Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 22. இந்திய நாட்டின் முதல் அரசியல் சாஸனம்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
22. இந்திய நாட்டின் முதல் அரசியல் சாஸனம்
Permalink  
 


22. இந்திய நாட்டின் முதல் அரசியல் சாஸனம்
இந்திய நாட்டின் முதல் அரசியல் சாசனத்தைத் தொகுத்துக் கொடுத்தவர் மனு. அதை “மனு தர்மசாஸ்திரம்” என்று அழைப்பர். மனு அன்றிருந்த சட்ட நுணுக்கங்களை எல்லாம் ஆராய்ந்து வேதங்களிலிருந்து எடுத்துத் தொகுத்துள்ளார். இது முற்றிலும் ஒரு சட்ட நூல். மனு ஓர் அரச குலத்தவர். க்ஷத்திரியர் என்ற வகுப்பைச் சார்ந்தவர். வேதத்தைத் தொடக்க காலத்தில் பிராமணர், க்ஷத்திரியர், வைஸ்யர் ஆகிய முக்குலத்தோரும் ஓதி வந்தனர். வேளாளர்களிலும், நிலச்சுவான்தாரராக இருந்தோர் படித்துள்ளனர் என நச்சினார்க்கினியர் என்ற உரையாசிரியர் கூறுகிறார். கூலி வேலை செய்பவர்கள் மட்டும் வேதம் படிக்கத் தேவையில்லை. அதனால் சமுதாயத்தில் 80 முதல் 90 விழுக்காடு அனைவரும் வேதம் ஓதிவந்தனர். இதைக் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன. வேத ஒலியை மேல் ஸ்வரம், மத்திம ஸ்வரம், கீழ் ஸ்வரம் ஆகிய ஸ்வர வேறுபாடுகளோடு உச்சரிக்கவேண்டும். ஒலி வேறுபாட்டில் மாறினால் பொருள் மாறிவிடும். ஓர் ஒலியை மூன்று வேறுபாட்டுடன் எழுதினால் படிக்கமுடியாது. ஓர் உபாத்தியாயர் வாயிலாகத்தான் அறிந்துகொள்ளமுடியும். இசை ராகங்களைப் போல். அதனால்தான் வேதத்தை எழுதாக்கிளவி என்று கூறுவர். மனு வேதங்களை மனப்பாடமாகக் கற்றவர். அதனால் வேதங்களின் பாடல்களை நிறைத்து தனது தர்ம சாத்திரத்தை அவர் எழுதினார். அதனால் தர்ம சாத்திரங்களை “ஸ்ம்ருதி” என்றழைப்பர்.

மனுவின் தர்மசாத்திரத்தில் எழுத்து மூல ஆவணங்களுக்கு எந்தக் குறிப்புகளும் இல்லை. மனுவின் சாத்திரங்களிலும் முந்தையது இப்போது உள்ள மனுசாத்திரந்தான். எல்லா தர்மசாத்திரங்களிலும் முந்தையது ஏறக்குறைய கிமு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பர். இதைத் தொகுத்த மனு, வைவஸ்வத மனு என்று அழைக்கப்பட்டார். இவருக்கு முன்னர் ஆறு மனுக்கள் இருந்திருக்கிறார்கள். இவரது சட்டநூல்தான் இந்தியா முழுவதும் சட்டமாக ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளாக எல்லா வம்சத்து அரசர்களாலும் பின்பற்றப்பட்டது. அஸ்ஸாம் மாநிலம்முதல் ஆப்கானிஸ்தான்வரையிலும், காஷ்மீரம்முதல் கன்னியாகுமரிவரை ஆட்சி புரிந்த அரச வம்சம் மாறினாலும், மனுவின் சட்ட நூல்தான் சட்டமாக இருந்து வந்துள்ளது. தென் கிழக்கு ஆசியா முழுவதும் மலேசியா, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், இந்தோனேசியா முதலிய அனைத்து நாடுகளிலும் மனுசாத்திரம்தான் சட்ட நூலாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வழங்கிவந்துள்ளது. இன்றுள்ள பழக்கவழக்கங்கள் எல்லாம் இன்னும் அங்கெல்லாம் மனு சாத்திரத்தின் அடிப்படையில்தான் நடைபெறுகின்றன. கம்போடியாவில் 9ம் நூற்றாண்டில் ஆண்ட ஒரு மன்னன் இராஜேந்திரவர்மன் என்பவன் “நான் வைவஸ்வத மனுவின் சாத்திரத்தைப் பின்பற்றி இந்நாட்டை ஆள்கிறேன்” என்று கல்வெட்டில் குறித்திருக்கிறான்.

மனுதான் முதன் முதலில் அரசவம்சத்தில் தேரேறி வந்தான் என்று கூறுவார். அவன் நாட்டை ஆண்டவன் ஆனதாலும் ஒரு நாடு சீராக விளங்க வேண்டுமானால் சட்டம் ஒழுங்கு சீராக இருத்தல் அவசியம் என்பதினாலும் அன்று இருந்த உலகியல் நடை முறைகளுக்கு ஒருதொகுப்பை உண்டாக்கினான். இது மனிதனின் புறவாழ்வை சீராகச் செலுத்தத் தொகுத்ததினால் புறப் பொருளாம். லௌகீக சாத்திரம். இது சமய சாத்திரம் அல்ல.

சட்டம் ஒழுக்கம் சீராக இல்லை எனில், எல்லா மக்களும் சீராகவும், வளமாக வாழமுடியாமல் கலகங்களும், கொள்ளைகளும் நிறைந்து விடும். அதனால் அரசியல் சாசனத்தில் எதற்காக இது தொகுக்கப்பட்டது எனக் குறிக்கப்பெறும். அதன்பிறகு மனிதனின் உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? சமூகத்தின் சீரற்ற செயல்கள், தனி மனிதனின் குற்றங்கள், சமுதாயத்தில் நடக்கும் குற்றங்கள் எவை, ஒவ்வொரு குற்றத்துக்கும் என்ன தண்டனை என்பதை திட்டவட்டமாகக் குறிப்பது அரசியல் சட்டம்.

மனுதர்மத்தின் குறிக்கோள் என்ன என்பதை அவர் தன் நூலில், முதலிலும், இறுதியிலும் கூறுகிறார். இவை முற்றிலும் சட்ட அடிப்படையில் சொல்லிக்கொண்டு செல்கிறார். அவ்வாறு செல்லும்போது முதலில் தர்மம் என்றால் என்ன என்ற இலக்கணம் வகுக்கிறார். எல்லாரிடத்தும் “சமநோக்கம்” இருத்தல் வேண்டும் என்பதைத்தான் நீதிமன்றத்தில் பணிபுரிவோரின் குறிக்கோளாக கூறுகிறார். அவர் தம் நூலை “சர்வ சமத்துவம்” என்ற சொல்லோடு முடிக்கிறார். தொடக்கம் முதல் இதை வலியுறுத்திக்கொண்டு செல்கிறார்.

தர்மம் என்றால் என்ன என்று விமர்சிக்கும்போது, எது அறிஞர்களால் ஏற்கப்பட்டதோ எதை சத்தியமாக தாங்கள் கடைப்பிடிக்கிறார்களோ, எதை எல்லா சந்தர்ப்பத்திலும், எல்லா நிலைகளிலும் பின்பற்றுகிறார்களோ, எதில் தமக்கென ஒரு விருப்பு வெறுப்பற்ற நடுநிலையில் நோக்குகின்றார்களோ, எதைத் தமது சிந்தையில் சீர் தூக்கி சரி என்று படுகிறதோ, அது தான் தர்மம். அதைத்தான் நான் தொகுக்கிறேன். அதற்கு மாறான எண்ணம் ஏற்படுவது நமது அறியாமையின் காரணம்.

எல்லா உயிர்களும் சமமானவையே என்பது நம் ஹிந்து சமயத்தின் அடிப்படைக்கொள்கை. உயிரில் ஏற்ற தாழ்வே கிடையாது என்று கூறும் மனு, குணத்தினாலும் தொழிலாலும் வேறுபாடுகள் நாமே சமைத்துக்கொள்வதே தவிர வேறு இல்லை. சமநோக்கற்ற, ஒழுக்கமற்ற ஆயிரம் பிராமணர்கள், நாங்கள் குலத்தால் உயர்ந்தோர் என்று கூறிக்கொள்பவரைக் காட்டிலும் எவன் ஒருவன் எல்லாரும் சமம் என்ற கொள்கையும் சீலமும், ஒழுக்கமும் உடையவனோ அவனுக்கு அந்த ஆயிரம் பேரும் சமமாக மாட்டார்கள். “ஜாதியால் உயர்ந்தவன் பிறப்பால் உயர்ந்தவன்” என்றெல்லாம் கூறுபவன் பிராமணனே அல்ல என்று கூறுகிறார்.

வித்வத்பி: சேவித: சத்பி: நித்யம் அத் -த்வேஷ ராகிபி:
ஹிருதயேன சமனுஞாத யத்தர்ம: தத்புரூஹி / நிபோதத — 2.1
என்று கூறுகிறது அவர் வகுத்த இலக்கணம்.
அதனால் பிறப்பினாலேயே ஒருவன் உயர்ந்தவனாக மாட்டான் என்பது அவர் கொள்கை. அறம் தழைத்தால்தான் உலகம் சிறந்த நிலையில் இருக்கமுடியும் என்பதாலும் ஊர்ப்புறங்களில் எல்லாம் அறத்தை நிலை நிறுத்தப் பாடுபடுவதே அவனது தலையாய தொழில் என்பதால்தான் அந்தணனை முதலில் கூறியது. எனவே அந்தணனைக் குறித்தது தொழிலால்தானே ஒழிய பிறப்பால் அல்ல என்பது மனுவின் கொள்கை. அதனால்தான் இறுதியில் இதன் நோக்கம் “சர்வசமத்துவம்” என்பது என்று கூறுகின்றான். அந்தணன், அரசன், வணிகன், வேளாண், கலப்பு மணத்தால் பிறந்தோர் முதலிய அனைவருக்கும் முக்தி, இறுதி மோட்சம் என்பது எல்லோருக்கும் சமமானதுதான். அதைத்தான் “சர்வசமத்துவம்” என்கிறார்.
இதைத்தான் சுப்பிரமணிய பாரதி “எல்லா உயிர்களிலும் நானே இருக்கின்றேன்” என்று கூறினான், “கண்ண பெருமான்” என்று பாடினான்.

சோழப் பேரரசர்கள் தங்கள் கல்வெட்டுகளில் எல்லாம் “மனு ஆறு தழைத்தோங்க” என்றும் “மனு நீதி தழைத்தோங்க” என்று குறிப்பிட்டுள்ளனர். இதை விரிவாக்கி “தந்தை இலோர்க்கு தந்தை ஆகியும் தாயிலோர்க்கு தாய் ஆகியும் மைந்தரிலார்க்கு மைந்தராகியும் ஒருவரோடு ஒருவருக்கும் ஒன்றினோடு ஒன்றுக்கும் வெருவறு பகைமை மனத்தின்றி விழைந்து காதலுடன் சேர” ஆண்டனர் என்று கூறுகிறார்கள்.

இதை வலியுறுத்தும் வகையில் பெண்கள் சம உரிமைபற்றியும், ‘எந்த நாட்டில் பெண்கள் பூஜிக்கப்படுகிறார்களோ, அந்நாட்டில்தான் தெய்வம் வந்து தங்கும் — “யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:” — என்று மனு கூறுகிறார்.
இதைத்தான் முடிசூட்டுவிழாவிலேயே உறுதியாக சோழ மன்னர்கள் காட்டுகிறார்கள். அரசனுக்கு முடிசூடும்போது அவனது தேவிக்கும் முடி சூட்டப்படும்.
உடன் ஆணையும், உடன் இருக்கையும்
கடனாகவே பெற்றருளி, அறம்புரக்கும்
கருணை வல்லி
என்று சோழர் கல்வெட்டுகள் கூறுகின்றன. அதாவது அரசனுக்கு ஆணையிடும் உரிமையும், அரியணையில் அமரும் உரிமையும் எவ்வாறு உண்டோ அதே உரிமை தேவிக்கும் உண்டு. அதனால்தான் மனைவிக்கு இல்லத்தரசி என்ற சொல் தோன்றியது. பெண்களுக்கு சம உரிமை என்பது மனுவின் சட்டம். அதனால் பெண்களை தாய்மையின் உருவாக நாம் காணவேண்டும் என்பதும், தாய்தான் தலையாய தெய்வம் என்பதும் நமது கோட்பாடு. இதைத்தான் பாரதி “நம்மில் தாழ்வு உயர்வு சொல்லல் பாவம்” என்று கூறினான்.

நமது இந்து சமயத்தில் முக்கியப்பிரிவு “அத்வைதம்” (இரண்டு என்ற வேறுபாடு அற்றது என்பதாம்). இந்த சமயத்தில் தொன்று தொட்டு ஒரு கேள்வி எழுப்பட்டது. வேதம் படித்தவர்களுக்குத்தான் மோட்சம் கிடைக்குமா? அவை படிக்காத ஏனையோர்களுக்கும் உண்டா? அதாவது பெண்களுக்கும், சூத்திரர்களுக்கும் மோட்சம் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா என்பது கேள்வி.
இதை திட்டவட்டமாக அத்வைத சமயத்தை நிலை நிறுத்திய ஆதிசங்கரர் தெளிவாக்கியிருக்கிறார். “மோட்சம் என்றால் என்ன?” என்று கேட்டு, அதன் இலக்கணமாக, “மோட்சம் என்பது ஞானத்தின் பயனை அனுபவிப்பது. ஞானம் என்பது எல்லோருக்கும் சமமானது. அதனால் அதை யார் வேண்டுமானாலும் அடையலாம். அதனால் அந்த ஞானத்தின் பயனை யாருக்கும் வருவதை எவராலும் தடுக்க முடியாது. மகாபாரத்தில் வரும் விதுரரைப் பாருங்கள். அவரைக்காட்டிலும் உயர்ந்த அறிவாளி வேறு யாரும் இல்லை. அதனால் உயர்வு தாழ்வு மற்றும் ஆண்பால் பெண்பால் என்ற வேறுபாடின்றி அத்துணைபேரும் மோட்சம் பெறலாம்” என்பது சங்கரரின் அத்வைத வாதம். இதுதான் மனுவின் அறநூலின் குறிக்கோளும் கூட.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard