பதினாறாம் நூற்றாண்டளவில் இந்தியா மற்றும் இலங்கைக்குள் நுழைந்த ஐரோப்பிய பாதிரியார்கள் மேற்கொண்ட கல்வித் திட்டங்களின் ஒரு பகுதியாகக் கல்விக் கூடங்களைத் தோற்றுவித்தலும் அச்சுக்கருவியை அறிமுகம் செய்வதுமாக அமைந்தன. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சிஸ் சேவியர் போன்ற பல முன்னணி பாதிரியார்கள் பாரிஸ், கோயம்பிரா, சலமான்கா, ரோம் ஆகிய நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர்களாக இருந்தார்கள். ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் காரணமாக கல்வியில் உயிர்ப்பு பெற்ற நாடுகளிலிருந்தும் பாதிரியார்கள் வந்தடைந்தனர். ஆகையால் அவர்கள் அக்காலக்கட்டத்தில் நடைமுறையில் இருந்த கல்விமுறைகளையும் நுணுக்கங்களையும் இங்கு அறிமுகப்படுத்தினார்கள். உதாரணமாக, பள்ளிக்கூடங்களை மதம் சார்ந்தும் சார்பற்றும் நிறுவி கற்பித்தல், ஆசிரியர்களைத் தேர்வு செய்து பயிற்சியளித்தல், கிறித்தவ ஆசிரியர்களுக்கும், பயிற்றுநர்களுக்கும் பொருளாதார உதவி வழங்குதல் மற்றும் தமிழை நன்கு பேசவும் எழுதவும் புலமைப் பெற்றிருந்தவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் ஆகியவை ஆகும்.
அயல்நாட்டின் முன்னோடி கல்வியாளர்களுள் ஒருவரான ஹென்றிக் ஹென்றிக்ஸ் (1520-1600) என்பவர்தான் தமிழ் மொழியை அறிவியல் முறையில் படிக்கும் முறையை முதலில் தோற்றுவித்தவராகவும் தமிழில் ஏராளமாக எழுதியவராகவும் 1560க்கு முன்பாகவே மன்னார் அல்லது புன்னைக்காயலில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ வேண்டும் என்று முன்மொழிந்தவராகவும் அறியப்படுகிறார்.1 கிறித்துவ சபையினர், இத்தகைய முன்னோடியின் சிந்தனை களையும் அவர் கல்வி வளர்ச்சிக்குச் சொன்ன வழிமுறைகளையும் எல்லைகளாகக் கொள்ளாமல் புகழ்பெற்ற ஊடகமான அரங்கையும், அச்சையும் கற்பித்தலுக்கு மிக அதிக அளவில் பயன்படுத்தினார்கள்.
பாதிரியார்கள் விவிலியச் செய்திகளைப் பரப்பவும் கல்வியறிவைப் பெருக்கவும் அச்சுக்கருவியை மிகவும் சிரத்தையோடு பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்திய எழுத்து மற்றும் அச்சுக் கலைக்கான அவர்களின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்பட்டுப் பகைமை பேசப்பட்டது. ஏனெனில் அவர்களுடைய நோக்கம் மத போதனை என்ற அளவிலேயே இருந்ததாகக் கருதப்பட்டது. கல்விமுறையிலும் மொழி யியலிலும் மொழிப்படிப்பிலும் அகராதியியலிலும் இலக்கியத்தி லும் மதபோதகர்களின் பங்களிப்புகள் குறித்து இதுவரையில் தகுந்த அளவிலான மதிப்பீட்டினை ஒட்டுமொத்த இந்திய மற்றும் இலங்கையின் கல்வியறிவு தொடர்பான வரலாற்றில் பதிவு பெற்றிருக்கவில்லை.2 ஏனெனில் அவர்களுடைய நோக்கம் குறிப்பிட்ட ஒரு மதத்தை பரப்புவதிலும் பாதுகாப்பதிலுமே இருந்தது. ஆயினும் கல்விக்கும் இலக்கியத்திற்குமான அவர்களுடைய பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
அச்சு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது கல்வி மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். 1556இல் கோவாவிலிருந்த ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள் முதல் அச்சுக்கூடத்தை இந்தியாவிற்குள் நிறுவினார்கள். இவ்வச்சுக் கூடத்தில் ஐரோப்பா விலிருந்து கொண்டுவரப்பட்ட இலத்தீன் எழுத்து அச்சுக்கட்டை பயன்படுத்தப்பட்டது.3 ஆனால் இக்கால கட்டத்தில் கோவா அச்சுக்கூடம் தன் அச்சுப்பணியை லத்தீன் மற்றும் போர்த்துக்கீசிய மொழியிலேயே மேற்கொண்டது. இருப்பினும் முதல் தமிழ்ச் சிறுநூல் 1554இல் லிஸ்பனில் பிரசுரிக்கப்பட்டது. இந்தியாவில் அச்சு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே இது நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அச்சிறுநூல் முழுமைக்கும் தமிழ் மொழி யிலான மூலம் ரோமன் எழுத்து வடிவத்தைக் கொண்டு பிரதியாக்கப்பட்டிருக்கிறது.
முதன் முதலில் தமிழ் அச்செழுத்தால் அச்சிடப்பட்ட பிரதியை 1577இல் கோவாவில் கொண்டுவந்தார்கள். ஆனால் அவர்கள் அதில் முழுமையாகத் திருப்தியடையவில்லை. இதனைத் தொடர்ந்து இரண்டாவது முயற்சியாக கொல்லத்தில் 1578இல் தமிழ் அச்சுக்கட்டையின் மூலம் அச்சிடப்பட்ட பிரதி திருப்தியளிக்கக்கூடியதாக அமைந்தது. கொல்லத்தில் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி 1578ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட அந்நூல் பிரார்த்தனைப் பாடல்களையும், வினாவிடை முறையில் மதத்தைக் கற்பிக்கும் வழிமுறைகளையும் கொண்டதாக அமைந்திருந்தது. 16 பக்கங்களில், அமைந்த அச்சிறுநூல் ‘Doctrina Christian or Tambiran Vanakkam’ (தம்பிரான் வணக்கம்) என்று தலைப்பிடப்பட்டது. இதன் மூலம் இந்திய மற்றும் இலங்கை மொழிகளில் முதன் முதலில் புத்தகம் அச்சிடப்பட்ட மொழியாக தமிழ்மொழி அமைந்தது.
அச்சுக்கூடங்களின் உருவாக்கமும் அதனைத் தொடர்ந்த பல புத்தக வெளியீடும் நிகழ்ந்த காலம் பெருமைப்படத்தக்க காலமாக தமிழ் மாவட்டங்களில் கருதப்பட்டது. கடற்கரை யோரங்களில் வாழ்ந்த மீனவ சமுதாயத்தின் தமிழ் கிறித்தவர்கள் முதல் அச்சுக்கூடம் உருவாக தாராளமாக தங்களுடைய பங்களிப்பைச் செய்தார்கள்.4 அச்சாகி வெளியான முதல் புத்தகம் அதிசயிக்கத்தக்கப் பொருளாகக் கருதி வரவேற்கப்பட்டது. அப்புத்தகம் கிறித்தவர்களாலும் கிறித்தவரல்லாதவர்களாலும் மிக உயர்வானப் பொருளாகக் கருதி வாங்கப்பட்டது. அச்சிடும் கருவி கண்டுபிடிக்கப்பட்ட சாதனையை இந்திய கவிஞர்கள் செய்யுள் எழுதி கொண்டாடினார்கள்.5 இவ்வுண்மைகள் ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்களின் கடிதங்கள் மற்றும் 1579இல் கொச்சியில் அச்சிடப்பட்ட தமிழ்நூலான தம்பிரான் வணக்கம், பிரான்சிஸ்கோ டிசோசா எழுதிய குறிப்பிடத்தக்க கிறித்தவ மதம் தொடர்பான முன்னுரையான ‘Oriente conquistado’வில் இருந்தும் அறிய முடிகிறது. இம்முன்னுரை மீனவப் பகுதியில் இருந்த மத போதகர்களின் பெயரில் எழுதப்பட்டு மீனவ சமுதாயத்தின் கிறித்தவர்களுக்கும் தமிழ்மொழி அறிந்த கிறித்தவர்களுக்கும் மொழியப்பட்டது “உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் சொற்கத்துக்குப் பொற வழி படிப்பிக்கத்தக்க பலபல பொத்தகங்கள் அச்சிலெ உண்டாக்கவேணுமென்று அனெக முதல் அச்சுண்டாக்க சிலவளித்தீர்களெ ஆகையினால் இந்தப் பொத்தகம் உங்களுக்கு நன்கொடையாக வர விட்டோம். அனெக முதல் சிலவளித்து அச்சுண்டாக்கி வித்ததினாலே சங்கையும் கீர்த்தியும் உலொகா முன்பாகப் பெற்றீர்களெ’’
உஙகளுகமுஙகளசநததிகளுககுஞசொறகததுககுபபொறவழி
படிபபிககததககபலபலபொததகஙகளசசிலெயுணடாககவேணு
மெனறுவனெகமுதலசசுணடாககசிலவளிததீ£களெயாகையினாலி
நதபபொததகமுஙகளுககுநனகொடையாகவரவிடடொமனெக
முதலசிலவளிததுவசசுணடாககிவிதததினாலெசஙகையுஙகீ£ததி
யுமுலொகாமுனபாகபபெறறீ£களெ.
இப்பகுதி நிறுத்தக் குறியீடுகளும் புள்ளிகளும் இல்லாமல் உச்சரிக்கமுடியாத மெய்யெழுத்துக்களைக் கொண்டு நீளமாக எழுதப்பட்டுள்ளதையும் நிறுத்தக்குறியீடுகளும் புள்ளிகளும் பயன்பாட்டுக்கு வராதிருத்ததையும் காட்டுகிறது. ஆயினும் பெஸ்கியினுடைய எழுத்துச் சீர்திருத்தத்தின் மூலமாக குறியீடுகள் உருவாக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்தின் எழுத்துக் கூட்டும் அல்லது எழுத்திலக்கண முறைபற்றி அக்காலத்தில் அச்சிடப்பட்ட புத்தகப் பக்கங்களில் காண இயலும். கிறித்தவரல்லாதவர்கள் சாதாரணமாக புத்தகத்தை வாங்கவுமில்லை அதை உயர்வாகக் கருதவுமில்லை. அவர்களுள் படித்த சில ஆண்கள் ஐரோப்பியர்களின் செயலுக்கு ஒத்துழைப்பவர்களாகவும் தமிழ்மொழியையும் ஆரம்பகால தமிழ்க் கிறித்தவ முன்னோடி இலக்கியத்தின் மொழியின் போக்கையும் திருத்தம் செய்ய இணைந்து பணியாற்ற தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.6
தமிழ்நாட்டில் அச்சு அறிமுகப்படுத்தப்பட்ட காலம் பிற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் முக்கியத்துவமானதாகக் கருதப்படுகிறது. 1584இல் தான் சீனாவில் முதல் அச்சாக்கம் ஐரோப்பியர்களால் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜப்பானில் 1590இலும் பிலிப்பைன்ஸில் 1593லும் முதல் அச்சாக்கம் நடைபெற்றது. 1584இல் பெரு நாட்டில் லிமா என்ற இடத்தில் ஸ்பானிஷ் குய்ச்வா (Quichua) மற்றும் அய்மாரா (Aymara) மொழியில் அச்சிடப்பட்ட ‘Doctrina’ என்ற நூல்தான் உலகின் வெளிச்சத்திற்கு வந்த முதல் அச்சு நூலாகும். இருப்பினும் ஆடெக் (Aztec) மற்றும் ஸ்பானிஷ் மொழியில் வெளியான ‘Doctrina’வின் எந்தப் பிரதியும் இதுவரையிலும் கண்டெடுக்கப்படவில்லை. இப்பிரதி மெக்சிகோ நகரத்தில் 1539இல் அச்சடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆப்பிரிக்க மொழிகளில் கங்கோலியர்களுக்காக (congolese) அவர்களின் மொழியில் 1624இல் தான் முதல் அச்சாக்கம் செய்யப்பட்டது. இதில் 1554ஆம் ஆண்டு லிஸ்பனில் அச்சிடப்பட்ட தமிழ் சிறுவெளியீடான ‘Cartilha’வில் உள்ள வரிகளே இடம்பெற்றிருக்கிறது. ரஷ்யா தனது முதல் நூலை 1563இல் அச்சிட்டது. கான்ஸ்டாண்டினோபிள் தன் முதல் அச்சுக்கூடத்தை 1727இலும் கிரீஸ் 1821இலும் நிறுவியது. இவ்வாறாக 16ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட தமிழ்ப் புத்தகங்கள் மேற்கத்திய நாடுகளில் அச்சிடப்பட்ட மாதிரிகளினும் முதன்மையாகக் கருதப்படுகிறது. இச்செயல்பாடு ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியே மேற்கொள்ளப்பட்டிருப்பதன் விளைவே அவர்களை உடனடியாக நம் அருகாமைக்கு கொண்டுவந்துள்ளது.7
அச்சிடப்பட்ட நான்கு பிரதிகள்
இந்திய மண்ணில் இந்திய மொழியில் அச்சிடப்பட்ட முதல் நூல்களின் தன்மை மற்றும் அதன் பொருளடக்கம் குறித்து, அச்சாக்கப்பட்ட நாள் மற்றும் அச்சுக்கூடம் அமைந்திருந்த இடம் குறித்து, அறிவதில் மிகத் தொடர்ச்சியான பெரிய குழப்பமும் அதனைத் தொடர்ந்த அனுமானமும் நீடித்து வருகிறது. இருப்பினும் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டிருக்கிற பதினாறாம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட நான்கு தமிழ் நூல் வெளியீட்டின் மாதிரிப் பிரதிகளிலுள்ள அச்சாக்கப்பட்ட இடம், நூலின் ஆசிரியர் தொடர்பான பல உண்மைத் தரவுகள் அவற்றைத் தொகுத்துப் பார்க்கிற பொழுது கிடைக்கப் பெறுகின்றன.
1) Cartilha: pp. 38, Germano Galhardo, Lisbon, 11th February, 1554.
இச்சிறு வெளியீட்டின் தலைப்புப் பக்கத்தில் அதன் முழுத் தலைப்பு இவ்வாறு அமைந்திருக்கிறது. “Cartilha Che conte breuemente ho q todo christo deue apreder pera sua saluacam, A qual el rey Dom Joham teraro deste nome nosso senhor mandou imprimir e lingoa Tamul e Portagues co ha deeraracam do Tamul por cima de vermulho.” இச்சிறு வெளியீடானது ஒரு கிறித்தவன் முக்தியடைவதற்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியவற்றைச் சுருக்கமாகக் கொண்டிருக்கிறது. நம்முடைய பிரபு டாம் மூன்றாம் ஜான் அவர்களுடைய உத்தரவின்படி இந்நூல் தமிழ் மற்றும் போர்த்துக்கீசிய மொழிகளில் அச்சடிக்கப்பட்டு அதற்கு சிவப்பு நிறத்தில் தமிழ் விளக்கம் கூறப்பட்டிருக்கிறது.
இக்குறிப்பிட்ட பிரதி தற்போது லிஸ்பனில் உள்ள பீலம் (Belem) என்ற இடத்திலுள்ள “Doctor leile de vasconcellos” என்கிற மானிடவியல் அருங்காட்சியகத்தில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்நூல் எவோரா (Evora)விலுள்ள கார்த்தூசியன் மடாலயத்தின் “Scala Cocli” நூலகத்திற்குச் சொந்தமாயிருந்தது. இப்பிரதி Jesuit Theotonio de Braganca (1536-1602) என்கிற புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரால் நூலகத்திற்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இவர் கோய்ம்பிரா (Coimbra)வில் பிறந்து ரோம் மற்றும் பாரிஸ் நகரங்களில் கல்வி பயின்றவர். இவர் எவோராவின் கிறித்தவ மதகுருவாக இருந்து 1598இல் கார்த்தூசியன் மடாலயமான Scala Caeliயை நிறுவினார். அப்பிரதியில் அவர் கைப்பட எழுதியிருக்கிற குறிப்பே கார்த்தூசியன் நூலகத்திற்கு அப்பிரதி அன்பளிப்பாக அளிக்கப்பட்டிருக்கிறது என்கிற தகவலைக் கொடுக்கிறது.8 அதன்பிறகு மடாலயத்திலிருந்து இப்பிரதி மறைந்துவிட்ட போது Torre do Tombo என்கிற அமைப்புக்குச் சென்றிருக்கலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் அப்பிரதி Torre do Tomboவினுடைய முன்னாள் இயக்குனரான Jose Bastosற்கு உரிமையாயிருந்தது. 1909இல் இப்பிரதி படிக்காத ஒருவர் கையில் இருந்தது, அவரிடமிருந்து Dr.Vasconcellos என்பவர் அவருடைய மானிடவியல் அருங்காட்சியகத்திற்குப் பெற்றார்.
1948ஆம் ஆண்டு போர்ச்சுகலுடைய அச்சு வரலாற்றை எழுதுவதற்கு இப்பிரதி பெறப்பட்டதன் மூலம் அதனுடைய மேன்மையால் பரவலாக அறியப்பட்டது. Americo cortez Pinto என்பவர் தன்னுடைய ஆய்வான Da famosa Arte da Imprimissaoவிற்கு தரவுகளைச் சேகரித்த பொழுது பீலமிலுள்ள மானிடவியல் அருங்காட்சியகத்தின் தற்போதைய இயக்குனராக உள்ள பேராசிரியர் மேனுவல் ஹெலினோ என்பவரை தன்னுடைய ஆய்வில் குறிப்பிட நேர்ந்தது. ஹெலினோவால் பழமையான நூல் அட்டவணையான Innocencio da silvaவினுடைய Bibliographia Lusitanaவில் குறிப்பிடப்பட்டிருக்கிற அரிய அச்சு நூல்களை தற்செயலாகக் கண்டறியமுடியவில்லை. இவரினும் பழமையான அட்டவணையாளர்களாலும் காணமுடியாமல் போனது. இந்நிலையில் பேராசிரியர் ஹெலினோ, கார்ட்ஸ் பின்டோ-வை அழைத்து அவர் தன்னுடைய அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிற அரிய புத்தகத்தைக் காணச் செய்தார். பிறகு அப்புத்தகத்தின் அடையாளம் காணப்பட்டது. Cortez Pinto அவர்கள் தன் ஆய்வில் மிகுந்த ஈடுபாட்டுடன் அபூர்வமான அப்புத்தகத்தைப் பற்றி எழுத சில பக்கங்களை ஒதுக்கினார். அத்துடன் அச்சிறுப் புத்தகத்தின் நான்கு பக்கங்கள் அவரால் வண்ண நகலெடுக்கப்பட்டது. இச்சிறுவெளியீட்டின் கையெழுத்துப்பிரதி Oportoவிலுள்ள நகராட்சி நூலகத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.10
நான் 1954ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சிலநாள் லிஸ்பனுக்குச் சென்றிருந்தபோது அப்பிரதியை ஆராய்ந்தேன். ஆனால் அப்பிரதியைப் பற்றி விரிவானத் தகவல் எடுக்கப்படவில்லை, தற்சமயமும் அதைப் பற்றி ஆராய, அதன் ஒளிப்படங்கள் அனுப்பப்படும் என்று எதிர்நோக்கியிருக்கிறேன். இதுவரையிலும் அப்பிரதியின் ஒளிப்படங்களோ, நுண்படங்களோ பெறுவதில் நான் எடுத்த முயற்சி வெற்றியடையவில்லை. 1554இல் அச்சிடப்பட்ட Cartilha எனும் அந்த அற்புதமான அச்சுப்பிரதியிலுள்ள அச்சையும் தமிழ் மொழியையும் ஆராய Cortez Pintoவினுடைய நூலிலுள்ள நகல்களும் நேர்மையான முறையில் செயல்படவில்லை.
2. Doctrina Christam en Lingua Tamul or தம்பிரான் வணக்கம், pp.16, Colligio do Saluador, Quilon, 20 Febraruy, 1577.
பிரார்த்தனைகள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படைத் தத்துவங்களடங்கிய இச்சிறுநூல் ஹார்வர்ட் கல்லூரியால் வாங்கப்பட்டதற்கு முன்பாக ஆராய்ச்சியாளர்கள் இதனை முற்றிலும் அறியாதவர்களாய் இருந்தார்கள். இந்நூலைப் பற்றியான சிந்தனை 1952ஆம் ஆண்டின் இளவேனில் காலத்து ஹார்வர்ட் நூலக அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஹார்வர்டிலுள்ள நூலகரான G.W.Cottrell Jr. என்பவரின் உதவியால் இச்சிறுநூலின் புகைப்படப்பிரதி தற்சமயம் எனக்கு கிடைக்கப்பெற்றது. இந்திய மொழிகளுள் குறிப்பிட்ட ஒரு மொழியின் எழுத்தால் அச்சிடப்பட்ட முதல் நூலுக்குச் சான்றாக இந்த ஹார்வர்ட் பிரதி அமைந்திருக்கிறது. அத்துடன் இந்தியாவில் இந்திய மொழி ஒன்றில் அச்சிடப்பட்டு கிடைக்கப் பெறுகிற முதல் நூலுக்குச் சான்றாகவும் இது அமைந்திருக்கிறது.
பாதிரியார் Pedro de Fonseca (1527-1599)வின் ஊகத்தின்படி இப்பிரதி இந்தியாவிலிருந்து ரோமுக்கு அனுப்பப்பட்டு நவம்பர் 1579ஆம் ஆண்டில் பெறப்பட்டிருக்கிறது. இவர் ரோமில் 1573-81 வரை ‘General of the Jesuit order’ இல் போர்ச்சுகலுக்கான துணைவராகப் பணியாற்றியிருக்கிறார். இவர் தன் வாழ்க்கை வரலாற்றுக் கையெழுத்துப் பிரதியில் பின்வருமாறு எழுதியிருக்கிறார். “Portata dall India. Hauuta dal pre Fonseca del mese di novembre M.D. Lxxix”. இப்பிரதி 1773இல் Jesuit order தடைசெய்யப்பட்டது வரை சியனா (Siena)வில் உள்ள ஒரு கிரேக்கப் பாதிரியார் நடத்தும் கல்லூரியில் இடம்பெற்றிருந்தது. பிறகு வியன்னாவிலுள்ள Fideikommissbibliothek எனும் இடத்தின் அரசனான Liechtenstain என்பவரிடம் இருந்தது. சமீபத்தில் இப்பிரதி ஐரோப்பா மற்றும் அமெரிக்கப் புத்தக சந்தைகளுக்கு அனுப்பப்பட்டது. பிறகு லண்டனிலுள்ள William H. Robinson Ltd என்ற நிறுவனத்திடமிருந்து ஜனவரி 1951ஆம் ஆண்டு ஹார்வர்ட் கல்லூரியின் நூலகத்திற்காக வாங்கப்பட்டது.11
3. Doctrina Christam: கிரீசித்தியானி வணக்கம், pp. 120, Collegio da madre de Deos, Cochin, 14 November, 1579
இப்பிரதி “Bibliotheque de I Universite de France” என்று முத்திரையிடப்பட்டு Sorbonne நூலகத்தில் இடம்பெற்றிருந்தது என 1928ஆம் ஆண்டு Fr. Robert Streit. O.M.I. அவர்களால் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.12 அதன்பிறகு இப்பிரதி Sorbonne நூலகத்திலிருந்து காணாமல் போய்விட்டது. அநேகமாக பிரதி இடம்மாறி இருக்கவேண்டும் அல்லது இரண்டாம் உலகப் போரின்போது வெளியே எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். எதிர்பாராத வகையில் இப்பிரதி இன்னும் Sorbonneவிலேயே கிடைக்கப்பெறுகிறது. St.Francis Xavier என்பவரின் அதிகாரத்தின் மூலம் கிறித்து ஆராய்ச்சியாளர் Fr.Georg Schurhammer அவர்களுக்காக உரிய காலத்தில் ஒளிப்படம் எடுக்கப்பட்டது. இவரால் இவ்வொளிப்பட நகல் தூத்துக்குடியிலிருந்த பிரெஞ்சுப் பாதிரியார் T.Roche S.J. அவர்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இப்பாதிரியார் 1951ஆம் ஆண்டு எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். இப்பிரதியை ஆராய்ச்சி செய்யவும், நுண்படம் எடுக்கவும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு 1952ஆம் ஆண்டு இரவலாகத் தரப்பட்டது. ஆயினும் இப்பிரதி எனக்கே உரிமையாக இருந்து வருகிறது.
1732ஆம் ஆண்டின் கடைசிவரை ‘Doctrina’வினுடைய பிரதிகள் தென்னிந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. டானிஷ் மிஷினரியைச் சார்ந்த Sartorius என்பவர் 1732ஆம் ஆண்டு தன் நாட்குறிப்பில் இந்நூலின் பிரதியை பழவேற்காட்டிலும் மற்றொரு பிரதியை தரங்கம்பாடியிலும் கண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.13
4. Flos Sanctorum o Libro de las vidas di algunos santos trasladas en lengua malavar, pp. 669, (Tuticorin or Punnaikayil), 1586.
நான் இந்நூலினுடைய பிரதியை ஜூன் 1954இல் வாடிகன் நூலகத்திலுள்ள கையெழுத்துப் பிரிவில் கண்டறிந்தேன். மீனவர் பகுதியில் அச்சிடப்பட்ட Flos Sanctorum நூல் அச்சேறிய ஆண்டு குறித்து பல எழுத்தாளர்கள் பலவாறாகக் கூறுகிறார்கள். நூலின் கடைசியில் கொடுக்கப் பட்டிருக்கிற மாதா கோயில் தொடர்பான நாட்குறிப்பைக் கொண்டு பார்க்கிறபொழுது இந்நூல் 1587ஆம் ஆண்டில் அல்லது அதற்கு முன்பாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்று காரணத்தோடு நம்பப்படுகிறது. ஏனெனில் நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கிற நாட்குறிப்பில் சாம்பல் புதன் (Ash wednesday), ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை (Easter Sunday) போன்ற பல நிகழ்வுகளுக்கான நாட்கள் ஒரு பக்க அளவில் 1587 தொடங்கி 1614 வரை தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுக்கு கூறப்பட்டிருக்கிறது. இந்நூலாசிரியரின் ஸ்பானிஷ் மொழியிலமைந்த முன்னுரை எந்த சந்தேகமுமின்றி காலம் தொடர்பான கருத்தைக் கூறுகிறது.