ஒவ்வொரு அரசாங்கமும் தம்முடன் ஓத்த கொள்கையினருடன் உறவு கொண்டி ருக்கவேண்டும். ஏறக்குறைய ஒன்று பட்ட கொள்கையினருடன் கொண்டிருக்கும் உறவுதான் நிலைத்துநிற்கும்; உதவியாக இருக்கும். தன் எதிரிகளுடன் வைத்துக் கொண்டிருக்கும் தொடர்பு நீடித்திருக்காது, எதிரிகளுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நட்பு, தன் கொள்கை களை உறுதியுடன் பின்பற்றி நடப்பதற்கு இடையூறாகவே இருக்கும். அரசியல்வாதிகள் - நாட்டை அளுவோர் - அறிந்து கொள்ளவேண்டிய அரும் பொருள்களில் இது ஒன்று.
“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்”
நட்புக் கொள்ளுவதற்குப் பழைய தொடர்பும், பழக்கமும் வேண்டாம்; ஒன்றுபட்ட உணர்ச்சியே நட்பு உண்டாவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும். (கு.85)
“நட்பிற்கு வீற்றிருக்கை யாதுஎனின், கொட்பு இன்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை”
நட்புக்குரிய சிறந்த நிலை யாதென்றால், என்றும் வேறு பாடு இல்லாமல், முடியும்போதெல்லாம், உதவிபுரிந்து தாங்கும் நிலைமையாகும்.” (ஞ..889)
இந்த இரண்டு குறள்களும் யாரை நட்பாகக் கொள்ள வேண்டும்; உறவு கொள்கின்றவார்களின் பண்பு எப்படியிருக்க வேண்டும்; எப்படிப்பட்ட அரசாங்கங்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டு ஓத்து வாழ வேண்டும்? என்பவைகளை உணர்த்தின.
“நமக்கும் அவர்களுக்கும் நீண்ட காலத்தொடர்பும் பழக்கமும் உண்டு; கொள்கையிலே வேறுபட்டிருந்தாலும், அவர்களுடைய உறவைக் கைவிடக்கூடாது. நம் நாட்டுக்கும்
அந்த நாட்டுக்கும் பழந்தொடர்பு யாதும் இல்லை; கொள்கை யிலே நாம் ஒன்றுபட்டி ருக்கின்றோம் என்பதற்காக அவர்களுடன் நாம் புதிய உறவு கொள்வது பொருந்தாது” என்று சொல்லும் அரசியல்வாதிகள் சிலர் உண்டு. இவர்கள் நேர்மையான அரசியல்வாதிகள் அல்லர் என்பதை மேற்காட்டிய குறளால் காணலாம்.
கைவிடத் தக்கவர்
“மருவுக மாசற்றார் கேண்மை; ஒன்று ஈந்தும்
ஒருவுக ஒப்பு இலார் நட்பு.
குற்றமற்றவர்களுடனேயே நட்புக்கொள்ள வேண்டும்; தம்முடன் ஒத்த பண்பும், கொள்கையும் இல்லாதவர்களுடன் கொண்ட நட்பை, அவர்களுக்கு ஏதேனும் ஒரு பொருளைக் கொடுத்தாவது துண்டித்துககொள்ள வேண்டும்” (கு.800). தெரியாத்தனமாகத் தம்முடன் முரண்பட்டவர்களுடன் உறவு கொண்டு விடலாம்; அந்த உறவை நீடித்து வைத்துக் கொண்டிருத்தல் தவறு. அந்த நட்பை விரைவில் அறுத்துக் கொள்வதே நலம்; விரைவில் அந்த நட்பைக் கைவிட முடியாவிட்டால் - நாம் விட்டாலும் அவர்கள் நம்மைவிட்டு விலகாமல் இருந்தால் - அவர்களுக்கு ஏதேனும் ஒரு பொருளைக் கொடுத்தாவது விலகிக்கொள்ள வேண்டும்; இதுதான் அறிவுடைமை; உரிமை ஆட்சி நிலைத்து நிற்பதற்கு அடிப்படையாகும்.
“கனவிலும் இன்னாது மன்னோ, வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
செயல் வேறு; சொல் வேறு; என்று இருபபவர்களுடன் கொள்ளும் நட்பு, நனவில் மட்டும் அன்று கனவிலும் துன்பந் தருவது.” (ஞ.879) தம்முடன் ஒத்த செயலும் சொல்லும் இல்லாதவர்களுடன் கொள்ளும் நட்பு எவ்வளவு இன்னல் விளைவிக்கும் என்பதை இதனால் காணலாம்.
“பதைநட்பாம் காலம் வருங்கால் முகும்நட்டு
அகம்நட்பு ஒரீஇ விடல்.
பகைவர் நண்பராகும் சமயம் வந்தால், அவர்களுடன் முகத்தளவில் நட்புக்கொண்டு, உள்ளத்திலே நட்பில்லாமல் இருந்து, காலம் வாய்க்கும் போது அந்த நட்பையும் கைவிட வேண்டும்”.
சில சமயங்களில் கால நிலையைக் கருதி - உலக நிலையைக் கருதி பகைவர்களுடனும் கூட்டுச்சேரக் கூடிய காலம் வரலாம். அம்மாதியான சமயம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? அப்பகைவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பவைகளை வள்ளுவர் இக்குறளின் மூலம் மிகவும் அழகாக வலியுறுத்தியிருக்கின்றார்.
இக் குறளிலே அடங்கியிருக்கும் அரசியல் நுட்பம் அறிஞர் களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாகும். பகைவர் எக்காலத்திலும் நம்முடன் ஓத்த நட்பினராக இருக்கமாட்டார்கள்; தங்கள் காரியத்தின் பொருட்டு மட்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி நடிப்பார்கள்; நாமும் அவர்களைப் போலவே நடித்தால் தான் அவர்களால் நாம் ஏமாற்றப்படமாட்டோம். பிற நாடுகளுடன் உறவுகொள்ளும் அரசியல் அறிஞர்கள் இவ்வுண்மையை மறத்தல் கூடாது.
ஒத்த கொள்கையினருடன் தான் உறவு கொள்ள வேண்டும்; உண்மையில் உதவி செய்கின்றவர்களுடன் கொள்ளும் நட்புத்தான் நிலைத்து நிற்கும். குற்றமற்றவர்களின் நட்பையே தேடிக்கொள்ள வேண்டும். குற்றம் உள்ளவர்களிடம் நட்புக் கொண்டு விட்டால் எவ்வகையிலாவது அதைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். ஒன்றுபட்ட கொள்கையற்றவர்களிடம் கொள்ளும் உறவு கனவிலும் துன்பந்தரும். பகைவரோடு உறவு கொள்ள நேர்ந்தால் அவர்களைப் போலவே நாமும் அவர் களுடன் பழக வேண்டும். இம்முறையில் மற்றவர்களுடன் உறவு கொண்டிருக்கும் ஆட்சிதான் நிலைத்து நிற்கும். இவைகளே ஆட்சி நிலைப்பதற்கு அடிப்படையானவை. இக்கருத்துக்களையே வள்ளுவர் வலியுறுத்தி யிருக்கின்றார். அரசினர்க்கு உரைத்த இவ்வுரைகள் தனிப்பட்ட மக்களுக்கும் பொருந்தும்.