"உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்தும் மகிழுமாறு உதித்தெழுந்து [மகாமேரு மலையை] வலம் வருவதும், பலராலும் புகழப்படுவதுமான ஞாயிறு [கதிரவன்], கிழக்குக்கடலில் தோன்றுவதைப்போன்று, தம் கண்களின் பார்வையை வேறு எந்தப் பொருள் மீதும் செலுத்தாமல் கண் இதழ்களைக் குவித்து மூடியவாறு இறையருளில் மூழ்கியுள்ள பக்தர்களின் உள்ளத்தில் விளங்குவதும், தம் புறக்கண்களால் நோக்கும் பக்தர்களுக்குத் தொலைவில் நின்று விளங்குவதுமான இயற்கைப் பேரொளி வடிவினன் திருமுருகப்பெருமான்."
விளக்கவுரை:
இரவின் இருளில் மூழ்கிக்கிடக்கும் உயிர்கள், ஞாயிற்றின் தோற்றத்தால் விழிப்பு நிலை பெற்று வினையாற்றத் தொடங்குவது போல, திருமுருகப் பெருமானின் திருவருளைப் பெறும் உயிர்கள் ஆணவ இருள் நீங்கப் பெற்று, அப்பெருமானின் திருவடிகள் நல்கும் ஒளி பொருந்திய முக்திப் பேற்றினை அடைந்து மகிழும்.
திருமுருகப்பெருமான், 'தனக்கு உவமை இல்லாதான்' ஆயினும், பக்தர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளவேண்டியே, இறைவனின் சிறப்பான வடிவங்களில் ஒன்றாகிய கதிரவனைத் திருமுருகப்பெருமானுக்கு உவமையாகக் கூறியுள்ளார் புலவர் பெருமான் நக்கீரர்; மேலும், கதிரவனின் செங்கதிரை ஒத்த செந்நிறத் திருமேனியை உடையவனாதலால் 'சேயோன்' என்னும் திருப்பெயரால் திருமுருகப்பெருமான் அழைக்கப்பெறுதலும் நோக்கற்பாலது [மாணிக்கனார் 1999:90-91].
கதிரவன் புற இருளை அகற்றுவதைப் போல, திருமுருகப்பெருமான் தன்னை மனத்தால் கண்டு சிந்திப்பவர்களின் ஆணவமாகிய அக இருளைப் போக்கி அருள் புரிதலால் மேற்கூறிய உவமம் தொழில் -உவமமாக விளங்குகின்றது. மேலும், திருமுருகப்பெருமானைக் கண்குளிரக் காணும் பக்தர்களுக்குக் [கடலின் பசுமையும் ஞாயிற்றின் செம்மையும் போல்] மயிலின் பசுமையும் திருமுருகப்பெருமானின் திருமேனிச் செம்மையும் தோன்றலின் அவ்வுவமையை வண்ண- உவமமாகவும் கொள்ளலாம் என்பது உரையாசிரியர் நச்சினார்க்கினியரின் கருத்தாகும் [மாணிக்கனார் 1999:90].