முப்பக்க பரிணாமம்

http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec18/36320-2018-12-19-07-06-10?__cf_chl_jschl_tk__=11dd5397313f6b57bb56780b93dc5176cad2d72f-1595751315-0-ASZ31cRXAuyxZdSm1vW6ujFJnLt-LUUg3AKy_QeY6Bvc5uFMyUk2s9fD-h3Vp97oEmDDieltCcv26XMaYCzdmg9OLEcfWa6AafgijeMdFzm0z8T-ipBNlyOwqrxBTwwJTQvskkujEK6Gn0jNeBHcL1BpgA7fvn9JwZVIOKFHzM8LKJJDU9aP2PB5009XZnOeY01Gdnhl-ekNO5hp9duohOaE5SdgcmckZ7ow4d5D-rGTwzLGbVFsyl5BbmdN78FKuaL_lTMizUvyTDtr3RQTnT7dPi3MPUn_NaL9H2q8ykGcuOUSTFIYRlJR-mWCJciNipVo4OZQM2REkHiXcT-xqXhonZr_n4J55XRlmzm44vtafzKrLi6mEkSIFpAB0Aq7aeL1J3vsY1jvjHAcY7DHxbPh_2g3R9J2CaCHQnxEjixlPLTNByTzN84MiDKpGmsxNA

தமிழகத்துக்  குமரிமுனை, வைகை, அமராவதி, நொய்யல், காவிரி, பாலாறு, கிருஷ்ணா, கோதாவரி,  மகாநதி, நர்மதை, கங்கை கொண்ட ஒருபக்கம்;  கங்கை, சிந்து, யூப்ரடீஸ், டைகரிஸ் சார்ந்த பகுதிகள், அரேபியா, எகிப்து, கிரேக்கம், ரோம் ஆகிய பகுதிகள் கொண்ட ஒரு பக்கம்; மத்தியதரைப் பகுதி, செங்கடல், பாரசீக வளைகுடா, சிந்து முகத்துவாரம், கட்ச் பகுதி கடந்து கேரளக்கரை, குமரி முனை ஒரு பக்கம் என்ற முப்பக்கங்கள் கொண்ட இந்த ஆசியப் பகுதி கி.மு.600 தொட்டே வணிகப்பெருவழிகளாலும், கடல் பயணங்களாலும், இணைப்புண்டு இருந்தது. இது சிறப்பாகக் கருதக்கூடியது, யூதர், கிரேக்க-யவனர், எகிப்தியர், சிரியர் ஆகியோர் வாணிகப் பெரு வழிகளாலும், கடல் பயணங்களாலும் இணைப்புண்டு; யூத, அரேபிய மற்றும் வேதஆரியர், குஷான, மௌரிய, தக்காணம், தமிழகம் சார்ந்த சிந்தனைகள் ஊடாட்டம் கொண்ட நிலப் பகுதி இது.  இங்கே விளை பொருள்கள், இயற்கைப் பொருள்கள், வாணிகப் பொருள்களாகிக் கண்ட போக்குவரவு, படைவீரர் அணிவகுப்பு. மருத்துவர், அறவோர், சாதுக்கள், நாடோடிகள், கலைஞர், கைவினைஞர், தொழில் நுட்பவியலாளர் இவர்களோடு மகளிர் நடமாட்டம் நிலையாக இருந்தது, அரசுகள் மாறலாம். இது மாறாமல் பொலிவுடன் விளக்கம் கொண்டு வாழ்ந்தது.

யூத, கிரேக்க-யவன, எகிப்திய சிந்தனைகள், வைதீக சிந்தனைகள், சமண, பௌத்த சிந்தனைகள், உலகாயதம், நாட்டார் வழக்காறுகள் ஆகியன தமக்குள் ஊடாட்டம் கொண்டு கருத்தியல்களையும், தத்துவங்களையும் உருப்படுத்திக் கொண்ட நிலப் பகுதியாகும்.  மனிதர்கள், பொருள்கள், சிந்தனைகள் பிரிக்க முடியாதவை, கைபிணைந்து உடன் செல்பவை,  தமிழகத்தின் சங்க காலம் என்ற காலப்பகுதியில் இந்தப் பெருவழிகள் கொண்ட நிலம், பயணங்கள் கொண்ட கடல் பகுதிகளோடு தமிழக மக்களும், பொருள்களும், சிந்தனைகளும் இணைந்து விளங்கின. சங்க காலம் தொடர்பாக யவனர் காசுகள், யவனத் தேறல், யவன வீரர், யவன வாணிகர், யவனக் காவலர், யவனர் சேரிகள், கோவில்கள் பற்றிய தொல் பொருள் ஆதாரங்களும், குறிப்புகளும் சிறப் புடையன. மேற்குக் கரையில் இறங்கிய பலமொழி வணிகர் கரூர், புகார், மதுரை, காஞ்சி, புதுவை நகரங்களில் குடியிருப்புகள் அமைத்து வாழ்ந்தனர். 

அவர் தமது வாணிகப் பொருள்களுடன் தமது சொந்த நாட்டில் நிலவிய சிந்தனைகள், கருத்தியல்கள், மெய்யியல்களையும் கொண்டு இருந்தனர்.  ரோமப் பேரரசின் பின்னணியில் இது நடந்தது.  இதனுடன் கூடவே, மௌரியப் பேரரசின் முன், பின் காலங் களில் கங்கைப் புறத்துடனான வாணிபமும் விளக்கம் கொண்ட ஊடாட்டமானது. தமிழகத்தில் வேட்டை, மேய்ச்சல், உழவு சார்ந்த வாழ்வு நிலைமைகளில் பாதிப்பை ஏற்படுத்தி அரசு சார்ந்த வாழ்வு உருவாவதில் பங்கு பெற்றன.  அப்போது அரசு, வாணிக உலகில் அசோகர் தொடங்கி இந்தியப் பேரரசர், அகஸ்டஸ் (கி,பி, 15) தொடங்கி ரோமப் பேரரசர் தமிழகத்தில் தொடர்ந்து பேசப்பட்டனர்.  வாணிக உலகில் செங்கடல் பகுதியில் பெர்நிகே, குவாசிர்-அல்-காசிம் துறைமுக நகரங்களில் கிடைத்துள்ள பானை ஓடுகளில் உள்ள கோற்பூமான், கண்ணன், சாத்தன் பெயர்கள் தமிழகப் பொருள் களை அங்குக் கொண்டு சென்ற வாணிகர்களின் பெயர்களாகும். இந்தத் தரவுகள் தமிழகம்-யவனம் கருத்தியல் ஊடாட்டத்தைப் புலப்படுத்துவன ஆகும்.

statues 600சமூகநிலை

திருவள்ளுவர் மருதத் திணையாம் உழவைச் சிறப்பித்து உயர்த்தினார். நெய்தல் மற்றும் பாலைத் திணைகளின் வேட்டை வாழ்வைப் போற்றவில்லை. முல்லைத் திணையாம் கால்நடை மேய்ப்பு வாழ்வைப் பயன் தருவாழ்வு என்ற அளவில் மட்டும் அனுசரித்தார். குறிஞ்சித் திணையின் உணவு சேகரிப்பு வாழ்வைவிட பொருளின் உற்பத்தியையும், பொருளாகிய முதலினால் வரும் ஊதியத்தையும் மேல்நிலையாகப் போற்றினார். அதன் பொருட்டு, கால்நடை நாடி மற்றும்  மண் நாடிப் போரிடும் வெட்சி, வஞ்சி மற்றும் உழிஞைத் திணைகள் சார்ந்த சிறுகுடித் தலைமைகளைத் தவிர்த்து விட்டுக் கொடுங்கோன்மை அற்ற பேரரசினை / வேந்தனை விவரித்தார். தொல்காப்பியப் புறத் திணைகளில் பேசப்படாத வாணிகத்தில், நடுவு நிலைமை கொண்ட பொருள் வாணிகத்தைப் போற்றினார்.

இது திருவள்ளுவர் கண்ட புதுமை. அப்போது தமிழகத்தில் பலநாட்டு வாணிகர்களின் காசுகள் புழக்கத்தில் இருந்தன. திருவள்ளுவர் அகத்திணை என்றில்லாமல், அகம் என்பதில் காதல்-காமத்தை இன்பத்துப்பாலில் தனியாகக் கையாண்ட படி, உள்ளத்து அகவய உணர்வை அறத்துப்பாலில் முன்னிலைப்படுத்தினார். இவர் காலத்தில் உபரி விளைச்சல் இயற்றும் உழவு, இலாபம் ஈட்டும் வாணிபம், அதிகாரம் கொண்ட அரசு வேர் விட்டுச் சமூகநிலையில் உறுதிப்பட்டு இருந்தன.  இரத்த உறவு நிலையில் அமைந்த இனக்குழுமுறை வாழ்நிலையை விட, குடிப்  பிறப்பமைந்த பரம்பரைக் குலமுறை வாழ்நிலை போற்றுதலுக்கு உட்பட்டது.

இந்தக் குலமுறை வழியில் அமைந்த உழவு, வாணிபம், அரசுநிலையில் தோன்றியவர் நற்குடிப் பிறந்தோர் ஆவர்.  இந்த நற்குடியில் பிறந்த ஒருவர் தமக்குத் தாமே எடுக்கும் சுயமுடிவுகளுடன், அவற்றைத் திருத்திக் கொள்ளும் மருத்துவராகவும் தனிப்பட்ட நிலையில் விளங்கினார் (பழமொழி.149). இனக்குழு சார்ந்தவர்(சிற்றில் பிறந்தோர், கீழோர், அடிமையர்) முடிவுகளை விட அரசவை, சான்றோர் கூட்டம், கற்றவர்குழு, மற்றும் மருத்துவர், கணியர், ஆசிரியர் வகுக்கும் முடிவுகள் சமூகவாழ்வுத் துறைகளில் ஆட்சி பெற்றன.

தத்துவநிலை

அன்றைய தமிழகத்தில் இலக்கணம், தத்துவம், தர்க்கம், சமயம், முக்தி சார்ந்த நூல்கள் வழக்கில் திகழ்ந்தன (சிறுபஞ்ச.86). இந்தப் பகுப்பானது சகாப்த முக்கியமானது. (இந்தத் துறைகளில் அன்று பயிலப்பட்ட நூல்கள் அனைத்தும் இன்று கிட்டாதது தமிழரின் தவக்குறையே). அப்போது தத்துவத் துறையில் அறுவகை நெறிகள் இங்கு வழக்கில் இருந்தன (ஏலாதி.75). அவை உலகாயதம், சாங்கியம், பௌத்தம், சமணம், நியாய-வைசேடிகம், மீமாம்சை என்பன ஆகும் (மணிமேகலை.27:289).

நாலடியார் உலகநூல் என்றும், அறிவு நூல் என்றும் பகுக்கும் பகுப்பில், உலகநூல் தொகுப்பில் உலகுக்குரிய நூல் களையும், அறிவு நூல் தொகுப்பில் வீடுபேற்றிற் குரிய நூல்களையும் உட்படுத்திக் காட்டுவது சிறப்பமைந்தது (பாடல்.140). உலகுக்குரிய நூல் களாக இலக்கணம், தத்துவம், தர்க்கம் (மற்றும் அறம், நீதி, ஒழுக்கம், மரபு, அழகியல், இனக்குழு சார்ந்த பாலை, முல்லை, நெய்தல், குறிஞ்சி, உழைக்கும் மருதநில நாட்டார் வழக்கியல்) ஆகியன வற்றைக் கொள்ளலாம். இவைகளில் உலகாயதப் பொலிவு கொண்ட நூல்கள் வேர்கொண்டு நிலவின. வீடுபேற்றிற்குரிய நூல்களாகச் சமயம் மற்றும் துறவறவழியான முக்திநூல்களைக் கொள்ளலாம்.

இந்த நிலைமையில் திருவள்ளுவர் உலகியற்றி யான் என்றும், புறநானூறும், நற்றிணையும் உலகு படைத்தோன் எனவும் குறிப்பிட்டது சிறப்பாகக் கருதத்தக்கது (1062, 194, 240). உலகின் படைப்புக் கடவுள் பற்றி அப்போது தமிழகத்தில் வேதத்தை அனுசரித்த சைவரும், வைணவரும் (பரிபாடல், காரைக்கால் அம்மையார், முதலாழ்வார்கள்) மற்றும் யவனரும் (யூதர், பாரசீகர், கிரேக்க-ரோமர், எகிப்தியர், அரபு-ஹனீப்கள். அந்தியோக் நகரத்துச் சிரியர்) உரைத்து வந்தனர். ஏலாதியும், மணி மேகலையும் குறிப்பிடும் ஆறுவகைத் தத்துவங்கள் படைப்புக் கடவுளைப் பற்றிக் குறிப்பிடவில்லை.  மீமாம்சை வேதங்களைச் சிரமேற் கொண்டு, வேதச்சடங்குகளை மட்டுமே உச்சி மேற்கொண்டது கடவுளை அனுசரிக்கவில்லை. சாங்கியம், பௌத்தம், சமணம் ஆகியன பற்றற்றானையே உயர்வாக மதித்தன, உலகாயதம் பூதப்பொருள்களையே முதன்மையாகப் போற்றியது. அவை அனைத்தும் உலகுக் குரிய உலகியல் அணுகுமுறையின்பாற்பட்டவை. 

வேதத்தை முதன்மையாகக் கொண்ட சைவ, வைணவங்கள் முறையே சிவனையும், திருமாலையும் படைப்புக் கடவுளராக மேம்படுத்திப் போற்றுவது அப்போது தொடங்கி  இருந்தது. படைப்புக் கடவுள் தொல்காப்பியத்தில் இல்லை. புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் பேரரசுத் தலைவன் அந்த நிலையில் வைத்துப் பேசப்பட்டான். இனக்குழுக் கடவுளர் படைப்புக் கடவுளாக மேம்படுத்தப்படவில்லை.  படைப்புக் கடவுளைப் பரிபாடல் புலவர் களும், தொடக்க காலச் சைவ, வைணவ பக்தியாளர் களும் விவரித்துப்பாடினர். அவர்களது பாடல்களில் படைப்புக் கடவுளானது உலகுக்கும், பொருள் களுக்கும், இவற்றின் பண்புகளுக்கும் மற்றும் உடலுக்கும், உணர்விற்கும் வேறானதாக, அதீத மேலானதாக, அப்பாலானதாக விவரிக்கப்படுவது கவனிக்கத்தக்கது.

அப்பாலான கடவுள்   உலகையும், பொருள்களையும், பண்புகளையும், உடலையும், உயிரையும், உணர்வையும் படைத்த பின்பும் தனக்குத் தானாகவும், மாறாமலும், நித்தியமாகவும் இருக்கிறது. இதில், கடவுளுக்கு உயிர்கள் அடிமைத் திறம் பொலிய நிலவின என்பது சிறப்பானதாக இருந்தது. அதோடு தன்னால் படைக்கப்பட்ட பொருள்களின் உள்ளே குடிகொண்டு பண்பாகவும். உணர்வாகவும் உள்ளது. மேலும், அது பிறவாதது. உருவம் உடையது என உணர்த்திக் காரைக்கால் அம்மையாரும், முதலாழ்வார்களும் ஆழ்ந்த பக்தியுடன் பாடினர். அநேகமாக, இந்தியாவிலேயே சிவனும், திருமாலும் முதன்முதலாக படைப்புக் கடவுளாக விவரிக்கப்படுவது இவர்களாலேயே  ஆக இருக்கலாம்.

தமிழகத்தில் யூத அரசனான முதலாம் அக்ரிப்பாவின் காசுகள் கண்டு  எடுக்கப்பட்டுள்ளன. இவருடைய மகளான பெர்நிஸ் என்பவரை மார்கஸ் என்பவர் மணந்தார். இந்த மார்கஸின் தந்தை அலெக்சாண்டர். இவரது சகோதரர் பிலோ என்ற யூதஞானி ஆவார். (இவர்கள் மகா அலெக்சாண்டரின் பேரன்மார் ஆவர்). இந்த யூதஞானி இயேசு கிறித்துவின் சமகால மூத்தவர். இவர் தமது வாழ்நாளில் மோசஸ்ஸின் இறையியல் நூல்களுக்குத் தத்துவயியல் விளக்கங்களுடன் விரிவுரை செய்தார். யூத அரசனான முதலாம் அக்ரிப்பாவானவர்,  இயேசுவின் சீடரான புனித பேதுருவைச் சிறையில் அடைத்து, உயிரை நீக்கியவர் ஆவார்.  புனித பேதுருவின் காலத் தொடக்க நிலைக் கிறித்தவயியலில் தனக்கான சுயமான தத்துவ விளக்கங்கள் எவையும் அதனுள் விளக்கம் கொண்டு இருக்கவில்லை.

ஸ்தோயிக் தத்துவக் கூறுகளே விளக்கம் கொண்டு இருந்தன. தமிழ்நாட்டில் கான்ஸ்டான்டைன் வெளியிட்ட சிலுவைக்காசுகள் கிடைக்கின்றன. இருந்தாலும், இந்த ரோமப் பேரரசர் இறுதிவரை கிறித்தவத்திற்கு மாற்றம் அடையாது, யூதராகவே  இருந்தார். இவர் காலத்தில்தான் நிசேயே நகரத்து கிரிகோரியால் (கி.பி.331-394) கிறித்தவ இயலில் புதிய பிளாட்டேனியத் தத்துவ விளக்கம் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தத்துவ விளக்கத்தின் ஆசிரியர் அலெக்சாண்டிரிய நகரத்துப் பிளாட்டினஸ் (கி.பி.205-270) ஆவார். இவர் கிறித்தவர் அல்லர். கி.பி.47-இல் ரோமானியர் அலெக்சாண்டிரியாவைக்  கைப்பற்றியபின் போகப் போக, கிரேக்க-யவனர் மற்றும் எகிப்தியர் தத்துவ யியல் அபாயகரமானதாக மதிப்பிடப்பட்டது. கி.பி.390-இல் தலைமை அருட்தந்தை தேவஃபில் அலெக்சாண்டிரிய  நூலகத்திற்கு எரி ஊட்டினார். (கி.பி.529-இல் ஜஸ்டின் எல்லாக் கல்விநிலையங்களையும் மூடிவிட்டார்.) என்றாலும் பிளாட்டினஸ் வகுத்த தத்துவ விளக்கமானது கிரிகோரியால் கிறித்துவ இயலில் எடுத்துரைக்கப்பட்டுக்  கான்ஸ்டான்டைன் கூட்டிய மகாநாட்டினில் (கி.பி.381) அதனாசியஸ் மற்றும் இசுபியஸ் அனைய அன்றையக் கிறித்தவ ஞானிகளால் ஏகோபித்து மனமுவந்து ஏற்கப்பட்டது.

இதன் ஒளியில் கிறித்துவின் வழியான மீட்சித் தன்மைக்கும், திரியேகத் தன்மைக்கும் அவர் இலக்கணம் வகுத்தார். பிளாட்டினஸினுடைய தத்துவ இயல் அப்போதைய கிரேக்க-யவன உலகில் பொது விளக்கமாக ஏற்கப்பட்டு இருந்தது. அது கிறித்தவ ஞானியான கிரிகோரியையும் தாக்கம் கொண்டு இருந்தது. (இருந்தாலும் கிரிகோரியின் கிறித்தவ விளக்கம் அப்போது தமிழகத்தில் நிலவவில்லை.) யூதஞானியான பிலோவும், இவருக்குப் பின் வந்த பிளாட்டினஸ§ம் உரைத்த விளக்கங்களானவை, அப்பாலான படைக்கும் கடவுள் தத்துவத்தை மையப் படுத்தியவை ஆகும். இயற்கைக்கும் அறிவிற்கும், உடலுக்கும் உணர்விற்கும், பொருளிற்கும் பண்பிற்கும், புறத்திற்கும் அகத்திற்கும் வேறாக அப்பால் இருக்கும் கடவுளை இருவரும் உபதேசித்தனர்.  இந்தக் கடவுளானது பிறப்பு அற்றது. என்றும் தானாகவே இருப்பது. அதனை, படைக்கப்பட்ட பொருள் களாலும், உயிர்களாலும் அறியவும், உணரவும் முடியாது. படைக்கப்பட்ட இவைகளுக்கு உள்ளும் இந்தப் படைப்புக் கடவுள் குடிகொள்ளாது. அதீத மேலானதான தனிப்பட்ட ஒன்று.     

இந்தப் பின்னணியில் திருவள்ளுவர் சுட்டும் உலகியற்றியான் என்ற கருத்தமைப்பானது நோக்கு வதற்கு உரியது. இந்தப் படைப்புக் கடவுள் பஞ்ச பூதங்களால், அணுக்களால் ஆனவன் அல்லன். ஆனால் அவன் பஞ்சபூதங்களை, அணுக்களை உண்டாக்கும் திறனுடையவன், ஆனால் அவன்  உண்டானவன் அல்லன். பிறப்பை உண்டாக்குவான், பிறவாமல் செய்வான். ஆனால் அவன் பிறவாதவன், பிறவா யாக்கைப் பெரியோன் (சிலப்பதிகாரம் 8:169). அவனால் படைக்கப்பட்ட பொருள்கள் நிலையற்றன. ஆனால் அவன் நிலையானவன்.

அதே சமயம் தமிழகச் சைவ, வைணவ தொடக்க கால பக்தியாளர் பக்குவ உணர்வின்படி அவனால் படைக்கப்பட்ட பொருள்களின் உள்ளும் விளங்குபவன் ஆவான். அதே சமயம் உருவமும் உடையவன். அப்போது தமிழகத்திற்கு வந்து பலமொழி பேசி வாழ்ந்த செமித்திய யவனரது (யூதர், பாரசீகர், கிரேக்க-ரோமர், எகிப்தியர், அரபு-ஹனீப்கள், அந்தியோக் நகரத்து சிரியர்) உச்சநிலை உணர்வின்படி படைக்கப் பட்ட பொருள்களுக்குள் அந்தக் கடவுள் அடங்கி நிலவாதது. உருவமும் அற்றது. என்றாலும் அது எங்குமானது.

பொருள்கள் அழிவன. ஆனால், அந்தக் கடவுள் அழியாதது. இந்த வேதமரபு மற்றும் செமித்திய மரபு ஆகிய இரண்டு வகைக் கருத்தியல் களையும் திருவள்ளுவரது உலகியற்றியான் கருத் தமைப்பு கொண்டு இலங்கியது. அவரது காலந் தொட்டு அப்பாலான கடவுளை முன்னிட்டுக் கொண்டு, முதன்மைப்படுத்தியபடி, புறநிலைப் பொருள்களை அணுகிஉணரும் அப்பாலையியல் அணுகுமுறையானது தமிழகத்தில் உருப் பெறத் தொடங்கியது. உழவின் உபரிஉரிமையும், கடல் மற்றும் தரைவழிகளால் பரந்துபட்ட நடுநிலை வாணிப இலாபமும், பேரரசின் மேல்நிலை அதிகாரமும் இதற்குப் பௌதிக அடிப்படைகளாக நிலவின. வேந்தன் மற்றும் அரசு தோன்றுவதற்குரிய தத்துவமாக, இந்த அப்பாலைப் படைப்புக் கடவுள் தத்துவம் விளங்கியது.