Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள் அறியத் தரும் செய்திகள்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள் அறியத் தரும் செய்திகள்
Permalink  
 


திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள் அறியத் தரும் செய்திகள்

தேமொழி

Jun 12, 2021

siragu paarthasarathy kovil1

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் என்றவுடன் வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்று என்று பலருக்கும், அத்துடன் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் என்றால் சென்ற நூற்றாண்டில் பிறந்த பலருக்கு 1920 டிசம்பரில் பாரதியார் வாழைப்பழம் கொடுத்த பொழுது, அவரைத் துதிக்கையால் தாக்கி கீழே தள்ளிவிட்ட திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை நிகழ்வும் நினைவு வரும். பாரதியாரின் நண்பர் குவளைக் கண்ணன் அவரைக் காப்பாற்றினாலும் அதிர்ச்சியில் உடல்நலிவுற்ற பாரதியார் அடுத்து வந்த 9 மாதங்களில் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்பதும் நினைவு வரும்.

தொல்லியல் துறையில் இயக்குநராக பணியாற்றிய முனைவர் இரா.நாகசாமி அவர்கள், தொல்லியல்துறை வெளியீடாக 1970-ஆம் ஆண்டில் பதிப்பித்த “சென்னை மாநகர்க் கல்வெட்டுகள்” என்ற நூலானது 2009-ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. தமிழ்நாடு தொல்லியல் துறையின் தளம் இந்நூலினை மின்னூலாகப் படிக்க வாய்ப்பளித்துள்ளது. இந்த நூலில் சென்னை மாநகரில் உள்ள பல கல்வெட்டுகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன் தரக்கூடிய சிறப்பான நூல் இது. திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள் என மொத்தம் 91 கல்வெட்டுகள் சென்னை மாநகரக் கல்வெட்டு நூலில் பதிவாகியுள்ளது. இந்நூலில் அதிக அளவில் இடம் பெற்றுள்ள திருவல்லிக்கேணி கல்வெட்டுக்களைத் தொடர்ந்து மயிலாப்பூர் கோயில்களின் கல்வெட்டுகள் (88 கல்வெட்டுகள்) அதிக அளவில் பதிவாகியுள்ளன. மேலும் சென்னையின் பற்பல பகுதிகளின் கல்வெட்டுகளாக, வெவ்வேறு 29 சென்னை மாநகரப் பகுதிகளின் 79 கல்வெட்டுகளும் கிடைக்கின்றன, இவை பெரும்பாலும் பிற்காலத்துக் கல்வெட்டுகளாகவும் இருக்கின்றன. இந்நூலில் உள்ள பெரும்பான்மையான கல்வெட்டுகள் மிகவும் சிதைந்து முழுமையான செய்தி தராதவையே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் கல்வெட்டுகள் மூலம் சுவையான பல வரலாற்றுச் செய்திகளை நாம் அறிந்து கொள்ள இயலும்.

siragu kalvettu2

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கிடைப்பதில் மிகவும் பழமையான கல்வெட்டு, பல்லவர் காலத்துக் கல்வெட்டு. பொ. ஆ. 808 இல் பல்லவ மன்னர் தந்திவர்மர் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. கோயிலின் கருவறை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கல்லில் கிரந்தமும் தமிழ் எழுத்துக்களும் கொண்ட கல்வெட்டாக இது காணப்படுகிறது. அப்பொழுதே ஊரின் பெயர் திருவல்லிக்கேணி என்றுதான் கல்வெட்டில் உள்ளது. இந்நாட்களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் என்று அறியப்பட்டாலும், இக்கோயில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்து எழுமூர் நாட்டுத் திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கப் பெருமாள் கோயில் என்றுதான் 17 ஆம் நூற்றாண்டுவரை கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. எழுமூர் என்பது இன்றைய எழும்பூர்தான். திருவல்லிக்கேணி என்ற ஊரின் பெயர் பல்லவர் காலத்தில் இருந்து தொடரும் ஒரு பழமையான பெயர்.

திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள்:

சிறப்புத் தகவல் அளிக்கும் திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகளும் சிலவும், அவை வழங்கும் செய்திகள் மூலம் நாம் அறியக் கூடிய செய்திகளும் இங்கு கொடுக்கப் படுகிறது.

பெருமாளின் பெயர் மாறிய காலம்:

1604 ஆம் ஆண்டின் (17 ம் நூற்றாண்டு கல்வெட்டு எண்: 1967/81h) கல்வெட்டுச் செய்திவரை பெருமாள் திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கப் பெருமாள் என்றே குறிப்பிடப்படுகிறார்.

1801 ஆம் ஆண்டின் கல்வெட்டில் (1967/3) பார்த்தசாரதி சுவாமி என்ற சொல் காணக் கிடைக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில், 17 அல்லது 18 ஆம் நூற்றாண்டுக் காலக் கட்டதில் திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கப் பெருமாள், பார்த்தசாரதி என்ற சமஸ்கிருதப் பெயர் கொண்டவராக மாற்றப்பட்டுவிட்டார். பெரும்பாலும் விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலம் துவங்கிய பொழுது கோயில்களில் சமஸ்கிருத மயமாக்கலும் தொடங்கிவிட்டது என்ற கருத்து பரவலாக உள்ளது என்பதை நாம் அறிவோம். திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகளை மீள்பார்வை செய்கையில் இதற்குச் சற்றே மாறுபட்ட செய்தியே கிடைக்கிறது. 1564 ஆண்டு முதல் 1604 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில், குறிப்பாக விஜயநகர மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த காலகட்டத்தில் வெட்டப்பட்டனவாக 5 கல்வெட்டுகள் கோயிலில் உள்ளன. இவை யாவற்றிலுமே பெருமாள் தெள்ளியசிங்கப் பெருமாள் என்றே குறிப்பிடப்படுகிறார்.

1639ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனி சென்னையில் துவங்கி, பின்னர் 1675 இல் முற்றிலும் நாயக்க மன்னர்கள் ஆட்சி முடிவுற்ற பிறகே பெருமாள் பார்த்தசாரதியாகப் பெயர் மாற்றப்பட்டார் என்பதையே இக்கோயில் கல்வெட்டுகள் மூலம் நாம் முடிவெடுக்கலாம். ஆனால் இந்தப் பெயர் மாற்றத்திற்கும் ஐரோப்பியர்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இருந்திருக்க வழியில்லை என்பதையும் நம்மால் ஊகிக்க முடியும். கோவிலில் நான்கு தெலுங்கு மொழிக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. 1585 ஆம் ஆண்டில் விஜயநகர மன்னர் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட ஒரு தெலுங்குக் கல்வெட்டு உள்ளது. இந்த ஒரு கல்வெட்டைத் தவிர மற்றுமுள்ள 4 விஜயநகர மன்னர் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்கள் தமிழில்தான் வெட்டப்பட்டுள்ளன, அவற்றில் பெருமாள் தமிழ்ப் பெயருடன்தான் இருந்துள்ளார். ஆகவே இதிலிருந்து இந்திய மன்னர்கள் ஆட்சியின் மேற்பார்வையில் தமிழ் மண்ணின் கோயில்கள் இல்லாத ஒரு காலகட்டத்தில், ஆங்கிலேயர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயன்றுகொண்டிருந்த காலத்திலும், அவர்களது காலத்திலும் திருவல்லிக்கேணி கோயிலில் சமஸ்கிருதம் நுழைந்துள்ளது எனலாம். குறிப்பாக “இக்கோயிலைப் பொறுத்தவரையில்”, 1700கள் முழுவதும் இந்தக் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்ட காலத்தில் அது சமஸ்கிருதமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் கணிக்க முடிகிறது. 1801 ஆம் ஆண்டு கல்வெட்டில் (1967/3) இறைவன் பார்த்தசாரதியாகிவிடுகிறார்.

siragu kalvettu1தமிழ் ஆண்டுகள்:

முன்னர் குறிப்பிட்டது போல, திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள் தந்திவர்ம பல்லவர் காலத்திற்குரியதாக பொ. ஆ. 808 இல் இருந்து, 19 ஆம் நூற்றாண்டு பச்சையப்ப முதலியார் காலம் வரை கிடைக்கிறது. சென்னை மாநகர்க் கல்வெட்டு நூலில், திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள் என ஆவணப்படுத்தப்பட்டுள்ள 91 கல்வெட்டுகளையும் கால வரிசைப்படுத்திப் பார்க்கையில்:

9 ஆம் நூற்றாண்டு – பல்லவர் ஆட்சி

12 – 13 ஆம் நூற்றாண்டு – சோழர் ஆட்சி

13-14 ஆம் நூற்றாண்டு – பாண்டியர் ஆட்சி

16-17 ஆம் நூற்றாண்டு – விஜய நகர ஆட்சி

காலத்திற்குரிய கல்வெட்டுகளாகக் கிடைத்துள்ளன.

கிடைக்கும் 91 கல்வெட்டுகளில் வெறும் 15 கல்வெட்டுகளே இவ்வாறு தெளிவான காலக்குறிப்பு கொண்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கிடைக்கும் கல்வெட்டுகளில் முழுமையான கல்வெட்டுகள் குறைவு. பல கல்வெட்டுகளின் பகுதிகளே கிடைத்துள்ளன. வரலாற்றுக் குறிப்பு எதுவும் இல்லாத அக்கல்வெட்டுகள் எழுத்தமைதி கொண்டோ அல்லது கல்வெட்டு குறிப்பிடும் ஆட்சியாளர் பெயர் கொண்டோ அவை காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம் என்று கருத வேண்டியுள்ளது.

இதில் மேலும் கவனிக்கத்தக்கது என்னவென்றால், குறிப்பாக பிரபவ முதல் அட்சய என்று வடமொழியில் பெயரிடப்பட்டுள்ள “அறுபது வியாழ வட்ட ஆண்டுகள்” கொண்ட கணக்கு விஜயநகர மன்னர்கள் ஆட்சியில்தான் தொடங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. வடமொழிப் பெயருடன் இருக்கும் அறுபது வியாழ வட்ட ஆண்டுகளைத் தமிழாண்டுகள் என ஆணித்தரமாக அறுதியிட்டுக் கூறும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு குறிப்பு இது. இந்தக் காலக் குறிப்பு மாற்றம் விஜயநகர ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் தொடங்கித்தான் திருவல்லிக்கேணி கோயிலில் கிடைக்கிறது. விஜயநகர ஆட்சிக் காலத்திற்கு முன்னர், இந்தப் பேரரசின், இந்த மன்னரின், இத்தனையாவது ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது என்று குறிப்பிடும் முறைதான் முன்னர் வழக்கமாக இருந்திருப்பது தெரிகிறது.

 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று (1967/34) ஆவணி மாதத்தை மலையாள கொல்லம் ஆண்டு முறை குறிப்பது போல சிங்க ஞாயிறு என்று குறிப்பிடுகிறது. 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில் (1967/81b) மேஷ ஞாயிறு என்ற குறிப்பும் கிடைக்கிறது.

சிதைவுற்ற சிவன் கோயில் கல்வெட்டுகள்:

திருவல்லிக்கேணி “பெருமாள்” கோயிலில் கிடைக்கும் பல கல்வெட்டுகள் சிதைவுற்ற கல்வெட்டுகளாக இருப்பதுடன் அவை “சிவன்” கோயில் கல்வெட்டுகளாகவும் உள்ளன. அவை திருவான்மியூர் உலகாளுடைய நாயனார் (தற்பொழுது, அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை – 600041) என்ற சிவன் கோயிலின் கல்வெட்டுகள். 12 ஆம் நூற்றாண்டு சோழர் காலக் கல்வெட்டு ஒன்றில் மருந்தாண்டவர் (1967/137) என்றும் இறைவன் குறிப்பிடப்பட்டுள்ளார். இக்கோயில் குலோத்துங்க சோழ வளநாட்டு கோட்டூர் நாட்டுத் திருவான்மியூர் பகுதியில் இருந்ததாகக் கல்வெட்டுகளில் குறிப்பு கிடைக்கிறது. திருவான்மியூர் உலகாளுடைய நாயனார் என்ற சிவனும் பிற்காலத்தில் மருந்தீஸ்வரர் என்றபெயர் மாற்றம் பெற்றுள்ளார். 12 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டுவரை திருவான்மியூர்க் கோயிலில் இக்கல்வெட்டுகள் அக்கோயிலின் பகுதியாகவே இருந்துள்ளன. அதன் பிறகு 17 அல்லது 18 ஆம் நூற்றாண்டில் திருவான்மியூர் சிவன் கோயில் கல்வெட்டுகள் பெயர்த்தெடுத்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டு கோயிலின் பல்வேறு பகுதிகளில் தரையில் பாவு கல்லாகப் பதியப்பட்டுவிட்டன என்பதைக் கணிக்கலாம். இக்கல்வெட்டுகள் பல செய்தி முழுமையாக கிடைக்காத வகையில் சிதைந்தும் உள்ளன. நூலில் சில கல்வெட்டுக்களுக்கு சிவன் கோயில் கல்வெட்டு என்ற குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு குறிப்பிடப்படாத சிலவற்றிலும் கூட சைவ சமயத் தொடர்புடைய சொற்களான மகேஸ்வர, உலகாளுடைய நாயனார், மகாதேவர், நாயனார், ஈஸ்வர, திருச்சிற்றம்பலம், சிவப்பிராமணர் போன்ற சொற்கள் இருப்பதைக் கொண்டு அக்கல்வெட்டுகள் சிவன் கோயிலில் இருந்த கல்வெட்டுகள் என்றும் அறியலாம். எனது கணக்கின்படி 25 கல்வெட்டுகளில் சைவ சமயத்தைச் சார்ந்த சொற்கள் ஏதேனும் இருப்பதாக தெரிந்தது. சிவன் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்டவற்றில். ஒரு சில தவிரப் பெரும்பான்மை தரையில் பாவுகல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது.

திருவான்மியூர் உலகாளுடைய நாயனார் கோயிலின் கல்வெட்டுகள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மட்டுமன்றி, மயிலாப்பூர்‌ வாலீசுவரர்‌ கோயிலிலும், திருமயிலைக்‌ காரணீசுவரா்‌ கோயிலிலும் கிடைப்பதாக கோவிற் களஞ்சியம் நூல் (கோ. மு. முத்துசாமி பிள்ளை அவர்களின் கோவிற் களஞ்சியம் – அறிமுகம், 1991-பக்கம் 113) குறிப்பிடுகிறது. திருவான்மியூர்‌ மருந்தீசர்‌ கோயில்‌ திருப்பணி செய்யப்பட்ட போது சுவாமி கோயில்‌ குறுகலாகவும்‌ உயரம்‌ குறைந்தும்‌ இருந்ததால்‌ மூலத்தானத்தைப்‌ பிரித்தெடுத்து அம்பிகை சந்நிதிக்குப்‌ பயன்படுத்திய பின்னர் புதிய கற்களைக்‌ கொண்டு சுவாமி சந்நிதி கட்டப்பட்டுள்ளது தெரியவருகிறது என்றும் இந்த நூலின் மூலம் அறிய முடிகிறது. இந்நூல் குறிப்பிடும் கோவில்களான வாலீசுவரர், காரணீசுவரா் கோயில்கள் தவிர்த்து, மயிலைக் கபாலீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர் கோயில்களிலும் திருவான்மியூர் உலகாளுடைய நாயனார் குறிப்புள்ள கல்வெட்டுகள் இருப்பதை சென்னை மாநகரக் கல்வெட்டுகள் நூல் மூலம் அறிய முடிகிறது. இது போன்றே, சாந்தோம் மாதா கோயிலிலும் மயிலாப்பூர் ஈச்சரமுடையார் சிவன் கோயில் கல்வெட்டுகள் கிடைக்கின்றன.

ஆக, திருப்பணி என்ற பெயரில் 17 அல்லது 18 ஆம் நூற்றாண்டு வாக்கில் திருவான்மியூர் உலகாளுடைய நாயனார் தனக்கு அளிக்கப்பட்ட சொத்துகள் பலவற்றையும் இழந்துள்ளார் என ஊகிக்கலாம். இவ்வாறு நிகழக் காரணம் என்னவாக இருக்கும் என்று கணிக்க முற்பட்டால், ஒன்று, மக்கள் கல்வெட்டுகளில் என்ன எழுதியிருக்கிறது என்று படிக்கும் கல்வியறிவை இழந்த அறியாமையின் காரணமாக இருக்கலாம். அல்லது, கல்வெட்டுகளைச் சிதைத்து அப்புறப்படுத்தி நகரின் பல்வேறு பகுதிகளில் துண்டுகளாக சிதறடித்த பின்னர் சிவன் கோயில் சொத்துகளை உரிமையாக்கிக் கொள்ளும் எண்ணம் திருப்பணியில் ஈடுபட்டோருக்கும் கோயில் நிர்வாகக் குழுவினருக்கும் இருந்திருக்கலாம் என்றும் ஊகிக்க இயலும்.

பாவுகல்லாகப் பயன்படுத்தப்பட்டவை சிவன் கோயில் கல்வெட்டுகள் மட்டுமன்று, ஐரோப்பியர் காலத்துக் கல்வெட்டுகளும் கூட பாவுகல்லாக மாறியுள்ளன. 17 அல்லது 18 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் சில (1967/73, 1967/76, 1967/80) ரோமன் எழுத்துருவில் லத்தீன் அல்லது ஆங்கில மொழிக் கல்வெட்டுகளாகும். பாரசீகக் கல்வெட்டு எனக் குறிப்பிடப்படும் ஒரு கல்வெட்டிலும் (1967/208) ரோமன் எழுத்துருவே உள்ளது. இவை மிகவும் சிதைந்தவனவாகவும், அவற்றில் என்ன செய்தி எழுதப்பட்டிருந்தது என்று அறியும் வகையில் இல்லாத நிலையிலும் உள்ளன. இவை ஏதேனும் சிதைந்த கட்டுமானங்களின் கல்வெட்டுகளாகவோ அல்லது நினைவுக்கற்களின் பகுதிகளாகக் கூட இருந்திருக்க வாய்ப்புள்ளது.

உணவு:

- 1599 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் (1967/81e) சித்திரைத் திருநாள் திருத்தேர் நிகழ்ச்சிக்காகவும், வசந்தத் திருநாளுக்கும், சூடிக் கொடுத்த நாச்சியார் திருநாளுக்கும் திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கப் பெருமாளுக்கு திருவமிர்து படைக்க கொடை அளிக்கப்பட்டுள்ளது. அதில் உணவு வகைகளும், சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்களின் குறிப்புகளும் உள்ளன.

சித்திரைத் திருநாள் திருத்தேர் நிகழ்ச்சிக்காகச் சமைக்கப்பட்ட உணவு வகைகள்: புளியோதரை, பணியாரம், பருப்புப் பொங்கல், அப்பம், தோசை ஆகியனவும்,

அதற்குத் தேவையான அரிசி, பயறு, உளுந்து, புளி, நெய், மிளகு, எண்ணை, வெல்லம், தேங்காய், பழம் போன்றவை குறித்தும்,

வழிபாட்டிற்குத் தேவையான பொருட்களாக சாம்பிராணி, பூ, பனிநீர் (பன்னீர்), பனிநீர் செம்பு (பன்னீர் செம்பு), சந்தனம், நெய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, இளநீர், பந்தம் ஏற்ற எண்ணை ஆகியவற்றிற்கு கொடை அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

- 1585 ஆம் ஆண்டில் தெலுங்கு மொழியில் வெட்டப்பட்ட மற்றுமொரு கல்வெட்டு (1967/81k) தெள்ளியசிங்கப் பெருமாள், வேதவல்லி நாச்சியார், சூடிக் கொடுத்த நாச்சியார் திருநட்சத்திரங்கள் வரும் திருநாட்களில் செய்யப்பட வேண்டிய கைங்கர்யத்திற்காக தயிர்ச்சோற்றுடன், தோசை, ஆப்பம், வடை, பானகம், பணியாரம், பொங்கல், தளிகை(அமுது) யுடன் கூடிய அமுதுபடி செய்விக்கும் சமையலுக்குத் தேவையான பொருட்களாக வெண்ணெய், நெய், பால், புளி, வாழைப்பழம், தயிர், பால், வெல்லம், அரிசி ஆகியனவும்; வழிபாட்டுக்குச் சந்தனம், சாம்பிராணி, பூக்கள், வெற்றிலை, வாழைப்பழம் போன்றவையும் வழங்கக் கொடை செய்யப்பட்டதைக் குறிக்கிறது.

இவ்விரு கல்வெட்டுகள் மூலம் புளியோதரை, பணியாரம், பருப்புப் பொங்கல், அப்பம், தோசை, தயிர்ச்சோறு, ஆப்பம், வடை, பானகம், தளிகை கோயிலின் அமுதுபடியாக இருந்ததையும், குறிப்பாக தோசை 16 ம் நூற்றாண்டு சென்னை மக்களின் உணவாக இருந்ததை அறிய முடிகிறது.

பச்சையப்ப முதலியார் கொடையும் குலோத்துங்க சோழன் திருமாளிகையும்:

1842 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் பயணிகளுக்கு (தேசாந்திரி) உணவு வழங்குவதற்காகவும், இந்துப் பிள்ளைகளுக்குச் சாஸ்திரங்களைக் கற்பிப்பதற்காக பண்டிதர் ஒருவருக்கும், ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் (உபாத்தியாயர்) ஒருவருக்கும் ஊதியம் தர பச்சையப்ப முதலியார் கொடை செய்துள்ளார். அதற்காக ஒரு லட்சம் வராகன் பணம் அளித்து, அதனை அறக்கட்டளையாக நிறுவி, வரும் வட்டியில் நீதிமன்றத்தின் அதிகாரிகள் மேற்பார்வையில் கொடையின் பலன் தொடரும்படி திட்டம் வகுத்துள்ளார் என்ற செய்தி கிழக்கு நுழைவாயில் கல்வெட்டில் கிடைக்கிறது. 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று (1967/59) குலோத்துங்க சோழன் திருமாளிகை பற்றி குறிப்பிடுகிறது.

முடிவுரை:

இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் என்ற துறையுண்டு. அது போல இன்வெஸ்டிகேட்டிவ் ஆர்க்கியாலஜி என்ற துறை தொல்லியலில் வளர்ந்தால் தமிழக வரலாற்றில் எப்பொழுது காலக் குறிப்புகள் மாறுகின்றன, எப்பொழுது பெயர்களின் பின்னொட்டாக சாதிப்பெயர்கள் தோன்றின, எப்பொழுது கோயில் இறைவர்களுக்குச் சமஸ்கிருதப் பெயர் சூட்டப்பட்டது, எப்பொழுது பெண்களுக்குச் சொத்துரிமை மறைந்தது என்பதை வரலாற்றுச் செய்திகளாக கல்வெட்டுச் சான்றுகளுடன் அறிய முடியும். ஏனெனில் அறுபது வியாழ வட்ட ஆண்டுகள் குறிப்பு, பெயரின் பின்னொட்டாக – முதலியார், பிள்ளை, செட்டியார் போன்ற பல சாதிப்பெயர் இணைப்புகள், இறைப்பெயர் மாற்றங்கள் என யாவும் நிகழ்ந்தவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், சற்றொப்ப இரு நூற்றாண்டுகளுக்குள் நடந்து முடிந்தவையாக அறிய முடிகிறது. மேலும் 1880 களின் இறுதிப்பகுதி வரை பெண்கள் தங்கள் வீடுகளை, சொத்துகளைக் கோயிலுக்கு எழுதிவைத்து, கோயில் கட்டி திருப்பணிகளில் ஈடுபட்டிருந்த கல்வெட்டுச் சான்றுகளும் கிடைக்கின்றன.

அரசர்களின் ஆட்சிக் காலம், கலை வளர்ச்சி, இறையாண்மை என்பனவற்றையும் கடந்து மானுடவியல் பார்வையில் தமிழ்நாட்டுக் கோயில்களின் கல்வெட்டுச் செய்திகள் ஆராயப்படவேண்டிய தேவை மிகுதியும் உள்ளது. அது தமிழக வரலாற்றை மேலும் செம்மைப்படுத்த உதவும். அதற்குள் கோயில் கல்வெட்டுகளைத் திருப்பணி என்ற முயற்சிகளில் சிதைக்கப்படாமல் பாதுகாக்க வேண்டிய தேவையும் உள்ளது. கல்வெட்டுகளைச் சிதைத்து பல்வேறு இடங்களுக்குச் சிதறடித்ததன் பின்புலத்தில் இருந்தது மக்களின் அறியாமை என்பதைவிட, மக்களின் அறியாமை நிலைமையைப் பயன்படுத்தி கோயில் சொத்துகளைக் களவாடும் நோக்கமும் இருந்திருக்கலாம், தடயங்களை மறைக்கும் முயற்சி இருந்திருக்கலாம், வரலாற்றை மறைக்கும் நோக்கமும் இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் ஆராயவேண்டிய தேவை உள்ளது.

கட்டுரைக்கு உதவிய தரவுகள்:

“சென்னை மாநகர்க் கல்வெட்டுகள்”, முனைவர் இரா.நாகசாமி, 2009-ஆம் ஆண்டு, இரண்டாம் பதிப்பு – தமிழ்நாடு தொல்லியல் துறை தளம்

https://www.tnarch.gov.in/Library%20BOOk%20PDF/Chennai%20Maanagara%20Kalvettukal.pdf

 

இக்கட்டுரையின் திருவல்லிக்கேணி கல்வெட்டுத் தரவுகளை கீழுள்ள சுட்டியில் பெறலாம் -

https://drive.google.com/file/d/1W7nHSqlYO02XatOUoMjLBucNXe4ArqDW/view?usp=sharing

 

தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை தளம் – திருக்கோயில்கள் நிலங்கள் பட்டியல் தரவுகள்:

https://hrce.tn.gov.in/hrcehome/land_search.php?activity=land_search



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard