இறைவன் எல்லாவற்றுள்ளும் நிறைவுள்ளவன். அதனால் தனக்கு எதிலும் வேண்டுதல், வேண்டாமை, விருப்பு, வெறுப்பு இல்லாதவன். அவனுடைய திருவடியைச் சென்று அடைபவருக்கு என்றும் துன்பங்கள், துயர்கள் தோன்றா.
“வேண்டுதல்வேண்டாமைஇலான்அடிசேர்ந்தார்க்கு
யாண்டும்இடும்பைஇல” (4)
இறைவன் ஐந்து அவாக்களும் நீங்கப்பெற்றவன்; ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டவன்; இறைவன் தன்னை வழிபடுவோரின் ஐந்து புலன்களின் வழியாகத் தோன்றும் ஆசைகளைக் கட்டுப்படுத்துபவன் அத்தூயவனது உண்மையான ஒழுக்க நெறியைப் பின்பற்றி நடந்திடுவார் நீடிய புகழுடன் வாழ்வர்.
இறைவனின் நல்லியல்புகளைப் பின்பற்றி ஒல்லும் வகையால் அறவினை செய்வோரிடம், புகழ்மிக்க நற்பணி ஆற்றுபவர்களிடம் அறிவை மயங்கச் செய்யும், செருக்கை ஏற்படுத்தும் நல்வினையும் தீவினையும் சேரா.
“இருள்சேர்இருவினையும்சேராஇறைவன்
பொருள்சேர்புகழ்புரிந்தார்மாட்டு” (5)
இறைவன் பொறிவாயில் ஐந்தவித்தான்; மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் இல்லாதவன்.