Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தென்புலத்தார்- உரையும் சிதைக்கும் கயமை உரைகளும்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
தென்புலத்தார்- உரையும் சிதைக்கும் கயமை உரைகளும்
Permalink  
 


தென்புலத்தார்- உரையும் சிதைக்கும் கயமை உரைகளும்

 
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை              ( 43  இல்வாழ்க்கை)

மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை.
Then1.jpg

 
 

பரிமேலழகர் உரை: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம்.
 
தென்புலத்தார் என்பது இறந்த முன்னோரைக் குறிக்கும் என்பதை புறநானூறு 9ம் பாடல் எளிதாய் விளக்கும்.
puram%2Bthenpula.jpg 
 புலவர் நெட்டிமையார், முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல் நோக்கத் தக்கது.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் 
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் 
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் 
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் 
எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்......   (புறம்-9)  
                -   அக்காலத்  போர் நெறி காட்டும்.
போரிற்காய் நுழையும் அரசன் ஊரை வளைத்த உடன் - அந்த ஊரில் உள்ள  ஆனினம், அவ்வியல்புடைய பார்ப்பன மக்கள். பெண்டிர், பிணி உடையவர், இறந்த பின்னர் பித்ரு காரியம் தொடர்ந்து செய்ய வேண்டிய புதல்வர்ப் பெறாதோர் இவரகளை பத்திரமாக காக்கும்படி செய்வர். இவ்வாறு அறவழி நடக்கும் இயல்பும், துணிவும் உடையவனான எம் குடுமியே என மன்னர்

 நம் உயிரை எடுப்பவர் கூற்றுவன் (எமன்) எனப் பெயர், சிவபெருமான் கூறும்படி காலம் முடிந்தபின் உயிர் எடுப்பதால்;  வள்ளுவரும் மரணம் குறித்து -  கூற்றத்தை (குறள்-894)  கூற்றமோ (1085) கூற்று (326,765, 1083) கூற்றம் (269) எனப் பல குறள்களில் கூறி உள்ளார்.

முன்னோர் கடன் என்பது இறந்த உடன் சில தான-தர்மங்களும், பிண்டமிடல் போன்றவையும், பின் மாதா-மாதம் அமாவாசை அன்றும், மாதம் முதல் நாட்களிலும் மிகுந்த ஆசாரமுள்ளோரும், மற்றவர்கள் முக்கியமான நீர்நிலைகளில் முழுக்கிடுதலும் மரபு. வருடா வருடம் திதி தருதல்.

இந்த திதி நாட்களில் கோவிலிற்கு செல்லவும் கூடாது என்பர், அதாவது கடவுளிற்கு முன் தென்புலத்தார் கடன் - வள்ளுவரும் முதலில் அதை வைத்தார்.
Then.jpg

தற்கால புலவர்களின் கயமை உரைகள்.
திருக்குறளிற்கு முதல் உரை மணக்குடவர் எனும் சமணர்; சமணத்தில் ப்த்ரு கடன் கிடையாது, ஆயினும் அவர் அதை அப்படியே கூறி உள்ளார்.

19ம் நூற்றாண்டு முதல் கல்வி கிறிஸ்துவர்களால் வடிவமைக்கப்பட,  நச்சு ஏற்றப்பட -தமிழர் மரபு என்பது பாரத நாட்டின் பொதுமை என்பதைவிட்டு,  திருக்குறளிற்கு தன்னிச்சையாய் உளறலாய் உரை செய்தனர்.

Then14.jpg
 சாலை இளந்திரையன் - தென்னிலப் பகுதிகளில் உள்ளவர் 
 இலக்குவனார் -தென்னாட்டவர்
  இளங்குமரன் -தெளிந்த அறிவினர் 
குழந்தை - தென்னாட்டவர்
 வளன் அரசு (ஜோசப் ராஜ்) -வாழ்ந்து மறைந்தோர்
  க.ப.அறவாணன்- அரிய பெரிய வாழ்வு வாழ்ந்து மறைந்தோர் 
 தமிழர் மரபை ஏற்காதுகிறிஸ்துவ நச்சுக் கருத்தின் அடிமைகளாய் எழுதப்பட்ட உரைகள்.


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
RE: தென்புலத்தார்- உரையும் சிதைக்கும் கயமை உரைகளும்
Permalink  
 


வள்ளுவன் யாரை வணங்க சொல்கிறான்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை - (குறள் 43)
தென்புலத்தார், தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐந்து இடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களைப் போற்றுதல் சிறப்பான இல்வாழ்க்கையாம் என்பது இக்குறட்கருத்து.
வள்ளுவன் தென்புலத்தாரை வணங்க சொல்கிறான்
யார் அந்த தென்புலத்தார்?
தென்புலத்தார் என்ற சொல்லுக்கு தெற்குத் திசையிலுள்ள இடத்தில் இருப்பவர்கள் என்பது நேர் பொருள். தன்குடியில் இறந்துபோன மூதாதையர் தென்திசையில் உறைவதாகத் தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கையுண்டு. அதனால் காலமாகிவிட்ட முன்னோர்களைத் தென்திசையிலுள்ளவர் எனக் கூறுவது ஒரு மரபு.
முதற்காலத் தமிழகமாகிய குமரிநாடு பல்வேறு கடல்கோள்களால் மூழ்கிப் போனமையால், அது இருந்த தென்றிசை கூற்றுவன்திசையாகவும் இறந்தோரின் இருப்பிடமாகவும் கொள்ளப்பட்டது. பொதுவாக சுடுகாடு/இடுகாடு ஒரு ஊரின் தெற்குத் திசையில் அமையும்.
இல்லறத்தானின் கடமைகளில் ஒன்று. நம்மிடையே வாழ்ந்து மறைந்தோரை குறிப்பாக நமக்கு மிகவும் நெருங்கியவர்களும் அன்பிற்குரியவர்களும் இறந்த நாளில் அவர்களை நினைந்து வழிபடுதலாம். இது தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினையாகும்.
தென்புலத்தாரை ஓம்புதல் எப்படி? அவரை நினைத்து அடையாள முறையிற் சில உண்டிகளை, அவர் பெயரால், இரப்போர்க்கு சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல் ஆகும். இது இன்றும் நம் இல்லங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள்தாம். தென்புலத்தார் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களின் அருள்பார்வை நம்மை வாழவைக்கும் என்பதும் நம்பிக்கை. நம்முடைய வாழ்க்கை முறையில் நம்முடைய முன்னோர்களை என்றும் மறப்பதில்லை. எனவேதான் வள்ளுவரும் தென்புலத்தாரை முதலில் வைத்துப் பாடினார்.
"இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர் பழவிற லூர்களும்". (சிலப். 10: 149.150) என்று இளங்கோவடிகளும், "தென்புலத் தார்க் கென்னுக் கடைவுடையேன் யான்" (திவ். இராமானுச. தனியன்);. தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் (புறநானூறு 9) கூறுதல் காண்க.
தம் குடும்பத்தில் தோன்றி மறைந்தவர் நினைவுகளைப் பாதுகாப்பது தென்புலத்தார் ஓம்பல் ஆகும். தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினையாவது, அவர் ஆவி ஆறுதலும் மகிழ்வும் அடைதற்பொருட்டு, அவர் இறந்த நாளில் தெய்வத்திற்குப் படைப்பது.
ஏழாம் நாள் துக்கம், எட்டாம் நாள் துக்கம் என பதினாறாம் நாள் தூக்கம் வரை நீண்ட இறந்தோர் வழிபாடு வழக்கம் வள்ளுவர்களிடம் இன்றும் உள்ளது. வள்ளுவர்களைத் தவிர வேறு எந்த குடிகளும் இறந்தோருக்கு இத்தனைநாள் பூஜை செய்வதில்லை. வடக்கு வாசல் அடைத்து தெற்கு வாசல் திறந்துவிடும் நீத்தார்பூசை பிற சாதியினரிடம் இல்லை. நள்ளிரவில் இருந்து விடிவதற்குள் சிவபதம் அடைந்தோர்க்கு வாயில் திறந்து அவர்களை வழியனுப்பும் வழக்கமும் வள்ளுவர்களிடம் மட்டுமே உண்டு
வடக்கில் தலை வைத்து படுக்காதே என்று கூறுவது தெற்கில் கால் வைத்து படுக்காதே அதாவது தென்புலத்தார் நோக்கி கால் நீட்டி உறங்கக் கூடாது என்பது தமிழர் மரபு
வள்ளுவன் வழி, தொல்காப்பியன் வழி, இளங்கோவடிகள் வழி, என நமது முன்னோர் வழி நாமும் தென்புலத்தாரை வணங்குவோம்.


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43)

பொழிப்பு (மு வரதராசன்): தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை.
தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.

பரிமேலழகர் உரை: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம்.
(பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.)

இரா சாரங்கபாணி உரை: இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்து, சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்குத் தலைமையான அறம்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

பதவுரை: தென்புலத்தார்-இறந்த முன்னோர், தென்திசை இடத்திலுள்ளவர்; தெய்வம்-தேவர்; விருந்து-விருந்தினர்; ஒக்கல்-சுற்றத்தார்; தான் -தான்; என்று-என; ஆங்கு-(அசைநிலை); ஐம்-ஐந்து; புலத்து-இடத்தின் கண்; ஆறு-நெறி; ஓம்பல்-போற்றுதல், காத்தல், பேணுதல், வழுவாமற் செய்தல்; தலை-சிறப்பு, முதன்மையானது.


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னும்;
பரிதி: பிதிர்லோகத்தார்க்கும், வழிபடு தெய்வத்துக்கும் உறவின் முறையார்க்கும் தந்து தன்மரபையும்;
காலிங்கர்: தன்குடியில் இறக்கப்பட்ட பிதிர்களுக்கும் கடவுளர்க்கும் விருந்தினர்க்கும் சுற்றத்தார்க்கும் தனக்கும் என்று சொல்லப்பட்ட;
பரிமேலழகர்: பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட;
பரிமேலழகர் குறிப்புரை: பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை.

'பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட' என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தென்புலத்தார் நிலத்தெய்வம் விருந்து சுற்றம் தன்குடும்பம் என்ற', 'இறந்த உயிர்க்குத் துணைநிற்கும் பிதிரர்கள், கடவுள், புதியராய் உதவிநாடி வந்தோர் (அகதிகள்) சுற்றத்தார், தான் என்னும்', 'தென்நாட்டவர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட', 'தன்குல முன்னோர், வழிபடுதெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற' என்றபடி உரை தந்தனர்.

தன் குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட என்பது இப்பகுதியின் பொருள்.

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஐந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை.
மணக்குடவர் குறிப்புரை: தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.
பரிதி: கிருகஸ்தன் ரட்சிப்பது தன்மம் என்றவாறு.
காலிங்கர்: ஐந்து கூற்று நெறியையும் வழுவாமல் பாதுகாத்தலே இல்வாழ்க்கைக்குத் தலைமை என்றவாறு.
பரிமேலழகர்: ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம்.
பரிமேலழகர் குறிப்புரை: ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.

'ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஐவகையையும் காக்க', 'ஐந்து வகையாரிடத்துஞ் செய்யப்படும் நெறிச் செயல்களை வழுவாது செய்தல் முதன்மையான அறமாகும்', 'ஐந்து இடத்தும் செய்யும் அறநெறித் தொண்டினைத் தவறாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம்', 'ஐந்திடத்துச் செய்யும் அறத்தையும் பேணுதல் இல்லறத்தானுக்குத் தலையாய கடமையாம்' என்றபடி பொருள் உரைத்தனர்.

ஐந்து இடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களைப் போற்றுதல் சிறப்பான இல்வாழ்க்கையாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐம்புலத்து ஆறு போற்றிக் காத்தல் சிறப்பான இல்வாழ்க்கையாம் என்பது பாடலின் பொருள்.
'ஐம்புலத்து ஆறு' என்றால் என்ன?

இல்வாழ்வான் எப்பொழுது சிறப்புப் பெறுகிறான்?

இல்வாழ்வானுக்கு தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என வரும் ஐவகையினருக்கும் உரிய நெறியில் கடமைகளை ஆற்றுதல் சிறப்பு சேர்க்கும்.
அந்த ஐந்து வகையினர் யார் யார்?
தென்புலத்தார்
தென்புலத்தார் என்ற சொல்லுக்கு நேர் பொருள் தெற்குத் திசையிலுள்ள இடத்தில் இருப்பவர் என்பது. இறந்துபோன மூதாதையர் தென்திசையில் உறைவதாகத் தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கையுண்டு. அதனால் காலமாகிவிட்ட முன்னோர்களைத் தென்திசையிலுள்ளவர் எனக் கூறுவது ஒரு மரபு. பொதுவாக சுடுகாடு/இடுகாடு ஒரு ஊரின் தெற்குத் திசையில் அமையும். இதுவும் தென்புலம் என்ற வழக்குக்குக் காரணமாகலாம். காலிங்கர் தென்புலத்தார் என்பதற்கு தன்குடியில் இறக்கப்பட்ட பிதிரர் என்று பொருள் கூறியுள்ளார்.
இல்லறத்தானின் கடமைகளில் ஒன்று. நம்மிடையே வாழ்ந்து மறைந்தோரை குறிப்பாக நமக்கு மிகவும் நெருங்கியவர்களும் அன்பிற்குரியவர்களும் இறந்த நாளில் அவர்களை நினைந்து வழிபடுதலாம். இது தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினையாகும். தென்புலத்தாரை ஓம்புதல் எப்படி? அவரை நினைத்து அடையாள முறையிற் சில உண்டிகளை, அவர் பெயரால், இரப்போர்க்கு சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல் ஆகும். இது இன்றும் நம் இல்லங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள்தாம். தென்புலத்தார் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களின் அருள்பார்வை நம்மை வாழவைக்கும் என்பதும் நம்பிக்கை. நம்முடைய வாழ்க்கை முறையில் நம்முடைய முன்னோர்களை என்றும் மறப்பதில்லை. எனவேதான் வள்ளுவரும் தென்புலத்தாரை முதலில் வைத்துப் பாடினார்.
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்(புறநானூறு 9 பொருள்: தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய இறுதிச் சடங்குகளைப் பண்ணும்) என்ற சங்கச் செய்யுள் அடி ஒன்றில் தென்புலவாழ்நர் என்ற தொடர் இறந்தார் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. இறந்த வீரனுக்காக நடப்பட்ட கல்லுக்கு இறந்த நாளில், பூச்சூட்டிப் புகை காட்டிப் பொங்கலிட்டு எல்லாருடனும் இருந்து உண்டதாக (நடுகல் வணக்கம்) வரலாற்றுச் செய்தியும் உண்டு.
தம் குடும்பத்தில் தோன்றி மறைந்தவர் நினைவுகளைப் பாதுகாப்பது தென்புலத்தார் ஓம்பல் ஆகும்.

தெய்வம்

தெய்வம் என்ற சொல் பல்வேறு நிலையில் ஐயப்பாட்டிற்கு இடமாகிறது என்பார் தண்டபாணி தேசிகர். தொல்காப்பியம் மற்றும் சங்க கால இலக்கியங்களில் பயின்று வரும் 'தெய்வம்' என்ற சொல், இனக்குழுக்களின் சிறு தெய்வங்களையே குறிக்கிறது என்பர். எல்லாம் கடந்த முழுமுதற் பொருளுக்குக் கடவுள் என்பது பெயர்; மற்றக் கடவுளர் தெய்வம், சிறு தெய்வம் அல்லது தேவர் எனவாகலாம். பரிதி இக்குறளுக்கான உரையில் தெய்வம் என்ற சொற்கு 'வழிபடு தெய்வம்' எனப் பொருள் கண்டிருக்கிறார். இங்கு சொல்லப்பட்ட தெய்வம் குலதெய்வத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இல்வாழ்வான் தெய்வத்தை ஓம்புதல் என்பது எவ்வாறு? இது தெய்வத்தைப் போற்றுவதைக் குறிக்கும். தெய்வத்தை நினைத்து வணங்குதலே தீமை செய்யாமைக்கும், உண்மை வழி நிற்பதற்கும் துணை செய்யும். கோயில்களில் செய்யப்படும் உணவுக் கொடையும் தெய்வ வழிபாட்டின் பாற்படும். குலதெய்வ வழிபாடு தெய்வத்திற்குச் செய்யும் கடன் ஆகும்.

விருந்து

விருந்து என்பது இங்கு விருந்தினரைக் குறிக்கும். நாட்டால், மொழியால், சமயத்தால் அயல் வழியினர்; அறிமுகம் இல்லாதவர் விருந்தினராவர். விருந்தினர் எனப்படுபவர் நாடி வந்துள்ள அன்பர்கள்; அவர்களை மனம் நோகாதவாறு ஓம்புதல் பண்பாகும். இவர்களை வரவேற்று ஊண் உடை முதலியன வழங்கிப் பேணவேண்டும். இதனால் அயல்வழி உறவுகள் வளரும். குமுகாயம் விரிவடையும். புதிதாகத் தம் வீட்டை நாடி வரும் அயலார் யாவரே யாயினும் அவரை உவந்து வரவேற்று ஓம்புதல் அக்காலத்தில் மிகவும் வேண்டப்பட்டதாக இருந்தது. இது இல்லறத்தான் கடமையாயாகவும் இருந்தது எனத் தெரிகிறது. இன்றும் புதியவர்களுக்கு இயலும் வரை உதவுவது அறச்செயல்தான்.

ஒக்கல்

ஒக்கல் என்பது சுற்றத்தைக் குறிப்பது. சுற்றம் என்பது இல்வாழ்வானது உடன் சுற்றமாகும். பிறப்பு மற்றும் திருமணத்தினால் உண்டான இயற்கையான உறவுகள், தொடர்புகள் இவற்றைக் குறிக்கும். சுற்றத்தார்களே உண்மையில் ஒருவரின் உடனடிச் சமூகம். இல்வாழ்வானது உடன்பிறந்தார் முதற்சுற்றம். அடுத்துத் தந்தை, தாய்வழி, உடன் பிறப்புச் சுற்றம், தம் வாழ்க்கைத் துணைவழி உடன்பிறப்புச் சுற்றம் என்றவாறு விரியும்.
சுற்றத்தினரைப் பேணுதல் என்பது அவர்தம் வாழ்க்கைத் தேவைகளைப் பெறுதற்குரிய வாயில்களை அமைத்துத் தருதல் என்பது. சுற்றம் பழகும் பழக்கங்களால் அகவுணர்வுகள் செழுமையாக வளர்ந்து பயன்தரும். அதனால் அடிக்கடி கண்டும் கலந்தும் மகிழ்ந்து உரையாடியும் கலந்து உண்டும், உதவிகள் செய்தும், உறவு நிலைகளைப் பேணுதல் இன்றியமையாதது. சுற்றத்தினரை ஓம்பல் குடும்பம் வளமையாக அமையத் துணை செய்யும். உறவுகள் செழிப்பாக அமையாத சுற்றம் சுமையாகிவிடும் என்பர்.
செல்வ நிலையிலிருப்போர் தம் சுற்றத்தாரை ஓம்புதல் வேண்டற்பாலது என்பதனைச் 'சுற்றம் தழாஅல்' எனும் அதிகாரத்திலும் சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன்(குறள் 524 பொருள்: சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்) என்ற குறள் வழி வள்ளுவர் வலியுறுத்துகின்றார்:

தான்

தான் இன்றி பிறர்க்குச் செய்யவேண்டிய அறங்களைச் செய்தல் இயலாது .'தான்' என்றது தன்னைப் போற்றிக் காத்தலும் இன்றியமையாதது எனச் சொல்வது. சுவரின்றிச் சித்திரம் வரையமுடியாது ஆதலால், பிறருக்குத் தொண்டு செய்பவன் தன்னையும் பேணிக் கொள்ளல் வேண்டும். தன்னைப் போற்றுதலைக் குற்றம் என்போரும் உளர். ஆனால், வள்ளுவர் வெளிப்படையாகவே உன்னையும் போற்றிக் காத்துக் கொள் என உலகறிய உரைக்கின்றார். குடும்பத்தலைவன் இல்வாழ்க்கையின் ஆக்க நிலையில் அமைந்த உறுப்பு. ஆதலால் அவனும் காலத்தில் உணவு அளவாக உண்ணுதல், உடல்நலத்திற்குரிய பயிற்சிகளை மேற்கொள்ளல், நல்ல நூல்களைக் கற்றல், அன்பு நலத்தை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவை வழி தன்னைப் பேணிக்கொள்ளுதல் வேண்டும்.
'எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று' என்று பரிமேலழகர் தன்னை ஓம்புதலும் அறச்செயலே என்பதற்கு விளக்கம் தந்தார்.

'ஐம்புலத்து ஆறு' என்றால் என்ன?

ஐம்புலத்து ஆறு என்ற தொடர்க்கு 'ஐந்திடமாகிய நெறி' என மணக்குடவரும் 'ஐந்து கூற்று நெறி' எனக் காலிங்கரும் 'ஐந்திடத்தும் செய்யும் நெறி' எனப் பரிமேலழகரும் உரை கூறுவர். 'ஐந்து வகையாரிடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களை' என்றனர் கா சுப்பிரமணிய பிள்ளையும், சொ தண்டபாணிப் பிள்ளையும். 'ஐந்திடத்திலும் அறநெறியை' என்பது திரு வி க., குழந்தை ஆகியோரது உரை.

'ஐம்புலத்து ஆறு' என்பது ஐந்திடத்தும் செய்யப்படும் அறநெறி' எனப் பொருள் தரும்.

தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐந்து இடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களைப் போற்றுதல் சிறப்பான இல்வாழ்க்கையாம் என்பது இக்குறட்கருத்து.

 இல்வாழ்க்கையோடு ஒன்றியுள்ள ஐவகையினர்க்கு இல்வாழ்வான் ஆற்றவேண்டிய கடன்கள்.

பொழிப்பு

தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐந்து இடத்தும் செய்யப்படும் அறநெறிச் செயல்களைக் காத்தல் சிறப்பான இல்வாழ்க்கையாம்



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை.

 தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - இறந்த முன்னோர் வழிபடுதெய்வம் விருந்தினர் ஏழையுறவினர் தன் குடும்பம் என்று சொல்லப்படும்; ஆங்கு ஐம்புலத்து ஆறு ஒம்பல் - அவ் வைந்திடத்தும் செய்யவேண்டிய அறவினைகளைப் பேணிச் செய்தல்; தலை - இல்லறத்தானுக்குத் தலையாய கடமையாம்.

முதற்காலத் தமிழகமாகிய குமரிநாடு பல்வேறு கடல்கோள்களால் மூழ்கிப் போனமையால், அது இருந்த தென்றிசை கூற்றுவன்திசையாகவும் இறந்தோரின் இருப்பிடமாகவும் கொள்ளப்பட்டது. தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினையாவது, அவர் ஆவி ஆறுதலும் மகிழ்வும் அடைதற்பொருட்டு, அவர் இறந்த நாளில் தெய்வத்திற்குப் படைப்பது போல் அடையாள முறையிற் சில வுண்டிகளை அவர்க்கும் படைத்து, அவர் பெயரால் துறவியர்க்கும் இரப்போர்க்கும் சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல். தெய்வம் என்றது அவரவர் உளநிலைக் கேற்றவாறு சிறுதெய்வமும் பெருந்தேவனும் கடவுளுமாகிய மூவகைத் தேவுகளை. கோயிற்கும் அடியார்க்கும் செய்யும் தானங்களும் தெய்வ வழிபாட்டின் பாற்படும் விருந்து என்றது புதிதாக வரும் மதிப்புள்ள அயலாரை. அவரை வரவேற்றுச் சிறந்த உணவளிப்பது இக்காலத்து வழக்கற்றது. அயலுரினின்று வந்த உறவினர்க்குச் சிறந்த வுணவளிப்பது கைம்மாறு கருதிய கடமையேயன்றி அறமாகாது. தன் என்றது தன்னையுந்தன் குடும்பத்தையும் "உண்டி முதற்றே யுணவின் பிண்டம்" (புறம் - 18). "உடம்பாரழியின் உயிரா ரழிவர்" ( திருமந்திரம், 724 ). ஆதலால், பிறருக்குத் தொண்டு செய்பவன் தன்னையும் பேணிக் கொள்ளல் வேண்டும் "தனக்கு மிஞ்சித் தானம்". ஆதலால், ஒருவன் தன் குடும்பத்தைக் கவனியாது பிறரைப் பேணுதலும் அறமாகாது.

இங்குக் குறிக்கப்பட்ட ஐந்திட வினைகளும் அறவினையாகவே ஆறாவது இடமாகிய அரசிற்குச் செலுத்தவேண்டிய வரி கட்டாய வினையாகிய கடமையாயிற்று. ஆறிலொரு கடமையிறுத்தல் என்னும் பண்டை வழக்கும், உழவனையே இல்லறத்தாருட் சிறந்தவனாகக் காட்டும். பிறதொழிலார் எல்லாரும் பெரும்பாலும் குறிப்பிட்ட சிறுதொகைப் பணத்தையே வரியாகச் செலுத்திவந்தனர்.

"பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்".                             என்று திருவள்ளுவரும்,

"இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழவிற லூர்களும்". (சிலப். 10: 149.150)

 என்று இளங்கோவடிகளும், கூறுதல் காண்க.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

14. தென்புலத்தார் வழிபாடு பகுதி- 1

----------------------------------------------------------------- பாரதவர்ஷத்தில் வேத காலத்திற்கு முன்பே மனித வாழ்க்கையை முறையாக அமைத்துக் கொள்வதற்கு வகை செய்யப்பட்டுவிட்டது.
பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்கிற நான்கு ஆசிரம தர்மங்களை ஏற்கனவே இவ்வாய்வு சுட்டிக்காட்டியிருக்கிறது.
திருமணத்திற்கு முன்பாக, படிக்கிற மாணவப் பருவமே 'பிரம்மச்சரியம்'. அற்றை நாளில் படிப்பது என்பது வேதம், சாஸ்திரம் என்பதாகக் கொள்ளப்பட்டது.
மாணவப் பருவம் முடிந்து திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்விலே ஈடுபடுவது 'கிருஹஸ்தம்' எனப்பட்டது.
மனையறம் காத்து, மக்களை உருவாக்கி, பொறுப்புகளைப் பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு கணவனும், மனைவியும் காடு சென்று கடும்தவம் புரிவது 'வானப்பிரஸ்தம்'.
இறுதியிலே உலக வாழ்க்கையின் இயல்பை அறிந்து, பற்றுகளை அறுத்து, இறைவனை அடைவதற்காகத் துறவு வாழ்க்கையை மேற்கொள்வது 'சன்னியாசம்'.
இதிலே 'கிருஹஸ்தன்' எனப்படுகிற இல்லறத்தானுக்கு விசேஷ பொறுப்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஏனென்றால் தர்மத்தை அவன்தான் காக்கிறான். அந்தத் தர்மம் உலகையே காக்கிறது.
அதனால்தான் 'தர்மம் காக்கிற இல்லறத்தான் தவசிகளைவிட மேலானவன்' என்கிறார் வள்ளுவர்.
"ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா
இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து"(48) என்கிறார்.
14. தென்புலத்தார் வழிபாடு பகுதி-2
-----------------------------------------------------------------. இந்து தர்மத்தில் இல்லற ஆசிரமம் மிகவும் சிறப்பானதொன்றாகும். அது புனிதமானது. தெய்விகமானது.
அதனால்தான் தான்வகுத்த ஒன்பது இயல்களில் ஓர் இயலை இல்லறத்திற்காகப் பகுத்தார் வள்ளுவர்.
அந்த இல்லற வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்க நியமங்களை இருபது அதிகாரங்களில் இருநூறு பாடல்களில் தொகுத்தார்.
"இல்வாழ்வான் என்பான்
இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை" (41) என்றார்.
'பிரம்மச்சரியன், வானப்பிரஸ்தன், சன்னியாசி ஆகிய மூவருமே வள்ளுவர் கூறுகிற "இயல்புடைய மூவர்" ஆவர். இந்த மூவருக்கும் பலவழிகளிலும் உதவியாக இருப்பவனே இல்லறத்தான் ஆவான்' என்கிறார் வள்ளுவர்.
நான்கு ஆசிரமங்களில் வானப்பிரஸ்தனுக்கும், சன்னியாசிகளுக்கும் தவம் புரிவதே வாழ்க்கை என்றாகிவிடுகிறது. பிரம்மச்சரியனுக்கு வேதங்களைக் கற்பதுவே தவம் ஆகிகிறது.
ஆனால் நல்லறமாகிய இல்லறத்தை மேற்கொள்ளுகிற கிரஹஸ்தன் தவம் செய்வதில்லை. அவன் ஏன் தவம் செய்வதில்லை என்பதற்கு வள்ளுவர் காரணம் கூறுகிறார்.
"துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி
மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்" (263)
துறவிகளைப் பேணுவதிலே ஆர்வம் கொண்டிருக்கும் காரணத்தால் இல்லறத்தான் தவம் செய்வதை மறந்து விடுகிறானாம்.
மேற்கண்ட குறளிலே கிரஹஸ்தனை வள்ளுவர் "மற்றையவர்கள்" என்று குறிப்பிடுகிறார்.
நான்கு ஆசிரமங்களில் தவம் செய்ய முடியாத குடும்பஸ்தனையே அவ்வாறு குறிப்பிட்டார் வள்ளுவர்.
அதிலே வள்ளுவர் மறைமுகமாகக் கூறுகிற பொருள் ஒன்று உண்டு.
தானம் செய்வது முக்கியம்தான். அதுபோல முக்கியமானது தவம் புரிவது என்பதே அது.
14. தென்புலத்தார் வழிபாடு பகுதி- 3
--------------------------- 'தர்மம் காக்கிற இல்லறத்தான் தவசிகளைவிட மேலானவன்' (48) என்கிற வள்ளுவர், அதே இல்லறத்தானை தெய்வத்திற்கு நிகரானவனாகப் போற்றுகிறார்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" (50) என்கிறார்.
"இல்வாழ்க்கை" என்னும் அதிகாரத்தின் இறுதிக் குறட்பா இது.
ஒவ்வொருவருக்கும் வேதம் ஐந்து கடமைகளை வகுத்திருக்கிறது.
சக மனிதர்களுக்குச் செய்யும் சேவையை "நர யக்ஞம்" என்றும், பிற உயிரினங்களுக்குச் செய்யும் சேவையை "பூத யக்ஞம்" என்றும் அது கூறுகிறது.
தேவ கடன், ரிஷிகடன், பித்ரு கடன் என்பவை பிறவாகும்.
பிறக்கின்ற ஒவ்வொருவரும் இவற்றுக்குக் கடமைப்பட்டவர்கள் என்பதால் அதனைக் "கடன்" என்றே வேதம் கூறுகிறது.
உலகத்தைப் படைத்து, உயிர்களையும் படைத்த இறைவனுக்கு மனிதன் கடன் பட்டிருக்கிறான். அதுவே 'தேவ கடன்'.
வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், எண்ண முடியாத சாஸ்திரங்கள் போன்றவற்றைப் படைத்து மனிதர்கள் முறையாக வாழ்வதற்கு வகைசெய்தவர்கள் முனிபுங்கவர்கள். அந்த ரிஷிகளுக்குக் கடன் பட்டிருக்கிறான் மனிதன். அது "ரிஷிகடன்" எனப்படுகிறது.
நாம் பிறவி செய்வதற்குக் காரணமானவர்கள் தாயும், தந்தையும். நம்மைப் பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கி, செல்வம், புகழ் எல்லாம் சேர்த்துக் கொடுத்து காலகதி அடைபவர்கள் அவர்கள்.
இந்தக் கடனுக்கு ஈடாக வேறொன்றைக் கூறமுடியாது. இதைத் தீர்க்கவும் இயலாது. "பித்ரு கடன்" என்று சாஸ்திரம் இதைக் கூறுகிறது.
14. தென்புலத்தார் வழிபாடு பகுதி- 4
----------------------------------------------------------------- பெற்றோர்கள் மாத்திரம் அல்ல, நமது முன்னோர்களும் பித்ருக்களே! 'தெய்வத்தின் அருள் கிடைப்பதற்கு பித்ருக்களின் ஆசி அவசியமானதாகும்' என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பித்ருக்களை "தென்புலத்தார்" என்கிறது தமிழ். 'தென்புலம்' என்பது தெற்குத் திக்கு. அதுவே பித்ருக்கள் உறைந்திருக்கும் திசை. அதனால்தான் "தென்புலத்தார்" என்று பித்ருக்கள் அழைக்கப்படுகின்றனர்.
"தென்புலத்தார் தெய்வம்
விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (43) என்பார் வள்ளுவர்.
'பித்ருக்கள், தெய்வம், விருந்தினர், உறவினர், தனது குடும்பம் என்று கூறப்பட்ட ஐந்து வகையினருக்கும் வேண்டிய கடமைகளை ஆற்றுவது இல்வாழ்க்கையின் சிறப்பாகும்' என்கிறார் வள்ளுவர்.
பித்ருக்களுக்கான கடனை ஆற்றுவதற்கு வள்ளுவர் அறிவுறுத்திவிட்டார். ஆனால் அந்தக் கடமையை மேற்கொள்ளும் முறையை சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆடி அமாவாசையன்று மேற்கொள்ளப்படும் திதி ச்ரார்த்தம், தர்ப்பண வழிபாடு என்பதெல்லாம் பித்ரு ஆராதனையே!
அதிலும் புரட்டாசி மகாளயபட்சம் மிகவும் விசேஷமானது.
மாத அமாவாசை அன்றோ அல்லது அவர்கள் அமரத்துவம் அடைந்த நாள் (திதி) அன்றோ தர்ப்பணம் செய்து வழிபட இயலாதவர்களுக்கானது அது.
இருக்கும் இடங்களிலோ அல்லது புண்ணிய நீர்த் துறைகளிலோ எள்ளும், நீரும் சேர்த்து மேற்கொள்ளப்படுகிற எளிய வழிபாடு இது....
14. தென்புலத்தார் வழிபாடு பகுதி- 5
-------------------------------------------------------------- "துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும்
இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை" (42) என்றும் கூறுவார் வள்ளுவர்.
'துறவிகளுக்கும், ஏழைகளுக்கும், அனாதரவாய் இறந்து போனவர்களுக்கும் இல்லறத்தானே துணையாவான்' என்கிறார்.
'அனாதரவாய் இறந்தவர்களுக்குத் துணை' என்பது அவர்களை நல்லடக்கம் செய்வது என்பது மட்டுமல்ல. இறந்தவர்களுக்காக நீர்க்கடன் செய்து, அவர்கள் நல்லுலகில் நிலைபெற வேண்டுதலும் ஆகும்.
பிதிர்கள் இன்றைய மனிதர்களின் ஆதி பிதாக்கள். அவர்களின் உடல் அழியலாம். ஆனால் ஆன்மா அழிவதில்லை. அதனால்தான் இறந்தவர்களையும் சிறந்தவர்களாக நாம் போற்றுகிறோம்.
அதைத்தான் "தென்புலத்தார் வழிபாடு" என்று திருக்குறள் சொல்கிறது.
இருந்தவர்களின் ஆற்றலும், ஆசிகளும் இருப்பவர்களுக்கு உதவும் என்கிற நம்பிக்கையை அந்த வழிபாடு ஏற்படுத்துகிறது.
அதனால்தான் இல்லறத்தானின் ஐந்து கடமைகளில் ஒன்றாக, அதிலும் முதல் கடமையாக நீத்தார் நன்றிக் கடனை வலியுறுத்துகிறார் வள்ளுவர்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard