வள்ளுவர் செல்வம் சேர்ப்பதை மறுக்கவில்லை. வள்ளுவர் காலத்திலே ஏழைகளும் செல்வர்களும் நாட்டில் இருந்தார்கள். பொருள் சேர்ப்பது பாவம் என்றால் அதை ஒருவரும் நம்ப மாட்டார்கள். இல்லாதவர் உள்ளவர் என்ற வேற்றுமையுள்ள சமுதாயத்திலே செல்வம் இல்லாதவர்கள் சிறுமைப்பட வேண்டியதுதான். இது வள்ளுவர் அறிந்த உண்மை.
செல்வம் உள்ளவரே இவ்வுலகத்தில் இன்பம் பெற்று வாழ முடியும். வறியவர்களின் வாழ்க்கையிலே இன்பம் இல்லை. ஆதலால் ஓவ்வொருவரும் ஊக்கமுடன் பொருளீட்டி வாழ வேண்டும். இதுவே வள்ளுவர் கருத்து.
இரக்கத்தின் சிறப்பைச் சொல்ல வந்த இக்குறளிலே செல்வத்தின் பெருமையும் எடுத்துக் காட்டப்பட்டது. இதனால் செல்வம் படைத்தவர்கள் தாம் இன்பமுடன் வாழ முடியும் என்ற உண்மையைக் காணலாம்.
இன்பத்துக்குக் கருவியாகிய பொருளை எப்படிச் சேர்ப்பது, அதை எப்படிப் செலவிடுவது? எப்படித் துய்பபது, என்பவைகளைப் பற்றி வள்ளுவர் சொல்லுவது குறிப்பிடத் தக்கது. அது மக்கள் கருத்துச் செலுத்த வேண்டிய சிறந்த வழி.
பிறர் குடியைக் கெடுத்துச் சேர்க்கும் செல்வம் நிலைக் காது; அச்செல்வத்தால் இன்பம் நுகரவும் முடியாது. அறநெறியிலே தேடும் செல்வந்தான் நிலைக்கும்; இன்பம் தரும்; இது வள்ளுவர் கருத்தாகும்.”
“ஈன்றாள் பசி காண்பான் ஆயினும், செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
பெற்றதாய் ப௫ித்திருப்பதைக் கண்டு வருந்துவானாயினும், அறிஞர்களால் பழிக்கத் தகுந்த இழி தொழிலைச் செய்து பொருள் சேர்க்கக்கூடாது.” (ஞ.606).
“பழிமலைந்து எய்திய ஆக்கதின், சான்றோர்
கழிநல் குரவே தலை.
பிறர் பழிக்கத்தக்க ஈனச் செயல்களைச் செய்து பெற்ற செல்வத்தை விட, அறிவுள்ளளோர் பழிக்காதவாறு , மிகுந்த வறுமையில் வாழ்வதே சிறந்தது.” (ஞ.608) இந்த இரண்டு குறளும், நல்வழியிலே செல்வம் சேர்ப்பதே மக்கள் கடமை என்பதை வலியுறுத்தின. அறநெறியிலே சேர்க்கப்படும் செல்வமும், குவித்து வைத்து அழகு பார்ப்பதற்கு அன்று, அல்லது தான் மட்டும் உண்டு சுவைத்து உறங்குவதற்கு அன்று. அச்செல்வத்தை அவனும் நுகரவேண்டும்; வறியோர்க்கு உதவவேண்டும். இதுவே செல்வம் படைத்தவன் கடமையாகும்.
“ஊர்உணி நீர்நிறைந்து அற்றே உலகு அவாம்
பேர் அறிவாளன் திரு.
உலக நடையை விரும்பி நடக்கும் சிறந்த அறிவுள்ளவனிடம் சேர்ந்த செல்வம் எல்லோர்க்கும் பயன்படும்; அது ஊராரால் தண்ணீர் எடுத்து உண்ணப்படும் ஒரு குளத்திலே நீர் நிரம்பியிருப்பது போன்றதாகும்” (ஞ.216)
“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன் உடையான் கண்படின்.
உதவி செய்யும் பண்புள்ளவனிடம் செல்வம் சேர்ந்திருக்கு மாயின், அதனால் அனைவர்க்கும் பயன் உண்டு. அது, பயன் தரத்தக்க மரம் ஒன்று நடுவூருள் பழுத்துக் குலுங்கி யிருப்பது போன்றதாகும்” (கு.216)
“மருந்துஆகித் தப்பா மரத்து அற்றால், செல்வம்
பொருந்தகையால் கண் படின்.
பிறர் துன்பங் கண்டு இரங்கும் பெருந்தன்னையுள்ள வனிடம் செல்வம் சேர்ந்திருக்குமாயின், அதனால் நன்மை யுண்டு. அது எல்லா உறுப்புக்களும் மருந்துக்குப் பயன்படும் ஒரு மரத்தைப் போன்றதாகும்”(கு.217)
இந்த மூன்று வெண்பாக்களும், செல்வத்தைச் சேர்த்த வார்கள். அச்செல்வத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை எடுத்துக் காட்டின. ஏறக்குறைய இம்மூன்றும் ஒரே கருத்துள்ளவை தான். செல்வம் படைத்தவன் அச்செல்வம் தனக்கே உரியதென்று கருதுவதை வள்ளுவர் ஒப்புக்கொள்ள வில்லை. செல்வமுள்ளவன் தன்னை அச்செல்வத்தின் தரும கார்த்தாவாகவே நினைத்துக் கொள்ள வேண்டும். இக்காலத் தர்ம கர்த்தாக்களைப் போல் இல்லாமல் உண்மையான -ஒழுங்கான - தர்மகர்த்தாவாக நடந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய பொது நோக்குள்ளவர்களிடத்திலே செல்வம் சேர்ந்திருப்பதனால் நன்மையுண்டு; தீமையில்லை; என்பது வள்ளுவர் கொள்கை.
பயனற்ற செல்வம்
ஒருவன் பொதுமக்களுக்குப் பயன்படாமல், தனக்காகவே செல்வத்தைச் சேர்த்து வைத்திருப்பானாயின், அச்செல்வம் பயன் அற்றது; அச்செல்வத்தை வைத்திருப்பவன் செல்வம் உள்ளவனும் அல்லன்; இவ்வாறு அடித்துப் பேசுகிறார் வள்ளுவர்.
செல்வம் செலவு செய்வதற்கே உரியது அதை வீணாகச் சேமித்து வைப்பதனால் விளையும் பயன் ஒன்றும் இல்லை. இன்பம் நுகர்வதற்கே செல்வம் வேண்டும். செல்வத்தால் நாமும் இன்புற வேண்டும். பிறரையும் இன்புறுத்த வேண்டும். இவ்வுண்மையை விளக்கிற்று இக்குறள்.
சேர்த்து வைக்கும் செல்வம் செலவு செய்யப்படாவிட்டால் பயன் இல்லை; என்பதோடு மட்டும் விட்டு விடவில்லை. அச்செல்வம் கேடுதரும் நஞ்சுக்கு ஒப்பாகும் என்றும் உரைக்கின்றார்.
“நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம் பழுத்தற்று.
வறியவர்களால் விரும்பப்படாதவன் செல்வம், நடுவூரிலே நச்சு மரம் ஒன்று பழுத்திருப்பதைப் போல ஆகும்” (ஞூ.1008.)
நல்வழியிலே செலவு செய்யப்படாமல் சேர்த்து வைக்கப் பட்டிருக்கும் செல்வம், எப்படியாவது செலவழிந்துதான் தீரும். கருமி, தனது செல்வத்தைக் கட்டுக் காவலுடன் வைத்திருக்கலாம்.
அவன் வாழ்நாளில் அச் செல்வத்தை ஈ எறும்பு கூடத் தொடாமல் காத்துக் கொண்டி ருக்கலாம். அவனுக்குப் பின்னர் அச் செல்வம் மற்றொருவன் கையில் மாட்டுமாயின் அவன் கண்ட கண்ட வழிகளில் எல்லாம் அச் செல்வத்தை வாரியிறைப்பான். “தான் தேடாத பொன்னுக்கு மாற்றும் இல்லை; உரையும் இல்லை; முயன்று தேடியவன் தான் முதற் பொருளைப் பாதுகாப்பான், தேடாதவன் எளிதிலே பெற்ற செல்வத்தை எண்ணிய படியெல்லாம் ஊதித் தள்ளுவான். அச்செல்வம் பொது மக்களுக்குத் தீங்கு பயக்கும் வழியிலே செலவாகுமானால் அதில் வியப்பில்லை. அதலாவ் தான் செலவு செய்யாமல் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை நச்சுக்கனி நல்கும் மரத்திற்கு ஒப்பிட்டார் வள்ளுவர்.
கருமிகளில் செல்வத்தைப் பறிமுதல் செய்யலாம். அது தவறன்று என்பதே வள்ளுவர் கருத்து. செல்வத்திலேயே சிந்தை யைப் பறிகொடுத்தவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள், அவர்கள் செருக்கிலே மூழ்கிச் சிறுமைகள் பலவற்றையும் துணிந்து செய்வார்கள். பொது மக்களால் கயவர், கீழ்மக்கள், என்று பழிக்கப் படுவார்கள், இத்தகைய செல்வர்களின் பொருளை வலிதிலே பறிமுதல் செய்யலாம்.