18. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் வேளாண்மை என்பது வேள் — நீர் ஆண்மை காத்தல், நீர் வளம் காப்போர் என்ற பொருளில் விவசாயம் செய்வோரைக் குறிக்கும். வெள்ளாளன் என்ற சொல் “பள்ளன்” என்ற சொல்லிலிருந்து தோன்றியது. “வெள்ளம்”, “பள்ளி”, “பள்ளம்” என்பதிலிருந்து “வள்ளத்தின் தலைவன்”, “பள்ளத்தின் தலைவன்” என்பதிலிருந்து வந்திருக்கக்கூடும் என “எட்கர் தர்ஸ்டன்” என்பவர் வேளாண்மைபற்றி எழுதியுள்ளார். பின் வருவது ஒரு கதை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரும் வறட்சி தோன்றியது. அதிலிருந்து விவசாயம் இல்லாமல் போனதால் மக்கள் பூதேவியை வேண்டிக்கொண்டனர். அவள் ஒரு மனிதனைத் தோற்றுவித்தாள். அவன் கையில் ஏர் கொண்டு தோன்றினான். அவன் ஏர் கொண்டு உழுவது எப்படி என மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தான். அதிலிருந்துதான் விவசாயம் தோன்றியது. “வெள்ளாளர்கள்” என்பவர் “வைஸ்யர்” குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கோவைச்யர், தனவைச்யர், தான்யவைச்யர் என்ற பிரிவைச் சேர்ந்தவர். அவர்கள் “பூணூல்” போட்டுக் கொண்டனர். (1871 இல் இன்னம் பல பல “வேளாளர்கள்” பூணூல் போட்டுக் கொண்டிருந்தனர். பெரும்பாலானவர்கள் தங்களது சடங்குகளின் போது மட்டும் போட்டுக்கொண்டனர் என்று எழுதியுள்ளார். பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியர் நச்சினார்கினியர், வேளாளர்களில் இரு வகை உண்டு. ஒருவர் உயர்குடி வெள்ளாளர் என்றும் மற்றவர் நாட்கூலியில் பணி புரியும் வேளாளர் என்றும் குறிக்கிறார். இப்பிளவு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே தோன்றியது என்பது இதனால் தெளிவாகும்.
வெள்ளாளர்களின் தோற்றத்தைப்பற்றி 1907 இல் எழுதப்பட்ட பாராமகால் ஆவணங்கள் கீழ் வருமாறு கூறுகிறது. ஒரு சமயம் பரமேஸ்வரன் தன் தேவி பார்வதியோடு இமயமலையில் வசித்து வந்தார். ஒருநாள் இருவரும் தனிமையில் இருக்கும்போது அவ்வமயம் தேவதச்சன் ஆகிய விஸ்வகர்மா அவர்கள் தனித்திருந்ததைப் பார்த்துவிட்டான். அதனால் கோபமடைந்த பரமேஸ்வரடு, “எங்கள் தனிமையை நீ கலைத்த காரணத்தால், பூமியில் உனக்கு ஓர் எதிரி தோன்றி, உன்னைத் தண்டிப்பான்” என்று சபித்தார். விஸ்வகர்மா அவர்களை, “எனது எதிரியாகிய அவன் பூமியில் எங்கு தோன்றுவான் என்று எனக்குத் தெரிவியுங்கள். அவனை எனது வாளால் ஒரே வீச்சில் வெட்டி வீழ்த்திவிடுகிறேன்” என்றான். பார்வதி பரமேஸ்வரர் “அவன் கங்கைக் கரையில் தோன்றுவான்” என்று கூறினார். உடனே விஸ்வகர்மா கங்கைக் கரைக்குச் சென்றான். அங்கு ஒருநாள் பூமி பிளந்ததைக் கண்டான். அப்பிளவிலிருந்து ஒரு தங்கக் கிரீடம் வெளியே வர ஆரம்பித்தது. விஸ்வகர்மா அதுதான் தனது எதிரி என்று கருதி தனது கத்தியால் துண்டாக துணித்து எறிந்தான். ஆனால் கிரீடம் இல்லாத ஒரு மனிதன் கையில் தங்கக் கலப்பை ஒன்றை ஏந்தி மேலே வந்தான். அவன் கழுத்திலே பூமாலை இருந்தது. அம்மனிதனின் தலையைச் சீவ விஸ்வகர்மா தனது வாளை உருவினான். அப்பொழுது பார்வதி பரமேஸ்வரன், பிரம்மா, விஷ்ணு அனைவரும் திக் தேவதைகளுடன் தோன்றி, “நீ முதலில் ஒரே வீச்சில் அவனை வீழ்த்துவேன் என்று சூளுரைத்தாய். ஏற்கெனவே ஒரே வீச்சில் கிரீடத்தை வீழ்த்திவிட்டாய். அதனால் மற்றும் ஒரு வீச்சு பிரயோகிக்க உனக்கு உரிமை இல்லை” என்று தடுத்துவிட்டனர். எனவே விஸ்வகர்மா அம்மனிதனுடன் ஒரு சமாதானம் செய்துகொண்டான். விஸ்வகர்மாவின் ஐந்து மக்களாகிய பொற்கொல்லர், வெள்ளிக் கொல்லர், இரும்புக் கொல்லர், கல்தச்சர், கண்ணமர் ஆகிய ஐவரும், இனி கலப்பை ஏந்தியவன் சொற்படி நடக்க வேண்டும். ஆனால் அவன் தன் முடியை இழந்ததால், முடி சூடி அரசனாக ஆளக்கூடாது. ஆனால் அரசனின் தலையில் முடி சூடும் உரிமை கலப்பை ஏந்திய குடி மக்களுக்கே உரித்தாகும். அவர்களே அரசனுக்கு பூணூல் அணிவித்து நாட்டை ஆளச்செய்யும் உரிமை பெற்றவராகும். கலப்பையோடு தோன்றிய மனிதன் வழி வந்தவரே பூமியை உழும் உரிமை பெற்றனர். அதனால் அக்குலத்தோருக்கு தேவேந்திரன், குபேரன் முதலிய தேவர்கள் எல்லாம் தங்கள் பெண்களை மணம் செய்து கொடுத்தனர். அவர்கள் தேவேந்திர குலத்தர் எனக்கூறிகொண்டனர். அவர்கள் வழி வந்தவர்களே உழுகுடிமக்கள் என்று 1860 ஆண்டு ஆவணங்கள் கூறுகின்றன. இது ஒரு புராணக்கதை. வரலாறு அல்ல. ஆயினும் இது உழுகுடி மக்களின் தோற்றத்தைப் பற்றி அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை ஆகும்.
இக்கதையில் சில வரலாற்று எச்சங்களும் உள்ளன என்பதில் ஐயமில்லை. உழுகுடி மக்கள் தேவேந்திரன் முதலியோரின் பெண்கள் வழிவந்தவர். அதனால் தெய்வங்களுக்குச் சமமானவர்கள் என்பதும், அவர்கள்தாம் அரசன் என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்து நாடாளச்செய்தவர்கள் என்றும், ஆட்சிப் பொறுப்பை அரசினிடம் ஒப்படைத்து உழு தொழிலில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு, ஐந்தொழில்களை பஞ்ச கர்மக்காரர்களிடம் ஒப்படைத்தனர் என்றும் அறிகிறோம். அரசன், உழுதொழில், ஐங்கர்மாக்கள் என தொழில்களைப் பிரித்து சமுதாயம் வளர வழி வகுத்தனர் என்று இதன் வாயிலாக அறிகிறோம்.
இரண்டாவதாக, வேளாண்மை என்ற தொழில் கங்கைக் கரையில் தோன்றியது என்றும் அங்கிருந்து பிற பகுதிகளுக்குச் சென்றது என்றும் அறிகிறோம். இதிலிருந்து அரசர் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கும்கூட முடி சூடும் உரிமை உழுகுடி மக்களுக்கே வழங்கப் பட்டது என்றும், அந்தணர், வணிகர், வேளாளர், பிறகுடிகள் யாருக்கும் உரிமை கிடையாது என்றும், அவர்கள் தங்கள் குல முறைப்படியே தொழில் செய்யவேண்டும் என்ற நியதியும் உழுகுடி மக்களால் முதலில் கலப்பை ஏந்தியவர்களால் தோற்றுவிக்கப் பட்டது என்றும் தெரிகிறது. குல முறைப்படி தொழில் செய்வதால்தான் பிற்காலத்தில் பல வேறு ஜாதியாகத் தோன்றின என்றும், முதலில் தோன்றிய மனிதர்கள் உழுகுடி மக்களே என்பதும் அறியவருகிறது. இந்த ஆவணங்கள் தமிழ் நாட்டு வெள்ளாளர் தோற்றத்தைப்பற்றி இருபதாம் நூற்றாண்டுக்கும் முன் இருந்த நம்பிக்கை என்றும் தெரிகிறது.
ஆயினும் இந்த ஆவணங்கள் வெள்ளைக்காரர் ஆட்சியில் 1907இல் தொகுக்கப்பட்டவை. இந்தக் கதையை தெலுங்கு தேசத்தில் இருந்து இங்கு விஜயநகர அரசுக் காலத்தில் குடியேறியவர்களிடமிருந்து கேட்டு எழுதியது என்று தெரிகிறது. எடுத்துக்காட்டாக இதை சிவபெருமான் “பரமேச்வருடு” என்று குறிப்பிட்டுள்ளதில் இருந்து தெளியலாம்.
வேளாளர்களிலே தொழில் வாரியாகவும், பிராந்திய ரீதியாகவும் பிரிந்த பல பிரிவுகள் உண்டு. அவர்களை கொண்டைகட்டி வேளாளர்கள் என ஆவணங்கள் கூறுகின்றன. இவர்கள் தெலுங்கு வேளமார் என்ற பிரிவைச் சார்ந்தவர்களாக இருக்கக்கூடும். சேக்கிழார் வழியைக் கூறும்போது, “நாற்பத்தெண்ணாயிரவர் குடி” என்று கூறுவர். சேக்கிழார் குடி காஞ்சியில் உழு குடி மக்களாக குடி ஏறியவர் என்றும் கிழார் என்ற முது பட்டம் ஏற்றவர்கள் என்றும் தமிழ் மரபு கூறகிறது. சேக்கிழாருக்கு “கங்கைகுல திலகர்” என்று பட்டம் உள்ளது இதைக் குறிக்கிறது. இந்நாற்பத்தெண்ணாயிரவர் குடியே கங்கையில் இருந்து குமரிவரை பரவி (ஈழமும் இணைந்து) வேளாண்மையை சிறக்கச் செய்தனர் என்று அறிகிறோம். சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் நாட்டுச் சிறப்பு என்ற அத்தியாயத்தில், வேளாண்குடியைக் குறிக்கும்போது “கங்கையாம் பொன்னியா கன்னியே” — என கங்கையையும், காவேரியையும், குமரியையும் இணைத்துப் பாடுகிறார். இக்கருத்துக்களில் இரண்டு கேள்விகளை எழுப்பலாம். ஒன்று நாற்பத்தெட்டாயிரம் குடிகள் குடி பெயர்ந்து வந்துள்ளார் என்று சொல்வது பொருத்தமா என்பது — இராஜேந்திர சோழன் வெளியிட்ட ஒரு செப்பேட்டில், ஓராயிரம் பிராமணர்களை கங்கைக் கரையில் இருந்தும் கோதாவரிக் கரையில் இருந்தும், காவிரிக் கரையில் குடியேற்றினான் என்றும் செப்பேடு கூறுகிறது. அந்தணர்கள் என்போர் அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரத்திற்கு ஒருவர் என்ற விழுக்காட்டில்தான் இருந்தார்கள். உழுகுடி மக்கள்தான் மொத்த ஜனத்தொகையில் அதிக விழுக்காடாக வாழ்ந்தார்கள். இரண்டாவது நெல்லூருக்கு வடக்கிலிருந்து கோதாவரிக்கரை தாண்டும்வரை ஆந்திர நாடு என்றும், அதற்கும் வடபால் புவனேஸ்வர் வரையிலும் உள்ள பகுதியை “கங்க நாடு” என்றே அழைப்பர். அதற்கு மேலும் சில பகுதிகள் கங்க நாட்டோடு இணைந்திருந்தனவாம். இப்பகுதியை ஆண்டவர்களை கீழைக்கங்கர்கள் என்பர். அதையும் தாண்டி வடக்கு கலிங்கம் வங்க நாட்டில் எல்லையில் உள்ளது. அதனால் கங்கைக் கரையிலிருந்து கீழை கடற்கரை தொண்டை மண்டலம்வரை பரவி வாழ்ந்த உழுகுடி மக்கள் கங்கர்கள் ஆவர். எனவே அவர்கள் தம்மை நாற்பத்தெண்ணாயிரவர் என்று கூறிக்கொள்வதில் வியப்பு ஏதும் இல்லை.
தொண்டை மண்டலத்தில் குடி ஏறிய சேக்கிழார் போன்ற உழுகுடி மக்கள் கங்கைகுலத்தார் என்று கூறிக்கொண்டனர். கங்கை பெரியாறு வங்காளத்தில் பல கிளைகளாகப் பிரிந்து கடலில் கலக்கின்ற பகுதி. நல்ல வளமான நீர் நிலை கொண்ட நாடு. எனவே அங்கு வேளாண் தொழில் சிறந்தது. அவர்கள் படிப்படியாக தமிழகத்திற்கும் வந்துள்ளனர் என்பதில் ஐயமிருக்க முடியாது. அக்காலத்தில் மொழி பெயர் பகுதிகள் பல இருந்தாலும், பண்பாடு, இமயம் முதல் குமரி வரை ஒன்றே என்றும் அதைப் “பாரத வருஷம்”, என்றும் “பாரத நாடு” என்றுதான் கருதி வந்தனர். வடதிசையில் இருந்து மக்கள் இன்றும் இராமேஸ்வரம்வரை வந்து வழிபட்டு உய்ய வேண்டும் என நினைந்து வருவதும், தென்திசை மக்கள் கங்கைவரை சென்று தீர்த்தம் ஆடும் மரபும் இதையே குறிக்கிறது. உயர்குடி வேளாளர்களும் தங்கள் சடங்குகளில் இன்றும் பூணூல் போட்டுக்கொள்வதும் இதையே குறிக்கும்.
உழுகுடி மக்கள் அரசர்களையும், அந்தணர்களையும் உருவாக்கியவர் என்பதற்கு தொல்லியல் சான்றுகளும் கூறும். காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வன விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த மக்களுக்கு கூழாங்கற்களை சீவி கருவிகளாக்கித் தந்தவர்கள் தொழில் புரிந்தோர். இதை பழைய கற்காலம் என்பர். அக்கால மனிதன் உணவைத் தேடி அலைந்தவன் என்பர். அதற்கு அடுத்த காலத்தில்தான் நீர் நிலைகளின் அருகில் சிறு சிறு பயிர்களை வளர்க்கத் தொடங்கினான். இது உணவு உற்பத்தி செய்யும் பயிர்த்தொழிலாகும். இது மனித வரலாற்றில் ஒரு பெரும் புரட்சி என்பர்.
பள்ளங்களிலும் பயிர் தோற்றுவித்ததால் “பள்ளர்” என்ற சொல் தோன்றியிருக்க வேண்டும். அவர்கள்தான் உழுகுடி மக்கள். முதன் முதலில் ஒரே இடத்தில் தங்கி, பயிர் செய்து பிற அனைத்துக் குடிகளையும் காத்தனர். புதிய கற்கால மனிதனாகிய உழுகுடி மக்களே என்று தொல்லியல் ஆய்வாளர் கூறுவர். எனவே அரசனை தோற்றுவித்தவனும் அவனே. அந்தணனைத் தோற்றுவித்தவனும் அவனே. தொழில் முறையில் வகுத்து தொழில் வாரிப் பிரிவுகளை தோற்றுவித்து சீராகப் பண்பாடு படைத்தவனும் அவனே. அதனால் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்ற வள்ளுவர் வாக்கு பொய்யாமொழி என்பதில் ஐயம் எப்படி இருக்க முடியும்.
பொதுவாக வெள்ளாளர்கள் பிள்ளைமார், முதலியார், நாட்டார் போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டனர். சிலர் துளு நாட்டிலிருந்து வந்தவர் என்பதால், அவர்கள் துளுவ வேளாளர் என்றும், தொண்டை மண்டல வேளாளர், சோழிய வேளாளர், கொங்கு வேளாளர், கொண்டை கட்டி வேளாளர், சித்ரமேழி பெரிய நாட்டார், கூல வாணிகர் என்ற உட்பிரிவுகளின் பெயராலும் அழைக்கப்படுவது உண்டு. கும்பகோணம் பகுதிகளில் வெள்ளாள செட்டி என்று அழைக்கப்படுவதும் காண்கிறோம். இவர்கள் அத்தனை பேரும், 19ஆம் நூற்றாண்டு ஆவணங்களில், நிலச்சுவான் தார்களாக இருந்தவர்கள் என்றும், நல்ல உழைப்பாளிகள், அறிவு மிகுந்தவர்கள் என்றும், வேறு ஒருவரின் கீழ் தொழில் புரிய செல்லமாட்டார்கள் என்றும் ஆவணங்கள் கூறுகின்றன.
நெல், கரும்பு, வெற்றிலை, பாக்கு முதலிய பயிர் செய்வதில் இவருக்கு ஈடாக உலகிலேயே யாரையும் ஒப்பிட முடியாது என்றும், இவர்கள் கணக்கு அறிவு மிகச்சிறந்தது என்றும், ஓலை எழுதுவதிலும் திறமை மிக்கவர்கள் என 200 ஆண்டுகளுக்கு முந்திய மாவட்ட ஆவணங்கள் கூறுகின்றன. பலர் ஊர் கணக்கர்களாக (கர்ணம்) ஆக மிகச்சிறந்தோர்களாக பணி புரிந்தனர் என்றும் உயர்ந்த பண்பும் அறிவும் உழைப்பும் மிகுந்த இம்மக்கள் பெரும்பான்மையோர் சிறு நிலங்களின் உடைமையாளராக 17ஆம் நூற்றாண்டுவரை வாழ்ந்தார்கள். இவர்கள், ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆட்சியின்போது, முன்னர் அரசுக்குக் கொடுத்து வந்த வரியைக்காட்டிலும் ஐந்து மடங்கு வரியைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வெள்ளைக்காரன் ஆட்சி ஏற்பட்டபோது ஐந்து மடங்காயிருந்த வரி பத்து மடங்காக அதிகரித்தது. போக்குவரத்தோ, நீர் பாசன வசதியோ அதிகரிக்காமல், வரிப்பணம் மட்டும் வெள்ளைக்காரன் கொண்டு போனான். வரி பத்து மடங்கு உயர்ந்ததால், பளு தாங்காமல், இவர்கள் தங்கள் நிலங்களையும், ஊர்களையும் விட்டு பிற இடங்களில் குடி பெயர்ந்து ஏழைகளாக மாறிய நிலையை, மக்கேன்சி, ஆவணங்கள் காட்டுகின்றன. கொஞ்சம் நஞ்சம் இருந்த பெரும் நிலச்சுவான்தார்களும், இந்திய சுதந்திரம் அடைந்தபிறகு, சோஷியலிசம் போன்ற (சோஷியலிச பேட்டர்ன்) என்ற மரபால் பீடிக்கப்பட்டு, குறு நிலச்சுவான்தாரர்களாக மாறிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கு பிறகு நடந்தது அனைவரும் அறிந்ததே.