அறம், ஒழுக்கம் உடைமை, பெருமை, சான்றாண்மைகளைப் போல வரையறுத்துணர்த்த இயலாத இலக்கணம் உடையது பண்புடைமை. அறத்துப்பாலில் ஒப்புரவு போல பொருட்பாலில் உலகநடையை- உலகத்தார் நடையை அறிந்து பொருளானும், குணநலங்களானும் பிறர் நச்ச நடந்து கொள்வது என்ற இலக்கணம் உடையதாக உரைகளால் துணியக்கூடும். - ச தண்டபாணி தேசிகர்
இவ்வதிகாரத்தில் சொல்லப்படும் பண்புடைமை யாவரிடமும் எளியனாய் கலந்து ஒழுகுதலைக் குறிப்பது. அன்புள்ளம் கொண்டவராயும் நல்ல குடும்பத்துள்ளோரது குணமுடையவராயும் இருப்பவர்க்கு பண்புள்ளவராக அளவளாவுதல் இயல்பாக அமையும். உலகோருடன் ஊடாடும்போது பண்பு வெளிப்படுமாதலின், பழகும் பண்பாட்டை விளக்குவதாகவும் இவ்வதிகாரம் உள்ளது. பண்புள்ளவர் பிறருக்கும் உதவும் குணம் கொண்டவராயிருப்பார். பண்புடையார் இருப்பதாலேயே இவ்வுலகம் மறையாமல் உள்ளது.
பண்புடைமை
'பண்புடைமையாவது யாவர்மாட்டும் அவரோடு ஒத்தஅன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்கும் பரிதலும், பகுத்து உண்டலும், பழி நாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை' என்று விளக்கம் தருவார் பரிப்பெருமாள். பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் (கலித்தொகை, நெய்தல், 16) என்கிறது சங்கப்பாடல். இதன் கருத்து பண்பு என்று சொல்லப்படுவது பிறருடைய இயல்புகளை அறிந்து நடத்தல் என்பது. 'பாடு என்றது பெருமை, பக்கம்-அனுபவித்தலாகிய நுகர்ச்சி, முறைமை, ஒழுக்கம் முதலான பல பொருளைத் தரும் பெயர்ச்சொல்' எனக் கூறி, 'இத்தனைப் பொருளையும் இணைக்க பண்புடைமையின் பொருளாகும்; சான்றோர் ஒழுக்கமுடனும் தம் பெருமைக்கு இழுக்கின்றியும் முறையறிந்து பக்கத்திலுள்ளாருடைய நுகர்ச்சியறிந்து அதற்கேற்ப நடத்தல் எனின் ஆசிரியர் கூறும் பண்பிலக்கணம் அமைவதைக் காணலாம்' என்பது பாடறிந்து ஒழுகுதலுக்குத் தண்டபாணி தேசிகர் தரும் விளக்கம்.
இவ்வதிகாரம் தனிமனிதன் தான் வாழும் சமுதாயமக்களுடன் ஊடாடுவது பற்றியும் அவ்வுறவைப் பேணிப் பாதுகாத்தல் பற்றியும் பேசுகிறது. அவற்றிற்குரிய பண்புடைமை சொல்லப்படுகிறது. கலந்து பழகும் (sociable) திறன் வலியுறுத்தப் பெறுகிறது. ஒருவரிடம் பெருமை, சான்றாண்மை முதலிய சிறப்பியல்புகள் அமையப்பெற்றும் பலரோடு ஒத்து இயைந்து வாழமுடியாது போனால் அவற்றால் பயன் என்? இங்கு சொல்லப்படும் பண்பு மக்கட்பண்பு ஆகும். மக்கட்பண்பு என்பது என்ன? ஒருவர் தம்மொடு பழகுவார் எக்கொள்கை கொண்டவராயிருந்தாலும், எந்தவித நிலையில் இருந்தாலும், அவரது இனம், சமயம், மொழி என்னவாக இருந்தாலும் அவை அனைத்தையும் மனத்துள் கொள்ளாமல், அவர்களும் மனிதர்தாம் என்ற ஒரே எண்ணம் மேலோங்க, அனைவரோடும் மனங் கலந்து அளவளாவல் வேண்டும். அப்பண்பே மக்கட்பண்பு. மனிதனை மனிதன் நன்கு மதிக்கும் ஒழுக்கத்துக்கு 'மக்கட் பண்பு' என்று பெயரிடுகிறார் வள்ளுவர். வேற்றுமைகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் எல்லா நிலையிலும் இடைவிடாது நினைக்கும் மாந்தர்க்கு வேண்டுவது மக்கட்பண்பு என்கிறார் அவர். 'உடம்பின் தோற்றத்தால் ஒத்திருப்பது மக்களோடு ஒப்புமை ஆகாது. பொருந்துவதாகிய ஒப்புமை எது என்றால் மக்கட் பிறப்பிற்கு உரிய பண்பால் ஒத்திருப்பதே ஆகும்' என்று அது இவ்வதிகாரத்து ஓரிடத்தில் தெளிவாக்கப்படுகின்றது. மக்கள் ஒருவரையொருவர் காணும்போது கொள்ளும் முகமலர்ச்சி, உரையாடும்போது தோன்றும் இன்னகை, எவரையும் எக்காலத்தும் இகழாதிருத்தல் ஆகிய சிறு செயல்களிலும் பண்பு வெளிப்படும். பிறரது இயல்புகளையும் அறிந்து கொண்டு, அவற்றோடு ஒத்து ஒழுகுகிற வன்மையாக விளங்குவது மக்கட்பண்பு.
மதிநுட்பம் பல உயிரினத்தின் பொது உடைமை; அதனால் அது தனிச் சிறப்புடையது; மக்கட் பண்பாகாது. ஒருவரது இயற்கை அறிவும், நூலறிவும் உலகில் வாழ நன்கு பயன்படவேண்டும் என்றால் அவர் உலகியலை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். உலக இயல்பை அறிந்து நடப்பது மக்கட்பண்பாம். உலகறிவு எனச் சொல்லப்படுவதுமாம். அது உலகத்தோடு ஒட்ட ஒழுகலைக் குறிப்பது. நூலறிவு மெருகு கூட்டப் பெற்றது. உலகைக் கண்டு பழகி, அறிந்து நடக்கும் உலக அறிவே உண்மைவாழ்வுக்குத் துணை செய்வது, முன்னது ஏட்டுச் சுரைக்காய்; பின்னதே கறிக்கு உதவும்காய். 'யார்மாட்டும் பண்புடைமை' என்பதே மக்களியல் வழக்காதல் வேண்டும்.
உலகம் எதனால் வாழ்கிறது? பண்புடையார் இருப்பதனாலேயே என பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன் என்று இவ்வதிகாரக் குறள் (996) கூறுகிறது. இக்குறள் உண்டால் அம்ம, இவ் உலகம் ... (புறநானூறு 182 பொருள்: .... (பண்புடைய சிலர்) இருப்பதனாலேயே உலகம் நிலை பெற்றிருக்கிறது). என்ற பாடலிலுள்ள 'உண்டாலம்ம இவ்வுலகம்' என்ற பகுதியை மனத்திற்கொண்டு எழுந்தது. பண்புடைமைக்கும் உலகம் இயங்குவதற்கும் உள்ள தொடர்பு பற்றி ஔவையாரும் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை- அதாவது மழை பெய்து உலகம் இயங்கி வருவது நல்லவர்கள் இருப்பதால்தான் என்றார். ஔவையார் நல்லார் என்று குறிப்பிடுவது பண்புடையாரையே. கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி பாடிய புறநானூற்றுப் பாடலும் ஔவையாரின் வரிகளும் பொதுவாக நற்புண்புகள் சிலவற்றைப் பற்றிப் பேச வள்ளுவர், அறிவிலாரும் தீமை செய்வாரும் கலந்திருக்கும் இவ்வுலகம் எப்படி நிலைக்கிறது என்று எண்ணிப் பார்த்து மக்கட்பண்பாலேயே இவ்வுலகம் நிலைக்கிறது - பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என வள்ளுவர் துணிகிறார்.
பண்புடையவர் காட்சிக்கு எளிமையாக அதாவது எளிதில் அணுகக்கூடியவனாக இருப்பார். அவன் அன்பு நிறைந்தவனாகவும், நல்ல குடும்பத்து குணங்களுடன் இருப்பார். உடல் அளவிலான ஒப்புமை மக்களோடு ஒத்திருத்தற்கு உரியதன்று; மானுட உறவுகளால் ஒப்புமை உடையவர்களாக இருப்பவரே மனிதராவார். இனிய செயல்களோடு நன்மையையும் செய்து பயனுள்ளவனாக இருப்பான் பண்புள்ளவர். அவர் விளையாட்டாகவும் யாரையும் இகழமாட்டார்; பகைமை கொண்டவர்க்கும் மதிப்பளிப்பார். பண்புடையார் இல்லாவிட்டால் இந்த உலகம் மண்ணோடு மண்ணாய் மறைந்து போய்விடும். கூர்மை அறிவு பெற்றிருந்தாலும் பண்பில்லாதவர் மரக்கட்டை போன்றவரே. நண்பு செய்யாதவரிடமும் பண்பாய் ஒழுகாதது இழுக்காம். நகைச்சுவை உணர்வு இல்லாதவர் எஞ்ஞான்றும் இருட்டுலகில் வாழ்பராவார். பண்பில்லாதவர் பெற்ற செல்வம் தீயனவற்றிற்கே பயன்படும். இவை இவ்வாதிகாரம் தரும் செய்திகள்.
ஆகியவற்றைப் பண்புடையவர்களுக்கான உலக நடை என விளக்குகிறார் வள்ளுவர்.
பண்புடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்
991ஆம் குறள் எல்லாரிடத்தும் நற்குணமுடையவனென்று வழங்கப் பெறுதல் எளியமுறையில் கலந்து பழகுவதால் பெறுதல் எளியது என்று கூறுவர் என்கிறது.
992ஆம் குறள் யாரிடத்தும் அன்புடைமையும் நற்குணங்கள் அமைந்த குடும்பத்திற்கேற்ற குணங்களுடையனாதல் ஆகிய இவ்விரண்டும் பண்புடைமை என்று சொல்லப்படும் நெறியாகும் என்று சொல்கிறது.
993ஆம் குறள் மக்களொப்பு மக்கள் என்ற உருவ அமைப்பில் ஒத்திருத்தல் அன்று; நிறைந்த பண்பால் ஒத்திருத்தலே ஒப்பாகும் என்கிறது.
994ஆம் குறள் விரும்பப்படுதலோடு நன்மை செய்த பயனுள்ளவரது பண்பினை உலகோர் போற்றுவர் என்கிறது.
995ஆம் குறள் விளையாட்டிலும் நட்புக்கொண்டவரை இகழ்வது துன்பம் தரும்; பிறர் இயல்புகளை அறிந்து நடப்பவர்க்குப் பகைமையிடத்தும் நல்லபண்புகளே உள எனச் சொல்கிறது.
996ஆம் குறள் பண்புடையவர்கள் இருப்பதால் உலகம் இருக்கிறது; அது இல்லாவிடின் மண்ணுள் மறைந்து அழிந்துவிடுமே என்கிறது.
998ஆம் குறள் நட்பு கொள்ளமாட்டாராய் விருப்பம் இல்லாதவற்றைச் செய்வாரிடத்தும் பண்பொடு பழகாமை இழுக்காகும் எனச் சொல்கிறது.
999ஆம் குறள் யாரோடும் கலந்து மகிழ்வுடன் பழகத் தெரியாதவர்க்கு மிகவும் பெரிய இவ்வுலகம் பகற்பொழுதும் இருளிடத்துக் கிடந்ததாம் என்கிறது.
1000ஆவது குறள் பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம் நல்ல பால் அது வைக்கப்பட்ட கலத்தின் கெடுதியால் கெட்டுப் போனது போலும் என்கிறது.
பண்புடைமை அதிகாரச் சிறப்பியல்புகள்
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு (995) என்னும் பாடல் இளமையிலிருந்து பழகியவராயிருந்தாலும் இகழ்ந்து பேசி அவரைக் காயப்படுத்தாமல் நடந்துகொள்வதும், பகைமை கொண்டோரையும் எக்காரணத்துக்காகவும் இகழாது மதிப்பளித்து நடந்துகொள்வதும் பண்புடைமை எனச் சொல்வது. இக்குறள் பாடறிதல் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
குறள் நெடுக அறிவு பற்றி நிறையப் பேசும் வள்ளுவர் அறிவுக்கே முதலிடம் தருவார் என்று எண்ணுவோம். ஆனால் அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். (997) என்னும் குறளில் பண்புக்கு முதலிடம் கொடுத்து அறிவை அடுத்த நிலைக்குத் தள்ளியுள்ளார்.
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள் (999) என்ற குறள் நகைச்சுவை உணர்வு இல்லாதவர் இருட்டில் உறைவராவர் எனச்சொல்லி அவரது பண்புக் குறைபாட்டையும் சுட்டிக் காட்டுகின்றது.