அறம் என்னும் பாட்டன் வீட்டு சொத்து
உலகப் பொதுமறை திருக்குறள், இரண்டு வரிகளுக்குள் அடங்கி விடும் வார்த்தைத் தொகுப்பு அல்ல. வாழ்வின் எந்த சூழ்நிலையில் இருக்கும்போது படித்தாலும், அந்த சூழ்நிலைக்கேற்ற விடையைத் தரும் அட்சய பாத்திரம். உலகப் பொதுமறை என்றாலும் அது என் பாட்டன் வீட்டு சொத்து என்ற உரிமையில் திருக்குறள் உலகத்துக்குள் நுழைய முற்படுகிறேன். திருக்குறளின் மையக்கருத்து எது என்று நாம் மேடை போட்டுச் சொல்ல வேண்டியதில்லை. மூன்றாம் வகுப்பில் முதன்முதலாகத் திருக்குறளைப் படிக்கத் துவங்கிய காலத்திலிருந்தே எல்லோருடைய காதிலும் அறம் என்ற வார்த்தை ஆற்று வெள்ளம் போல பாய்ந்திருக்கும், அந்த அறம்தான் திருக்குறளின் மையம். அறம் என்ற வார்த்தையை நாம் அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை. நாம் பயன்படுத்தும் சொல்லிலிருந்து, அறம் என்ற சொல்லுக்குப் பொருள் கூற முனைந்தால், நீதி என்று தோராயமாக சொல்லலாம். ஆனால் அறம் நீதியை விட மிகவும் மேம்பட்ட சொல். நீதி தமிழ் சொல் கிடையாது. ஆகையால் அறம் என்ற சொல்லுக்குப் பிற மொழியில் விடை தேடுவதை நிறுத்தி வள்ளுவரிடம் சரணடைவோம்.
இரண்டு வரிக் குறளில் அறத்தை விளக்கி விட முடியுமா? என்றால் இல்லை. ஆனால் வள்ளுவர் ஒரே வரியில் விடை தருகிறார். அறம் என்ற சொல்லுக்கு, அதை விட உலகில் வேறு எவரும் விளக்கம் தர முடியாது. அறம் என்றால் “மனத்துக்கண் மாசிலன் ஆதல்”. இந்த ஒற்றை வரியில் அறத்தின் ஒட்டுமொத்த விளக்கமும் வந்து விடுகிறது. குற்றம் செய்யாதவர்கள் எல்லாம் அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது. குற்றம் செய்யப் பயப்படுதல் என்பது வேறு, குற்றம் செய்ய சந்தர்ப்பம் வரும்போதும் அதைத் தவிர்த்தல் என்பது வேறு. நாம் வாழும் வாழ்க்கைக்கு நம் மனம் மட்டுமே சாட்சி. உலகில் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம், ஆனால் நம் மனதுக்குத் தெரியும் நாம் குற்றவாளியா இல்லையா என்று. மனசாட்சியை விட பெரிய சாட்சி உலகில் இல்லை. ஆகையால் “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்பதே அறம். மனதாரக் குற்றம் செய்யாமல் வாழும் வாழ்க்கைதான் அறம்.
வள்ளுவர் மனோதத்துவ நிபுணரோ என்ற சந்தேகம் திருக்குறள் படிக்கும் அனைவருக்கும் வரும். அதை நிரூபிக்க “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்று மனதை சாட்சியாக வைத்த அடுத்தக் குறளில் மனதில் வரும் மாசுகள் எவை என்று பட்டியலிடுகிறார். அறத்தின் வழி வாழ, அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (கோபம்), இன்னாச்சொல் (கடுஞ்சொற்கள்) ஆகிய நான்கையும் ஒதுக்க வேண்டும். எவை நம் மனதில் புகுந்தால் அறம் தவறுமோ, அந்த நான்கையும், அறம் எது என்று விளக்கியபின் பட்டியலிட்டது ஒரு கைதேர்ந்த மனோதத்துவ நிபுணர் மட்டுமே செய்யக்கூடிய செயல். அறம் என்ற சொல்லுக்கு மனதை சாட்சியாகத் தந்த நமது பாட்டையா வள்ளுவரின் திருக்குறளை ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். சில குறள்களை எடுத்துக்கொண்டு அவற்றின் பொருளை மட்டும் பார்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. நமது வாழ்வின் நெறிமுறைகளுக்கு வள்ளுவரின் விடை 1330 குறள்களிலும் பரவிக்கிடக்கிறது. நாம் தேடும் தகவலுக்கு திருக்குறளின் பல அதிகாரங்களைத் தொகுத்து விடைகாண வேண்டியது நமது கடமை. திருக்குறள் என்னும் கடலுக்குள் நுழைவோம் வாருங்கள்.
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. (குறள்: 34)
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். (குறள்: 35)
கடவுளில் ஏன் ஒருமை
திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து, ஆனால் கடவுள் என்ற வார்த்தை, கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத் தலைப்பைத் தவிர திருக்குறளில் வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை. திருக்குறளில் வேறு எந்த ஒரு அதிகாரத் தலைப்பை எடுத்துக்கொண்டாலும் அந்தத் தலைப்பில் வரும் வார்த்தை அந்த அதிகாரத்தின் கீழ் வரும் குறள்களில் கட்டாயம் பயன்படுத்தப்பட்டிருக்கும், கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தைத் தவிர. கடவுள் என்ற வார்த்தையை ஏன் வள்ளுவர் ஒரு இடத்தில் கூட பயன்படுத்தவில்லை? காரணம் என்னவென்றால், பல உருவங்களில் வணங்கினாலும் கடவுள் ஒருவன்தான் என்பது தமிழர்கள் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வலியுறுத்தவே கடவுள் என்ற பதம் வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் தெய்வம் என்ற வார்த்தை பல இடங்களில் வருகிறது. யார் தெய்வம் என்பதற்கும் வள்ளுவர் விடை தருகிறார், அதையும் நாம் வள்ளுவர் வாய்மொழியிலே கேட்போம்.
கடவுள் வாழ்த்து என்று தலைப்பிலே ஒரு செய்தியை சொல்லும் வள்ளுவர், கடவுள் வாழ்த்துக் குறள்களில் ஒரு குறளில் கூடக் கடவுளின் பெயரைக் குறிப்பிடவில்லை. கடவுளின் பெயர்கள் எல்லாம் உவமையாக மட்டுமே கூறப்பட்டுள்ளன. பெயர் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, எல்லா உவமைகளும் ஒருமையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்” என்ற குறளில் தீமை செய்தவரைக் கூட அவர், இவர் என்று மரியாதையாகக் குறிப்பிடும் வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் கடவுளுக்குக் கூறப்படும் உவமைகள் அனைத்தையும் ஏன் ஒருமையில் பயன்படுத்துகிறார்? வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், எண்குணத்தான் என்று அனைத்து உவமைகளும் ஒருமையில்தான் கூறப்பட்டிருக்கிறது.
கடவுளைப் பற்றிய உவமைகள் ஒருமையில் கூறப்பட்டதும் கடவுள் ஒருவன் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான். ஒருவேளை மரியாதைக்காக “ர்” விகுதி சேர்த்து, அது பன்மையாகப் பார்க்கப்பட்டு, பல கடவுள்கள் உண்டு என்று திரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்தான் கடவுளின் உவமைகள் அனைத்தும் ஒருமையில் சொல்லப்பட்டிருக்கிறது. சரி, கடவுள் வாழ்த்தில் கடவுளின் பெயர் ஒன்றுமே இல்லையென்பதால், திருக்குறளில் எங்குமே கடவுள் பெயர் இல்லையென்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். திருக்குறளில் ஒரே ஒரு குறளில் மட்டும் இந்திரன் என்ற கடவுள் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறள் 25ல் இந்திரன் என்ற பெயர் வருகிறது. இந்திரன் என்ற சொல், கடவுளைக் குறிக்கவில்லை, இந்திரன் என்பதற்கு மேகம் என்ற பொருளும் உண்டு என்று வாதாடும் உரையாசிரியர்களும் உண்டு. ஆனால், வள்ளுவர் “விசும்புளார் கோமான்” என்று தெளிவாகவேக் குறிப்பிடுகிறார். ஆகையால் வள்ளுவர் இந்திரன் என்று குறிப்பிடுவது கடவுளின் பெயர்தான். இறைவனை அங்கங்கே திட்டினாலும் வள்ளுவரை கடவுள் மறுப்பாளர் என்று சொல்லிவிட முடியாது.
“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.” (குறள்:2)
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.” (குறள்: 3)
“வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.” (குறள்: 4)
“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.” (குறள்: 6)
“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.” (குறள்:
“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.” (குறள்: 9)
“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.” (குறள்: 25)
கடவுள் மறுப்பாளர்கள்
கடவுள் மறுப்பாளர்கள் அந்த காலத்தில் வாழ்ந்தார்களா? என்ற கேள்விக்கு வள்ளுவர் கடவுள் வாழ்த்திலேயே விடை கூறியிருக்கிறார் என்றால் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் அதுதான் உண்மை. கடவுள் வாழ்த்து அதிகாரத்தில், பத்தில் ஐந்து குறள் கடவுள் மறுப்பாளர்களைப் பற்றிப் பேசுகிறதென்றால் நம்ப முடிகிறதா? கடவுள் வாழ்த்தில், கடவுள் மறுப்பாளர்களுக்கும் 50 சதவிகித இட ஒதுக்கீடு அளித்திருக்கும் வள்ளுவரின் தாராள குணத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பாராட்டியது போதும், விடையைச் சொல்லுங்கள் என்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கோபப்படுவது புரிகிறது.
கடவுள் வாழ்த்தில் 5 குறள்கள், “தொழாஅர்”, “சேர்ந்தார்க் கல்லால்” “வணங்காத் தலை”, “அடி சேராதார்” என்று கடவுளின் காலடிகளைத் தொழாதவர்களை எச்சரிக்கும் விதமாக எதிர்மறையாக அமைக்கப்பட்டுள்ளது. தெய்வத்தின் காலடிகளைத் தொழ வேண்டும் என்று நேரிடையாக செய்தியைச் சொல்லாமல், எதிர்மறையாக “தொழா விட்டால் என்ன பயன்” என்று சொல்லும்போதே, கடவுளைத் தொழாதவர்கள் அன்றும் வாழ்ந்தார்கள் என்று நிரூபணமாகிறதல்லவா. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல வள்ளுவர் கடவுள் மறுப்பாளர் இல்லை, ஆனால் கடவுள் மறுப்பாளர்களையும் அணைத்துக்கொள்ளும் சமதளப் பார்வை கொண்டவர் என்பது விளங்கும்.
“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.” (குறள்: 2)
“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.” (குறள்: 7)
“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.” (குறள்: 8)
“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.” (குறள்: 9)
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.” (குறள்: 10)
யார் தெய்வம்?
கடவுள் ஒருவன்தான் என்பதை வலியுறுத்திய வள்ளுவர், தெய்வம் என்ற வார்த்தையை மொத்தம் 6 குறள்களில் கையாண்டிருக்கிறார். ஆகையால் கடவுள் என்ற வார்த்தையைப் போலல்லாமல் தெய்வம் என்ற வார்த்தையைப் பல இடங்களில் கையாண்டதிலிருந்து, தெய்வங்களில் பன்மையை ஏற்றுக் கொள்கிறார் என்ற முடிவுக்கு வரலாம். தெய்வம் என்ற வார்த்தை 6 இடங்களில் இடம்பெற்றாலும், யார் தெய்வம் என்ற கேள்விக்கு இரண்டு குறள்களில் தெளிவாக விடை கூறப்பட்டிருக்கிறது
ஐம்பதாவது குறள் யார் தெய்வம் என்று தெளிவாக வரையறுக்கிறது. அறம் பிறழாது, மண்ணில் மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள் தெய்வமாக மதிக்கப்படுவார்கள் என்கிறது அந்தக் குறள். அது வள்ளுவரின் குரல். அதன்படி ஆராய்ந்தால் தெய்வம் என்பது நமது முன்னோர்கள்தான். முன்னோர் வழிபாட்டை வலியுறுத்தும் இடமாகவே இந்தக் குறள் அமைக்கப்பட்டிருக்கிறது.
குறள் 702, யார் தெய்வம் என்று சுட்டிக்காட்டுகிறது. மற்றொருவர் மனதின் எண்ணத்தை அறிந்து கொள்ளும் ஆற்றலுடைய ஒருவர் தெய்வத்துக்கு நிகராக மதிக்கப்படுவார் என்கிறார் வள்ளுவர். மனதை அறிந்து கொள்ளுதல் என்பது தவத்தின் பலனால் வரும் அறிவு. சித்தர் நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று. 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சித்தர்களை நாம் தெய்வமாக வழிபட்டிருக்கிறோம் என்பதற்கு திருக்குறளே சாட்சி.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” (குறள்: 50)
“ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.” (குறள்: 702)
உலகிலேயே பெரியவர் யார்
பெண்களுக்காகக் குரல் கொடுத்த முதல் மனிதர் என்ற பெருமையை நாம் வள்ளுவருக்குத் தயங்காமல் கொடுக்கலாம். பெண்ணின் பெருமையைக் கூறும் குறள்கள் பல இருந்தாலும், குறிப்பாக இரண்டு குறள்களை மட்டும் விளக்குவதற்கு விழைகிறேன். அந்த இரண்டு குறள்களிலுமே “பெருந்தக்க” என்பது நாம் குறித்துவைத்துக் கொள்ள வேண்டிய சொல். “பெருந்தக்க” என்ற சொல்லை அந்த இரண்டு குறள்களைத் தவிர வள்ளுவர் வேறு எங்கும் பயன்படுத்தவில்லை. பெருந்தக்க என்ற சொல்லுக்கு உலகிலேயே பெரியது என்று பொருள். இரண்டு குறள்களிலுமே, உலகிலேயே பெரியவள் என்று பெண்ணைத்தான் குறிப்பிடுகிறார். எல்லாப் பெண்களையும் பெரியவர்கள் என்று சொல்லவில்லை, அதற்கு சில கட்டுப்பாடுகளையும் விதிக்கிறார். குறள் 54, கற்புள்ளப் பெண்களைப் போல உலகில் பெரியது எதுவும் இல்லை என்று பெண்ணுக்குப் பெருமை சேர்க்கிறது. குறித்துக் கொள்ள வேண்டிய தகவல் என்னவென்றால் “கற்பென்னும் திண்மை” என்ற வார்த்தை. திண்மை என்றால் மனவுறுதி என்று அர்த்தம். நாம் தற்காலத்தில் கற்பு என்ற சொல்லை மனவுறுதி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை. மனவுறுதி கொண்ட பெண்ணை விட உலகில் எதுவும் பெரிதில்லை என்று பெண்மையை உயர்த்தியது வள்ளுவர்தான்.
பெருந்தக்க என்ற சொல் பயன்படுத்தப்பட்ட இரண்டாவது இடம் குறள் 1137. குறள் 54ல் கற்பு என்னும் கட்டுப்பாடு விதித்தது போல், குறள் 1137ல் மடல் ஏறக்கூடாது என்ற கட்டுப்பாடு. அது என்ன மடல்? நமக்கு மடல் என்றால் கடிதம் என்றுதான் அர்த்தம் தெரியும். ஆனால் மடல் என்றால் கடிதம் என்று அர்த்தமல்ல. ஒருதலையாகக் காதலிக்கும் ஒருவர், தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி விடும் மிரட்டல்தான் மடலேறுவது. தன்மீது சாம்பலைப் பூசிக்கொண்டு, எருக்கம்பூவைச் சூடி, காதலித்தவரின் பெயரையோ, படத்தையோ வரைந்து கழுத்தில் மாட்டிக்கொண்டு, குதிரை போல் செய்யப்பட்ட பனைமட்டையில் அமர்ந்து ஊரை வலம் வருவதற்கு மடலேறுதல் அல்லது மடலூர்தல் என்று பெயர். பொதுவாக பெண்கள் மடலேறுவதில்லை. மடலேறுதல் என்பது ஐந்திணை ஒழுக்கத்தில் வராது, அது ஒருதலைக் காதலைச் சொல்லும் கைக்கிளை அல்லது பெருந்திணையில் வரும். மடலேறுதல் ஐந்திணை ஒழுக்கத்தில் சேராததால், மடலேறாதப் பெண்களை உலகத்தில் உயர்ந்தவர்கள் என்று வள்ளுவர் கூறுகிறார்.
“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.” (குறள்:54)
“கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்” (குறள்:1137)
வள்ளுவர் கூறும் அறிவு
அறிவுக்கு வள்ளுவரைப் போன்று உலகில் யாரும் விளக்கம் கூறியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அறிவு என்ற சொல் திருக்குறளில் 25 முறைக்கு மேல் கையாளப்பட்டிருக்கிறது. வள்ளுவர் கூறும் அறிவைப் பற்றி அறிவோம். முதலில் நாம் காணும் பொருட்களைப் பற்றி ஆராய்ந்து அறிவதைப் பற்றி குறள் 355ல் குறிப்பிடுகிறார். அது உலகில் நாம் காணும் பொருட்கள் பற்றிய அறிவியல் பற்றி பேசும் அறிவு. குறள் 423, “யார் யார் வாய்க் கேட்பினும்” என்று ஒருவர் சொல்லிய வார்த்தையின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தும் உளவியல் பற்றிய அறிவு. வள்ளுவர் “யார்” என்ற சொல்லை ஒருமுறை சொல்லியிருந்தால் அந்த குறளின் ஆழம் புரிந்திருக்காது. மிகக் கவனமாக இரண்டு முறை “யார்” என்ற சொல்லை உபயோகப்படுத்தியிருக்கிறார். நண்பர், பகைவர் என்று செய்தியைச் சொன்னது யாராக இருப்பினும் அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டுமென்று பகுத்தறிவின் உச்சத்தைத் தொடுகிறது இந்த இரண்டு குறள்களும். அறிவியல், உளவியல் என்று இரண்டு பிரிவின் ஆழத்தைத் தொடும் குறள்கள் அவை.
மேலும் 424ம் குறளில் இன்னும் மிக நுட்பமாக, எது அறிவு என்று சொல்லப்படுகிறது. ஒருவர் கூறும் நுட்பமான தகல்வல்களைக் கூட தெளிவாகப் புரிந்து கொள்வதும், தான் புரிந்து கொண்டதை மற்றவர்களுக்கு எளிமையாகப் புரிய வைப்பதும் அறிவு என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஆசிரியர், விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர் என்று அனைவருக்கும் பொருத்தமான செய்தி இரண்டு வரிகளில் இதைவிடத் தெளிவாக வள்ளுவரைத் தவிர யாரால் சொல்ல முடியும்.
அறிவைப் பற்றி இவ்வளவு நுட்பமாகப் பதிவு செய்யும் வள்ளுவர், அறிவுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார். விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது அறிவின் வளர்ச்சியாக இருந்தாலும் அது அழிவுக்கும் வழிவகுக்கக் கூடுமென்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் எவ்வாறு கணித்தார் என்பது ஆச்சர்யம்தான். அணுகுண்டை ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தது மிகப்பெரிய அறிவுதான், ஆனால் ஹிரோஷிமா, நாகசாகியில் பல இலட்சம் கொல்வதற்கு உதவியபோது அந்த அறிவால் என்ன பயன்? அறிவுக்குள் மறைந்து கிடைக்கும் அழிவைக் கணக்கில் கொண்டு, நல்லவற்றுக்குப் பயன்படுவது மட்டுமே அறிவு என்று எச்சரிக்கை செய்யும் குறள் 422.
வெறும் எச்சரிக்கையோடு விட்டிருந்தால் பரவாயில்லை. வேறொரு குறளில் அறிவினால் என்ன பயன் என்று சற்றுக் கடுமையாக ஒரு கேள்வியை முன் வைக்கிறார். அறிவுக்கு இவ்வளவு முதன்மைத்துவம் அளிக்கும் வள்ளுவர், “அறிவினால் ஆகுவதுண்டோ” என்று கோபப்படும்போது, நாம் அந்தக் கோபத்தின் காரணத்தை அவரிடம் கேட்டே ஆக வேண்டும். இதற்கான விளக்கம் குறள் 315ல் இருக்கிறது. இன்னொரு உயிர் படும் துன்பத்தை தன்னுடைய துன்பமாகக் கருதி வருந்தவில்லையென்றால் அறிவினால் என்ன பயன்? ஒரு சமுதாயம் எவ்வளவு அறிவு வளர்ச்சியை எட்டினாலும், அந்த அறிவினால் எந்த வித தீங்கும் நேராமல் இருக்க வேண்டும், மற்றவரின் துன்பங்களை தன்னுடைய துன்பமாக உணர்ந்து அவற்றைப் போக்க வேண்டும், இவை இல்லாத அறிவு அறிவல்ல என்பது வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறிமுறை.
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.” (குறள்: 355)
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.” (குறள்: 423)
“எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.” (குறள்: 424)
“சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.” (குறள்: 422)
“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை” (குறள்:315)