ‘இப்படிப்பட்ட உத்திகள்’ உபயோகிக்கப்பட வேண்டும்?
மத்தேயு, ஏரோது இயேசுவைக் கொல்ல திட்டம் தீட்டியதையும், அதனால் யோசேப்பும், மரியாளும் குழந்தை இயேசுவுடன் எகிப்துக்கு ஓடிப் போனதாகவும் கூறுகிறார். ஆனால் லூக்கா இந்த நிகழ்வுகளைப் பற்றி எதுவும் எழுதவில்லை. ஆனால், நாற்பது நாட்கள் சுத்திகரிப்பு நிறைவேறிய பின்பு இயேசுவை பகிரங்கமாக ஆலயத்துக்கு கொண்டு வந்ததாக லூக்கா கூறுகிறார். ஏரோது உண்மையில் இயேசுவை கொலை செய்ய விரும்பியிருந்தால் அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்திருக்கலாம். எகிப்துக்கு ஓடிப் போனதாக மத்தேயு சொன்னதும், ஆலயத்திற்குக் கொண்டு வந்ததாக லூக்கா சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. இதனால் இக்கதைகளுக்கு சரித்திர மதிப்பை அளிக்க முடியாது என்பது தெளிவாக விளங்குகிறது.
இயேசுவைப் பற்றிய முக்கியமான அத்தியாயங்களுள் நுழையும் போது நமக்கு சிக்கல் மேலும் அதிகமாகிறது. ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? இயேசுவின் மரண நாள் வெள்ளிக்கிழமை என்பது மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. இயேசு உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டிருந்தாரானால் கூட அவருடைய துல்லியமான மரண தேதி இன்னதென்று யாருக்கும் தெரியாது. போதகர்களின் மாநாடுகள் ஒரு செயற்கையான தேதியை நிர்ணயித்தன. ஒரு வெள்ளிக்கிழமையின் போதே சிலுவை மரணம் நினைவு கூரப்படுகிறது. ஆனால் எந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை என்பது ஒவ்வொரு வருடத்துக்கும் வேறுபடுகிறது. புனித வெள்ளி வசந்த கால நாட்சமநிலைக்கு முன்னால் கொண்டாடப் படுவதில்லை. ஆனால் வசந்த கால நாட்சமநிலை முடிந்தவுடன் முழுநிலவின் அடிப்படையில் கொண்டாடப் படுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் இந்தப் பண்டிகையானது சூரியன் நட்சத்திரக் கூட்டங்களினிடையே (ராசிகளிடையே) இருக்கும் நிலையின் அடிப்படையிலும், நிலவின் நிலைகளின் அடிப்படையிலும் கொண்டாடப்படுகிறது. இப்படித் தான் சிலை வழிபாட்டுக்காரரின் கடவுளான ஆஸ்டிராவின் பண்டிகையும் கொண்டாடப் படுகிறது. ஆஸ்டிரா என்ற பெயரிலிருந்தே ஈஸ்டர் என்ற பெயர் வந்தது. இப்படிப் பட்ட விஷயங்களால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்கிறோம், பிற மதப் புராணக் கதைகளுக்கும் இயேசுவின் கதைக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை.
ஆதி திருச்சபை பிதாக்களுள் ஒருவரான ஒரிஜன், இயேசுவின் உண்மைத் தன்மையைப் பற்றி கேள்வி எழுப்பிய பகுத்தறிவுவாதியான செல்சசுக்கு பதில் அளிக்கும் போது வரலாற்று ரீதியில் இயேசுவின் உண்மைத் தன்மையை நிறுவ முற்படாமல் கிரேக்க- ரோமக் கடவுள்களை விட இயேசுவின் கதை நமப முடியாத தன்மையில் அமைந்தது அல்ல என்று விடையளிக்கிறார். நான் ஒரிஜினின் சொந்த வார்த்தைகளையே தர விரும்புகிறேன், நான் செல்சசுக்கு பதிலளிக்கும் முன் ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த விஷயத்தில் உண்மையை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் நம்மிடம் எதுவும் இல்லை. இதன் மூலமாக கி.பி. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளிலேயே இயேசு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அறியப்படவில்லை என்பது தெளிவாகிறது. ஆதாரங்கள் இல்லாத நிலையில் வெறுங் கோட்பாட்டின் அடிப்படையிலான வாதங்களை ஒரிஜன் செல்சஸ் முன்வைக்கிறார். 1. பிற மதத்தாரின் புராணங்கள் உண்மை என்று கருதப் படுகிற போது இயேசுவின் வாழ்க்கையையும் ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? 2. இயேசுவின் கதை உண்மை இல்லையென்று கருதினால் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் நிறைவேறவில்லை என்று அர்த்தப்படுகிறது. செல்சசின் பகுத்தறிவு வாதத்துக்கு முன்பு சொத்தையான வாதம் ஒன்றை ஒரிஜன் முன் வைக்கிறார். அதாவது இயேசு என்ற கற்பனையை ஏற்றுக் கொள்ளாதது பிற மதத்தவர் மற்றும் யூதரின் புராணங்களை ஏற்றுக் கொள்ளாததற்கு சமமாகும் என்று கூறுகிறார். இயேசு உண்மையில்லை என்றால் அப்பொல்லோ உண்மை இல்லையென்றும், பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறவில்லையென்றும் கூறுகிறார். நமக்கு புராணக் கதைகள இருக்குமானால் அதனோடு இயேசு என்ற கற்பனையையும் சேர்த்துக் கொள்வதால் என்ன நட்டம் என்று ஒரிஜன் கேட்கிறார். இயேசு என்ற கற்பனைக்கு ஆதரவாக வாதாடியவர்களால் இதைவிட சொத்தையான, பலவீனங்களை ஒப்புக் கொள்ளும் வாதம் ஒன்றை முன் வைக்க முடியாது.